Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை வானொலி
#1
இலங்கை வானொலி

இப்பொழுது இலங்கை வானொலியின், இல்லை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் போது கோபமோ, எரிச்சலோ, அருவருப்போ கூட வருவதில்லை. அந்தளவுக்கு அது எங்களது இருப்புக்கு அந்நியப்பட்டுப் போய் விட்டது. பேரினவாத ஆட்சியாளர்கள் எள் என்றால் எண்ணெய்யாக வழிகிறவர்கள்தான் இன்று தமிழ் ஒலிபரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

ஒரு தகவல் ஊடகம் என்ற வகையில் படிப்படியாகத் தனது நம்பகத் தன்மையை இழந்து, 1983 ஆடிக் கலவரத்தின் போது தமிழ் மக்களது உணர்வுகளைச் சிறிதும் மதியாத ஒரு அரசாங்கத்தின் நிந்தனை மொழிகளைத் தமிழில் வழங்குவதற்கு மட்டுமே தகுதி வாய்ந்ததாக அதை அதன் எஜமானர்கள் கருதினார்கள். அந்த மதிப்பீட்டுக்கு ஏற்றபடி இலங்கை வானொலியைக் கொண்டு நடத்தக் கூடியவர்களாகத் தேடி அதன் பொறுப்பில் அமர்த்தினார்கள். தமிழ் மக்களது உரிமைகட்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் அதன் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்வது அரிது. அமர்ந்தாலும் நின்று பிடிப்பது இயலாதது.

அரச அலுவல்களிலும் கல்வித் துறையிலும் சிங்களப் பேரினவாதச் சிந்தனையும் சிங்கள பௌத்தமும் செலுத்தி வந்த மேலாதிக்கத்தின் பிரதிபலிப்பாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பகுதியும் நடந்து கொண்டது. இலங்கை வானொலி அரச சார்பு ஊடகமாக இருந்த போதும் மொழி, பண்பாடு, இலக்கியம் போன்ற துறைகளில் காத்திரமான பங்களிப்புகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. அவை ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்னும் பிற வகைகளிலும் தமிழ்ப் பிரிவு ஒரு கனதியான ஆவணக் காப்பகமாக இருந்தன. 1977 க்குப் பின்பு துரிதமடைந்த புறக்கணிப்பு 1983 க்குப் பிறகு திட்டமிட்ட சீர்குலைப்பாக மாறியது. எத்தனையோ பெறுமதி வாய்ந்த ஒலிப்பதிவு வடிவிலான ஆவணங்கள் என்றென்றைக்குமே இல்லாமற் போய்விட்டன என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட்ட பலரும் கடந்த சில ஆண்டுகளாகப் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியுள்ளனர். ஆயினும் எதுவும் நடக்கவில்லை, நடக்கப் போவதுமில்லை.

தமிழ் - முஸ்லிம் இன முரண்பாட்டைப் பயன்படுத்தியும் பல்வேறு காரியங்கள் நடைபெறுகின்றன. தமிழ்மொழியிலுள்ள தகவல் வளத்தைப் பேணுவதும் பெருக்குவதும் தவிர்ந்த பதவிப் போட்டிகளும் இனத்துவ அரசியல் முரண்பாடுகளும் தமிழ் ஒலிபரப்புச் சேவையை மேலும் செயலற்றதாக முடக்குகின்றன. இதற்கிடையே அரசாங்கத்தினதும் அதனோடு உள்ள ஓட்டுண்ணிகளதும் பிரசாரம் தளராமல் நடைபெறுகிறது.

1990 களின் இறுதி ஆண்டுகள் தொட்டு இந்த நூற்றாண்டின் முதல் மூன்று ஆண்டுகள் வரை, சில துறைகளிலேனும், நம்பிக்கையூட்டக் கூடிய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவை ஒவ்வொன்றாகச் சிதறடிக்கப்பட்டு விட்டன. கனதியான விடயங்களைப் பேச அமைந்த களம் ஒவ்வொன்றும் விஷய ஞானம் சிறிதும் இல்லாத அறிவிப்பாளர்களும் ஏறத்தாழ அவர்களளவு ஞானமுடைய நிபுணர்களும் தமது அறியாமையைப் பகிருவதற்கே இன்று பயன்படுகிறது. இது பற்றிப் பேசிப் பயனில்லை என்று தான் நீண்ட காலமாக இதுபற்றிக் குறிப்பிடாமல் இருந்தேன். எனினும், ஃபெப்ரவரி இறுதியில் கேட்க நேர்ந்த சில நிகழ்ச்சிகள் இலங்கை வானொலி சீரழிய இன்னமும் நிறைய இடம் உண்டு என்று எனக்குத் தெளிவுபடுத்தின.

`வெண்பா நயம்' என்றொரு நிகழ்ச்சி. அதில் வெண்பாவை நயப்பது பற்றி எதையும் யாரும் அறிய முடியாது. ஒரு வெண்பாவை வாசித்து ஒருவர் பொருளுரைப்பார். இன்னொருவர் அதைப் பாடுவார். எல்லாம் ஔவையாரின் நீதி வெண்பாக்கள் தாம். அதன் பின்பு வாக்கியகாரர் என்ற நிகழ்ச்சி. உண்மையிலேயே, அண்மை வரை நான் விரும்பிக் கேட்ட ஒரு நிகழ்ச்சி என்பேன்.

இசை பற்றிய அறிவும் ஈடுபாடும் உள்ள ஒருவர், வாரம் ஒரு வாக்கியகாரர் (அதாவது கர்நாடக இசைப் பாடலாசிரியர்) ஒருவரது வாழ்க்கைக் குறிப்புக்களுடன் அவ் வாக்கியக்காரரது அதி சிறப்பு வாய்ந்த சாகித்தியங்களில் சிலவற்றை ஒலிபரப்புவார். நான் கடைசியாக கேட்ட நிகழ்ச்சியில், ஊர்ப் பேரையோ ராகத்தின் பேரையோ உச்சரிக்கக் கூடத் தடுமாறுகிற ஒருவர், வெண்பா நயம் நிகழ்ச்சியில் வெண்பாவை வாசித்த அதே நபர், அந்த நிகழ்ச்சியைப் பாழாக்கினார். அதே நபர், இப்போது சைசமய நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துவதாக அறிகிறேன். கர்நாடக இசை, தமிழ் செய்யுள், சைவ சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் ஒருவர் கொடிகட்டிப் பறக்க இயலாது என்பது என் கருத்தல்ல. ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பாளராக உள்ளவர் அவ்வளவு தகைமை வாய்ந்தவராகத் தெரியவில்லை. யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிற தோரணையில் அவர் பேசுவதைக் கேட்கையில் யார் மீது இரக்கப்படுவது என்று தெரியவில்லை.

இன்று தமிழ்த் தெரிந்தவர்கள் செய்தி அறிக்கைகளை எழுதுகிறார்களா என்ற ஐயம் எனக்கு மட்டும் ஏற்படும் ஒன்றல்ல. தேவையற்ற சொற்களும் பொருட் செறிவற்ற வாக்கியங்களும் குழப்பமான சொற் பிரயோகமும் எல்லா ஒலிபரப்பு ஊடகங்களுக்குமுரியன. சிங்கள ஒலிபரப்பாளர்களுடைய மொழியறிவின் போதாமை பற்றிச் சிங்கள நண்பர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எனினும், தமிழ் ஒலிபரப்பாளர்களளவுக்குத் தமது மொழியை உருத் தெரியாமற் சிதைக்கும் ஆற்றலினளவு சிங்கள ஒலிபரப்பாளர்களுக்குத் தமது மொழியைச் சிதைக்கும் ஆற்றல் இல்லை என்பேன்.

சென்ற ஆண்டு முற்பகுதியில் ஒருநாள், `விடியும் வேளை' நிகழ்ச்சியில் அப்துல் ஹமீட் பங்குபற்றினார். தமிழ் ஒலிபரப்பின் தரம் தாழ்ந்து விட்டது பற்றி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை மனம் நோகச் செய்யாமல் எவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு வெளிப்படையாகச் சொன்னார். ஆனால், அதற்குப் பின்பும், தமிழ் ஒலிபரப்பு அதன் உள்ளடக்கத்திலும் ஒலிபரப்பின் தரத்திலும் தாழ்ந்தே வந்துள்ளது.

இன்று தேசிய சேவையின் தமிழ் ஒலிபரப்பு தமிழ்த் தேசிய இனத்தின் அடிமைத் தனத்தின் அன்றாடப் பிரகடனமாகவே உள்ளது. காலையிலே இப்போது பௌத்த மதப் போதனை தவறாமல் நடக்கிறது. அது நமது சிந்தனையைப் பரந்து பட்டதாக்கும் முயற்சியின் ஒரு பகுதி எனில் நல்லது. அப்படியானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?

ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?

1975 அளவில் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்கான ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதை நடத்தியவர்கள் அரசாங்கத்தில் கூட்டாளியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஒரு தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர். அங்கே நாட்டின் ஒற்றுமை பற்றித் தமிழர்கள் காட்டிய அக்கறையை அங்கு அழைக்கப்பட்ட அமைச்சர்கள் கூடக் காட்டவில்லை. அமைச்சர்களின் உரையில், தேசிய இன ஒற்றுமைக்குத் தமிழர்களே பங்கமாக நடந்து கொள்கிறார்கள் என்ற தொனி ஓங்கியிருந்தது. அது பாராளுமன்ற அரசியற் சறுக்குப் பாதையில் அடிவைத்த ஒரு கட்சியினதும் அதனுடன் ஒட்டிக் கிடந்த இலக்கியவாதிகளதும் சிந்தனையின் சீரழிவைக் குறித்தது. இன்று பலர் அந்த நாட்களை நினைவுகூர விரும்புவதில்லை. ஆனால், அதே மனோபாவமே தமிழ்ச் சமூகத்தை ஒவ்வொரு துறையிலும் பாதிக்கின்றது.

தங்களுடைய தனிப்பட்ட அற்ப நலன்களுக்காகத் தமிழ் மக்களதும் இந்த நாட்டினதும் நலன்களைச் சிதைக்க ஆயத்தமானவர்களாலேயே உயர் பதவிகளைப் பிடிக்க முடிகிறது. மக்கள் அவர்களை அறிவார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களது ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களது நம்பகத் தன்மைக்கு மற்றவர்கள் உதவ வேண்டுமா? உள்ளதை உள்ளபடி பேசவும் உண்மைகளைத் திரிக்காமல் வழங்கவும் தடையாக உள்ள நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் எந்த நேர்மையான மனிதரும் தமது வாய்ப்புகளை உண்மைகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும். அதற்கு இடமில்லை என்றால் பங்குபற்ற மறுக்க வேண்டும்.

ஊடகங்கள் தமக்கு இடமளிப்பதை ஒரு உபகாரமாகக் கருதுகிற எவரும் தன்னைத் தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ள இடமளிப்பது தவிர்க்க இயலாதது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை எம்மாற் சீர்திருத்த இயலாது. ஆனால், அந்தச் சீரழிவுக்கு மூடு திரைகளாகப் பயன்படாமல் எம்மால் நடந்து கொள்ள இயலும்.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
கொதி கிழப்பல்


இலங்கை வானொலியின் செயற்பாடுகள் தற்போது மோசமடைந்து வருவது பற்றி ஈழத்தமிழரிடையே கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. இதுபற்றியும் மேலதிக சில விடயங்கள் பற்றியும் தினக்குரல் பத்திரிகையில் மறுபக்கம் பத்தியெழுதும் கோகர்ணன் எழுதியுள்ளார்.

அவர் கூறுவது இலங்கை வானொலியின் தேசிய சேவை பற்றித்தான் என்றாலும் அதன் மற்றைய கிளை ஒலிபரப்புக்கள் கூட சினமூட்டுபவையாகவே இருக்கிறன. அவர் தன்பத்தியில், குறிப்பிட்ட ஒரு கட்சியையும் சிலரையும் தாக்குவதைப்பற்றி எனக்குக் கருத்தில்லை.
அவர் வானொலி ஒலிபரப்புப் பற்றி கேட்கும் இரண்டு கேள்விகள் என்னை ஈர்த்தன.

பௌத்த மத சிந்தனை நாள்தவறாமல் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பவேண்டுமானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?

ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?

எனக்கும் மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலமாக உண்டு. குறிப்பாக சமாதானப் பாடல் பற்றியது. ஏதோ தமிழருக்கு மட்டுந்தான் சமாதானத்தைப் போதிக்க வேண்டும்; அவர்கள் தான் சமாதானத்தின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அரசியற் கட்சிகளும் சில ஊடகங்களும் பொது நிறுவனங்களும் செயற்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதும் தான் தாமதம், சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரைகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப்பட்டது. எங்கு தெரியுமா? எல்லாம் வடபகுதி நோக்கி, குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி. தென்னிலங்கையிலிருந்து சமாதான ஊர்வலம் என்ற பேரில் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிள் விட்டினம். (இத வண்டில் விடுகிறது எண்டும் சொல்லலாம்). புத்த பிக்குமார் யாத்திரை போச்சினம். இவற்றில் மறைமுகப் பரப்புரை என்னவென்றால், தமிழரைச் சமாதான வழிக்குக் கொண்டு வருதல் என்ற பெயரில் அமைந்திருந்தன.

யாருக்கு யார் சமாதானம் பற்றிப் போதிப்பது? ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என இருந்தவை பின் அந்தச் சங்கம் இந்தச் சங்கம் என்ற பெயர்களில் யாழ்ப்பாணத்துக்கு சமாதான யாத்திரை வெளிக்கிட மனிசருக்கு கொதி வந்தது தான் மிச்சம். இவ்வளவத்துக்கும் முதல் சமாதான யாத்திரை துவங்கேக்க சீமெந்துக்கு முற்றுமுழுதா தடை எடுபடேல. உண்மையா சனத்துக்கு சரியான எரிச்சல்தான். வன்னிக்குள்ளால அவயள் போகேக்க மண்ட கொதிக்கும். நாங்கள் பேயன்விசரணெண்ட மாதிரி எங்களுக்கு நோட்டீசுகளும் தந்துகொண்டு பிரச்சாரம் செய்துகொண்டு போவினம். பிறகு அதுகள படம்பிடிச்சு எல்லா செய்தித் தாபனங்களும் போடும். இதத்தான் பேய்ப்பட்டம் கட்டிறதெண்டு சொல்லுறது. அவைக்கு தமிழீழ காவல்துறை பாதுகாப்புக் குடுத்துக்கொண்டு போயிருக்காட்டி ஊர்வலங்கள் யாழ்ப்பாணம் போய்ச்சேந்திருக்குமெண்டது ஐமிச்சம்தான்.

பிறகு யாத்திரைகள் ஓஞ்சு போச்செண்டாலும், இப்பவும் தமிழருக்கு சமாதானத்தை வலியுறுத்தல் அல்லது போதித்தல் என்ற தொனியில்தான் செயற்பாடுகள் இருக்கின்றன.


நன்றி வன்னியன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)