Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.........
#1
[size=15]<b>இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.......... </b>

அமெரிக்காவின் நியூஜெர்சியில் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற குறும்பட விழாவில் சுவிசில் தயாரான "நிழல் யுத்தம்" குறும்படம் காண்பிக்கப்பட்ட போது பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட மொழி பிரச்சனைகள் தொடர்பாக விமர்சனங்கள் வந்திருந்தன.

அவர்களது பிரச்சனை மற்றும் அதற்கான எனது பதிலும் இடம் பெறுகின்றது. இதைவிட வேறு கருத்துகளும் இருக்கலாம். தெரிந்தால் எழுதுங்கள் வளரும் புலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு பிரயோசனமாகலாம்....................

அன்புடன்
AJeevan
info@ajeevan.com
www.ajeevan.com
http://ajeevan.blogspot.com/
_______________________________________________________

நிழல் யுத்தம் என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங்' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு சுமாராய்த் தான் இருந்தது. இலங்கைத் தமிழ் வசனங்கள் படம் முழுதும் நிரம்பியிருந்ததால்..ஒன்றுமே புரியவில்லை (?!) அதற்கான சப்டைட்டில்களும் சுவிஸ் மொழியில் போட்டதால், போச்ச்ச்ச்! எனினும், இவரின் முயற்சி பாராட்டப் பட வேண்டியது. வேகமானப் படத்தொகுப்பு மற்றும் கதையில் கவனம் இன்னும் செலுத்த வேண்டும்.
'There are signs of great talent'!

http://arunviews.blogspot.com/
______________________________________________________________________

Shadow fight: நிறைய வசனம் புரிய வில்லை. புரிந்த வசனங்கள் படு ஜோர். காட்சியமைப்பு, எடிட்டிங், ஓளிப்பதிவு எல்லாமே ப்ரொபெஷனல் ரகம். இயக்குநர் அஜீவன் குறித்து அதிகம் அறியேன். ஆனால், நிச்சயம் நிறையப் பேசப்படுவார். கணவன் - மனைவி உறவில் ஓடும் மெல்லிய இழைகளை ஆர்பாட்டமில்லாமல் மனதில் தைக்கிறார்.

http://etamil.blogspot.com/2004/06/blog-po...3808935000.html
_____________________________________________________________
அன்புள்ள அஜீவன்,

வணக்கம். தங்கள் மடலுக்கு நன்றிகள். தங்களின் Shadow Fight பார்த்தேன்.
ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, லைட்டிங், எடிட்டிங் எல்லாம் அருமை.
Professional Touch இருந்தது. வந்திருந்த குறும்படங்களிலேயே
தொழில்நுட்பத்தில் சிறந்த படமாகத் தங்கள் படம் இருந்தது என்பேன்.
Shadow Fight படத்தின் கதையும் நல்ல கரு. இலங்கைத் தமிழுக்கு நான்
புதியவன் என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனாலும், ஜெர்மன்
ஓரளவு தெரிந்த நண்பர் ஒருவர் ஜெர்மன் சப்-டைட்டில்களைப் பார்த்துப் புரிந்து
கொண்டு பார்வையாளர்களுக்கு படத்தை அறிமுகம் செய்யும்போது படம் குறித்து
விவரித்தார். அது மிக உதவிகரமாக இருந்தது. உங்களிடம் நிறைய திறமை
இருப்பது தெரிகிறது. தொடர்ந்து நிறைய படங்கள் எடுங்கள்.

அன்புடன்,
பி.கே.சிவகுமார்
pksivakumar@yahoo.com
_____________________________________________________________________
அன்புடயீர்,

தங்கள் மடலுக்கும், வாழ்த்துக்கும், மனம் திறந்து கூறியிருக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்.

இலங்கைத் தமிழர்களது பேச்சுகளை, இந்திய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,இலங்கைத் தமிழை, குறும்படத்தில் இடப்பட்டிருந்த ஜேர்மன் மொழி உப தலைப்பின் வழி, இன்னுமொரு தமிழர் மொழி பெயர்க்க வேண்டி வந்தது வியப்பாக இருந்தாலும், சுவிஸ் போன்ற ஒரு நாட்டுக்குள், புலம் பெயர்ந்து வாழும் போது, இது எனக்கு வியப்பாக இல்லை.

ஏனைய மொழிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

இருந்தாலும் இது ஒரு முக்கிய விடயமாகப்பட்டதால் இதுபற்றி எழுதுவதும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதும், பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

எனவே நான் வாழும் நாட்டிலிருந்து இவ்விடயத்தை அலச முயல்வது எனக்கு இலகுவாக இருக்கிறது.

சுவிசின் முக்கிய மொழிகளாக ஜேர்மன்,(German) பிரென்ஜ்,(Franch) இத்தாலி (Italy), ரொமானிஸ்(Romanish), ஆகிய மொழிகள் பேசப்படுவதோடு, அரசு ஆளும் முக்கிய பகுதிகளாக, ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பகுதிகள் என ஆட்சியாளர்களால் பிரித்தாளப்படுகின்றன.

சுவிசில் ஜேர்மன் மொழி, ஒரு பகுதியின் மிக முக்கிய ஆட்சி மொழியாகும்.

அது போலவே அண்டை நாடுகளான, ஜேர்மன்(Germany) ஒஸ்ரியா (osterreich) ஆகிய நாடுகளில் ஜேர்மன் மொழி, ஆட்சி மொழியாகும்.

இருப்பினும், சுவிஸ்-ஜேர்மன் மொழித் திரைப்படங்களை, ஜேர்மனியிலுள்ள அல்லது ஒஸ்ரிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
(<i>இதுவும் ஜேர்மன் மொழிதான் இருப்பினும் இலங்கைத் தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் இடையேயிருப்பது போன்ற பேச்சு வழக்கு முறையான பிரச்சனை இருக்கிறது</i>.)

சுவிசில் தயாராகும் சுவிஸ்-ஜேர்மன் திரைப்படங்கள், எழுத்து மொழியிலான ஜேர்மன் உப தலைப்புகளுடன்தான், (சப்டைட்டில்) அவர்களுக்கு, திரையிடப்படுகின்றன.

ஆனால் ஜேர்மன் திரைப்படங்களை, சுவிஸ் ஜேர்மன் மக்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், பேச்சு தமிழ் போல, பேச்சு ஜேர்மன் ஒயில்கள் மாறுபட்டாலும், பாடசாலைகளில் கற்பிக்கும் எழுத்து ஜேர்மன் மொழி ஒன்றாக இருப்பதேயாகும்.

ஆனால் இவை எமது விடயத்தில் முழுமமையாக ஒத்துவருவதில்லை.

இந்திய தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்குமிடையே, பெரியதொரு புரிந்து கொள்ள முடியாத தன்மையிருக்கிறது.

இந்தியத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழையே பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தவிர்த்து, பெரும்பாலனவர்கள் பேசும் தமிழில் ஆங்கலத்தைக் கலப்பதில்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூட, இலங்கையின் மற்றுமொரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களது பேச்சுத் தமிழையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தென்னிந்தியாவிலும் இந்நிலை இருக்கிறது. இருப்பினும் தமிழ் சினிமாவின் தாக்கத்தால் அது பெரிதாகப் புலப்படுவதில்லை.

இந்திய தமிழர்களைப் போலவே இலங்கைத் தமிழர்களுக்கும் இருந்த ஒரு முக்கிய பொழுது போக்கு சினிமாதான். ஆரம்பம் தொட்டே இந்திய தமிழ் சினிமா இலங்கைத் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் இந்தியத் தமிழை இலங்கைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இலங்கை தமிழ் சினிமா , இலங்கையிலேயே தோல்வியடைந்ததாலும், பெரும்பாலான இலங்கை தமிழ் சினிமாக்கள், இந்திய தமிழ் சினிமா தமிழையே பேசியதாலும், வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கூட இலங்கைத் தமிழ் சென்றடையவில்லை அல்லது இலங்கை தமிழ் கடல் கடந்து செல்லவில்லை.

இலங்கைத் தமிழர்கள் கடல் கடந்தாலும், இலங்கையில் இருந்த நிலையே தொடர்கதையாகியது. இலங்கை மற்றும் புலம் பெயர் தமிழ் வானோலி-தொலைக் காட்சிகளில் கூட நாடகத் தமிழ் அல்லது மேடைத் தமிழ் வசனங்களை இவர்கள் பேசத் தலைப்பட்டனரே தவிர அதை மாற்றிக் கொள்ள எவரும் முன் வரவில்லை.

பெரும் பாலான புலம் பெயர் திரைப்படங்கள் கூட, சினிமா தமிழையே உச்சரித்தன. அத் திரைப்படங்கள் கூட ஒரு வரையறைக்குள் எம்மவரால் முடக்கப்பட்டன. இலங்கையிலோ புலம் பெயர் நாடுகளிலோ இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் அவரவர் பெட்டிகளுக்குள் பிணமாகிக் கிடப்பதற்கு அது சம்பந்தப்பட்டவர்களும், ஊடகங்களும், வியாபாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

அண்மையில் நான் எழுதி-இயக்கி-ஒளிப்பதிவு செய்த குறும்படத்தை திரைப்பட விழாக்களுக்குக் கூட அனுப்ப முடியாமல் ஆக்கியதற்கு தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதாக மேடைகளில் முழங்கும் தயாரிப்பாளர் காரணமாயிருப்பது வேதனை தருகிறது. ஆதி முதல் இலங்கை தமிழ் சினிமா வளராமல் இருப்பதற்கு மட்டுமல்ல ஒருவருக்கும் போய் சேராமல் போனதற்கும் இப்படியானவர்களே காரணம். . . . . . . .

இலங்கை தமிழர்களது பிரச்சனைகளை இந்திய தமிழ் இயக்குனர்கள் கொண்டு வர முயன்றாலும், சினிமா என்ற வகையில் இந்திய தமிழர்களிடையே வெற்றி பெற்றாலும், இலங்கை தமிழர்களால் அத்திரைப்படங்கள் தங்களைப் பற்றிச் சொல்கின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அக்கதாபாத்திரங்கள் கூடப் பேசிய தமிழ், இலங்கைத் தமிழோ அல்லது சிங்களமோ அல்ல. மலையாளத் தமிழும் மலையாளம்-தெலுங்கு-கன்னடம் கலந்த சிங்களமுமேயாகும். இதைச்சொல்லக் கூட பலரால் முடியாததற்கு காரணம் அந்த மொழிகள் பற்றிய தெளிவில்லாமையேயாகும்.

இலங்கை தமிழ் பிரச்சனையை மையமாக்கிய ஒரு படத்தில், பிரகாஷ்ராஜ் பேசும் ஒரு வசனம் என்னை உலுக்கியதற்கு காரணம், அது "ஒரு குழந்தையை படுக்கை அறைக்கு அழைப்பதாக........." பேசப்பட்டிருந்ததேயாகும்.

அதை மொழி பெயர்த்தவரோ இயக்குனரோ அதை உணர வாய்ப்பில்லை.

ஓரு வார்த்தையை மொழி பெயர்க்கும் போது அது சரியாகத் தோன்றினாலும் அந்த (சிங்கள) வார்த்தை பாவிக்கப்படும் இடம்-தொனி காரணமாக படுக்கைக்கு அழைப்பதான கருத்தைத் தருகிறது.

இது போன்ற விடயங்கள் தெரிவதற்கு, மேடைகள் தேவை.......... விமர்சனங்கள் தேவை..........

அதற்கான தளத்தை நியுஜெர்சியில் நடைபெற்ற, சிந்தனை வட்டம் குறும்பட விழா வழி செய்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

இலங்கை தமிழர்களதும், புலம் பெயர் தமிழர்களதும் பிரச்சனைகள் வெளிவர ஒன்றிரண்டு குறும்படங்கள் மட்டும் போதாது. முழு நீளப்படங்களும், அத்துடன் கூடிய உப தமிழ் தலைப்புகளும் இருந்தாலன்றி இவை உலக அரங்குக்கல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்குக்கே கூட, போய் சேர வாய்ப்பில்லை. . . . . . . .

ஒரு சமூகத்தின் மொழி-கலை-பண்பாடுகள் பரவ கலைகள் அதுவும் சினிமாக்கலை எவ்வகையான பங்கை வகிக்கிறது என்பது இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழ் ஊடகங்களுக்கும் புரியுமா?

பணிவன்புடன்
அஜீவன்
http://ajeevan.blogspot.com/
info@ajeevan.com

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
Reply
#2
இது ஓன்றே போதும்
Quote:சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
[b] ?
Reply
#3
நன்றி!
Reply
#4
நீண்ட காலமாக சொல்லப்பட்டுவந்த ஒரு விடயம்.

இதை நான் மொழியின் அராஜகம் என்றே பார்க்க வேண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் ஆழமான தாக்கமும் அதன் ஆதிக்கமுமே இந்த பிரச்சனைக்கான மூல காரணங்கள். நாம் பழக்கப்பட்ட விடயத்தை கைவிட மிகவும் சிரமமப்படுவோம். ஆனால் தொடர் பயிற்சிகள் தான் இதை நிவர்த்தி செய்யும். இதற்கு ஒரே வழி தொடரந்தும் எமது பாணியிலேயே படம் எடுப்பது. தென்னிந்திய தமிழ் பின் மெட்ராஸ் தமிழ் இதை நாம் புரிந்து கொள்ளவில்லையா? கோவைதமிழ் மலையாளம் கலந்த தமிழ் தெலுங்கு கலந்த தமிழ் என்று பல தமிழை நாம் புரிந்து கொள்ளவில்லையா? சினமாவே ஒரு மொழி இங்கு பேசப்படும் மொழி இரண்டாவது பட்சமே.

மேற்கண்ட விமர்சனத்தை வைத்தவர்கள் ஒரு விதத்தில் அராஜகவாதிகள். காரணம் தமது மொழியை மையமாக வைத்து அது போல் இது இல்லை என்று குறை கூறுவது. இதை அராஜகம் என்று கூறாது வேறு என்ன சொல்வது. நான் இந்த நிழல்யுத்தம் படத்தை பார்த்த போது சத்தம் கேட்க முடியவில்லை. இணைய தளத்தில் தான் பாரத்தேன். எனக்கு இங்கே பேசிய மொழி முக்கியமாகப் படவில்லை. குறுந்திரைப்படம் அழகாக அதை சொல்லியிருந்தது. ஆனால் மொழி புரியவில்லை அதற்கு சப் டைட்டில் போட வேண்டும் என்று ஒரு சினிமா விமர்சகர் கூறினால் அவர் நிச்சயம் ஒரு நல்ல விமர்சகராக கருத முடியது. சினிமா மொழியை புரியதா ஒருவர் எப்படி விமர்சகராக முடியும்.

இது நமக்கு ஒரு சாபக்கேடு. ஆம் இந்த இலங்கை தமிழ் என்பது. ஐரோப்பாவில் படம் எடுக்க முனையும் பலர் அதாவது நம்மவர்கள் கூட இன்று இங்கே படமெடுத்து விட்டு இந்தியவுக்கு டப்பிங்குக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. காரணம் இலங்கை தமிழ் சினிமாவுக்கு சரிவராதாம். சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால் இன்றைய புலம் பெயர் சினிமா வளர்ச்சி நிச்சயம் இந்த தடையை உடைக்கும். ஆனால் சினிமா எடுப்பவர்கள் முதலில் இதனை முற்றுமுழுதாக புரிந்து கொண்டால் மாத்திரம்!!!!
Reply
#5
நல்லதொரு கருத்தை இதயத்திலிருந்து தொடுத்திருக்கிறீர்கள் சண். நன்றிகள்.

உங்களைப் போல் தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும். அதை ஆரம்பத்திலே அழிக்க எமது விமர்சனங்கள் அமைந்து விடக் கூடாது. சிலர் வாய்க்கு வந்தபடி எமது படைப்புகளை தரம் தாழ்த்தி பேசிவிட்டுப் போவார்கள். ஆனால் இவற்றில் அல்லல் படுவோர் நிலை அவரவருக்குத்தான் தெரியும். அது உங்கள் இதயத்திலிருந்து வந்திருக்கிறது.

நிழல் யுத்தம் நியுஜெர்சியில் காண்பிக்கப்பட்ட போது எமது நாட்டு தமிழர்களும் சிலர் பார்வையாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கைத் தமிழ் புரியவில்லை என்று பலர் அங்கலாய்த்த போது இவர்கள் தங்களை யார் என்று கூட காட்டிக் கொள்ள முன் வரவில்லை என்றும் அதை இன்னுமொரு இந்தியர் விளக்கியது வேதனையாக இருந்ததாக விழாவுக்கு சென்ற ஒரு இந்திய நண்பர் என்னிடம் கூறினார்.நாங்கள் பாவிகள்தான். என்ன செய்வது.......................?

எமது படைப்பாளிகள் என்ன வரினும் நிலைப்போம் என்ற நம்பிக்கையோடு தொடர வேண்டும்.

சண், உங்கள் படத்தை ஒளி நாடாக்களில் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். இது ஏனையோரும் தொடர வேண்டும்..................

வாழ்த்துகள் உங்களுக்கும் உங்களோடு தோள் கொடுத்து நிற்பவர்களுக்கும்...................
Reply
#6
தலைப்புக்கு சம்பந்தமற்ற விடயம் இருந்தாலும் ஒரு கொஞ்சம் சம்பந்தம் இருப்பதால் எழுதுகிறேன். ஒரு விமர்சகர் அண்மையில் லண்டனில் வெளி வந்த ஒரு வீடியோ திரைப்படத்தை பற்றி நன்கே விமர்சித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர் லண்டன் நாட்டவர். தென்னிந்திய நடிகர் பிரபலத்தை காப்பி(அவர்தம் பசையில்) அடித்து நடிப்பவர், ஆடுபவர் ஏன் அவர் ஸ்ரைலிலேயே போசுவார். ஆனால் பார்த்த நண்பர், இந்த படத்தை பார்த்த இன்னுமொரு நண்பர், அவர் கூட்டாளிகள் நால்வர் எனக்கு கூறியது தயவுசெய்து உங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று! இருந்தாலும் அவர் முயற்சிக்காக பாரக்க இருக்கிறேன்.
இந்த விடயம் படத்தை விமர்சித்து அல்ல திமர்சித்தவரை விமர்சித்தே!
இந்த விமர்சகர் கடந்த ஆண்டு கிழக்கு லண்டனில் நடை பெற்ற நம்மவர் திரைமன்ற கூட்டமொன்றில் தென்னிந்திய திரைப்படத்தை குப்பைகள், அது இது என்று வசை பாடினார். கேட்க நல்ல சந்தோசமாக இருந்தது. ஆனால் இந்த படத்தை பற்றி அவர் விமர்சனம் செய்தததை பார்த் போது இதுதான்டா பல்ட்டிக்கு இதைவிட உதாரணம் இருக்க முடியாது. அப்படி ஒரு பல்டி! அந்த திரைப்படம் முழுக்க முழுக்க தென்னிந்தியாவல் அவர்தம் பாசையில் நம்மவர் ஒருவர் நடிக்க ஈழவர் என்றோ அல்லது புலம் பெயர் தமிழர் என்ற எந்த ஒரு முத்திரையும் இல்லாது தென்னிந்திய குப்பைக்குள் (இது விமர்சகரின் குப்பை எனது அல்ல) எடுத்த அந்த படம் தனக்கு பிடிச்சிருக்காம்! கடவுளே நான் எங்கைபோய் முட்ட! இங்கே கத்துக்குட்டகள் டிக்சனில் கமரா வாங்கி படமெடுக்கினமாம். அதைப்ற்றி ஒரு விமர்சனம் வேறு! ஆனால் இவர் முன் கூறிய தென்னிந்திய குப்பைக்குள் நீந்தி எழும்பின அந்த படம் தனக்கு பிடிச்சிருக்காம்! இவையெல்லாம் விமர்சனம் செய்து நாங்கள் எங்கை வளருவது?
Reply
#7
[size=15] <b>இலங்கைத் தமிழ் புரியவில்லை (விளங்கேலை)</b>

அஜீவனின் குறும்படம் அமெரிக்கா நியுஜேர்சி சிந்தனை வட்டத்தினால் நடாத்தப்பட்ட குறும்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எமக்கு கேட்டுப் போன பல்லவியே.
ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள் புரியவில்லை. சொற்களுக்கு அடிக்குறிப்பு இடுங்கள் எனக் கேட்கப்பட்ட காலம் உண்டு. ஈழத்து எழுத்து தற்போது பேச்சுநடையிலேயே எழுதப்படுகிறது. எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள்.அந்தக் குறை நீங்கிவிட்டது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கட்டுரைகளிலிருந்து (அகரம் வெளியீடு பக்கம் 416 & 417)
நம்முடைய வானொலி நாடகங்களைக் கேட்டு சலித்த எனக்கு, நண்பர் ஒருவர் சொன்ன யோசனை, சனிக்கிழமை தோறும் இரவு 9.30 க்குச் சிலோன் வானொலி ஒலிபரப்பும் தமிழ் நாடகங்களைக் கேட்டுப் பாருங்கள் என்றார். அந்தக் காலத்தில், அப்போது இந்த "கச்சரா" ஏற்படாத காலம். சனிக்கிழமை தோறும் ராத்திரி 9.30 மணிக்கு ஆவலோடு வானொலிப் பெட்டியின் முன் உட்காரும் வழக்கம் வந்தது. வானொலி நாடகங்கள் என்றால் அதுவல்லவா நாடகங்கள். அந்த ஈழத்து மக்களின் தமிழையே கேட்டுக் கொண்டிருக்கலாம். என்ன சொகம் என்ன சொகம்.

முதலில் கேட்கக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. பல வார்த்தைகள் புரியவேயில்லை. நுளம்பு, பகிடி, பாவிக்கிறது, விசர் இப்படி.அப்புறம் அதுவே கேட்கக் கேட்க ஆனந்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.

ஆகவே இவர்கள் முயற்சித்தால் இலங்கைத் தமிழ் புரியும்.
தமிழ்நாட்டிலோ மயிர், பொம்பிளை போன்றவை அங்கு இழிசொற்களாகும். முறையே முடி, லேடி என்று நல்ல தமிழாகக் கருதப்படுகிறது.

நடப்பில் நம்மிலும் பெரிய குறைபாடு உண்டு.நாம் சினிமாத்துறையில் மிக பின் நிற்கிறோம்.
கலியாண வீட்டு தொழில்நுட்பவியவாளர்களை திரைப்படம்(?); எடுக்கப் பயன்படுத்துகிறோம்.
நாம் சிறந்த படங்களை இயக்கி வெளியிட்டாலே மற்றவர்களுக்கும் இலங்கைத் தமிழ் புரியும். இல்லாவிடில், புன்னகை மன்னன், தெனாலி, நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று இலங்கைத் தமிழையும், இலங்கைத் தமிழனையும் கொச்சைப் படுத்துகிறார்கள். சென்று பார்த்துவிட்டு கைதட்டுங்கள்.

பேட்டி வழங்கும் ஈழத்து இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், போராளிகள் எல்லோரும் மைக்கைக் கண்டவுடன் ஒரு போலித் தமிழில் உரையாடுகின்றனர்.பேச்சு நடையில் உள்ள இனிமை இதில் இல்லை. அண்மையில் ஜெயா தொலைக்காட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரீகத்துறை பீடாதிபதி, ஒரு பெண்மணி, மேடையில் பேசுவது போன்று பேட்டி வழங்கினார்.
நாம் செய்ய வேண்டியது கலந்துரையாடும்போது உரைத் தமிழைத் தவிர்த்து பேச்சுத் தமிழையே பயன்படுத்துவோம்.


Hi ajeevan,
Have a look on this.

Thanks
pirakalathan
france
pirabha1@hotmail.com

note:பிரான்சிலிருந்து எனக்கு, மின்அஞ்சல் வழி கிடைத்த இக் கருத்தை இங்கே இணைத்துள்ளேன்.
http://ajeevan.blogspot.com/2004/07/blog-post_14.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)