'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை" என்பது ஈசனுடைய விதி!
(நக்கீரன் - கனடா)
<b>
'சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே, தோத்திரச் சண்டையிலே
ஆதியிலே, அபிமானித்(து) அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீ அழிதல் அழகல்ல"</b>
என சாதி, மதம், சமயம், சாத்திரம், தோத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி அலைந்து அலைந்து வீணே தமிழர்கள் அழிவதைக் கண்டு வடலூர் வள்ளலார் கழிவிரக்கப்படுகிறார். அவரது அறிவுரை இன்றுவரை யார் காதிலும் ஏறியதாகத் தெரியவில்லை.
<b>'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக..."
'நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளைவிளையாட்டே.."
'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்.."
'வேதநெறி ஆகமத்தின் நெறிபுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே....."</b>
வள்ளலார் வேத, ஆகம, இதிகாச, புராணங்களை முற்றும் முழுதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதில் அடங்கியுள்ள சூதுகளைக் கண்டறிய வேண்டும் என்று அடித்துச் சொன்னார். ஆனால் அவரது அறிவுரைகள் காற்றோடு காற்றாய் கரைந்து போய்விட்டன.
மற்ற இனத்தவர்கள் விழுந்தால் எழும்பி விடுகிறார்கள். இரண்டாவது மகாயுத்தத்தில் பாரிய உயிர் இழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் சந்தித்த ஜெர்மனியரும் யப்பானியரும் மீண்டும் எழுச்சி பெற்று இமயம் போல் உலக அரங்கில் எழுந்து நிற்கிறார்கள்! உலகின் பணக்கார நாடுகளில் ஜெர்மனியும் யப்பானும் முன்வரிசையில் நிற்கின்றன! தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
ஆனால் தமிழர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டார்கள். அப்படித் தப்பித் தவறி எழும்பினாலும் மீண்டும் அதே இடத்தில் விழுந்து விடுகிறார்கன்!
தமிழ்ச் சாதியின் நாடியை நன்கு பிடித்துப் பார்த்தவர் பாரதியார். தமிழ்ச் சாதியைப் பீடித்திருந்த நோயை நுட்பமாகக் கண்டறிந்தவர். நோய்க்கு மருந்து சொன்னவர். தமிழ்ச் சாதியில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளைப் பார்த்துக் கடும் கோபப்பட்டவர்.
'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான். நாள்தோறம் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்" என்கிறார்கள். ஆமடா விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை" என்பது ஈசனுடைய விதி. தமிழ்நாட்டிலே சாத்திரங்களில்லை. உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வாழ்கிறார்கள்." (பாரதியார் கட்டுரைகள்)
<b>சோதிடமும் மதமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோதிடர்கள் தோசம் இருக்கிறதாகச் சொல்லி கோயில்களில் சாந்தி செய்யுமாறு தோசகாரர்களை அங்கு அனுப்பி வைக்கிறார்கள். சோதிடர்கள் அனுப்பத் தவறியவர்களை கோயில்காரர்களே வானொலி, நாளிதழ்கள் வாயிலாக பயமுறுத்தி அழைக்கிறார்கள். கிரக தோசத்தால் இரண்டு பேர் காட்டிலும் மழை!</b>
மற்ற எந்த இனத்தவரையும்விட தமிழர்கள் சோதிட சாத்திரத்தின் மேல் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். திருமணம் மட்டுமல்ல மற்ற எந்த நல்ல காரியம் என்றாலும் பஞ்சாங்கம் பார்க்காமல் எதையும் செய்யும் துணிவு அவர்களிடம் இல்லை. கடை திறப்பு விழாவா? வீடு குடிபூரா? பிள்ளைக்கு சோறு ஊட்டலா? காது குத்தலா? எதற்கு எடுத்தாலும் இராகு காலம், அட்டமி நவமி, யம கண்டம், மரண யோகம் என நாளும் கோளும் பார்க்காமல் தமிழர்கள் அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டார்கள். பல்லி சொன்னால் போதும், எழுந்திருந்தவர் உட்கார்ந்து விடுவார். பூனை குறுக்கே போனால் சொல்லவே வேண்டாம். சகுனப் பிழை என்று சொல்லி பேசாமல் வீட்டில் இருந்து விடுவார்.
காலங்காலமாக சோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வளர்ந்து வருகிறதே ஒழிய குறைந்த பாட்டைக் காணோம்.
வணிக நோக்கோடு நடத்தப்படும் செய்தி ஏடுகள், கிழமை ஏடுகள் பாமர மக்களின் சோதிட மோகத்திற்கு நெய்யூற்றி அதனை மேலும் வளர்த்து வருகின்றன.
சோதிடம், இராசி பலன், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி, திருமணப் பொருத்தம், தோச சாந்தி, கேள்வி பதில் போன்றவற்றைத் தாங்கி வராத ஏடுகளே இன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.
கனடாவில் வெளிவரும் ஏடுகளில் 'இந்தவார இராசி பலன்" குறைந்தது இரண்டு பக்கங்களையாவது நிரப்பி விடுகிறது. அப்படி இடம் ஒதுக்காத ஏடுகளைப் பார்ப்பது மிக அரிது. 'முழக்கம்" 'உலகத் தமிழர்" போன்ற ஏடுகள் மட்டுமே இந்த விதிக்கு விலக்கு!
இணைய வலையம் வந்த பின்னர் சோதிடர்கள் வான வெளியிலும் கடை விரித்து விட்டார்கள். ஆயிரக்கணக்கான முழுநேர சோதிடர்கள் கவர்ச்சிகரமான முறையில் சாதகம் கணிப்பது, பலன் சொல்வது, பொருத்தம் பார்ப்பது, நினைத்த காரியம் சொல்வது, உடல்நலம், வேலை, வணிகம், பணம், பயணம் பற்றிய ஆலோசனை, தோசங்களுக்கு பரிகாரம், அதிட்டத்துக்கு தாயத்து, நவரத்தினக் கற்கள், மோதிரம், உருத்திராட்சம், யந்திரம் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். அல்லது மந்திரம், யந்திரம், தந்திரம், விரதம், செபம், தவம், சாந்தி, அர்ச்சனை, எள்ளெண்ணெய் சட்டி எரித்தல், அபிசேகம் போன்றவற்றை செய்யுமாறு சொல்கிறார்கள்.
சோதிடத்தோடு தொடர்புடைய எண்சாத்திரம், நாடி சாத்திரம், Tarot வாசிப்பு, அருள்வாக்கு (clairvoyance) போன்ற மூட நம்பிக்கைகளை மூலதனமாக வைத்துக்கொண்டு வாணிகம் செய்யும் பேர்வழிகளுக்கும் குறைவில்லை.
நான் வேண்டும் என்றே ஒரு அருள்வாக்குச் சொல்லும் ஒருவரோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எனது எதிர்காலம்பற்றிச் சொல்லுமாறு கேட்டேன். அவர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. அடுத்த வினாடி அவரிடம் இருந்து பதில் வந்தது. 'வேலுப்பிள்ளை (எனது முதல் பெயர்) நீங்கள் நம்ப மாட்டீர்கள்! உங்களைப்பற்றி இரவு கனவு கண்டேன். விடிய உங்கள் மின்னஞ்சல் வருகிறது. உங்களுக்கு இன்று முதல் நல்ல காலம் பிறந்திருக்கிறது. உங்களது அதிட்ட எண் 1, 3, 13. எதற்கும் விபரமான பலன் சொல்வதற்கு 50 டொலர்கள் அனுப்பி வையுங்கள்......."" நான் பதில் அனுப்பவில்லை. ஆனால் அவர் என்னை விட்டபாடில்லை. அதிட்ட தேவதை வீட்டுக் கதவைத் தட்டுவதைத் தனது அகக் கண்ணால் பார்க்க முடிகிறது என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து வெட்டிக் கொள்ளப் பெரிய பாடாகிவிட்டது.
சாதகம் கணித்தல், பலன் சொல்லுதல், நாடி பார்த்தல் போன்றவற்றுக்கு 50 முதல் 250 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறார்கள். தொழில், நிதி, உடல்நலம் பற்றிய கேள்வி ஒவ்வொன்றுக்கும் 10இல் இருந்து 50 டொலர் அறவிடுகிறார்கள். ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு சிங்கள சோதிடர் சாதக பலன் சொல்ல ரூபா 4,750 கேட்கிறார்.
வட அமெரிக்காவில் சோதிடம் பலகோடி டொலர்கள் புரளும் வணிகமாக விளங்குகிறது. பத்தாயிரத்துக்கும் அதிகமான முழு நேர சோதிடர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆண்டில் 2.2 கோடி சோதிடப் புத்தகங்கள் விற்பனையாகிறது. 1997இல் Life சஞ்சிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்களில் 47 விழுக்காட்டினர் சோதிடத்தை நம்புகிறார்களாம்.
அறிவியல்க் கண்டு பிடிப்பான கணனியின் வருகை சோதிடர்களின் உடல் உழைப்பைக் குறைத்து ஊதியத்தை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. சாதகம் கணிப்பது, பலன் சொல்வதற்கு ஏராளமான மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவருமே சோதிடத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். சோதிடத்துக்கு அறிவை மயக்கும் ஆற்றல் (சக்தி) இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக தமிழர்களது மூளை சலவை செய்யப்பட்டு அதற்குள் மூட நம்பிக்கைகளை மதமும், மதகுருமாரும் திணித்து விட்டதே.
யாருடைய வாழ்க்கையில்தான் துன்பம் இல்லை? தொல்லை இல்லை? ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பம் துன்பம், இடர் தளர், உயர்வு தாழ்வு, செல்வம் வறுமை, நன்மை தின்மை, ஏற்றம் இறக்கம் கலந்தே இருக்கிறது. இவை உலக நடை முறை.
'ஒரு வீட்டில் சாக்காட்டுப் பறையின் ஒலி. இன்னொரு வீட்டில் மணத்திற்குக் கொட்டும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை. ஒரு வீட்டில் காதலரோடு பூ அணிந்த மகளிர். இன்னொரு வீட்டில் காதலர் பிரிவால் கண்களில் நீர் நிறைந்த மகளிர். இவ்வுலக இயற்கை இது. இதன் இயல்பு உணர்ந்தோர் இனிய காண்க" (புறம் 194) என்கிறார் பல்குடுக்கை நன்கணியார் என்ற சங்க காலப் புலவர்.
'நன்றும் தீதும் பிறர்தர வாரா, சாதல் புதுவதன்று. வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று" (புறம் 192) என்கிறார் இன்னொரு புகழ்பெற்ற சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருள் சேரும். இன்னொரு நேரம் அது போகும். ஒரு குறிப்பிட்ட காலம் உடல் நலம் இருக்கும். முதுமையில், அது கெடும். இது இயற்கை.
மனிதர்கள் சோதிடத்தை நம்புவதற்கு அவர்களது பலவீனமான மனமே காரணியாகும். பலவீனமான மனம் பரம்பரை பரம்பரையாக மூளையில் திணிக்கப்பட்ட பழக்க வழக்கங்களை, கட்டுக் கதைகளை அவற்றின் உண்மை பொய்யை ஆராயாது எளிதில் நம்பி விடுகிறது. மனிதர்கள்-
(1) உளவியல் அடிப்படையில் தங்களைப்பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இந்த ஆசை இருக்கிறது.
(2) தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டி அறிய மிகவும் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு பிரம்மா அல்லது படைத்தவன் ஏதோ ஒரு 'பெரிய திட்டம்" (grand design) ஒன்;றை தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பதாக நினைக்கிறார்கள்.
(3) 'அற்புதங்களை" அப்படியே நம்பி விடுகிறார்கள். அறிவியலை அப்படி நம்புவதில்லை. பிள்ளையார் பால் குடிக்கிறார், யேசுநாதர் அறையப்பட்ட சிலுவையில் இருந்து இரத்தம் வடிகிறது, சாயி பாபா படத்தில் இருந்து திருநீறு கொட்டுகிறது என்றால் வாயைப் பிளப்பார்கள். வானவியலாளர்கள் நெடுந்தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தை சுற்றி பூமியைப் போன்ற கிரகங்கள் வலம் வருகின்றன எனச் சொன்னால் அதையிட்டு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அறுபதினாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்கு மிக அருகில் வந்த செவ்வாயை எத்தனை பேர் பார்த்தார்கள்?
(4) மனிதர்கள் தாங்கள் நினைத்தது நடப்பதை விரும்புகிறார்கள். காலையில் கண் விழித்தவுடன் 'இன்று நாள் நல்லாக இருக்காது, ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது" என்று நினைத்தால் அப்படி யே நடக்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். சென்ற கிழமை சோதிடப் பலனைப் பார்த்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோதிடர் ஜெயவேல் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு. தனது சாவின் மூலம் சோதிடத்தை 'மெய்ப்பித்து" விட்டார்!
(5) மற்றவர்கள் சொல்வதை எளிதில் ஒப்புக் கொண்டுவிடுகிறார்கள். 'இன்று உனக்கு நேரம் சரியில்லை" என்று மற்றவர்கள் சொன்னால் அது சரி போலத் தோன்றும்.
(6) தங்களுக்குத் தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுகளை (coincidences) நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். மற்றதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். குடை கொண்டு வராத நாட்களில் மழை பெய்தது நினைவில் நிற்கிறது. குடை கொண்டுவந்த நாட்களில் மழை பெய்தது மறந்து போய்விடுகிறது.
(7) ஒவ்வொருவரும் தங்கள் சிக்கல்கள் தங்கள் வாழ்க்கை நிலைமை தனித்துவமானது என்று நினைக்கிறார்கள்.
(8) மற்றவர்கள் கொடுக்கும் ஆரவாரமான வாக்குறுதிகளை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
(9) சிக்கலான விடயங்களுக்கு சுலபமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாடங்களை பாடுபட்டுப் படித்துத் தேர்வு எழுதுவதற்குப் பதில் 'கொப்பி" அடித்துச் சித்திபெற முடியுமென்றால் அப்படிச் செய்ய விரும்புவார்கள்.
பின்;வரும் சோதிடப் பலனைப் படித்துப் பாருங்கள். அது உங்களுக்கு பொருந்தி வருவது போன்ற மயக்கம் ஏற்படும்.
'உங்கள் மனசு கள்ளமில்லாத வெள்ளை மனசு. ஆனால் யாரையும் நீங்கள் எளிதில் நம்பி விட மாட்டீர்கள்.
நண்பர்களோடு சேர்ந்து கும்மாளம் அடிப்பீர்கள். அதே நேரம் தனிமையில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கும்.
நீங்கள் முற்கோபக்காரர். ஆனால் அடுத்த கணம் 'ஐஸ்" மாதிரி குளிர்ந்து விடுவீர்கள்.
உங்களுக்கு எதையும் ஒளித்து வைக்கத் தெரியாது. அதே சமயம் எல்லா இரகசியங்கனையும் உங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
உங்கள் கை ஓட்டைக் கை. நீங்கள் எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் நாலு காசு மிஞ்சாது.
நீங்கள் புதிதாகத் தொடங்கும் தொழிலில் நட்டம் அடைவீர்கள். ஆனால் இருக்கிற தொழில்களில் இரட்டிப்பு இலாபம் பெறுவீர்கள்.
உங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணம் உங்கள் மன நிலையைப் பாதிக்கும்.
உங்கள் மனைவியோடு சண்டை போடுவீர்கள். ஆனால் பின்னர் சமாதானம் ஆகிவிடுவீர்கள்.
பழைய கடன் திரும்பி வரும். ஆனால் கோட்டுப்படிகளில் ஏறி இறங்க வேண்டிவரும்.
உங்களுக்கு இனிப்புச் சாப்பாடு பிடிக்கும். பாலை சுடச் சுடக் குடிப்பீர்கள்.
கடந்த ஆறு மாதங்களாக உங்களது கிரகங்களின் நிலை சரியில்லை. அதனால் உங்களுக்கு ஒரே மன உளைச்சல். அலைச்சல். அடுத்த மாத நடுப்பகுதியில் நவநாயகர்களின் தலைவனான சூரியன் உச்சம் பெறுகிறார். அங்காரகன் (செவ்வாய்) ஆட்சி செய்கிறார். வியாழபகவான் கடக இராசி 5ஆம் பாகையில் பரம உச்சம் பெறுகிறார். சனியோ நீச்சம் அடைகிறார். உங்களுக்கு யோக காலம் பிறக்கிறது.
http://www.tamilnatham.com/astro/Astrology250903.htm