ஊர்ப்புதினம்

சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்று சிஐடியினர் விசாரணை

2 hours 16 minutes ago

Published By: RAJEEBAN

17 MAY, 2024 | 03:49 PM
image
 

சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர்

திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது 

இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள். 

இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள். 

புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது. 

என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. 

வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன்.

https://www.virakesari.lk/article/183793

தமிழரின் உரிமை பறிப்பு சர்வதேசமே தலையிடுக!

7 hours 11 minutes ago

கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

 

போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

-இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:-


திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது.

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம்  கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச)

https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக!

கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள்.

உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்

“அரசாங்கத்தின் பயணம் சரியாக இல்லை. முடிவு எடுக்கப்படும்.”

7 hours 16 minutes ago

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும்
பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/301842

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

7 hours 19 minutes ago
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி

Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM

image
 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183751

யாழில் முதியவர் உயிர்மாய்ப்பு

7 hours 27 minutes ago

Published By: DIGITAL DESK 3

17 MAY, 2024 | 10:26 AM
image
 

யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/183748

டைபொய்ட் அபாயம் குறித்து சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

7 hours 30 minutes ago

இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது.

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது.
எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
டைபொய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301826

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – ஆஷு மாரசிங்க

7 hours 50 minutes ago

மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதனால் சட்டமூத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன.

அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது.

என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்காக இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது.

இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரையும் நன்மை கிடைக்கிறது.

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது என்றார்.

https://thinakkural.lk/article/301844

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்தியாவில் கைது

7 hours 58 minutes ago

Published By: DIGITAL DESK 3

17 MAY, 2024 | 11:03 AM
image
 

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/183756

நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

8 hours 6 minutes ago

நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்
adminMay 17, 2024
jaffna-uni.jpg
 

வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூறும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக கூர்ந்து நோக்குகின்றோம்.

அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி போரில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறையினால் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியும் உள்ளன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் சிறிலங்கா படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது.

அனைத்துலகச் சமூகத்தில் நினைவு கூறல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009 ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தும் வகையில் மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

சிறிலங்காவின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய் சிறிலங்கா நீதிக்கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் அண்மைக்காலங்களில் நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் யாவும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உளநெருக்கடிகளிற்கு உள்ளாக்குகின்றன.

நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தித் தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகிப்பதனூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு சிறிலங்கா அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, மக்களின் நினைவுகளினை அழிப்பதற்கு முயல்வதனால் சிறிலங்கா அரசும் அதன் படைத்தரப்புக்களும் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக கூட்டுச் சேர்வதனையும் தம்மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயன்முறைகளிற்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்தவும் முடியாதவொரு நிலையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

தமிழ் மக்களின் வலிகள் கூறும் நினைவுத் தூபிகளை அழித்தல் மற்றும் தமது போர் வெற்றிச் சின்னங்களை நிறுவுவதன் ஊடாக தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் பெரிதாக எதையும் சாதித்திராத சிறிலங்கா அரசு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயலென்பது தமிழ் மக்களிடையே முன்னரை விட எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனைத் தடுப்பதனூடாக தனது ஆக்கிமிப்பை சாதித்து விட முனைகின்றது.

இதுபோன்ற நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவதோடு, சிறிலங்கா அரசின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன. – என்றுள்ளது

https://globaltamilnews.net/2024/203057/

எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?

19 hours 59 minutes ago
AVvXsEjzozk6Vz8UMsogKzulD_Fgzajgq4PkgkMd


 

 

 “பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவிப்பு!

ஊடகப்பிரிவு-

உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 

“இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியின் கப்பற்போக்குவரத்தை பாதுகாக்கப்போகிறது? எனவே, அரசாங்கம் பாலஸ்தீன் விவகாரத்தில் இரட்டைமுகத்துடன் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன். 

