செஞ்சோலைப் படுகொலை

2006 ஆகஸ்ட் 14 - இலங்கை விமானக் குண்டுவீச்சில் 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர்

தமிழும் நயமும்

முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்

2 months 1 week ago

                                                                                  முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்

 

  அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். உதாரணமாய் திரைப்பாடலையே எடுத்துக் கொள்வோம். ‘வாழ்க்கை படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில் ‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே ! விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ எனக் கேட்கும் பொழுது அதிகாரம் குறிப்பறிதலில்

  யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

  தான்நோக்கி மெல்ல நகும்

என நம் நினைவிற்கு வரும் குறள் கண்ணதாசன் அறியாததா ? இவ்வாறு எடுத்தாள்வது கண்ணதாசனின் சான்றாண்மைக்குச் சான்று பகர்வது. முன்னோரான வள்ளுவனின் மொழியைப் பொன்னே போல் போற்றுதல் கல்வி கேள்வியிற் சிறந்த, புலமையிற் சிறந்த கண்ணதாசனுக்கு மேலும் பெருமை சேர்ப்பது. அறிவுலகம் அறிந்த சான்றோரை வழிமொழிவது எடுத்தாள்வதாய் அமையும். அங்கு ‘சுடுதல்’ இல்லை. ஆங்கிலத்தில் “Reference out of reverence is acknowledgement, not plagiarism” என்பர். இவ்வகையில் நற்றிணையின் கூற்று வள்ளுவத்தில் எடுத்தாளப்படும் இரண்டு இடங்கள் நினைவுகூர்ந்து இன்புறத்தக்கவை. சங்க இலக்கியமான நற்றிணை சங்கம் மருவிய காலத்துப் பொய்யாமொழிக்கு முந்திய காலத்தது எனும் பெரும்பான்மை அறிவுலகக் கருத்தியலின் வழிநின்று எழுதுகிறேன். மேலும் இங்கு எது முந்தியது என்பதல்ல, எடுத்தாளும் ஆளுமையே பேசுபொருள்.

          நான் பேச வந்த முதற்குறள் ‘கண்ணோட்டம்’ எனும் அதிகாரத்தில் அமைந்த

  பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர்.

எல்லோரும் விரும்பத்தக்க நாகரிகம்(courtesy) விழைபவர் தம் சார்ந்தோர் தமக்கு வழங்குவது நஞ்சாகவே இருப்பினும் அதனை ஏற்று அமைவர் என்பதே பொருள். இங்கு ‘நஞ்சினை உண்டு’ என்பதை நேர் பொருளாய்(literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். ‘உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றை தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில் சூழலைக் கருத்தில் லொண்டு ஏற்றமைதல்’ எனப் பொருள்கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். இக்குறளினால் பரிமேலழகர் முதல் பாக்களின் திறம் ஓரளவு அறிந்தோர் வரை நினைவு கூர்வது நற்றிணையில் 355வது பாடல் பகுதியான

 முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

 நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

எனும் குறிஞ்சித் திணைப் பாடலாம்.

நற்றிணையின் நனிநாகரிகம் வள்ளுவத்தில் நயத்தக்க நாகரிகமானது. நற்றிணையின் வலியுறுத்தல் தேர்ந்து தெளிந்த நட்பில் அமைந்தது. குறளின் வலியுறுத்தல் நாகரிகத்தில் அமைந்தது.

           பேச வந்த இரண்டாவது குறள் பிரிவாற்றாமையில் தலைவனிடம் தலைவியின் கூற்று,

 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

 வல்வரவு வாழ்வார்க் குரை

என்பது.  

          சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடைபெற்று தலைவியிடம் விடைபெற வருகிறான். “சில மாதங்களில் வந்து விடுவேனே. ஏன் கவலை கொள்கிறாய்?” என ஏற்கெனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், “ ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். ‘அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே ! ’ எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்போது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல்!” பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு,மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற்சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்து கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. எனவே மேற்கண்ட குறளோவியம் நம் நினைவிற்குக் கொணரும் நற்றிணைக் காட்சி நெய்தல் நிலத்துத் தோழி தலைவியின் பிரிவாற்றா நிலை பற்றி தலைவனிடம் எடுத்துரைப்பது (பாடல் – 19; நக்கண்ணையார் எனும் பெண்பாற் புலவர் பாடியது – அவர்தாம் தோழியோ ! )

 வருவை யாகிய சின்னாள்

 வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே   

[ வருவை ஆகிய சின்னாள்(சில நாள்)

 வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே) ]

அஃதாவது ‘சில நாட்களில் வருவாய் எனினும் அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே’ என்பதாம்.

              “ யாமறிந்த மொழிகளிலே……….” எனும் பாரதியின் கூற்று உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை என்பது நம்மவர்க்காவது புரிந்தால் சரி.

                                                      

                                                                                                                                                                                                                      -சுப.சோமசுந்தரம்     

           

யாழ்ப்பாணத்தில்... மலை, இல்லை என்ற குறையை போக்கிய கவிஞர்.

2 months 1 week ago

யாழ்ப்பாணத்தின் பெருமை!

'...ஏறி உயர்ந்த மலைகள்
இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்து பின் ஆறி
கலைகளில் ஊறிச் சிறந்தது
யாழ்ப்பாணம்' -மகாகவி-

காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! - சுப.சோமசுந்தரம்

2 months 2 weeks ago

                        காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே !

    பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாறாயினும் வள்ளுவத்தில் தொடர் தும்மலாய் வரும் ஒரு தும்மல் தொடர் (sneeze sequence) ஈண்டு அதன் இலக்கியச் சுவை கருதி உவந்தினிது நோக்கற்பாலது (!!).

           தலைவன்-தலைவி உறவு மேம்படுதலில் ஊடலின் பங்கினை அல்லது பாங்கினை இலக்கிய அறிமுகம் உடையோர்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. கற்பியலில் அதிகாரம் புலவி நுணுக்கத்தில் குறட்பாக்கள் எண் 1312,1317,1318 இப்போது நம் ரசனைக்குரியன. பரிமேலழகரின் இவ்வரிசைப்படுத்தல் காட்சியமைப்பில் சரியாக அமைந்திருந்தாலும், இவை தொடர் பாக்களாய் அமைந்திருப்பின் கூடுதல் சிறப்பாமோ எனும் எண்ணம் தவிர்க்க இயலாதது. எனினும் நாம் தொடராய் அமைத்து நாடகத்தை அரங்கேற்றலாமே!

      முதல் காட்சியில் தலைவன் தலைவி ஊடியிருக்க, தலைவி கூற்றாய், "(பொய்யாக) தும்மினார். ஏனெனில் நான் அவரை 'நீடு வாழ்க' என வாழ்த்துவேன்; அதன் மூலமாக நான் முதலில் பேசியவளாவேன்; ஊடலில் நான் தோற்றவளாவேன் என்பதை அறிந்து தும்மினார்". என்னதான் ஊடலாயினும் வாழ்த்தாமல் இருக்க முடியுமா என்ன? தன் தலைவனாயிற்றே! வாழ்த்தினாள். தோற்றாள்.

 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

 நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.

( இருந்தேமா- இருந்தேம் ஆ- இங்கு 'ஆ' அசை; வாழ்கென்பாக்கு அறிந்து- வாழ்க என்பது அறிந்து )

      இரண்டாம் காட்சியில் தலைவன் கூற்றுப்படி, அவன் முதலில் மெய்யாகத்தான் தும்மினானாம். அவள் வாழ்த்தியமை கண்டு "ஆகா! ஊடல் தணிக்க இது நல்ல வழியாய்த் தோன்றுகிறதே!" என்றெண்ணி இரண்டாம் முறை (பொய்யாக) தும்முகிறான். ஆனால் இம்முறை அவள் வாழ்த்தவில்லை. மாறாக "யார் (எவள்) நினைத்ததால் தும்மினீர்?" என்று மேலும் ஊடல் கொண்டாளாம்.

 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

 யாருள்ளித் தும்மினீர் என்று. 

(வழுத்தினாள் - வாழ்த்தினாள்; யாருள்ளி - யார் உள்ளி - யார் நினைத்து )

        மூன்றாம் காட்சியில் மீண்டும் தலைவன் கூற்று. இப்போது மெய்யாகவே தலைவனுக்குத் தும்மல் ஏற்பட, தும்மினால் அவள்தான் சிணுங்குகிறாளே என்று தும்மலை அடக்க முற்படுகிறான். அம்முயற்சியில் இவன் முகம் அஷ்டகோணலாக, அவளிடம் மாட்டிக் கொள்கிறான். "மனதில் கள்ளமில்லை என்றால் தும்மியிருக்கலாமே? உமது (அந்த மற்றுமொரு) அவள் நினைப்பதை என்னிடம் மறைத்தீரோ? " என்று மென்மேலும் ஊடல் கொண்டாளாம்.

 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

 எம்மை மறைத்திரோ என்று.  

( செறுப்ப - அடக்க; நுமருள்ளல் - நுமர் உள்ளல் - உம்மைச் சார்ந்தவள் நினைத்தல்; எம்மை மறைத்திரோ - எம்மிடம் மறைத்தீரோ (உருபு மயக்கம்) )

      இனி வள்ளுவன் சொல்லாமல் விளங்கி நிற்பது:

தும்மியே ஊடல் கொண்டனர். தும்மியே ஊடலை வென்றனர். இருவரும் தோற்றனர். காதலே வென்றது. காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே !

 

                                                                                      சுப.சோமசுந்தரம்

ஆரியப் புரட்டும் அயிரமீனும்

2 months 4 weeks ago

ஆரியப் புரட்டும் அயிரமீனும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள்.

தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின்  தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான்.  அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம் அறிந்தவன் எளிதில் இனம் கண்டுகொள்வான். அதுபோல, ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லே என்றும்  'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்து வந்தது அன்று என்றும் நிறுவியவர் மொழிஞாயிறு என்று அறியப்பட்ட மொழிநூல் அறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார். அதற்கு அவர் பயன்படுத்திய அறிவியல்முறை உத்தியே வேர்ச் சொற்களை இனம் காணுதல் என்பது.

முதலில் ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே என்று நிறுவினார் பாவாணர். எண்ணமுடியாத கணக்கற்ற நுண்மணலுக்கு அயிர் என்று தமிழில் வழங்குவர் என்பதை முதலாகக் கொண்டு, எண்ணற்றது என்ற பொருளில் அயிர் - அயிரம் - ஆயிரம் என்று வேர்ச்சொல் வழியில் அற்புதமாகச் சொன்னார் பாவாணர்.

அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்.

 ஆற்றுமணலும் கடற்கரைமணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராக உருவாயிற்று.


 எ.கா. :"வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
                "நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே" - (புறம். 55)

மலையாளத்தில்.ஆயிரம் என்றும், குடகு மொழியில் .ஆயிரெ என்றும், கன்னடத்தில் சாவிர என்றும், துளு மொழியில் சாவிர என்றும், இந்தி மொழியில் ஹசார் (hazƒr) என்றும் வழங்கப்படுகின்றது.

வடமொழியில் இதற்கு மூலமில்லை. அகரமுதலாய சொற்கள் சகர முதலாய்த் திரிவதும், யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. இவ்வுண்மையை

"இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி."

என்று திரியும் சொற்களால் ஒத்து நோக்கி அறியலாம்.

கன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், இவற்றையொட்டியே சமஸ்கிருதத்தில் சகர முதலாய் 'ஸகஸ்ர' என்றும் திரிந்துள்ளன. இதை அறியாமல், பேராசிரியர்.பரோ அவர்கள் வடசொல்லையே தென்சொல்லிற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவறான  கருத்தினாலேயே என்று நிறுவினார் பாவாணர்.

"பாவாணர் கடும் தமிழ்ப்பற்றினால் இப்படியெல்லாம் கூறிவிட்டார்; அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம்; அயிர் என்றால் 'நுண்ணிய ' என்ற பொருளில் பாவாணர் காட்டியதற்குச் சான்றாகச் சங்கப்பாடல் ஏதேனும் இருக்கிறதா", என்று கொதித்தார் கடும் ஆரியப்பற்றுக் கொண்ட எனது நண்பர்.

சிரித்துக்கொண்டே தொலைக்காட்சியில் தெரிந்த முதல்மரியாதைக் காட்சியில் கண்ணை ஓட்டினேன்; நண்பரும் திரும்பினார்; ராதா ஊற்றும் மீன்குழம்பின் மீனைச் சப்புக்கொட்டிச் சுவைக்கும் சிவாஜியைப் பார்த்தாரோ இல்லையோ, சட்டென மூடுமாறி பரபரப்பானார் நண்பர்.

"மதுர வர போவேண்டிருக்குப்பா! மொதல்ல தல்லாக்குளம் சந்திரன் மெஸ்ல போயி அயிரை மீன் கொழம்பை ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் போற வேலையப் பாக்கணும். புல்ல மேயிர மாடு நீ! (அசைவம் சாப்பிடாத என்னை  இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு! வர்ரம்பா!" என்று ஓட்டம்பிடித்தார் நண்பர். சிரித்துக்கொண்டே, "போ! போ!" என்று வழியனுப்பினேன் நான்.

"சங்கப்பாடல் சான்று இருக்கா?" என்ற நண்பனின் கொதிப்பு நினைவுக்கு வரவும், சட்டென, "அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்" என்ற வரிகள் என் பொறிகளைத் தட்டவும், கூகுள் தேடுதளத்தில் அயிரமீனைத் தேடினேன்.

 

எவ்வளவு சிறியமீன்! அயிர் என்றால் நுண்மணல் என்பதுபோல, நுண்ணிய மீனாக இருப்பதால் அயிரமீன் என்று பெயரிட்டார்கள் போலும்!

அயிரமீனைப் பாடும் சங்கப்பாடல்கள் பலவும் நினைவுக்கு வந்தன. முதலில் வந்த பிராந்தையார் தம்நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறார்.

"அன்னச் சேவலே! போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை வயிறார அருந்திய பின்னர், வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய்; வழியில், கோழி(உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறி,  அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “பெருமைமிக்க(இரும்) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)" என்று பாடுகின்றார்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ

வாயில் விடாது கோயில் புக்கு எம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. புறநானூறு - 67.

தொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றுள்ளது. இப்பாடலில் "கீழைக்கடலில் வாழும் சிறகு-வலிமை இல்லாத நாரை ஒன்று மேலைக்கடலில் இருக்கும் பொறையன் என்னும் சேர-மன்னனின் தொண்டித்-துறை அயிரைமீனை உண்ண விரும்பியது போல, அடைய முடியாத ஒருத்தியை அடையத் தன் நெஞ்சு ஆசைப்படுகிறது" என்று தலைவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான்.

"குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு" (குறுந்தொகை 128)

கடல் காக்கையின் ஆண்-காக்கை கருவுற்ற தன் பெண்-காக்கைக்குக் கடற்கழிச் சேற்றில் அயிரை மீனைத் துழவிக் கண்டுபிடிக்கும் என்கிறது ஒரு நற்றிணைப் பாடல்.

"கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,  படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல்
அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,  கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய,  தெண் கழிப் பூஉடைக் குட்டம் துழவும்"  (நற்றிணை 272)

மற்றுமொரு குறுந்தொகைப் பாடலோ, "மேலைக்கடலோர மரந்தைத் துறைமுகத்தில் வாழும் வெண்நாரை அலையில் புரண்டு வரும் அயிரை மீனை உண்ணும்." என்கின்றது.

"தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை" - (குறுந்தொகை 166)

அயிரை மீன் வயலில் மேயும்.

"அயிரை பரந்த அம் தண் பழனத்து" (குறுந்தொகை 178)

கடல்வெண்காக்கை கழியில் வாழும் அயிரைமீனை உண்ணும்.

"பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்" (ஐங்குறுநூறு 164)

காயவைத்திருக்கும் அயிரைக் கருவாட்டை மேயவரும் குருகுகளை மகளிர் ஓட்டுவர்.

"அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்"  (பதிற்றுப்பது 29)

அயிரை மீனைத் தூண்டிலில் மாட்டிப் போட்டு வரால் மீனைப் பிடிப்பர்.

"வேண்டு அயிரை இட்டு வராஅஅல் வாங்குபவர்" (பழமொழி 302)

"அயிரமீன் மீன் இந்தியாவுக்கு வந்தே முன்னூறு ஆண்டுதான் ஆகுது! பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா?" என்று கேள்விக்கணை தொடுக்கப்போகும் "தல்லாகுளம் ஆரிய(அயிர)மீன்கொழம்புப் பார்ட்டிய"(என் நண்பரைத்தான்) எதிர்கொள்ளத் தேவையான  சங்கப்பாடல்கள் தொகுப்பைச் சேர்த்த மகிழ்வுடன் அன்றைய வாசிப்பை முடித்துக் கொண்டேன்.

 

 

கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும்

3 months ago

கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

 

தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர் அவரவர் வேலைகளில் மூழ்கிஇருக்கும்போது, அனாயாசமாக ஷாலினியுடன் கொஞ்சிக் கொண்டிருப்பார் நடிகர் அஜீத்.

கவிஞர் வைரமுத்துவின் பாடலுக்கான கரு, குறிஞ்சிக்கலியில் அமைந்த ஒரு சங்கப்பாடலில் உள்ளது  என்றால் நம்பமுடிகிறதா? இக்காட்சிகளுக்குச் சவால்விடும், கபிலர் பாடிய   சங்கபபாடலொன்றை இங்கு காண்போம்:  இப்பாடலில், வரக்கூடாத புகாக்காலை வேளையிலே தன் வீட்டுக்கு வந்துவிட்ட தலைவனைப் பற்றி, தலைவி தோழிக்கு கூறுவதாக அமைந்த சங்கக்கவி கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடலின் பொருளைக் காண்போம்:  

புகாக்காலை என்றால் உணவு உண்ணும் நேரம் என்றோ, அல்லது, அன்னையுடன் இருக்கும்போது வரக்கூடாத வேளையிலே வந்ததாகப் பொருள். உணவு நேரத்தின்போது தலைவன் தலைவியை காணவருதல் இந்தத் துறையாகும்.

"சுடரும் வளையல் அணிந்த தோழியே! நான் கூறப்போவதை கவனமுடன் கேள்! சிறுவயதில் தெருவில் நாம் மணல்வீடு கட்டி விளையாடும் சமயம், நம் மணல் வீட்டை தன் காலால் சிதைத்துவிட்டு நம் கூந்தலை இழுத்து அதனுள் இருக்கும் வரிப்பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை நோகடிப்பானே ஒரு சிறு நாய் (பட்டி). அவனை உனக்கு நினைவிருக்கிறதா? அவன் நேற்று நானும் அன்னையும் வீட்டில் இருக்கும் சமயம் என் வீட்டிற்கு வந்திருக்கிறான். வாசலில் நின்று, ‘அம்மா உண்ண நீர் வேண்டும்’ என்று யாசித்திருக்கிறான். விருந்தினரை உபசரிக்கும் என் அன்னையோ, "அடீ சுடரிழாய்! பொன் கிண்ணத்தில் நீர் எடுத்துப் போய் அவனுக்குக் கொடு!" என்று என்னை ஏவினாள். வந்தவன் அந்த நாய்தான் என்று தெரியாத நானும் நீரெடுத்துச் சென்று முகம்பாராமல் நீர்க்குவளையை அவனிடம் நீட்டினேன். நீர்க்குவளையை வாங்காமல் சட்டென என் முன்கையைப் பற்றி அவன் இழுக்கவே, பயந்தடித்து நான், "அம்மா! ஐயையோ! இவன் என்ன செய்துவிட்டான் பார்!" என்று அலறிவிட்டேன். அம்மாவும் பதறியடித்து ஓடி வந்தாள். கத்தியபின்னர்தான் அவன் முகத்தை நான் நோக்க, வந்தவன் நமது பழைய பட்டி என்றும், எம்மீது கொண்ட பெருங்காதலால் எம்மைக் காண ஆசையாக வந்தவன் என்பதையும் உணர்ந்தேன். அன்னை என்ன நடந்தது என்று கேட்பதற்குள்,  "உண்ணும் நீர் விக்கினான்; அதுதான் செய்வதறியாது உன்னை அழைத்தேன்", என்று பொய் சொல்லிச் சமாளித்தேன். அன்னையும் அதை உண்மை என்று நம்பி "என்ன அவசரம் உமக்கு?", என்று புறத்தே பழித்தாலும், அகத்தே பரிவுடன், விக்கிய அவன் அவனை முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள். அந்நேரம் பார்த்து கடைக்கண்ணால், கொல்வது போல் என்னை நோக்கி ஒரு நமுட்டுச்சிரிப்பினை உதிர்த்தான் அந்த கள்வன் மகன்", என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

பாடலை இப்போது காண்போம்.
 
சுடர்த்தொடீஇ கேளாய்! தெருவில்நாம் ஆடும்
மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே.
‘உண்ணுநீர் வேட்டேன்’ என வந்தார்க்கு அன்னை,
‘அடர்பொற் சிகரத்தால் ஆக்கிச் சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
 'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்!' என்றேனா,
அன்னையும் அலறிப் படர்த்தரத் தன்னையான்,
‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன்.     (குறிஞ்சிக்கலி - கபிலர்)

இப்போது சொல்லுங்கள்! நம் திரைப்படப் பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் படைப்புத்திறங்களின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்று! காதலும், வீரமும், கருணையும் கொடையும் நம் மூதாதையர் நமக்களித்த பண்புக்கொடை; சங்கம் மருவிய காலம்தொட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான நம் முன்னோர்கள் நமக்களித்த கொடை நூற்கள்  அறம், தொண்டு ஆகியன உள்ளிட்ட அறநூற்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், இறையியற் தமிழாம் பன்னிரு திருமுறைகள், நாலாயிரம் பாசுரங்கள் ஆகியன என்றால் மிகையன்று. பேரின்ப வீடுபேற்றைப் பேசும் தேவாரம் உள்ளிட்ட படைப்புகளிலும், சங்க இலக்கியகள் பேசும் அக இலக்கியச் சாயலைக் காண இயலும். அப்படி ஒரு பாடலை இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.

குறிஞ்சிக்கலி கபிலரின் அகப்பாடலை நினைவூட்டும் படைப்பாக விளங்குகின்றது ஓதாது உணர்ந்த திருஞானசம்பந்தரின் தேவார முதற்பாடல். தாம்பெற்ற பால்மணம்மாறாக் குழந்தை சம்பந்தனைக் குளக்கரையில் அமர்த்திவிட்டு, குளிக்கச் செல்கின்றார் சிவபாதஇருதயர்; தந்தையைக் காணாது, பசியால் பால்வேண்டி, "அம்மே! அப்பா!" என்று அழத்தொடங்கிய குழந்தைக்கு இறைவனே அம்மையப்பனாகத் தோன்றி, பாலூட்டினான்.

குளித்துவிட்டுக் கரையேறிய சிவபாதஇருதயர் குழந்தையின் வாயோரம் ஒழுகியிருந்த பாலைக்கண்டு, சினந்து, "யாரிடம் பால்வாங்கிக் குடித்தாய்" எனக் கையோங்க, தந்தையிடம், அம்மையப்பனாக வந்து, பாலூட்டி, தம் உள்ளம் கவர்ந்த கள்வன் சிவபெருமானின் திருவடையாளங்களைக் கூறிவிளக்கும் தேவார முதல் ஞானப் பாடல் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த வருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.  - திருஞானசம்பந்தர் தேவாரம் 1.1.1

"தோடணிந்த திருச்செவியுடன் காளை(விடை) மீதுஏறி, ஒப்பற்றதோர் தூய வெண்நிலவை(மதி) முடியில்சூடி, சுடுகாட்டுச் சாம்பற்பொடியை உடல் முழுதும் பூசி வந்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்; முன்பொரு சமயம், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி வழிபட, அவனுக்கு அருள்புரிந்தவனும்,  பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாக விளங்குபவனும் இக்கள்வனேயாவான்!" என்று தம் மழலைமொழியில் ஞானத்தமிழ் அருளினார் பெற்றதந்தையான சிவபாத இருதயருக்கு!

அம்மையிருக்கும் பக்கமுள்ள செவியில் தோடு அணிந்து இருந்ததைக் கண்டதாலும், அம்மையே மறுபக்கம் ஆண்வடிவில் அப்பனாக இருந்ததாலும், "தோடுடைய செவியன்" என்று ஞானக்குழந்தை தாம் கண்ட காட்சியைத் தந்தைக்கு விளக்கி அருளியது. ஞானசம்பந்தக் குழந்தைக்கு இறைவன் அம்மையப்பன் வடிவில் தோன்றி, ஞானப்பால் ஊட்டியதற்கு இச்சொல்லே அகச்சான்றாக விளங்குகின்றது,

"தோடுடையசெவியன்" என்பது தொடங்கி, ஞானசம்பந்தப்பெருமானுடைய உள்ளங்கவர்ந்த கள்வனாகிய இறைவனுடைய சிறப்பியல்புகள் இப்பாடலில் தெரிவிக்கப் பெறுகின்றன. சம்பந்தருடைய அழுகைக் குரல் கேட்டு, அன்னையின் ஞானப்பால் அருளச் செய்தது 'திருச்செவி'யே என்பதால் அதனை முதலில் தெரிவிக்கிறார்.

உலகுயிர்கள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் அறிகின்றோம். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பதாலும், கருணையைப் பொழிவது, அன்னையுறையும் இடப்பக்கமாவதாலும்  அதனை முதலில் கூறினார்.

ஆரா அன்புகொண்டு சன்மார்க்கநெறியாகிய நாயகநாயகித் தன்மையான அகப்பாடலை முதற்பாடலாகவே அருளினார் ஞானசம்பந்தன் என்னும் மூன்றுவயதுக் குழந்தை. உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்தவன் என்னுள்ளம் கவர்கின்றான் என நயம் தோன்றக் கூறினார்.

"விடையேறி" என்னும் சொல்லால் இறைவன் இடபவாகனத்தில் தோன்றி தமக்குக் காட்சியளித்ததைக் குறித்தார்;  "தூவெண்மதி" என்றால் "தூய்மையான வெண்ணிறம் கொண்ட மதி" என்பது பொருள். மதிக்குத் தூய்மை களங்கமின்றி விளங்குதல் ஆகும்; இருள் எவ்வாறு ஒளியைச் சாராதோ, அவ்வாறே,  களங்கம் இறைவனையும், அவனருள் பெற்ற அன்பர்களையும் சாராது. மேலும், தூய்மை மனத்தின் உள்ளும், வெண்மை புறத்திலும் நிகழ்வது என்பதால்,  இங்கே சம்பந்தர் குறிப்பிடும் மதி,  நாம் காணும் களங்முற்ற சந்திரன் அன்று என்று தெளிவோம். "இறைவன் சுடலைப் பொடி பூசுதல்" என்பது, அனைத்தும் ஒடுங்கும் காலத்தில், எல்லாவுலகமும் தத்தம் காரணத்துள் முறையே ஒடுங்க, காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப்பெறும்போது நிகழ்வது ஆகும்.

"உள்ளங்கவர்தல்" என்பது "உள்ளங்கள் அறியாதவாறு, இறைவனே உள்ளங்கள் எங்குமாய் நிறைந்து ஆட்கொள்ளுதல்" ஆகும். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலம் 'சீர்காழி' என்பதால், இங்கு  இறைவற்குப் "பிரமபுரீசர்" என்பதும் தலத்திற்குப் "பிரமபுரம்" என்பதும் பெயராயிற்று.  பீடு-பெருமை. "மேவிய" என்றால் "தாமே விரும்பி எழுந்தருளியுள்ள" என்பது பொருள். இறைவன் பூரணமாக சுதந்திரன் என்பதால், இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. "உள்ளங்கவர் கள்வன் பெருமானாகிய இவன் அன்றே" எனக் கூட்டிப் பொருள் காண வேண்டும்.

தமிழர் வாழ்வில் இல்லறம் என்னும் நல்லறமாம் 'சிற்றின்பத்தின்' வழி பேரின்பமாம் 'இறைவனை' அடைதல் 'அறமாகவே' திருக்குறள் கூறுவதை இங்கு குறிப்பிடத்தக்கது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - குறள் 49.

"அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்", என்பது குறள்நெறி காட்டும் வாழ்வியல்.

 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

3 months 1 week ago

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

அன்பர்களே! இலக்கிய நயம் உணர்ந்து ரசிக்கவும், ருசிக்கவும், இலக்கியத் தமிழ் நயத்தில் நனைந்து தமிழுணர்வில் திளைக்கவும் யாழ் இனிய அற்புதக்களம் அமைத்துள்ளது என்றால் மிகையன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய-யுக தமிழ்ச்சங்கம் யாழ். 'தி இந்து' தமிழ் இதழில் வந்த எனது திருவாசகக் கட்டுரைகளின் தொகுப்பை யாழ் இணையத்தில் தற்செயலாகக் கண்டபின்னர் 'யாழ்' முத்தமிழ் கண்டேன். அறிவார்ந்த தமிழர்களின் யாழ் சங்கமத்தில் பதிவிடுவதும், அவர்தம்மோடு கூடிக் கலப்பதுவும் ஈடு இணையற்ற உயிர்ப்பு.

சில  நாட்களுக்கு முன்  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களிடமிருந்து "ஒரு சந்தேகம். . . என்று குறிப்பிடப்பட்டு, ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். அன்னாரின் வினாவுக்கு விடையளிக்கும் முயற்சியில், பன்னிரு சைவத் திருமுறைகளும், ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரம் பாசுரங்களும் வழங்கும் தமிழும் நயமும் புலப்பட்டுத் தோன்றின.  தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டிய அருமையான கருத்தை வெளிப்படுத்தும் அன்னாரின் அறிவார்ந்த வினாவையும், வினாவிற்கான செறிவான விடையையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி . . .  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களின் வினாவும் வினாவிற்கான விடையும்:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள பேராசிரியர் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம்..என் பெயர் ஷங்கர்பாபு.அவ்வப்போது எழுதுகிறவன்...விகடனில் ,குங்குமத்தில் எழுதி இருக்கிறேன்...
தி இந்து தமிழில் கடந்த வருடம் "இப்படியும் பார்க்கலாம்..." என்ற தலைப்பில் 45 வாரங்கள் எழுதினேன்.,,
தற்போது சக்தி விகடனில் "புதிய புராணம்" என்ற தலைப்பில் ஆன்மீகம் கலந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன்...
அவ்வப்போது தங்களின் "வான் கலந்த மணிவாசகம் " தொடரைப் படிப்பதுண்டு...ஆழமான கட்டுரைகள்...
நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும்,நீங்கள் சைவ இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர் என்ற முறையிலும் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க ஆசைப்படுகிறேன்...
அதாவது---எங்கு இந்தக் கருத்தைக் கேட்டேன் என்பது மட்டும் தெரியவில்லை;ஆனால் திருவாசகத்தில் தான் என்பது நினைவில் இருக்கிறது...
அது பின்வருமாறு---"இறைவா,எனக்கும் முதுமை வரும்...அந்தப் பொழுதில் என்னால் உன்னை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போய் விடக்கூடும்..ஒருவேளை,அப்படி ஒரு முதுமையில் என்னால் உன்னை நினைக்காமல் போனால்,அந்தக் காரணத்தால் என்னை நிராகரித்து விடாதே..."
சரியாக நினைவில்லை...இது போன்ற கருத்துதான் அந்தப் பாடலில் வரும்...

திருவாசகம் அறிந்தவர் என்ற முறையில் தங்களால் இந்தப் பாடலை அடையாளம் காண முடிகிறதா?
அப்படியானால்,அதை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்தினீர்கள் என்றால் தங்களுக்கு நன்றி உரியவனாக இருப்பேன்...
அன்புடன்--ஷங்கர்பாபு.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி!                 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

அன்புள்ள எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களுக்கு,

வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அலுவல் சுமையினால் உடனே பதில் எழுத இயலாமல் போனது. தாங்கள் கேட்டிருந்த வினாவின் செறிவு அப்படி. அந்தக் வினாவுக்கான விடைகாணும் வாய்ப்பையும், அதன்வழி, எனக்கு ஒரு நற்சிந்தனை நினைவூட்டலையும் நல்கிய தங்களுக்கும், இறைவனுக்கும் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்!

தாங்கள் தெரிவித்த கருத்தை வெளிப்படுத்தும் தேவாரப்பாடல் இரண்டும், ஆழ்வார் பாசுரம் ஒன்றும் என் நினைவுக்கு வருகின்றன. திருவாசகத்தில் இக்கருத்தை ஒட்டிய பாடல் இல்லை. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை, திருப்புகலூர் திருத்தாண்டகம் 99ம் பதிகம், பாடல்.1 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்று தொடங்கும் தேவாரமும், "ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்" என்று தொடங்கும் தேவாரமும், பெரியாழ்வார் அருளிய  பத்தாந்திருமொழியில் "துப்புடையாரை அடைவ தெல்லாம்" என்று தொடங்கும் 423ம் பாசுரமும் தாங்கள் தெரிவித்த கருத்துடன் ஒட்டியவை.

முதலில் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்னும் தேவாரம் அருளப்பட்ட தலமும், தேவாரப் பாடலின் பொருளும் அறிந்து கொள்வோம்.

பாடல் பிறந்த தலம்: திருப்புகலூர்(சோழநாடு);  தலச் சிறப்பு : சித்திரைச் சதயத்தில் அப்பர் பெருமான் இறைவன் திருவடியை அடைந்த புண்ணியத் திருத்தலம். உயிர்கள் இறைவன் திருவடியைப் புகலாக அடையும் தலம் ஆதலால் திருப்புகலூர் என்னும் திருநாமம் பெற்று விளங்குகின்றது. முருகநாயனார் அவதாரத் திருத்தலமும் இதுவே. சுந்தரருக்கு செங்கற்களைப் பொன்னாக இறைவன் மாற்றித் தந்து அருளிய திருத்தலமும் இதுவே. இபுண்ணியத் திருத்தலத்தில் உள்ள மடத்தில் முருக நாயனார், சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர் ஆகிய நான்கு நாயன்மார்கள் கூடியிருந்து இறைவனின் திருவடிகளைச் சிந்தித்து மகிழ்ந்துள்ளனர் என்ற செய்தி பெரியபுராணத்தில் காணக் கிடைக்கின்றது.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
உலகியல் நடைமுறையில் ஒருவருக்குக் கிடைக்கும் சாதாரண நன்மைகளையே புண்ணியம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகின்றோம். ஆனால், புண்ணியம் என்பதற்கு, நன்மைகள் அனைத்திலும் சிறந்தது என்பதே பொருள். இறைவனின் திருவடிகளை அடைவதற்கு மேல் சிறந்த ஒரு நன்மை இல்லை என்ற பொருள் விளங்க, 'புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' என்று பாடுகின்றார் நாவுக்கரசர் பெருமான்.

சமணநூலாகிய சீவகசிந்தாமணிகூட, சிவபெருமானைப் "போகம் ஈன்ற புண்ணியன்" சீவகசிந்தாமணி (362) என்று குறிப்பிடும். அப்பர் பெருமான் நிறைவாகப் பூம்புகலூர் என்னும் இத்தலத்தில்தான் திருத்தொண்டு செய்து வாழ்ந்தார் என்கிறது சைவவரலாறு. "எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ" எனத்தொடங்கும் இத்திருத்தாண்டகப்பதிகம் பாடி, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவியபுண்ணியனே" என்று போற்றி வாழ்ந்து, ஒரு சித்திரைச் சதயத்தில் புண்ணியன் இறைவன் திருவருளால், அவன் திருவடி நீழலில், இரண்டறக் கலந்தருளினார் அப்பர் பிரான்.

இத்திருமுறைப் பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதுவோரும், கேட்போரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்; தொண்டர்தம் பெருமையை சொல்லும் வாய்ப்பைத் தந்த தங்களுக்கு ,அருள்வழங்கும் செந்தமிழ்ச் சொக்கன் சோமசுந்தரனின் திருவருள் முழுமையாகக் கிடைக்க அவன் திருவடிகளைச் சிந்திக்கின்றோம்.

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ  எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்! ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்!
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்! பூம்புகலூர் மேவிய புண்ணியனே! - தமிழ்மறை: 6.99.1 (நாவுக்கரசர் திருப்புகலூர் திருத்தாண்டகம்)

இப்பாடலில் அப்பர் பெருமான் சிவபெருமானிடம், "இறைவா! உடலைவிட்டு உயிர்நீங்கும்போது,  உடலின் ஒன்பது வாயில்களும் ஒருசேர அடைத்து, நினது திருவடிகளை உணராமல் செய்துவிடும் என்பதால், எனக்கு அந்நிலை வருமுன், இப்போதே உன் திருவடிகளுக்கு என்னை ஒப்புக்கொடுக்கின்றேன்; என்னை ஏற்றுக்கொண்டருள்க." என்றார். இப்போது, முழுப்பாடலில் பொருளையும் காண்போம்.

"அழகிய புகலூர் மேவிய புண்ணியனே!  நினைக்கும் தன்மை உடையவனாகிய நான், எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பது ஒன்றை மட்டுமே நினைப்பவன்; இச்செயல் அல்லாது, வேறு எதனை விரும்பி நினைப்பேன்?  நினது கழல் இணையடிகளையே கைதொழுது காண்பதைத் தவிர என் கண்களில் வேறு காட்சியில்லாதவன்; இதுவன்றி வேறெதிலும் பற்று இல்லாதவனாகவும் உள்ளேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாக நீ அருளிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்துள்ளாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து (இறப்பு நேரும் காலம்) மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி, இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக!" என்று வேண்டுகின்றார் பெருமான்.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று இந்த நிறைவுத் திருத்தாண்டகத்தைப் பாடியவாறே, சிவானந்தத்தில் திளைத்து, ஞானவடிவாக அமர்ந்திருந்து, சிவபெருமானின் கழலடியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் "போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று முடிவது சிறப்பு.

ஒன்பது வாசல் என்பவை இரண்டு கண்கள், இரண்டு நாசித் துவாரங்கள், இரண்டு காதுகள், வாய், எருவாய், கருவாய்: நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களும் செயல்படும் காலத்து, கண்கள் அவன் திருவடிகளையே காணும்; கைகள் அவன் திருவடிகளையே வணங்கும்; உயிர் பிரிந்த பின்னர், அனைத்து துவாரங்களும், ஒரே சமயத்தில் அடைக்கப்பட்டுச் செயலிழக்கும்போது கண்களும், கைகளும் தம் கடமைகளைச் செய்ய இயலாமல் போகும்.  இந்த செய்தியைத் தான் 'ஒக்க அடைக்கும்போது' என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

இறக்கும் தருவாயில், அதாவது ஒன்பது துளைகளும் ஒக்க அடைக்கும்போது உணர முடியாது என்பதால், நாம் இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடவேண்டாம் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின்  இத்தேவாரப் பாடல் நாம் மிகவும் உணர்ந்து பின்பற்றத் தக்கது.

சிவபுராணத்தில் மாணிக்கவாசகரும்

"மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும்
நலன்தான் இலாத சிறியேற்கு"

என்று குறிப்பிடுகின்றார். உடலில் உயிர் இருக்கும் வரையில், ஒன்பது வாயில் புலன்களிலும் அழுக்கு ஊறி, நாம் மாய உலக வாழ்க்கையில் மகிழ்ந்து இறைவனை முற்றிலும் மறந்து விடுகின்றோம். ஒன்பது வாயில்கள் ஒக்க அடைபடும் போது, பிறவிப் பயனாகிய இறைவனை அடையாமல், இப்பிறவி வீணானதை உணர முடியாமல், உயிர், வேறு வழியைத் தேடி, மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்;  இவ்வாறு, பெற்ற பிறவியை வீணாக்கும் முன்னர், நாம், சோற்றுத்துறை இறைவனை நினைத்துப் போற்றி, நமது துன்பங்களை நீக்கிக் கொண்டு நல்வழியைச் சென்று அடையலாம் என்று நமக்கு அறிவுரை கூறும் இன்னுமொரு அப்பர் தேவாரம் இங்கு காண்போம்:

ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்
மாற்றுத் துறை வழி கொண்டு ஓடாமுன்னம் மாய மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்வழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக் கண் சேரலாமே. தமிழ்மறை:6.93.5


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

உடலை விட்டு உயிர் பிரியும்போது உன்னை என்னால் நினைக்க முடியாது, எனவே உன்னை நினைக்கும் சமயத்திலேயே உன்னிடம் நான் வந்து அடைகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதுபோல், பெரியாழ்வாரின் அழகான பாசுரம் ஒன்று உள்ளது.

தமிழர் மெய்யியல் தொன்மங்களில் முக்கியமானது "உடலை விட்டுப் பிரியுந்தருவாயில் இறைவனின் திருவடிகளையே எண்ணினால் திருவடிப்பேறாகிய வீடுபேறு கிட்டும்'' என்பது.

வயதான காலத்தில் இவ்வுலகில் வாழும் வாழ்வின் தேவைக்காக, வங்கியில் பணம் சேமித்து வைப்பதைப் போன்று, இறைவனின் அருள் வங்கியில் அவன் திருவடிகளையே எண்ணும் தம் வேண்டுதல் புண்ணியத்தை முன்கூட்டியே செலுத்தி வைத்து, தம் உயிர் உடலைவிட்டு நீங்கும் தருவாயில் வந்து, கூற்றுவனிடமிருந்து காத்து, தமக்குத் திருவடிப்பேறு நல்கவேண்டும் என்று வேண்டுகின்றார் பெரியாழ்வார்.

 துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே!
ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -பெரியாழ்வார்: 422 - பத்தாந் திருமொழி

"பாம்பணையில் பள்ளிகொண்ட திருவரங்கத்துப் பெருமாளே! இவ்வுலகத்தோர், உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தேடிச் சேர்ந்து நட்புக் கொள்வது, துன்பம் நேரும் காலத்தில் அவ்வுயர்ந்த நிலையில் இருப்பவர்கள் துன்பம் நீக்கத் துணையாக இருப்பார்கள் என்றுதான். உன்னிடம் சரணடையும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும், துணிவுடன் நின்னை வந்து அடைந்துவிட்டேன்! ஏன் தெரியுமா? உன்னைச் சரணடைந்த கஜேந்திரன் எனும் யானைக்கு நீ அருள்செய்தாய் என்பதை அறிந்ததால்! உடல் நைந்து, களைப்புற்று, உயிர் பிரியும் காலத்தில், நான் உன்னை நினைக்க மாட்டேன்; எனவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்; நீ என்னை அப்போது வந்து மறவாமல் காக்கவேண்டும்" என்று பொருள் அமைந்த பத்துப் பாசுரங்களில் முதல் பாசுரமாக அமைந்துள்ளது. இப்பாசுரமே தங்கள் கருத்துக்கு முழுவதும் ஒட்டிவரும் பாடலாகும்.

--------------------------------------------------

என்னை எழுதச் செய்த, தங்களுக்கு என் நன்றிகளும் வணக்கமும்.

அன்புடன்

ந. கிருஷ்ணன்.
----------------------------------------------------
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நிலைகளிலும் படைக்கப்பட்ட தமிழும் நயமும் நமக்கெல்லாம் பேரின்பம் நல்குவதேன்னவோ பேருண்மையாகும்.

 

 

மாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும்

3 months 1 week ago

மாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

படைப்பாளியான கவிஞன், தன் பாடுபொருளுக்குச் சொற்கள் கிடைக்கப் போதாமையால் கையறு நிலை அடைந்து தவிக்கும்போது பயன்படுத்துவது 'ஐயோ!' என்னும் சொல்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின்  காலத்தில் இறைவனைப் பாடும்போது,  மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் "உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயோ! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இட்டிருப்பார்.  மணிவாசகரின் திருவாசகத்தில் 'ஐயா' என்று வந்தது என்பதை பல திருவாசக உரையாசிரியர்கள் பலரும் 'ஐயோ' என்ற சொல்லே மங்கல வழக்குக் கருதி 'ஐயா' என்று வந்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

 மாணிக்கவாசகர் பெருமான் தன் இறையனுபவத்தைச் சாறாகப் பிழிந்து எலும்புருக்கும் தேனாகத் தந்த திருவாசகத்தின் பாயிரமான சிவபுராணத்தில், "இறைவனின் ஆழத்தையும், அகலத்தையும் சொற்களால் காட்சிப்படுத்த முனைந்த அனைத்து வேதங்களும் கையறு நிலையடைந்து, காட்சிப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவின என்கிறார்;  "நுட்பத்திலும் நுட்பமான தன்மையனான இறைவனைக் காட்சிப்படுத்த வேதங்கள் சொற் பயன்பாட்டின் நீள-அகலங்களில் பயணித்து, காட்சிப்படுத்த இயலாமல் சோர்வுற்று, 'ஐயோ! பெருமானே! நினது நுண்ணிய தன்மையை எம்மால் காட்சிப்படுத்த இயலவில்லையே!' என, கழிவிரக்கம் கொண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டன என்பதைக் குறிக்கவே

 "வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" - திருவாசகம் :சிவபுராணம்
 என்று குறித்திருப்பார் மணிவாசகப்பெருமான்.

இவ்வரிக்கு உரையெழுதிய பலரும் வேதங்கள் - மறைகள்,  ஐயா என - ஐயனே என்று துதிக்க,  ஓங்கி - உயர்ந்து,  ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த,  நுண்ணியனே - நுண்பொருளானவனே என்றே உரை எழுதியுள்ளனர்.

 எதனால் இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது எனத் திருவாசகம் சொல்கின்றது  என்று சற்று விரிவாக நோக்குவோம்.

 "வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்தும், அகன்றும்,  பற்பல கோணங்களில் ஆராய்ந்து நோக்கியும் இறைவனின் பெருமையைக் கூறச் சொற்கள் போதாமையால் கையறு நிலையை அடைந்தன; அத்தகு பெரிதினும் பெரிய இறைவனோ  மிகமிகச் சிறிய நுண்ணியவற்றிலும் நுட்பமாக நிறைந்துள்ளான். என்ன விந்தை இது!" என்று வியந்து இவ்வரிகளில் சொல்கிறார் மணிவாசகர்.

 "அல்ல! ஈதல்ல! ஈது!” என மறைகளும் அன்மைச்
சொல்லினால் துதித்து இளைக்கும் இச் சுந்தரன்"

 என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், "இப்பொருள் இறைவனா?" என்று கேட்டால், "ஆம்" என்னும் வேதம், "இப்பொருளே இறைவனா?" என்று கேட்டால், "அல்ல! ஈதல்ல!! ஈது!!!" என்று பலவாறு மென்மேலும் கூறிக்கொண்டே செல்லும் ஆரிய மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல்; ஆகையால்,  அறிவால் இறைவனைக் காண முடியாது;  அவன் அருளால்தான் காணமுடியும் என்ற பொருள் நயமும், "வேதங்கள் ஐயா(யோ) என ஓங்கி" என்னும் சொற்களில் புதைந்து கிடைக்கிறது.

 இறைவன் மிக நுட்பமானவன்;  அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே   'எங்கும் நிறைந்திருத்தல் தன்மை'யுண்டு. ('வியாபித்தல்' என்று வடமொழி சொல்லும்). அதைக் குறிப்பிடவே "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார்.
 
"அண்டங்கள் எல்லாம் அணுவாக,
அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய்ச் சிறிதாய்ஆயினானும்"

என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
 
இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு கிடைக்கும் என்பதை மணிவாசகர் தம் வாழ்வால் உணர்த்தி,  இறைவன் உயிர்களிடத்து எளியனாய் நிற்கும் நிலையை நமக்கெல்லாம் நன்கு உணர்த்தினார்.
 
 'ஐயோ!' என்னும் அமங்கலச் சொல்லை  மங்கல வழக்காக்கிய பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். கம்பராமாயணத்தில் வரும் ஒரு காட்சி இதற்குச் சாட்சி.
 
தந்தையின் வாக்கைக் காக்க பகவான் இராமச்சந்திரமூர்த்தி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்கிறான்; இராமபிரான் சீதாபிராட்டியுடனும், இளையபெருமாள் இலக்குவனுடனும் மரவுரி அணிந்து ஒரு பொன்மாலைப் பொழுதில், கானகம் நோக்கிச் செல்கிறான்.
 
"எந்த அணிகலனும் இல்லாமல் மரவுரி தரித்த நிலையிலும், மாலைப்பொழுதின்  தங்கநிறத்தில் மின்னி ஒளிவீசும் கதிரவன், இராமபிரானின் திருமேனியிலிருந்து வீசும் ஒளிக்கு முன்னர்,  தனது பொன்னிற ஒளி ஒன்றுமில்லை என்று நாணி மறைந்துவிட,  'இவளுக்கு இடை என்று ஒன்று உண்டு என்பது பொய்யோ என்று ஐயமடையுமாறு கொடியிடையாளான சீதா தேவியுடனும், இளையபெருமாள் இலட்சுமணனுடனும் இராமபிரான்  கானகம் செல்லுகிறான்" என்று சொல்லவந்த கம்பர், இராமபிரானின் கரியமேனியின் அழகைப் பின்வருமாறு வருணித்து மயங்குகின்றார்:
 
"இராமபிரானின் திருமேனி நிறம் மைபோன்ற கருமை நிறமோ" என்று ஐயுற்றவர், "இல்லை! இல்லை!! கருமையான மை ஒளிவீசும் தன்மை கொண்டதன்று! எனவே மையை பிரானின் திருமேனிக்கு உவமை சொல்வது பொருத்தமன்று" என்று தெளிந்தவர், "இவன் திருமேனி மரகத ஒளிபோன்று பச்சை நிறமோ" என உவமிக்கப் போனவர், "மரகதக்கல் மிகவும் சிறியது என்பதால், அவ்வொப்புமை பெருமானுக்கு ஈடல்லவே!" என்று மயங்கினார் கம்பர்; பின், சற்றே தெளிந்து, "பரந்து விரிந்த அலைகடலைப்போல் நீலநிறமோ" என்று வியந்தவர், "இல்லை! இல்லை!! அலைகடல் உவர்ப்பு என்னும் குற்றம் உடையது! அது எங்ஙனம் எம்பெருமானுக்கு ஒப்பாகும்? எனவே, அதுவும் புறந்தள்ளவேண்டியதே!" என்று துணிந்தார்; பின், உவர்ப்பு என்னும் குற்றமற்றதும், "கருத்து மின்னொளி வீசும் மழைமுகிலோ" என்று உவமித்தவர், சற்றே பின்வாங்கி, "இம்மழைமுகில், மழையாகப் பொழிந்தபின், மறைந்து போகும் குற்றமுள்ளதல்லவா? என்றென்றும் நிலைப்பேறு கொண்ட எம்பிரானுக்கு இம்மழைமுகில் ஒருக்காலும் ஒப்பாகாது" என்று கண்டதும், இனி, எம்பிரானின் வடிவழகை வருணிக்க யாம் ஒப்புமைகூறும்வகையில் தமிழில் சொற்பொருள் காண இயலவில்லையே!  ஐயோ! என்றும் அழியாத வடிவ அழகை  உடைய இவன் அழகை எவ்வாறு வர்ணிப்பேன்?  என்னால் முடியவில்லையே என்னும் பொருள் தொக்கிநிற்க, வார்த்தைகளுக்குள் அடங்காதது இராமபிரானின் வடிவழகு என்று, தன் இயலாமையைப் பதிவிட்டுத் தன் பாடலை முடிக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
 
இவ்வொளிக்காட்சியைக் சொற்காவியமாக்கித், துள்ளலோசையில் துள்ளும் கலிப்பாவில் கம்பனின் சொல்லோவியத்தைக் காணுங்கள்:
 
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,
பொய்யோ! எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் -
‘மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
ஐயோ! இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்!  - கம்பராமாயணம்: 1926.

     
இப்போது, “வேதங்கள் ‘ஐயா(யோ)’ என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!” என்னும் திருவாசகத்தில், மணிவாசகரின் கவியுள்ளம் தெளிவாக விளங்குகிறதா? வேதங்கள் இறைவனின் நுண்ணிய தன்மையை விளக்க ஆழ்ந்து சென்றும், அகன்று சென்றும் விளக்க முயன்று, “ஐயோ! எம்மால் முடியவில்லையே!” என்று நாணி ஒதுங்கின என்னும் பொருளிலேயே மணிவாசகர் சொன்னது உள்ளங்கை நெல்லிக்கனி.
 
ஆனால், இறைவன் சிவபெருமான், உயிர்களுக்காக அவனே ஆகமம் ஆகி நின்று, வழிகாட்டி, ஆட்கொள்ளுவான் என்பதை “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!” என்று மணிவாசகப் பெருமான் சொல்வதால், திருமுறைகளின் வழிகாட்டுதல்படி, சைவசமயத்துக்கு ஆகமமே முதல் பிரமாணம்; வடவேதம்  அன்று என்பதுவும் இங்கு தெளிவாகின்றது.
 
 கம்பனிடம் இருந்து, “ஐயோ” என்னும் சொல் மங்களம் என்னும் தகுதியைப் பெற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும், தற்காலக் கவிஞர்களுக்கு “ஐயோ”வை விட்டுவிட்டுக் காதல் கவிதையே எழுத வாராது என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக,  திரைப்பாடலாசிரியர் யுகபாரதியின்

– ஐயோ! ஐயோ! ஐயோடா ஐயையோ!
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயையோ!- (திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி,  எம்.குமரன், s/o மகாலட்சுமி திரைப்படம்),

ஒரு சான்று.
 இந்தப்பாடலின் சந்தத்திலேயே, “வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய...” என்று பாடிப்பாருங்கள். கன கச்சிதமாகப் பொருந்திவராவிட்டால் என்னைக் கேளுங்கள்.  மாணிக்கவாசகரின் திருவாசகம் - கம்பனின் கவிச்சுவை - யுகபாரதியின் பாடல் என்று தமிழின் நயம் நயந்து நம்மை இன்சுவையில் நனைக்கின்றது என்றால் மிகையன்று!

 

 

 

என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை!

3 months 1 week ago

என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம்.

கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நிலைப்பாடுகள் கொண்டவர்கள் நானும் என் கெழுதகை நண்பரும். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து கிட்டிய பட்டறிவில், என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தைரியமாகச் சொல்வேன் - நட்பு என்னும் இலக்கணத்தின் எல்லாக் கூறுகளையும் கொண்டு ஆய்ந்தாலும், பெரும்பாலும் அனைத்துக் கூறுகளிலும் (கடவுட் கொள்கை இதில் வாராது) கருத்தொருமித்த எனது ஒரே நண்பர்.  என் கெழுதகை நண்பருடன் நான் ஒன்றாகப் பயணிக்கும் தளங்கள் மானுடம், பொதுவுடைமை, தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு உள்ளிட்ட சில இக்கதைக்களத்துக்கு பொருத்தமானவை. நான்கு தினங்கள் முன்பு, நள்ளிரவு நெருங்கும்வேளையில் நண்பர் என்னைக்  கைப்பேசியில் அழைக்க, ஒலியமர்த்தப்பட்டிருந்த எனது கைப்பேசியின் அதிர்வுணர்ந்து நான் எடுக்குமுன்னர், நண்பரின் அழைப்பு முடிந்துவிட்டிருந்தது.

நாங்கள் பின்னிரவு வேளைகளில் பேசுவது அவ்வப்போது நிகழும். உறக்கம் கண்களைத் தழுவத் தொடங்கிவிட்டதால், காலையில் பேசிக்கொள்ளலாம் என்று உறங்கத் தொடங்கினேன். வீட்டுத் தொலைபேசி மணி நண்பரின் மீள் அழைப்பைத் தெரிவிக்க, எழுந்து சென்றேன்.

"ஒன்றுமில்லை; என்னை பாதித்த ஒரு நெருடலை உங்களுடன் பகிரலாம் என்று நினைத்தேன். அதான். ஒருவர் என்னிடம் சொன்னார், "திருக்குறள் நாமெல்லாம் தலையில் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி ஒன்றும் சிறந்த இலக்கியமில்லை; கூறியது கூறல் என்னும் குற்றம் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் நடுத்தர இலக்கியம்தான் திருக்குறள்; காட்டாக, 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.' என்னும் திருக்குறளை எடுத்துக்கொண்டால், முதலடியும், பின்னடியும் ஒரே பொருளைத் திரும்பத் திரும்பக் கூறும் அவலத்தைக் காணலாம்" என்று.

 "சொன்னவர் ஒன்றும் பெரிதாக இலக்கியம் படித்தவரில்லைதான்; ஆனாலும், அவருக்கு உடனடியாக என்னால் பதிலிறுக்க இயலவில்லை. நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் திருக்குறளில் அப்படியொரு குற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று. ஆனால், உரையாசிரியர்கள் பலரும் இக்குறளை அந்நோக்கில் ஊன்றிக் கவனித்து உரையெழுதவில்லை; சொன்னவர் பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையை எடுத்துக்காட்டிச் சொன்னதால் , உடனடியாக என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதான் உங்களிடமும் இதைப் பகிரலாம் என்றுதான் அழைத்தேன். வேறொன்றுமில்லை", என்றார் நண்பர்.

உறக்கம் நீங்கிப் பதற்றம் தொற்றியது என்னை. சிறிதுநேரம் தொடர்புடைய சிலவற்றைப் பேசிவிட்டு விடைபெற்றோம். கண்கள் மூட இமைகள் மறுத்ததால், இணையத்தில் அமர்ந்து நெடுநேரம் தேடினேன்; ஒன்றும் வரவில்லை; மூன்றாம் முறை ஒலித்த கூர்க்காவின் விசில் காலை நான்கு மணியானதை அறிவித்து ஓய்ந்தது. அலையடிக்கும் உள்ளம் உறங்காமல் உறங்கச் சென்றேன். எனக்கென்னவே பரிமேழகர் சரியாகச் சொல்வதாகப்பட்டது. ஆனால், அதில் அக்குற்றச்சாட்டுக்கு மறுப்புச் சொல்ல வெளிப்படையாக ஒன்றும் அகப்படவில்லை.

யானைக்கும் அடி சறுக்கலாம்; ஆனால், திருவள்ளுவரின் தெய்வத்தமிழ் சறுக்காதல்லவா?  விடையை நாம் தேடவேண்டும், அவ்வளவுதான்;  'மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' - (தொல் : சொல்லதிகாரம் - 394); ஒரு சொல்லுக்கான பொருளினை அறியமுடியும். ஆனால், அச்சொல் அப்பொருளை உணர்த்துவதற்கான காரணம் வெளிப்படையாகத் தோன்றாது என்று முதலாசான் தொல்காப்பியன் நம்பிக்கை ஊட்டினான். மீண்டும் பரிமேழகரின் உரையில் ஊன்றி விழித்தேன்;

[பரிமேலழகர் உரை பின்வருமாறு: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)]  இக்குறளைப் பொறுத்தவரை, பரிமேழகர் மட்டுமே மெய்யியல் என்னும் தத்துவ நிலைப்பாட்டியலில் (philosophy of the poetry) நின்று உரை எழுதியுள்ளார். கலைஞர், சாலமன் பாப்பையா, அறிஞர் மு.வ., மணக்குடவர், திருக்குறள் முனுசாமி உள்ளிட்ட மற்ற அனைத்து உரையாசிரியர்களுமே மேம்போக்கான உள்ளீடற்ற உரை மட்டுமே தந்துள்ளனர். எனவே, பரிமேழகர் உரையை மீண்டும், மீண்டும் அசைபோட்டேன்; மூன்று நாட்கள் ஓடிவிட்டன.

திங்கள் அதிகாலை ஏழரை மணிக்கே நண்பரின் அழைப்பைக் கைப்பேசி  அறிவிக்கக், காலை வணக்கம் சார் என்றேன் நான். "என்ன குரல் ஒன்றும் சரியாக இல்லை; காலையிலேயே எழுப்பிவிட்டேனோ", என்றார் நண்பர்.  நள்ளிரவு தாண்டி, நடுச்சாமம் வரை வாசித்த களைப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஏழு மணிக்கே எழுந்துவிட்டேன்; இருந்தாலும், பல் துலக்காமல், திருக்குறள் பரிமேழகர் உரையின் நினைவிலேயே அசைபோட்டதால், குரல் தெளிவில்லாமல் இருந்தது போலும்.

 நண்பர் பேசிய செய்தி திருவாசகம் குறித்த ஒரு காணொளித் துணுக்கில், அருட்தந்தை சகத் கசுபர் சொன்ன "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசகப் பொன்னெழுத்துக்களுக்கான விளக்கத்தைப் பற்றியது: "தென்னாட்டவர்களாகிய நாங்கள் உன்னைச் சிவனே என்று அழைத்துப் போற்றுகிறோம்; ஏனைய நாட்டோர் அவரவர் சமயமொழியில் உன்னை இறைவா என்றழைத்துப் போற்றுகின்றனர். இறைவன் யார் என்பதை உயர்ந்த மன முதிர்ச்சி பேரறிவு நிலையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளதை வியந்து போற்றியிருப்பார்" என்று  அருட்தந்தை திருவாசகத்தை அருமையாக விளக்கியிருந்ததைக் குறித்துப் பேசினார். நண்பருடன் பேசிமுடித்துவிட்டு, அக்காணொளியில் அருட்தந்தை தந்த விளக்கத்தை அசைபோட்டுக்கொண்டே குளிக்கச் சென்ற எனக்குப் பட்டென பொறிதட்டியது - "செல்வத்துள் செல்வம்  .. ." திருக்குறளுக்காக நான் தேடிய\ விளக்கம்  கிடைத்துவிட்டது.  குளிப்பதை ஒத்திவைத்துவிட்டு, மறப்பதற்குள் எழுதிவிடுவோம் என்று குளியலறையை விட்டு வெளியே வந்தேன் (தயவு செய்து ஆர்க்கிமிடிஸ் 'யுரேகா' கற்பனையெல்லாம் வேண்டாம்; நானொன்றும் சோப்புநுரையை ஆடையாக அணிந்து வெளியே வரவில்லை; நம்புங்கள்). இப்போது  பரிமேழகர் உரைக்குப் புதுவிளக்கம்  தெளிவானக் கிடைத்தது.

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.'

 கண்ணெனத் தகும் எண்ணும், எழுத்தும் கற்கும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கேட்டல் என்னும் செவிப்புலன் கொண்டு, செவிவழியாகவே ஒருவன், என்றும் அழியாத, ஏழேழு பிறவிக்கும் எடுத்துச் செல்லும் நிலையான செல்வங்களாகிய  ஞானமும் கல்வியும் ஈட்ட இயலும்; மனிதனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்தும் காலத்தால் அழிபவை; ஆனால் மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து, வீடுபேறு பலனைத் தருமாகையால், மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய செல்வமே, அவனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்திலும் தலைமையானதாகும் என்பதை "அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்று இரண்டாம் அடியில் கூறியுள்ளார் வள்ளுவர். மெய்ப்பொருள் உணராது, மேம்போக்காக பொருள் நோக்குவோர் சற்று அறிவைப் பயன்படுத்தட்டும் என்று நுணுக்கமான பொருள் வைத்துப் பாடியுள்ளார் தெய்வப்புலவர் என்ற தெளிவை இப்போது உணர முடிந்தது.  

 பொறி-புலன்கள் கூடிய செவி என்னும் செல்வமே, மனிதனுக்குக் கிடைத்த செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வம் என்பதைச் சொல்ல, ''செல்வத்துள் செல்வம்  செவிச்செல்வம்'   என்று முதலடியில் சொன்ன வள்ளுவர், செவிப்புலன் வழியாக ஒருவன் ஈட்டும் "என்றும் அழியாத ஞானமும் கல்வி"யுமே, இவ்வுலகில் அவன் ஈட்டிய மற்றெல்லாச் செல்வங்களையும் விடத்  தலையானதாகும் என்பதை ஈற்றடியில் 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்றார். எனவே 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்பது அழியும் தன்மைகொண்ட உலகியல் செல்வங்களில் முதன்மையான செல்வம் 'செவிச்செல்வம் என்றும், அதன் வழியாக அவன் பெற்ற அழியாச் செல்வமாம் 'ஞானமும், கல்வியும்' அவனிடம் உள்ள ஏனைய செல்வம் அனைத்திற்கும் முதன்மையானது என்பதை 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' எனபதில் குறித்தார். எனவே, வழியும், பயனுமாக முதலடியும், ஈற்றடியும் விளங்குவதால், கூறியது-கூறல் என்பது இக்குறளில் இல்லவே இல்லை என்பது தெளிவு.

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’

3 months 2 weeks ago

மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.  

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. 

காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.

 

 குறுந்தொகைப் பாடல்  எண் - 27

 ஆசிரியர் - வெள்ளிவீதியார்

 திணை - பாலைத்திணை

 தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

 தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

 ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமக் கவினே’’

 

கலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு

தீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல்

என்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன்

பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது

உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல்

அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)

மாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு 

 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.

 

தள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. 

Checked
Sun, 08/19/2018 - 15:04
தமிழும் நயமும் Latest Topics
Subscribe to தமிழும் நயமும் feed