ஊர்ப்புதினம்

வெளியக தலையீடற்ற பொறிமுறையை நிறுவுவதிலும் அதிகாரங்களைப் பகிர்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி

2 weeks 2 days ago
04 MAY, 2024 | 06:42 PM
image

(நா.தனுஜா)

ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. 

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம். 

இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன்.  

அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். 

இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம்.

மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182696

சடுதியாக குறைவடைந்துள்ள இலங்கையின் சனத்தொகை – மத்திய வங்கி அறிக்கை

2 weeks 2 days ago

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

 

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

 

மக்கள்தொகை குறைப்பு சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம்.

 

இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது.

 

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக கூறும் பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதிகரிப்பு ஒரு சதவீதமாக எட்டு சதவீதம் ஆகும்.

 

மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது.

https://www.thamilan.lk/articles/9yDU04jxuk05zuaiwQte

கடன் மறுசீரமைப்பை பூர்த்திசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயார் - இலங்கையிடம் சீனா உத்தரவாதம்

2 weeks 2 days ago
04 MAY, 2024 | 06:11 PM
image

(நா.தனுஜா)

கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி செயற்றிட்டம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார்.

அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்றிட்டம் குறித்தும், நுண்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அத்தோடு பொருளாதாரத்திலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182692

OnmaxDT பிரமிட் திட்டத்தின் ஊடாக பண மோசடி செய்த ஆறு பேருக்கு பயணத்தடை!

2 weeks 2 days ago
04 MAY, 2024 | 04:20 PM
image
 

ஒன்மேக்ஸ் டிடி  (OnmaxDT) பிரமிட் திட்டத்தின்  ஊடாக  பணமோசடி  செய்த ஆறு பேருக்கு  வெளிநாடு செல்வதற்கு  தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182666

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

2 weeks 2 days ago
04 MAY, 2024 | 05:32 PM
image

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானை  மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருந்த காலகட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்தார். 

அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணுவது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

https://www.virakesari.lk/article/182682

மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

2 weeks 2 days ago
medicines-300x200.jpg

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக  சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும்  வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும்
அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300895

தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு

2 weeks 2 days ago
IMG-20240504-WA0044-750x375.jpg தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு.

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1381092

தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு

2 weeks 2 days ago

தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு Screenshot-2024-05-04-at-10.36.24%E2%80%

தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில்  தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=275707

 

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்

2 weeks 2 days ago

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள்
Vhg மே 03, 2024

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். 

யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன் உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அதேபோல யாழ்ப்பாண தமிழ்த் தேசிய உணர்வாளன் உமாகரன் ராசையா அவரும் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


spacer.png



spacer.png

 

https://www.battinatham.com/2024/05/2.html

13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி

2 weeks 2 days ago

13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி
Vhg மே 04, 2024
1000235109.jpg

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.battinatham.com/2024/05/13.html

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்!

2 weeks 2 days ago

 

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்!
467843816.jpg
 

இனியபாரதி.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. 

யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கோசங்களை எழுப்பினர். 

அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர். 

அரசஅதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். (ச)

 

https://newuthayan.com/article/ஊடக_சுதந்திர_தினத்தை_முன்னிட்டு_யாழில்_போராட்டம்!

சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி - ஆசிர்வாதம் ஜோன்சன்

2 weeks 3 days ago

Published By: DIGITAL DESK 3   04 MAY, 2024 | 08:46 AM

image

குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன், தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவுடன் நாட்டின் உயரிய கதிரைக்கு வந்தவர்களும் கூட பின்னர் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதாக சுட்டிக்காட்டினார்.

"நாங்கள் தோல்விடைந்துள்ளோம். எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எங்களது உரிமைகள் குறித்து மகஜராக கையளித்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தொழிற்சங்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சூழல் உருவாகிறது.” என்றார்.