 

பாலஸ்தீனர்களை விரட்டியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையும் ஆட்களை அனுப்பியுள்ளது. இது ஏன்? இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? வெளிநாட்டமைச்சர் இதற்குப் பதலளிக்க வேண்டும். வெறும் தலையாட்டியாக இருக்காமல், இஸ்ரேலின் வெறித்தனங்களை அரசாங்கம் கண்டிப்பது அவசியம்.

 

சொந்தமண்ணிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட "நக்பா" தினத்தில், நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சர்வதேச நியதிக்கு உடன்பட்டு பாலஸ்தீனை அங்கீகரியுங்கள். இஸ்ரேலின் இன ஒழிப்புச் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையில், இலங்கை செயற்படக்கூடாது. தர்மமின்றி, இனவெறியோடு தலைவிரிகோலமாக தாண்டவமாடும் யூத இராணுவம் முழு பாலஸ்தீனையுமே அழிக்கத் துடிக்கிறது.

 

பதிலடிப்போரென்ற போர்வையில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நிரபராதிகள் அனைவரையும் சல்லடைகளால் துளைக்கிறது இஸ்ரேல். வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் இன்னும் நிவாரண நிலையங்களும் விமானத்தாக்குதல்களால் தகர்க்கப்படுகின்றன.

 

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் ஒருதலைப்பட்ச போக்குகள், ஜனநாயகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தால் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்கா, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது மனிதாபிமானத்தையோ கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.madawalaenews.com/2024/05/i_48.html

தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்

22 hours 18 minutes ago

Published By: DIGITAL DESK 7  16 MAY, 2024 | 04:47 PM

image

(நா.தனுஜா)

தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் தொடர்பில் கேட்டறிந்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தமிழ்க்கட்சிகள் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (16) மாலை யாழில் உள்ள தனியார் உணவு விடுதியொன்றில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றிப் பேசப்பட்டுவரும் நிலையில், இச்சந்திப்பின்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அதுபற்றிக் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த சிறிதரன், ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த இறுதித்தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்திலேயே மேற்கொள்ளப்படுமென சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் நீண்டகாலமாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படாதிருக்கும் நிலையில் இம்முறை தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்ற நிலைப்பாடு தம்மத்தியில் காணப்படுவதாக எடுத்துரைத்தார்.

'தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அரசியல் தீர்வானது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டும். இருப்பினும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சிக்குள் அது சாத்தியமில்லை.

அண்மையகாலங்களில் சிங்களவர்கள் வாழாத, தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

புதிதாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் போதியளவு வாக்குகள் கிடைக்காவிடினும், தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை அடையாளபூர்வமாகவேனும் களமிறக்கவேண்டியது அவசியம்' எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

ஆனால் பொதுவேட்பாளர் யோசனையை ஆதரிப்பதாகத் தெரிவித்த சித்தார்த்தன், இருப்பினும் அவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர் போதியளவு வாக்குகளைப் பெறவேண்டியது அவசியம் எனவும், அன்றேல் எம்மால் முன்வைக்கப்படும் தீர்வுசார் கோரிக்கையை மக்களே நிராகரித்துவிட்டதாக அமெரிக்கா உட்பட சகல தரப்பினரும் கூறுவர் எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சார்ள்ஸ் நிர்மலாதன் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத்தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தே இங்கு கருத்து வெளியிட்டார்.

அதேவேளை போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் தடைகள் மற்றும் இவை பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பன பற்றியும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் குறித்து சிறிதரனிடம் வினவிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கட்சிகள் ஒன்றுக்கொன்று பிளவுபட்டு நிற்பது பலவீனமானது எனவும், இதன்விளைவாக மக்களும் பிளவுபடுவர் எனவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால்தான் தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/183700

தமிழ் மக்களுக்கு அரசு நீதி வழங்காது - யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்

22 hours 28 minutes ago
தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன - யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்  
16 MAY, 2024 | 05:19 PM
image

ல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புகளிடம் இருந்து எந்த‌ நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன‌ என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இறுதிப் போர் நினைவேந்தல் மீதான‌ அரச அடக்குமுறை தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: 

இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும், உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட கூட்டு வலி மற்றும் அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. 

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையுடன் போர் முடிவுக்கு வந்தது. 

மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்தப் போரில் காயமடைந்தனர். பலர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. 

தமிழ் மக்கள் இந்த யுத்தத்தின்போது சந்தித்த பாரிய‌ பொருள் இழப்பின் தாக்கமானது நீண்ட கால விளைவுகளைக் கொண்டது. உள்நாட்டுப் போரின்போது தாங்கள் சந்தித்த மனித, உடல் மற்றும் பொருள் ரீதியான இழப்புகள் குறித்து உண்மையையும் நீதியையும் தமிழ் மக்கள் இன்று கோரி நிற்கின்ற அதேவேளை, போரின் கடைசிக் கட்டங்களின்போது இலங்கை அரசு செய்த அட்டூழியங்களை ஓர் இன அழிப்புச் செயன்முறை என அவர்கள் கருதுகிறார்கள்.

கடந்த பதினான்கு ஆண்டுகளில் நடந்ததைப் போலவே, இந்த ஆண்டிலும் மே மாதத்திலே வடக்கு, கிழக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள தமிழர்கள் போரின்போது இறந்தவர்களை நினைவுகூருகின்றனர். 

வடக்கு, கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் வன்முறையை நேரில் அனுபவித்தவர்கள் உள்ளடங்கலாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. 

போரில் இறந்த‌ தங்கள் உறவுகளையும், இழப்புக்களையும் சந்தித்த பரந்துபட்ட தமிழ் சமூகத்தையும் நினைவுகூருவோரும் அனைவருடனும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு எமது ஆதரவினை வழங்குகிறோம். அவர்களின் துயரத்திலும் வேதனையிலும் நாமும் பங்கேற்கிறோம்.

நினைவுகூரலானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குணப்படுத்தலினை ஏற்படுத்துவதிலும், அவர்கள் வாழ்விலே அமைதியைக் கொண்டுவருவதிலும் பங்களிக்கக் கூடியனவாக இருக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு எதிர்ப்பினையும், வன்முறைக்குப் பின்னான அம்மக்களின் மீளெழுச்சியினை வெளிப்படுத்தும் செயன்முறைகளாகவும் அமைகின்றன என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகிறது. 

அதேவேளை, இலங்கை அரசு மற்றும் அதன் சட்ட அமுலாக்க இயந்திரங்கள் இந்த வாரம் நடைபெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது, அடக்குவது மற்றும் தடுப்பது குறித்துத் தனது ஆழ்ந்த கரிசனையினையும், கவலையினையும் ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையூடாக‌ வெளிப்படுத்துகிறது.

2009ஆம் ஆண்டிலே முள்ளிவாய்க்காலிலே போரிலே அகப்பட்டிருந்த மக்களின் அனுபவங்களை நினைவுகூரும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரிலே முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் கைது செய்யப்பட்டமையை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

இதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தைப் பொலிஸார் தடுக்க முயன்றுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம்களை நிறுத்துவதற்கான முயற்சிகளும் கூட இடம்பெற்றிருக்கின்றன. 

கல்முனை பகுதியில் நினைவேந்தல் செயன்முறைகளைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவினைப் பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த சம்பவங்களைத் தவிர, சமூகக் கூட்டிணைவுடன் முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் எனத் தவறாக சித்திரித்து, இழிவுபடுத்தும் கொடிய செயலிலும் அரசும் அதன் இயந்திரங்களும் ஈடுபட்டுள்ளன.

நினைவுகூரலினைத் தடுப்பதற்கான அரசின் இந்த முயற்சிகள் அனைத்தும் போரில் இறந்தவர்களை அர்த்தமுள்ள முறையில் நினைவுகூருவதற்கு இலங்கையிலே தமிழர்களுக்கு இடமில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றன‌. 

அரசின் இவ்வாறான கடும்போக்கான‌ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் அரசின் இன விரோதத்தையும் வெளிக்காட்டுகின்றன. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புகளிடம் இருந்து எந்த‌ நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவனவாக அமைகின்றன‌.

தமிழ் சமூகத்தின் நினைவேந்தல் முயற்சிகளை தவறாக சித்திரிக்கும் வகையிலும், அவற்றினை மட்டுப்படுத்தும் வகையிலும், அவற்றினைக் குற்றமாக மாற்றும் வகையிலும் அரச இயந்திரங்களினால் மேற்கொள்ளப்படும் எல்லா செயன்முறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இலங்கையில் சட்ட அமுலாக்கத்துக்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோருகிறது. இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகள் கடந்து நாட்டின் வடக்கு, கிழக்கிலே நினைவேந்தல் செயன்முறைகளினை நசுக்கும் வகையில் இடம்பெறும் அரச அடக்குமுறையை கண்டித்து, போரின்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்த வாரம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொண்டிருப்போருக்கும் தங்கள் ஆதரவினை வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். 

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அனுபவித்த வேதனை மற்றும் இழப்புகளுக்கு நீதி கோரி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்துகிறது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/183716

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.

23 hours 9 minutes ago

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார்.

மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

அரசியல்வாதியின் அடாவடித்தனம்

அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி | Tension Situation In Katunayake Airport

பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது, விமான நிலைய பாதுகாவலர்களை திட்டிய அரசியல்வாதி, தனது பயணத்தைத் தடுத்ததாக கூறப்படும் இரண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் தனது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்ததாக மூத்த அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பொதி எடுத்து செல்பவர்களுக்கு குறைந்த பணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை அவர் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

காவலர் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி | Tension Situation In Katunayake Airport

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஊழியர் அரசியல்வாதிக்கு பயந்து, தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் காரணமாக, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. 

அரசியல்வாதியின் இந்த செயல் விமான நிலையம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளது.

https://tamilwin.com/article/tension-situation-in-katunayake-airport-1715831527

யாழ். உடுத்துறையில் மனைவி கழுத்து நெரித்து படுகொலை - கணவன் கைது

1 day 2 hours ago

Published By: DIGITAL DESK 7

16 MAY, 2024 | 03:46 PM
image
 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை  கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்று புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

கணவன் - மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் ,அடிப்படையில்  பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/183669

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள்

1 day 2 hours ago
இலங்கையில் அதிகரிக்கும் 'பிரஷர்'

இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம்திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

உயர் இரத்த அழுத்த அபாயத்தைத் தடுப்பது குறித்து சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் மேலும் கருத்து தெரிவிகையில்
“முக்கியமாக, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது மிகவும் முக்கியம். மேலும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் ள் மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும் என்றார் .

https://thinakkural.lk/article/301769

மே 18ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் - ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள்

1 day 8 hours ago

Published By: DIGITAL DESK 3

16 MAY, 2024 | 10:20 AM
image
 

தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த செய்தி குறிப்பில், தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அதேநேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுபடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்பரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம்.

மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம்.

பல்கலைக்கழக மாணவர் ஏற்பாடு செய்துள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம். வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம்.

அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்  என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/183659

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

1 day 9 hours ago

Published By: VISHNU

16 MAY, 2024 | 01:17 AM
image
 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார்.

தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.

வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG-20240515-WA0008.jpg

IMG-20240515-WA0007.jpg

IMG-20240515-WA0004.jpg

IMG-20240515-WA0002.jpg

IMG-20240515-WA0001.jpg

IMG-20240515-WA0000.jpg

https://www.virakesari.lk/article/183648

 

முல்லையில் கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா

1 day 9 hours ago

Published By: VISHNU

16 MAY, 2024 | 01:40 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது 

Karumpiyan_15-05-2024__4_.png

வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அவரக்ளினால் குறித்த குடிநீர் திட்டத்திற்கான பெயர்பலகை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது 

Karumpiyan_15-05-2024__1_.png

அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன்,  சம நேரத்தில் ஏனைய அதிதிகளினாலும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது 

நிகழ்வில் வடமாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர்,அமைச்சின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர்களான  காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன்,மாகாண நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மற்றும் முல்லை மாவட்ட செயலாளர், மற்றும்  யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் மாந்தை கிழக்கு  பிரதேச செயலாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

குறித்த குடிநீர் திட்டமானது உலக வங்கியின் 1856 மில்லியன் மேற்பட்ட நிதிப்பங்களிப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183651

தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு.

1 day 11 hours ago

தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள்.

பொலிஸ் கெடுபிடி

அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு | Mullivaikkal Remembrance Ranil Speech

இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார்.

"உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து

“இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு | Mullivaikkal Remembrance Ranil Speech

 

அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது - குரலற்றவர்களின் குரல் அமைப்பு

1 day 23 hours ago

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர். 

அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆணந்தவர்மன், கடந்த 26.03.2024 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் தனது முகநூல் பக்கத்தினூடாக மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை இட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கொழும்பு - நீதவான் நீதிமன்ற கட்டளையினை பெற்றுக்கொண்டு, சமூகச்செயட்பாட்டாளரான தன்னை, மறு அழைப்புத் திகதி எதுவுமின்றி கொழும்பு - விளக்கமறியல் சிறையில் காலவரையறையற்ற விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார். 

இந்நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தன்னை, "உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.  

அவ்வாறில்லையேல், தன்மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கமைய மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக சிறைக்குள் இருந்தவாறு உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். 

யுத்தத்தின்போது கடுமையான விழுப்புண்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆனந்தவர்மன், ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்றிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. 

அதனடிப்படையில், நீண்டகாலமாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது ஒன்பது நாட்களை கடந்தும் உறுதியோடு மேற்கொண்டு வருகின்ற உணவுத் தவிர்ப்பு காரணமாக உடல் உருக்குலைந்து மிகவும் சோர்வுற்ற நிலையில் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனவே, இதன்மூலம் மக்களின் பக்கம் நின்று ஜனநாயக வழியில் பொதுவெளியில் செயற்பட்டு வருகின்ற சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களைக்கொண்டு மறைகரமாக அடக்குமுறைகளை மேற்கொண்டு, சட்டத்தின் பெயரில் குரல்வளைகளை நசுக்குகின்ற செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிகிறது. 

உதட்டளவில் மாத்திரமே நல்லிணக்கம் பேசுகின்ற அரசானது மிகநீண்ட காலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வருடக்கணக்காக தெருப்போராட்டம் நடாத்திவருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, பாதுகாப்பு-தொல்லியல்-வனவளம் என்ற பெயர்களில் கையகப்படுத்தப்பட்ட இன்றும் கையகப்படுத்திக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, போரை காரணம்காட்டி அநியாயமாக உயிர்பறிக்கப்பட்ட தமது உறவுகளின் ஆத்மாக்களை நினைவேந்தி ஆறுதலுறுகின்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றமை போன்ற வெகுமக்களின் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அச்சுறுத்தல்களை தொடர்வதன் மூலம் அரசு இந்த நாட்டை எத்திசை நோக்கி கொண்டுசெல்ல முனைகிறது?

எனவே, மக்கள் நலனை மகுட வாசகமாக கொண்டியங்கும் அரசியல் மற்றும் குடிமக்கள் சார் அமைப்புகள், 'வீதி வரையே பிரச்சினை, எம் வீட்டுக்குள் வரவில்லை' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிராது ஜனநாயக த்தின் குரல்களுக்கு ஆபத்து நேருகின்றபோது யாராக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்கின்ற மனநிலையுடன் கருமமாற்றுவதன் ஊடாகவே எதிர்பார்க்கின்ற மக்ளாட்சியின் அடைவுமட்டத்தை அன்மிக்க முடியுமென்பதை தயவுடன் வலியுறுத்த கடமைப்படுகிறோம் என்றுள்ளது.

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது - குரலற்றவர்களின் குரல் அமைப்பு | Virakesari.lk

Checked
Fri, 05/17/2024 - 12:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr