
பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC
கட்டுரை தகவல்
கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா?
கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.
மனிதர்களின் நரம்பியல் வளர்ச்சியில் கோலின் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட தாய்மார்கள், குறியீடுகள் மற்றும் தகவல்களை விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுத்தனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது.
விஞ்ஞானிகள் கோலின் ஒரு அதிசய ஊட்டச்சத்து என்கிறார்கள். ஆனால் அது பெரிதும் கவனிக்கப்படவில்லை.
கோலின் எந்த பொருட்களில் இருந்து கிடைக்கும்? நீங்கள் அதை போதுமான அளவு பெறுகிறீர்களா?
ஒரு முக்கிய ஊட்டச்சத்து
நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கோலின் காணப்படுகிறது என்கிறார் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் ஜின்யின் ஜியாங்.
கோலின் ஒரு "அத்தியாவசிய" ஊட்டச்சத்து. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான இதனை, நமது உடல் தானாகவே போதுமான அளவு உற்பத்தி செய்யாது.
அதற்கு பதிலாக, நாம் அதை நமது உணவிலிருந்து பெற வேண்டும்.
இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைப் போன்றது என்றாலும், உண்மையில் பி வைட்டமின்களுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அறிவியல் எழுத்தாளர் மற்றும் ஒர் ஊட்டசத்து ஆலோசனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எம்மா டெர்பிஷயர் கூறுகிறார்.
மாட்டிறைச்சி, முட்டை, மீன், கோழி மற்றும் பால் போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோலின் காணப்படுகிறது.
அதே சமயம், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், காளான் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றிலும் உள்ளது. இருப்பினும், விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளதை விட அதிக அளவு கோலின் காணப்படுகிறது.
நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு கோலின் அவசியம். போதுமான அளவு கோலின் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம்.
"கோலின், கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியே அனுப்புவதற்கு உதவுகிறது. மேலும், ஒருவருக்கு கோலின் குறைபாடு இருந்தால், அவருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியலாம் (fatty liver) " என்கிறார் ஜியாங்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சோயாபீன்களின் மூலம் 100 கிராமுக்கு 120மிகி அளவில் கோலினைப் பெற முடியும்.
தாய்மார்களின் கர்பகாலத்தில் கரு வளர்ச்சியடையும்போது, மூளையில் செல் பெருக்கம் குறைய, கோலின் குறைபாடு காரணமாக அமைகிறது. இது பல்வேறு தீங்குகளை விளைவிக்கலாம்.
எனவே மூளையில் கோலினின் பங்கு மிகவும் முக்கியமானது.
இது முதன்மையாக "மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து" என டெர்பிஷயர் கூறுகிறார்.
நரம்பு செல்களின் மூலம் மூளையிலிருந்து நமது உடலுக்கு செய்திகளை கொண்டு செல்லும் அசிட்டைல்கோலின் என்ற நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்யவும் கோலின் உதவுகிறது.
அசிட்டைல்கோலின், நமது நினைவாற்றல், சிந்தனை மற்றும் கற்றலுக்கு தேவைப்படும் மூளை நரம்பு செல்களில் முக்கிய பங்காற்றுகிறது.
36 முதல் 83 வயதுக்குட்பட்ட 1,400 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், அதிக கோலினை உட்கொண்டவர்கள், சிறந்த நினைவாற்றலுடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், நடுத்தர வயதில் கோலினை சேர்த்துக்கொள்வது நமது மூளையைப் பாதுகாக்க உதவக்கூடும்.
கோலின் பொதுவாக "நூட்ரோபிக்ஸ்" எனப்படும் சப்ளிமென்ட் மருந்துகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருட்களின் கலவையாகிய இது, கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.
மறுபுறம், கோலின் குறைபாடும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவுக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
ஒரு ஆய்வில், அதிக அளவில் கோலினை உட்கொண்டால், பதற்றம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், அதிக அளவில் கோலினை சேர்த்துக்கொள்வதற்கும், மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து குறைவதற்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
போதுமான அளவு கோலினை எடுத்துக்கொண்டால், பல நன்மைகள் கிடைக்கக்கூடும்.
தனித்தனியாக, எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கும் கோலின் உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
மேலும், அதிக அளவில் கோலினை உட்கொண்டவர்கள், அதிக எலும்பு அடர்த்தி கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பின் அடர்த்தி நன்றாக இருந்தால், எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் எலும்பு முறிவின் அபாயமும் குறையும்.
"எலும்பு வலுவிழப்புக்கு எதிராக கோலின் செயல்படக்கூடும்" என்று கோலின் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்த நார்வேயின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஓயென் ஜனிக் கூறுகிறார்.
முதல் 1000 நாட்கள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை என்பதும், கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது தாயின் உணவுமுறை இதில் ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நன்கு நிறுவப்பட்டுள்ளது.
கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் தங்களின் தாய்மார்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக கோலினுடன் பிறக்கின்றன. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் கோலினின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது என்கிறார் டெர்பிஷயர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருப்பையில் உள்ள கோலினின் அளவு, குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த நன்மைகள் குழந்தை வளர்ந்த பிறகும் பல ஆண்டுகள் தொடரக்கூடும்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலம் (வாரம் 13 முதல் 28 வரை) 'இரண்டாம் ட்ரைமெஸ்டர்' எனப்படுகின்றது. அக்காலத்தில் அதிக அளவு கோலின் உட்கொண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள், தங்கள் ஏழு வயதில் செய்துக்கொண்ட நினைவாற்றல் பரிசோதனையில் உயர் மதிப்பெண்கள் பெற்றதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவர் போதிய அளவில் கோலின் பெறவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகளில் கவனக்குறைவு/அதிக செயல்பாட்டு குறைபாடு (ஏடிஎச்டி) தொடர்புடைய நடத்தைகள் காணப்படலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
"பள்ளி மாணவர்களிடையே ஏடிஎச்டி மற்றும் டிஸ்லெக்ஸியா அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. இதில் சில மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றாலும், கருப்பையில் முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதாலும் இது ஏற்படக்கூடும். நரம்பியல் வளர்ச்சியில் மிக நுணுக்கமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை பிற்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இப்போது நாங்கள் அதற்கான பின்விளைவுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் " என்று டெர்பிஷயர் விளக்குகிறார்.
கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் வழங்கும் காலத்தில், கோலின் உட்கொள்வதற்கும் மூளை வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை ஜியாங் ஆய்வு செய்துள்ளார்.
"விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தாய்க்கு அதிக கோலின் இருந்தால் அவற்றின் குட்டிகளின் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பட்டதாக இருக்கும்" என்று கூறும் அவர், "மனிதர்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும், ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கவில்லை" என்று விளக்குகிறார்.
நமக்கு போதுமான அளவு கோலின் கிடைக்கிறதா?
ஐரோப்பாவில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையமான ஈஎப்எஸ்ஏ (EFSA), கோலினை உட்கொள்வதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
பெரியவர்களுக்கு தினசரி 400 மில்லிகிராம், கர்ப்பிணிகளுக்கு 480 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு 520 மில்லிகிராம் கோலின் பரிந்துரைக்கப்படுகிறது.
கோலின் உட்கொள்வதற்கான பரிந்துரைகளை, அமெரிக்காவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் (IOM) முதன்முதலில் 1998ம் ஆண்டு வெளியிட்டது.
ஆண்களுக்கு தினசரி 550 மில்லிகிராம், பெண்களுக்கு 425 மில்லிகிராம், கர்ப்ப காலத்தில் 450 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 550 மில்லிகிராம் என அதில் பரிந்துரைக்கப்பட்டது.
ஒரு முட்டையில் சுமார் 150 மில்லிகிராம் கோலின் உள்ளது.
ஒரு கோழியின் மார்புத் துண்டில் சுமார் 72 மில்லிகிராம், மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 24 மில்லிகிராம் கோலின் காணப்படுகிறது.
மூளைக்கு அதிகம் தேவை
38 விலங்கு மற்றும் 16 மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கோலின் சப்ளிமெண்ட் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என கூறுகிறது.
இருப்பினும், தற்போது வரை கோலின் மற்றும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுக்கிடையிலான வலுவான தொடர்பை விலங்குகளை அடிப்படையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மட்டுமே வெளிக்காட்டுகின்றன.
அந்த ஆய்வுக் கட்டுரை கோலின் சப்ளிமெண்ட்டுக்கான சரியான அளவை குறிப்பிடவில்லை.
ஆனால் மனிதர்களை கொண்டு நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் தினசரி 930 மில்லி கிராம் அளவு கோலின் வழங்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தின. இது சுமார் ஆறு கோழி முட்டைகளில் உள்ள கோலின் அளவுக்கு இணையானது. இதனால் எந்தவொரு மோசமான விளைவுகளும் பதிவாகவில்லை.
பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை விட அதிக கோலின் தேவைப்படும் சிலரும் இருக்கலாம் என்று ஓயென் கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகக் காணப்படும் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தவர்களுக்கு கோலின் அதிகம் தேவைப்படலாம்.
ஒவ்வொருக்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகளால், சிலருக்கு கோலினின் தேவை அதிகமாக இருக்கலாம் என டெர்பிஷயர் கூறுகிறார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,வேர்க்கடலையில் அதிக அளவு கோலின் உள்ளது.
இருப்பினும், நம்மில் பலர் போதுமான அளவு கோலினை பெறவில்லை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு ஆய்வில், அமெரிக்க மக்களில் 11 சதவிகித மக்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை தினசரி உட்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைகளில் அதிக அளவு கோலின் உள்ளது. சைவ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர், இந்த ஊட்டச்சத்தை போதுமான அளவில் பெற முடியாது என்ற சில கவலைகள் உள்ளன.
இருப்பினும் வளர்ந்த நாடுகளில் கோலின் சப்ளிமெண்ட்கள் பரவலாகவும் கிடைக்கின்றன.
முட்டை உண்பவர்கள், முட்டை உண்ணாதவர்களை விட, சுமார் இரண்டு மடங்கு அதிக கோலினை உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், "முட்டை உண்ணாமலோ அல்லது சப்ளிமெண்ட் எடுக்காமலோ, தினசரி போதுமான அளவு கோலின் கிடைப்பது மிகவும் கடினம்" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
ஆனால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கோலின் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை
''நீங்கள் உங்கள் உணவை கவனமாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை பெற முடியும்'' என்று ஜியாங் கூறுகிறார்.
போதுமான கோலின் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஓயென் கூறுகிறார்.
இதற்கிடையில், ஆரோக்கியத்துக்கு கோலின் எவ்வாறெல்லாம் உதவும் என்பதை நன்கு புரிந்து கொள்ள விலங்குகளிடமும், மனிதர்களிடமும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், "மருத்துவர்கள் கோலின் குறித்து அதிகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் டெர்பிஷயர்.
பெரும்பாலும் சற்று கவனிக்கப்படாததாகத் தோன்றினாலும், கோலின் விரைவில் பரவலாக அறியப்படும் என்று அவர் நம்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/c05nez8lqe4o