பணியில் இருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வழங்காததால், எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

"தொழிலாளிகள் தமது வேலைகளை செய்கின்ற போது அவர்கள் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும். எனினும் அது குறைவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளிகள் நோய்வாய்ப்படும் நிலைமை உருவாகிறது. வேலைகளை செய்கின்றபோது சீருடை, பாதணி, கையுறை அணிந்திருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக செயற்படுபவர்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

“வீதிகளில் பணியாற்றும் மற்றும் பல இடங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் காணப்படுகின்றோம். ஒன்று அரச ஊழியர்கள், ஒன்று தனியார் ஊழியர்கள். அரசாங்கம் எமக்குத் தர வேண்டியதை தர வேண்டும். எங்கள் சம்பளம் உயர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலும் நாங்கள் தொழிலை முன்னெடுக்கின்றோம் எனினும் எங்கள் சம்பளம் உயரவில்லை.”

https://www.virakesari.lk/article/182629

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு கிழக்கிற்கு விஜயம்

2 weeks 3 days ago

Published By: VISHNU   04 MAY, 2024 | 12:11 AM

image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.

GMpxPYkXcAAX02g.jpg

அதற்கமைய இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனம்மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படும் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பார்வையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்த போது, இந்த திட்டத்திற்கான ஆற்றல் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திருகோணமலை எண்ணெய் தாங்கிகளையும் பார்வையிட்டார். அங்கு லங்கா ஐ.ஓ.பி.எல்.சி.யின் முதலீடுகள் மூலம் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

லூப்ரிகண்ட் கலப்பு ஆலை மூலம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் கிரீஸ் உற்பத்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியா - இலங்கை எரிசக்தி கூட்டாண்மைக்கு பங்களிக்கும், எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

இதே வேளை மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ.ஓ.சி.பி.எல்.சி. மருத்துவ உபகரணத்தை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர், திருகோணமலை எண்ணெய் தாங்கி முனையத்துக்கு அருகில் வசித்து வரும் மக்களுக்கு உணவுப் பொருட் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

இதே வேளை இலங்கை மக்கள் தங்கள் சொந்த வீடுகள் என்ற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் திருகோணமலையில் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்ட மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இதன் போது மக்களை மையப்படுத்திய திட்டத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் திருகோணமலையில் உள்ள விமானப்படை தளத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படை டோர்னியர் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடினார்.

https://www.virakesari.lk/article/182625

நாடு முழுவதும் பரவும் வைரஸ் - முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை

2 weeks 3 days ago

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார்.

சுவாச நோய்கள்

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

 

நாடு முழுவதும் பரவும் வைரஸ் - முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை | New Influenza Virus In Sri Lanka

இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ ஆலோசனை

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.

 

நாடு முழுவதும் பரவும் வைரஸ் - முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை | New Influenza Virus In Sri Lanka

மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659

ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது - பாட்டலி சம்பிக்க ரணவக்க

2 weeks 3 days ago

Published By: VISHNU   03 MAY, 2024 | 07:27 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

மே தின கூட்டத்தில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ராஜபக்ஷர்களும் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்ஷர்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது.இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ராஜபக்ஷர்களுக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எவருமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ராஜபக்ஷர்கள் செயற்படுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்ஷர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள கூடாது. ராஜபக்ஷர்களிடமிருந்து விலகி செயற்படுவது ஜனாதிபதியின் அரசியலுக்கு சிறந்ததாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/182617

தொழில்நுட்பம் கற்று சொந்தக்காலில் நிற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் - சுவாமி விபுலானந்தர் ஜனன தின நிகழ்வில் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி

2 weeks 3 days ago
03 MAY, 2024 | 05:39 PM
image
 

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது. தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி மஹராஜ் தெரிவித்தார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, மலர்மாலை  அணிவிக்கப்பட்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ..." பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆண்டு சுவாமி விபுலானந்தரின் துறவறத்தின் நூற்றாண்டு நிகழ்வாக அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், அவர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் இதன்போது தெரிவித்தார்.

3D614C41-8375-4398-BA88-FCE28DE49A08.jpe

FE7174F4-B4BC-42D9-9446-1AFBA3FE60EF.jpe

85328522-68A5-44A7-A69D-E923752BA4FD.jpe

97457DC5-9E1B-49F6-BD11-8060E78C71A2.jpe

9705AE69-E847-441C-B450-04CDB2A00F97.jpe

https://www.virakesari.lk/article/182604

தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம் - உலக சிலம்பத் தலைவர் முனைவர் சுதாகரன் யாழில் பெருமிதம்

2 weeks 3 days ago
03 MAY, 2024 | 05:36 PM
image
 

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இன்று  வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சிலம்பம்  போட்டியை முதல்முறையாக 5 நாடுகளின் பங்கு பெற்றதுடன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளமையட்டு பெருமை அடைகிறேன்.

யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம்  இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன்.

அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம்.

இலங்கை சிவலீமன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நாளைய தினம் சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சிலம்பம் போட்டிகள் மாலை வரை இடம்பெற்று பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறும்.

ஆகவே குறித்த போட்டியில் பங்கு பெற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182599

இலவசக்கல்வி, இலவச சுகாதாரத்தை விற்க அரசாங்கம் சதி செய்வதாகத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்

2 weeks 3 days ago

Published By: VISHNU

03 MAY, 2024 | 07:37 PM
image
 

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (3) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

KJC_2959.jpg

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றை விற்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

KJC_2728.jpg

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

KJC_2675.jpg

KJC_2751.jpg

(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/182618

வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி, தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்?

2 weeks 3 days ago

வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி;

தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்:

சிறீரங்கேஸ்வரன் கேள்வி.....

இனிய பாரதி.

இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்,

பிரபல ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் ஊடகத்திற்கு ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸ்சநாயக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதோடு இலங்கையில் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னால் முடியும் என கூறியுள்ளார். அதேநேரம் 2019 ஆம் ஆண்டு தங்களது கொள்கை குறித்த ஆவணத்திலும் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டிரப்பதாகவும் சூசகமாக கூறியுள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் ஒரு நிலத் தொடருள்ள தாயக பூமியாக தமிழ் மக்கள் வாழ்வதை கூட விரும்பாத ஜே.வி.பி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்தது. 

குறைந்தபட்சமாக வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கூட விரும்பாத இனவாத சிந்தனையுடன் செயற்பட்ட ஜே.வி.பி இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடும் என்ற சூழலில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதாக அந்த ஊடகத்திற்கு கூறியுள்ளார்.

இதிலிருந்து பட்டவர்த்தனமாக புலப்படுவது தேர்தலை இலக்குவைத்து சமிபத்தில் புலம்பெயர் தேசம் சென்றிரந்த ஜே.வி.பி தலைவர் அங்குள்ள அமைப்புகளின் கருத்துக்களை அறிந்து வாக்கை அபகரிக்கின்ற யுக்தியாக இவ்வாறான ஒரு கருத்தை சொல்ல முனைந்துள்ளார்.

உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி எவ்வாறான முட்டுக்கட்டைகளை அரசாங்கங்களுக்கு போட்டிருந்தது என்பதை தமிழ் மக்கள் கண்ணூடக பார்த்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஜே.வி.பி தலைவர்  நான் சமஷ்டியை தருவேன் என்றோ, 13 ஆவது திருத்தத்தை தருவேன் என்றோ இங்கு பேரம் பேச வரவில்லை என இனவாத மமதை கலந்த போக்குடன் கூறியிருந்தார்.

எனவே குறைந்தபட்சமாக உள்ள மாகாண முறைமையை கூட ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எவ்வாறு நியாயமான உரிமைகளை வழங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி; (newuthayan.com)

யாழ். கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்குமாறு ஆளுநர் பணிப்பு

2 weeks 3 days ago

Published By: DIGITAL DESK 7

03 MAY, 2024 | 11:38 AM
image
 

யாழ்.நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்ப்போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற கூட்டத்தின் போதே  ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு  ஆளுநர் அறிவுறுத்தினார்.

வரலாற்றுச் சின்னமாக காணப்படும் கோட்டையை பாதுகாப்பதற்கும், அதனூடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என  ஆளுநர் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயுமாறு  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என கௌரவ ஆளுநர் கூறினார். கௌரவ ஆளுநரின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பணிப்புரையை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்குமாறு ஆளுநர் பணிப்பு | Virakesari.lk

 

Checked
Tue, 05/21/2024 - 07:08
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr