ஊர்ப்புதினம்

இலங்கையின் வான், கடல், தேச எல்லையை பாதுகாக்க அமெரிக்காவின் அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பு

3 months 2 weeks ago
04 FEB, 2024 | 05:36 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் வான், கடல் தேச எல்லைகளை கண்காணிக்க கூடிய அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடான நபர்களின் வருகைகளை கண்காணிப்பது போன்று, வான் மற்றும் கடல் எல்லைகளில் மீதான மீறல்கள் மற்றும் ஊடுறுவல்களை இந்த நவீன கண்காணிப்பு கட்டமைப்பு ஊடாக உடனடி தகவல்களை பெற முடியும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போதே குறித்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு இலவசமாக வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்க உள்ள உத்தேச பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்கள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று உலகளாவிய தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான தகவல்கள் இந்த கண்காணிப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றமையினால் அவர்கள் இலங்கை எல்லையை எவ்வழியில் கடந்தாலும் கண்காணிக்க முடியும்.

மேலும் ஏதேனும் குற்றம் புரிந்து நாட்டை விட்டு தப்பித்து செல்ல முற்படுபவர்களையும் இந்த கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக அடையாளம் காண முடியும். எவ்வறாயினும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள குறித்த அதி நவீன எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/175516

இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

3 months 2 weeks ago

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/290516

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் அறிவிப்பு

3 months 2 weeks ago
04 FEB, 2024 | 05:45 PM
image
 

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர். 

யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர்  அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் - 2024 தொடர்பாக, கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.இருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும் 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதிப் பிரதம செயலாளரினை கடிதம் மூலம் கேட்டிருந்தோம். குறித்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் , அரச சேவையில் 05 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம் ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது.

எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் குறித்த போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும்.

அத்தோடு 10.02.2024 வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம். - என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/175531

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் - வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

3 months 2 weeks ago
04 FEB, 2024 | 06:15 PM
image

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று 2024, பெப்ரவரி 4ஆம் திகதி பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம்.

ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நமது தாயகத்தின் மட்டக்களப்பு, கிளிநொச்சியில் ஒன்று திரண்டு நிற்கின்றோம்.

தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பாண்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்கா அரசு தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கின்றது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போரட்டம் கருக்காண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளிற்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களிற்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தத்தினுள் முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும், தமிழ் மக்களின் சமகால அடிப்படைச் சிங்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

1எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள ஏனைய சட்டங்களால் மறுக்கப்படுகின்றது. ஆகவே இச்சட்டங்கள் மீளப்பெறப்பட வேண்டும்.

2. தொல்பொருட்த் திணைக்களம், வன அஜீவராசிகள் திணைக்களம். வனவள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.

3. தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

4. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

7. பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமமாகக் கொண்டு செயற்படுதலையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.

8. மனித உரிமை மீறல்கள் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது செய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், தடைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நினைவு கூறும் உரிமையை உறுதி செய்யுமாறும் வேண்டுகின்றோம்.

10. கால காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC) அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.

11. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/175552

யாழில் இலங்கையின் தேசியக் கொடிகளுடன் சுதந்திர தின பேரணி!

3 months 2 weeks ago
04 FEB, 2024 | 01:23 PM
image
 

இலங்கையின் 76வது சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மக்களும் வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.

நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கரவண்டி பவனி முதலியனவும் இந்த பேரணியில் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240204-WA0142.jpg

IMG-20240204-WA0136.jpg

IMG-20240204-WA0138.jpg

IMG-20240204-WA0126.jpg

IMG-20240204-WA0130.jpg

IMG-20240204-WA0124.jpg

https://www.virakesari.lk/article/175520

இலங்கை: சீதையை ராவணன் சிறை வைத்ததாக கூறப்படும் 'அசோக வனம்' இப்போது எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
இலங்கை சீதை கோவில்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 பிப்ரவரி 2024

இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று, இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படும் அசோக வனம், இன்று சீதா எலிய என அழைக்கப்படுகின்றது. அசோக வனம் என்று ராமாயணத்தில் அழைக்கப்பட்ட பகுதி, இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதி என்று கருதப்படுகிறது.

மலையகத்தின் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பதுளை வீதியில் இந்த அசோக வனம் என அழைக்கப்பட்ட சீதா எலிய காணப்படுகின்றது. உலகிலேயே சீதை அம்மனுக்கு கோவில் அமைந்த பகுதியாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நுவரெலியாவிலிருந்து பதுளை பிரதான வீதி ஊடாக செல்லும் போது, வீதியின் இடது புறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. மலையகத் தொடர்கள், கங்கை என இயற்கையுடன் இணைந்ததாகவே இந்த கோவில் அமைந்துள்ளது விசேஷ அம்சமாகும்.

ராவணன் சீதையை கடத்தி, சுமார் 11 மாதங்கள் இந்த அசோக வனத்திலேயே மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது. சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு வருகை தந்து, அசோக வனத்தில் சீதையை கண்டுபிடித்து, அவரை முதல் முதலாக சந்தித்ததாக கூறப்படும் பகுதியில் இந்த சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

அனுமன் பாதம் என கூறப்படும் அடையாளமொன்று, சீதை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள கல்லொன்றில் காணப்படுகின்றது. அந்த இடத்தில் சீதையை, அனுமன் சந்திக்கும் வகையிலான உருவச் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை அசோக வனம்

அத்துடன், சீதை நீராடியதாக கூறப்படும் அழகிய கங்கையொன்று ஆலயத்தை அண்மித்து செல்கின்றது. ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள், இந்த புனித கங்கையில் நீராடுவது, கை கால்களை கழுவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மலைத் தொடரில் அனுமனின் முகத்தை போன்றதொரு தோற்றம் தென்படுகின்றது. அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு செல்லும் போது அதிலிருந்து வீழ்ந்த பகுதி என்று பக்தர்களால் நம்பப்படுகின்றது.

அசோக வனம் என கூறப்படுகின்ற இந்த பகுதியில், இன்றும் அசோக மரங்களை காண முடிகின்றது என ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசோக மரங்கள் உள்ளன.

குறிப்பாக ஆலயத்தை அண்மித்து காணப்படும் ஆற்றிற்கும், அனுமன் சீதையை சந்தித்ததாக கூறப்படும் இடத்திற்கும் அருகில் இந்த அசோக மரத்தை காண முடிகின்றது. மேலும், இந்த இடத்தில் அதிகளவிலாக குரங்குகள் நடமாடி வருகின்ற நிலையில், அது அனுமனின் அவதாரங்களாக இருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 
ஆலயத்திலுள்ள சிலைகள்
இலங்கை சீதை கோவில்

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ராமர், சீதை, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் இருக்கின்றன. அத்துடன், விநாயகர், அனுமன் உள்ளிட்ட பல சிலைகள் காணப்படுவது இதன் விசேஷ அம்சமாகும்.

ராமர், சீதை மற்றும் லக்ஷ்மனன் ஆகியோரின் சுயம்பு விக்கிரகங்கள் காணப்படுவதாக ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

''ராமாயணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு வசனம், கண்டேன் சீதையை. அதாவது ஆஞ்சநேயர் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்று இதனை சொல்வார்கள். சீதை அசோக வனத்தில் இருக்கும் போது சீதையை தேடி வருகின்றார் அனுமன். முதல் முதலாக அசோக வனத்தில் இங்கு தான் அவரை காண்கின்றார். அதனால் தான் கண்டேன் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்றும் பிரசித்தி பெற்று காணப்படுகின்றது" என அவர் கூறினார்.

மேலும், "அந்த இடத்தில் தான் அனுமனின் பாதம் இங்கு இருக்கின்றது. அனுமன் சீதையை கண்ட பின்னர் தனது விஸ்வரூபத்தை எடுத்து காட்டி, நமஸ்காரம் செய்த இடம் என்றும் இதனை சொல்வார்கள். அதனால், விஸ்வரூப பாதம் இங்கு இருக்கின்றது." என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

 
புனித கங்கை

''இந்த இடத்தில் புனிதமான இடமாக இந்த கங்கையை சொல்வார்கள். அதாவது சீதை வாழ்ந்த காலம் கிருதாயுகம் என்றும் சொல்வார்கள். கிருதாயுகத்தில் சீதை இருந்தபடியால், இந்த கங்கையில் அவர் நீராடியிருக்கலாம் என்று சிறப்பித்து சொல்வார்கள். அதனால், இந்த நதி கூட சீதா தேவியின் நாமத்தில் இன்றும் அழைக்கப்படுகின்றது. சீதா பவித்ர கங்கா என்ற நாமத்தில் இந்த கங்கை அழைக்கப்படுகின்றது." என ஆலயத்தின் பூசகர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை அசோக வனம்
அசோக மரங்கள்

''சீதை இங்கு இருந்ததற்கு சான்றாக அந்த அசோக மரங்கள் இன்றும் இங்கு இருந்துக்கொண்டே இருக்கின்றது. அதுவொரு உன்னதமான சிறப்பாகும்." எனவும் அவர் கூறுகின்றார்.

மூல மூர்த்திகள்

''அசோக வனத்தில் இந்த மூர்த்திகள் எல்லாம் சுயம்பு விக்கிரமாக கண்டு எடுக்கப்பட்டது. சுயம்பு என்றால் தன்னிலையாக உருவானவை. ராமர், சீதா, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் சுயம்பு விக்கிரகங்களாக எடுக்கப்பட்டன. அது இங்கு பிரசித்தியாக காணப்படுகின்றது.

ஏனைய ஆலயங்களில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் எங்களுடைய ஆலயத்தில் இரண்டு மூலஸ்தானங்கள். ஒன்று பிரதிஷ்டா மூர்த்தியாகவும், மற்றையது சுயம்பு விக்கிரகமாகவும் காணப்படுகின்றது." என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

இந்திய பக்தர்களின் வருகை அதிகரிப்பு
இலங்கை சீதை கோவில்

சீதை அம்மன் கோவிலில் வழிபாடுகளை நடத்துவதற்காக உள்நாட்டு பக்தர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இந்திய பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு அதிகளவில் வருகைத் தருகின்றார்கள்.

குறிப்பாக இந்தியாவின் வடப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இவ்வாறு வருகைத் தந்த பக்தர்கள் பிபிசி தமிழுடன், கோவில் தொடர்பான தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

''நாங்கள் ராமர், சீதை, மற்றும் அனுமனைப் பற்றி நிறைய கேட்டிருக்கின்றோம். நாங்கள் ராமாயணம், அதிலுள்ள சுந்தர காண்டம் ஆகியவறைப் படித்திருக்கிறோம். எனக்கு சிறுவயதிலிருந்தே இலங்கைக்கு வந்து அசோகவனம் ஆகிய இடங்களைப் பார்வையிட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அந்த கனவு நிறைவேறியிருகிறது."

"இப்போது அசோகவனத்தைப் பார்த்தேன். இங்கு மிக நல்ல 'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைத்தது. நான் இங்கு வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இங்கிருந்து செல்வதற்கு மனமே வரவில்லை. நாங்கள் அனுமனின் காலடிகளைக் கண்டு அதில் கை வைத்து வணங்கினேன். என் கண்களில் நீர் திரண்டது. நாங்கள் ராமர், சீதை, அனுமன் ஆகியோரிடம் வேண்டுவதை அவர்கள் பூர்த்தி செய்வர்." என இந்திய பக்தராக ரோணு மஹத்தா தெரிவித்தார்.

இந்த கோவிலுக்கு வருகைத் தந்த மற்றுமொரு பக்தரான விஜயவாடாவைச் சேர்ந்த மதன் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''நாங்கள் அசோகவனத்தை தரிசிப்பதற்காக வந்திருக்கிறோம். சீதை ஒரு வருட காலம் ராமனுக்காகக் காத்திருந்த இடம் இது. இந்த இடத்திற்கு வந்து தரிசித்ததை பாக்கியமாகக் கருதுகிறோம். சீதா தேவி எங்களை ஆசீர்வதித்ததாகக் கருதுகிறோம். அரக்கர்களுக்கு மத்தியில் காட்டில் தைரியமாக இருந்து பெண்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்."

"எத்தனை இன்னல்கள் வந்தாலும் சீதா தேவியைப் போல தைரியமாக இருந்து நாம் வாழ்வில் சாதிக்க வேண்டும். அனுமன் அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கு வந்து சீதையின் நிலையைத் தெரிந்துகொண்டு ராமருக்குத் தெரியப்படுத்திய இந்த இடத்தை தரிசித்தது பாக்கியமாகக் கருதுகிறோம்." என அவர் கூறினார்.

மேலும், ஆந்திராவைச் சேர்ந்த கங்காதர் சீதை கோவில் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

''சீதை அசோகவனத்தில் இருந்த இடத்தை இங்கு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். இங்குதான் அனுமன் சீதையைச் சந்தித்து, அவர் கொடுத்த செய்தியை ராமரிடம் கொண்டு சென்றார். இங்கிருக்கும் நதி சீதை குளித்த நதி. அதில் நீர் மிகவும் குளிர்ந்திருக்கிறது. இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது." என அவர் குறிப்பிட்டார்.

 
இலங்கை அசோக வனம்
அயோத்திக்கு சீதை கோவிலில் இருந்து வந்த கல்

அயோத்தியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு, சீதை அம்மன் கோவிலிருந்து கல்லொன்று அனுப்பி வைக்கப்பட்டது. சீதை கோவிலின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த கல்லை அனுப்பி வைத்திருந்தார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி இந்த கல் இந்திய உயர்ஸ்தானிகரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கையளித்திருந்தார். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகளுடன், சீதை அம்மன் ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''இந்த கோவிலுடைய புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த இடமானது இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக காணப்படுகின்றது. இந்த கோவிலினுடைய கும்பாபிஷேகம் எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. ராமர் நவமி அன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் அயோத்தியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கோவிலுக்கு இங்கிருந்து கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன."

"இந்த கோவில் பிரசித்தமான கோவில் என்ற அடிப்படையில் இந்திய நாட்டு பிரஜைகளின் வருகை இன்று அதிகமாக காணப்படுகின்றது. அதேபோன்று, இந்திய பிரதமர் அவர்களை கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வருகைத் தருமாறு அழைத்திருக்கின்றோம்." என சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இலங்கை சீதை கோவில்
வரலாற்று பேராசிரியர்களின் பார்வை

அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இடமாக நுவரெலியாவின் சீதா எலிய பகுதி கூறப்பட்டு வருகின்ற நிலையில், அது தொல்லியல் ரீதியில் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் துறை போராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐதீக அடிப்படையிலேயே இந்த இடத்தில் சீதை அம்மன் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர, இராமாயணத்தில் கூறப்படுகின்ற விதத்தில் இலங்கையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பான தொல்லியல் ஆதாரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை என வரலாற்றுத் துறை போராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g05kk9l39o

நகைகள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்!

3 months 2 weeks ago

கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது.

நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் அல்லது விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார சிக்கல்கள்
மேலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வாகனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத்தொழில் தொடர்பான வாகனங்கள், விவசாயம் தொடர்பான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://thinakkural.lk/article/290508

சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்

3 months 2 weeks ago
04 FEB, 2024 | 10:17 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு வழங்கினால் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் . யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (05)  விஜயம் செய்வேன். என இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை   விஞ்ஞானியான கலாநிதி  சிவா சிவநாதன் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன் கொழும்பு – சங்ரிலா ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிம் கல்வி முறைமையை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைகளை தெளிவுப்படுத்தினார். இதன்போது தனது சொந்த ஊரான சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று சர்வதேசத்தில் பலதுறைகளில் சாதிக்கும் பல இலங்கையர்கள் இலவச கல்வியை அடிப்படையாக பெற்றவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கையர் ஒருவருக்கு வாழ்க்கை தொடர்பில் சரியான அடித்தளம் காணப்படுமாயின் அவர் சர்வதேசத்தில் நிச்சயம் சாதிப்பார் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. 

நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டுள்ளேன். ஆரம்பக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். பாரிய கடின உழைப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் உயர்கல்வியை தொடர்ந்து சாதித்துள்ளேன். எனது மகள் வைத்தியர். அவரை ஒரு வைத்தியராக்குவதற்காக நான் சுமார் 01 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளேன். அதே ஆரம்ப மருத்துவ படிப்பை நான் இலங்கையில் இலவசமாக பெற்றுக்கொண்டேன், ஆகவே இந்த கல்வியால் உயர்வடைந்த நான் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்.

இலங்கையில் இலவச கல்வியை பெற்றுக்கொண்டவர்களில் பலர் இன்று சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். அவர்கள் தமது வருடாந்த வருமானத்தில் குறைந்தது  ஐந்து சதவீதத்தை தமது பிரதேச அபிவிருத்திகளுக்கு வழங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன்.அங்கு கலாச்சாரம் சீரழிந்துள்ளது. போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. சமூக கட்டமைப்பின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபரை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை சற்று மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் யாழ். இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்வேன் என்றார்.

https://www.virakesari.lk/article/175499

சாந்தன் இலங்கை வர அனுமதியுங்கள் ; பா. உறுப்பினர்கள் சிறீதரன், மனோகணேசன் கூட்டாக கோரிக்கை ; சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   03 FEB, 2024 | 05:04 PM

image

(எம்.நியூட்டன்)

பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி  ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு,  சந்திப்பின் போதே  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக்  கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி  சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘கரஞ்ச்’ கொழும்பை வந்தடைந்தது

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3  03 FEB, 2024 | 01:57 PM

image
 

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் 'கரஞ்ச்' இன்று சனிக்கிழமை (03)  கொழும்பு  துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

குறித்த  நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

67.5 மீற்றர் நீளமுள்ள ஐஎன்எஸ் கரஞ்ச்  நீர்மூழ்கிக் கப்பலானது 53 ஊழியர்களுடன் கப்பலின் கட்டளை தளபதி அருணாப் தலைமையில் வருகை தந்துள்ளது.

கப்பல் வருகையை முன்னிட்டு இடம் பெறவுள்ள நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.

அத்தோடு, நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

ஐஎன்எஸ் 'கரஞ்ச்'  நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு  05 ஆம் திகதி  நாட்டை விட்டு வெளியேறவுள்ளது.

https://www.virakesari.lk/article/175455

கிளிநொச்சியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   03 FEB, 2024 | 11:19 AM

image

கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து கடவையை கடக்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/175438

மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டங்கள் குறித்து சந்திரிகா கவலை – அவற்றை விலக்கிக்கொள்ளவேண்டுகோள்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN    03 FEB, 2024 | 09:30 AM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும், ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாடாளுமன்றத்தில் காணப்படுகின்ற இரண்டு சட்டங்கள் குறித்து நாட்டில் பெரும் கரிசனைகள் காணப்படுகின்றன –

முதலாவது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றையது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என நான் நினைக்கின்றேன்.

இந்த சட்டமூலங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதால்  கலந்துரையாடப்பட்டுள்ளதால் போராட்டங்கள் வீதிகளில் இடம்பெற்றுள்ளதால் இந்த சட்டங்கள் குறித்து நான் தெளிவுபடுத்தப்போவதில்லை.

ஒரு சிரேஸ்ட பிரஜை என்ற அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால் இரண்டும் மிகவும் பாரதூரமானவை ஆபத்தானவை.

இவை மிகவும் ஆபத்தான விதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன .

இந்த சட்டங்கள் ஜனநாயக வழியில் செயற்படும் மக்களை துன்புறுத்துவதற்கான தேவைக்கு அதிகமான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்குகின்றன, ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.

இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ளுங்கள்  என அரசாங்கத்திற்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/175425

சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில்

3 months 2 weeks ago

சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுமந்திரன் அவருடைய வாயாலயே சொல்கிறார் நான் நேரடியாக சென்று பேசிய போது 200 பேருக்கு மேற்பட்டவர்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால் 134 வாக்குகள் தான் பதிவாகின என்று, இதிலிருந்து இன்னொரு விடயம் தெரிகிறது.

உங்களுக்கு நேரடியாக சொல்வதற்கே பலர் பயப்படுகிறார்களா?அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூட அச்சம் இருக்கின்றதா? என்பது உங்களது வார்த்தைகளிலே தெரிகிறது.

https://tamilwin.com/article/those-who-voted-against-sumandran-are-in-fear-1706894506?itm_source=article

நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு  மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு தடையேற்படும்.இந்த சட்டத்தின் ஊடாக சிவில் சமூகம்,கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மீள்பரிசீலனை செய்து சட்டத்தை திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175416

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்

3 months 2 weeks ago

Freelancer   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0      - 37

email sharing button
facebook sharing button
reddit sharing button
linkedin sharing button

கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது..

டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவினர்.. R

image_315e0be0f9.jpgimage_9aa027503a.jpgimage_1e93ef81fd.jpgimage_9a83ade7ec.jpg

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல்

3 months 2 weeks ago

Published By: NANTHINI

02 FEB, 2024 | 04:21 PM
image
 

 

கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே  மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. 

அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல் | Virakesari.lk

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:53 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1)  குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175418

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்

3 months 2 weeks ago
image_5f52c82c2a.jpg

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

https://thinakkural.lk/article/290326

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !

3 months 2 weeks ago
Ravi-Kumudesh.jpg

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/290253

Checked
Mon, 05/20/2024 - 22:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr