Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு
#1
குமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட் - Wednesday, March 22, 2006



கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு

இது சட்டமன்றத் தேர்தல் நேரம். முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாம்பிளுக்காக சில முக்கியமான தொகுதிகளில் குமுதம் டீம் சர்வே நடத்தியது. மாதிரி வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் முன் நாம் வைத்த கேள்வி, யாருக்கு உங்கள் ஓட்டு? அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி மற்றவர்கள் இப்படி ஒரே ஒரு கேள்விதான். பதிலைக் கட்டத்துக்குள் சிம்பிளாக டிக் அடித்தால் போதும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வேயில், தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்களித்த மக்கள், இந்தமுறை சர்வேயின் முதல் ரவுண்டில் அ.தி.மு.க. கூட்டணியை முன்னிறுத்துகிறார்கள். சென்ற வருட ஜூலை மாத கருத்துக்கணிப்புக்கும் இப்போதைய கருத்துக் கணிப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மக்களின் மனது நிறையவே மாறியிருப்பது தெரிகிறது. இதோ, சர்வே டீமின் நேரடி அனுபவங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம்

சென்னையிலிருந்து கிளம்பிய டீம் முதலில் நுழைந்த மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதி. ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர். இப்போதைய எம்.எல்.ஏ., காங்கிரஸைச் சேர்ந்த யசோதா.

கடந்த சர்வேயில் காய்ந்து போயிருந்த தொகுதியில் இப்போது எங்கும் பசுமை !‘தண்ணீர் பிரச்னை இருக்கா?’ என்று கேட்டால், ‘‘இல்லீங்க!... ஆனா டிரைனேஜ் பிரச்னை இருக்கு. அஞ்சு வருஷத்துல கிட்டத்தட்ட நூறு பெட்டிஷன் போட்டாச்சு. எம்.எல்.ஏ. வையும் பார்த்தாச்சு. எதுவும் வேலைக்கு ஆகலே...’’ என்று ஆதங்கத்துடன் கூறினார், பத்தாவது வார்டு சுயேச்சை உறுப்பினர் அருள்ராஜ்.

குண்ணம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சர்வே நடத்தியபோது, நமக்கு ஆச்சரியம்! நூற்றுக்கணக்கான வீடுகளில் ஆரி என்கிற எம்ப்ராய்டரி வேலையை மக்கள் உற்சாகத்துடன் செய்து வருகிறார்கள். ‘அம்மா புண்ணியத்தில் குறையன்றும் இல்லை’’ என்கிறார்கள்.

அடுத்த தொகுதி உத்திரமேரூர். எம்.எல்.ஏ. ஜவுளித்துறை அமைச்சர் சோமசுந்தரம்.

5 கோடி செலவில் அய்யம்பேட்டை _ முத்தியால்பேட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம், உத்திரமேரூலிருந்து 4 கோடி செலவில் செய்யாறு குடிநீர்த் திட்டம் என்று சோமசுந்தரம் சில வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியிருந்தபோதும், தொகுதியில் குறைகளும் உண்டு. தென்னேரி பகுதியிலுள்ளவர்கள் தண்டுக்கரை தரைப்பாலம் கேட்டு முப்பது வருடமாகப் போராடியும் நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

உத்திரமேரூரில் வாக்களித்த சீனிவாசன் என்பவர் கூறும்போது, ‘‘Êதொகுதியில் வீரராகவ நூற்பாலை 1995_ல் மூடப்பட்டது. இதனால், நானூறு தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக நிற்கிறது. இதைத் திறப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.’’ என்றார்.

அடுத்த தொகுதி காஞ்சிபுரம். எம்.எல்.ஏ. மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.). இடைத்தேர்தலில் ஜெயித்து வந்தவர். ஒரு வருடத்தில் தொகுதிக்குப் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்ற குறை தொகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. ஆற்பாக்கம், களக்காட்டூர், குருவிமலை போன்ற பகுதிகளில் சரசரவென்று சர்வே சுறுசுறுப்பாய் நடந்தது.

அடுத்து காஞ்சிபுரம், சின்னகாஞ்சிபுரம் பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்துக் கொண்டு செங்கல்பட்டு தொகுதிக்குள் நுழைந்தோம். எம்.எல்.ஏ. ஆறுமுகம் (பா.ம.க.).

மகாபலிபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞர், ‘‘நான் தி.மு.க., போன தேர்தல்ல பா.ம.க.வுக்குத்தான் ஓட்டுப்போட்டேன். தொகுதிக்கு எதுவும் செய்யலை. இந்தத் தடவை கேப்டனுக்குத்தான் எங்க வீட்ல எல்லோரும் ஓட்டுப் போடப்போறோம். இந்த ரெண்டு கழகங்களையும் பார்த்து வெறுப்பாயிடுச்சி.... கேப்டன் பேசுறப்போ, எம்.ஜி.ஆர்.கிட்டே இருந்த துணிச்சலைப் பார்க்க முடியுது. அவரு கறுப்பு எம்.ஜி.ஆர்...’’ என்று விஜயகாந்த்தைப் புகழ்ந்து தள்ளினார்.

அடுத்ததாகக் கருத்துக் கணிப்புக் குழு விழுப்புரம் மாவட்டத்தில் நுழைந்தது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் தொகுதி திண்டிவனம். எம்.எல்.ஏ. கல்வி மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

பண்ருட்டி கந்தர்வக் கோட்டையிலிருந்து 15 கோடி ரூபாய் செலவில் திண்டிவனத்துக்குக் குடிநீர்த் திட்டம், பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த 1200 வருடம் பழமை வாய்ந்த ராஜாங்குளம் தூர் வாரப்பட்டது, 36 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திண்டிவனம் இந்திராணீஸ்வரர் கோயில் தேர் 22 லட்சரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் விடப்பட்டது என்றெல்லாம் அமைச்சரின் சாதனைகளாக அ.தி.மு.க.வினர் பட்டியல் வாசிக்கிறார்கள்.

கூட்டேரிப்பட்டு _ டிரங்க் ரோட்டில் அமைந்திருக்கும் முக்கியமான ஊர். அங்கு வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்த போது, சுமார் 60 வயதுள்ள பாட்டி கண்கலங்கச் சொன்ன வார்த்தைகள்... ‘‘ஐந்நூறு ரூபாய் நோட்டை இதுவரை நான் கண்ணால கூட பார்த்ததில்லே. அம்மா புண்ணியத்தால பார்த்துட்டேன். அந்த மவராசி நல்லா இருக்கணும்...’’ என்றார் நெகிழ்ச்சியாக. திண்டிவனம் தொகுதியை முடித்துக் கொண்டு, தேசிங்கு ராஜனின் ஊரான செஞ்சி தொகுதிக்குப் பறந்தது சர்வே வண்டி.

தொகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, வளர்ச்சிப் பணிகளோ எதுவும் நடைபெறவில்லை என்று குமுறுகிறார்கள் மக்கள். முக்கியமாக இவர்களின் ஏக்கம், ஊரில் ஒரு கல்லூரி வேண்டும் என்பதே. எம்.எல்.ஏ. அதி.மு.க.வைச் சேர்ந்த ஏழுமலை. ம.தி.மு.க. தங்களுடன் கூட்டணி சேர்ந்ததால் மிக உற்சாகமாக இருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

வல்லம், நாட்டார்மங்கலம், சேர்விளாகம், செஞ்சி பகுதிகளில் வாக்கெடுப்பை முடித்துக் கொண்டு, அடுத்து சர்வே டீம் சென்ற தொகுதி _ விழுப்புரம்.

தற்போதைய எம்.எல்.ஏ. பொன்முடி. அமைச்சராக இருந்தபோது, தொகுதியில் நடந்த வளர்ச்சிப் பணிகள் இப்போது இல்லை என்கிறார்கள் மக்கள்.

அடுத்து ரிஷிவந்தியம் தொகுதிக்குப் பயணமானது சர்வே டீம். காங்கிரஸைச் சேர்ந்த சிவராஜ் எம்.எல்.ஏ., இவர் மீது பெரிதாக புகார்களும் இல்லை; பாராட்டுகளும் இல்லை. தொகுதியில் பல பகுதிகளில், இவரைப் பார்க்கவே முடிவதில்லை என்கிறார்கள்... தொகுதியைச் சுற்றி வந்தபோது, மேடு பள்ள ரோடுகள் _ எம்.எல்.ஏ. வராதது இந்தச் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கத்தானோ என்னவோ?

ரிஷிவந்தியம் தொகுதியைச் சுற்றிலும் முன்னேற்றம் அடையாத கிராமங்கள் ஏராளம். அம்மா ப்ளஸ்டூ மாணவிகளுக்கு சைக்கிள் கொடுத்ததை நன்றியுடன் சொல்கிறார்கள்.

கடலூர் மாவட்டம்

பண்ருட்டி தொகுதி. எம்.எல்.ஏ. பா.ம.க.வைச் சேர்ந்த வேல்முருகன்.

லட்சுமிநாராயணபுரம் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஒரு தம்பதி. மனைவி அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க... கணவர் தி.மு.க.வுக்கு டிக் செய்யப் போனார். ‘‘வாங்கிய நிவாரணப் பணம் செரிமானம் ஆகலே... அதுக்குள்ளே அங்கே போடறியா? அம்மாவுக்குப் போடுய்யா...’’ என்று செல்லமாய் அதட்ட கணவரும் பவ்யமாய் அப்படியே செய்தார்.

அங்கிருந்து அடுத்த தொகுதி நெல்லிக்குப்பம். எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.சி.சம்பத். மந்திரியாக நியமிக்கப்பட்டு புதிய வீராணம் குடிநீர்த் திட்ட குளறுபடி காரணமாக பதவி பறிக்கப்பட்டவர்.

மந்திரியாக இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், மக்களிடம் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு பேட் இமேஜ்.

கடலூர் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி. இவர் மீது எந்தப் புகாரும் இல்லை. அதே நேரம் சுறுசுறுப்பு போதாது என்கிறார்கள். கடலூர் பழைய நகரம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு, அங்கிருந்து தேவனாம்பட்டினம் சென்றோம். சுனாமி பாதிக்கப்பட்ட சுவடுகளே தெரியாத அளவுக்கு மீண்டிருக்கிறது ஊர். சபாஷ்!

குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்டச் செயலாளர்.

பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்த போது, தொகுதிக்கு இவர் செய்த பணிகள்தான் கடந்த தேர்தலில் இவரைக் காப்பாற்றியது எனலாம். விஜயகாந்த் கட்சி தி.மு.க. வாக்குகளைப் பிரிப்பதால், தேர்தலில் தி.மு.க. போராடவே வேண்டியிருக்கும்.

விருத்தாசலம் தொகுதியின் எம்.எல்.ஏ. டாக்டர் கோவிந்தசாமி. டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர். தொகுதி மக்களின் பெரிய பிரச்னை மணிமுத்தாறு பாலம். பாலம் இருந்தபோது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதைச் சரியாகப் பராமரிக்கவில்லை. பாலம் இடிந்த பிறகோ, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் புதிய பாலம் கட்ட அவசரம் காட்டப்படவில்லை என்று புலம்புகிறார்கள்.

அடுத்து புவனகிரி தொகுதிக்குள் நுழைந்தோம். எம்.எல்.ஏ. அருள். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர், இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வால் ஆதரிக்கப்பட்டு ஜெயித்தவர்.

வளையமாதேவி, எறும்பூர், சேத்தியா தோப்பு பகுதிகளில் நமது சர்வே தொடர்ந்த போது, மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் வெள்ள நிவாரண உதவித் தொகை உடனடியாக வழங்கப்பட்டதாகக் கூறினார்கள் மக்கள்.

அடுத்து சிதம்பரம்.... தற்போதைய எம்.எல்.ஏ., தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன். கீரப்பாளையம், அண்ணாமலை நகர், கண்ணங்குடி போன்ற பகுதிகளில் வாக்கெடுப்பை முடித்துக் கொண்டு, கீழ்நத்தம் என்ற கிராமத்துக்குச் சென்றோம். பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸ§க்குள்ளேயும் நம் சர்வே நடந்தது.

ஒரு பெரியவர் கூறும்போது, ‘‘ஜெயிச்சவர்தான், அதுக்கப்புறம் எங்க ஊர்ப்பக்கம் எம்.எல்.ஏ. வரவேயில்லீங்க. நீங்க வந்தீங்களே ரோடு, அதுல மனுஷங்க வர முடியுமா? இந்த ஊர்ல 750 ஓட்டு இருக்கு. எல்லாம் ஜெயலலிதாம்மாவுக்குத்தான். வெள்ளத்துல எங்க பயிர்லாம் முழுகினப்போ அவங்க கொடுத்த இழப்பீட்டுத் தொகை கரெக்ட் டைமுக்கு வந்துச்சி. அப்புறம், மகளிர் சுய உதவிக்குழு இங்க ரொம்ப ஸ்ட்ராங். ஆறு குழு இருக்கு... ஒவ்வொண்ணுலேயும் இருபது பேர். கணக்குப் போட்டுக்குங்க...’’ என்ற பெரிசு, பேருந்து கிளம்பவே எகிறிப் பாய்ந்து ஃபுட்போர்டில் தொங்கினார். பார்த்து.... பெரீசு!

சுருக்கமாகச் சொன்னால், இந்த சர்வேயில் ஆட்சியின் சாதனைகள், வேதனைகள், வளர்ச்சித் திட்டங்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் சாதக, பாதகங்கள் என்று எதையும் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘அம்மா வெள்ள நிவாரணம் கொடுத்தாங்க... புள்ளைக்கு சைக்கிள் கொடுத்தாங்க.... பயிர் இழப்பீடு கொடுத்தாங்க...’ என்ற நன்றியும் நெகிழ்ச்சியும் கலந்த பாமரக் குரல்களைப் பலமாகக் கேட்க முடிந்தது.

கடந்த ஐந்தாண்டு ஆட்சிச் சாதனைக்காக அல்ல _ கடந்த ஒரே ஓர் ஆண்டு அணுகுமுறைக்காக நமது கருத்துக் கணிப்பில் கட்சி, ஜாதிகளை மறந்து மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிஜம்!

இந்தக் கருத்துக் கணிப்பில் நீங்கள் கவனித்திருப்பீர்கள். சில தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள் ஒருவேளை இந்த வித்தியாசத்தை மாற்றலாம்.

இன்னொரு விஷயம். ஜூலை மாத கருத்துக் கணிப்புகளில் கிடைத்ததை விட இந்த மாவட்டங்களில் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணியிலிருந்துதான் பிரிந்திருக்கின்றன. எனவே இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டுப் பிரிப்பு ஒரு முக்கிய சக்தியாக இருக்கப் போகிறது.

நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி. மாவட்ட மக்களின் நாடித் துடிப்பென்ன? அடுத்த வாரம்...

‘குமுதம்’ சர்வே முடிவுகள் குறித்து
அமைச்சர் சோமசுந்தரத்திடம் கேட்டோம்.

‘‘உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நெசவாளர்களுக்கு ஆண்டு முழுக்க வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். விவசாயி, நெசவாளர், மீனவர், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ மாணவிகள். இப்படி அனைவருக்கும் அம்மா வாரி வழங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற இன்னும் பல காரணங்களால், அம்மாவே தொடர்ந்து முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டதையே குமுதம் கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதிபலிக்கிறது!’’

சந்தோஷம் நன்றி!

சில தொகுதிகளில் கணிசமாக வாக்குகள் பெற்றது குறித்து விஜயகாந்திடம் பேசியபோது, ‘‘நடுத்தர, ஏழை, எளிய பாமர மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சந்தோஷம்.... அவங்களுக்கெல்லாம் என் நன்றி! அவங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன். ஏப்ரலில் வெளியிடப் போகும் எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்...’’ என்றார்.

‘குமுதம்’ சர்வே ரிசல்ட் பற்றி ஜி.கே.மணி (தலைவர், பா.ம.க.)

‘‘எங்கேயும் பா.ம.க.வின் வாக்குகள் குறையவில்லை. கூடுதலாகிதான் இருக்கிறது. முன்பு எங்களுக்கு ஷாதிக் கட்சி என்ற முத்திரை இருந்தது. இப்போது மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவதால், மற்ற ஷாதியினரின் ஆதரவும் எங்களுக்கு அதிகரித்துள்ளது.

இன்னும் ரெண்டு மாசத்தில் மாம்பழ சீஸன். இப்போ இன்னும் பூப்பூத்து பிஞ்சே விடலை. அதுக்குள் எவ்வளவு காய்க்கும்னு கணக்குச் சொல்றீங்க. கொஞ்சம் பொறுங்க. தேர்தல் வரட்டும். அப்போ, மாம்பழத்தின் விளைச்சலைப் பார்த்து உங்களுக்கே மலைப்பா இருக்கும்.’’ என்று சிரித்தவாறே கூறினார் மணி.
<img src='http://img238.imageshack.us/img238/9760/pg3a5vx.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/2412/pg3c4tf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/5631/pg3e7rj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/7601/pg3f1ad.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8941/pg3g7dq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/8292/pg3i0te.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/1345/pg3j5bb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/3806/pg3k3lg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/1083/pg3q2ua.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/1047/pg3o5zp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8906/pg3p9uv.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img238.imageshack.us/img238/4043/pg3s3ha.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img224.imageshack.us/img224/5699/pg3t3mu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/6629/pg3u2en.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img229.imageshack.us/img229/5861/pg3m3wl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img224.imageshack.us/img224/4008/pg3v1fx.jpg' border='0' alt='user posted image'>

நன்றி<குமுதம்
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)