Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இரண்டுங்கெட்டான்கள்
#1
நடுத்தர இனம் - என்ன செய்யும்?

மா.பா. குருசாமி

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.

மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும்.

மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுவதை நாம் மறந்துவிட முடியாது. இப்படி மக்களைப் பிரிக்கச் சரியான வரையறையும், தெளிவான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லை. இருந்தாலும் சில அடிப்படை உண்மைகளை உணர, அறிய இந்தப் பகுப்புத் தேவை.

இன்றைய சூழலில் நமது நாட்டில் மேல்தட்டு மக்களாக யாரைக் கருதலாம்? இலட்சக்கணக்கில் மாத வருவாயும், கோடிக்கணக்கில் சொத்துகளும் வைத்திருப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்றால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இப்பிரிவில் அடங்குவர். இவர்களை உயர் - மேல் மட்டத்தினர் என்று கருதலாம். பொதுவாக, சொந்தமாகத் தொழில் செய்து அல்லது உயர் பதவியிலிருந்து, மாதம் ஐம்பதினாயிரத்திற்கு மேல் வருவாய் பெற்று இலட்சக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்கும் குடும்பத்தினரை மேல் மட்டத்தினராகக் கருதினால், மொத்தத்தில் சுமார் 20 சதவிகிதம் பேர் இப்பிரிவில் வரலாம். இது ஓர் ஊகம் தான்.

இதற்கு அடுத்த நிலையிலுள்ள நடுத்தர இன மக்களின் மேல் வரம்பையும் அடித்தள நிலையையும் வரையறுப்பது, இன்னும் சிக்கலான பணியாகும். பொதுவாக ஒரு குடும்பத்தில் சராசரி ஓராளுக்கு மாத வருவாய் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெறுபவர்களை நடுத்தர இனத்தவரென்றால், இவர்களையும் சுமார் ஐயாயிரம் வருவாய்க்கு மேல் பெறுபவர்களை மேல்மட்ட நடுத்தர மக்களென்றும், அதற்குக் கீழ் வருவாய் பெறுபவர்களை கீழ்நிலை நடுத்தர மக்களென்றும் பகுக்கலாம். இவர்கள் ஒருவேளை மொத்தத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் இருக்கலாம்.

மீதி 40 சதவிகிதத்தினரை அடிநிலை மக்கள் என்றால், இவர்களில் 25 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். 15 சதவிகிதத்தினர் அடிப்படைத் தேவைகள் ஓரளவு கிடைக்க வாழ்பவர்கள். இந்த அடிநிலை மக்களிடம் அரசியலில் கட்சி ஈடுபாடு இருக்கின்றது. இன்றைய நிலையில் இவர்கள் தான் `வாக்கு வங்கிகளாக'ச் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமங்களிலும், நகரக் குடிசைப் பகுதிகளிலும் வாழ்பவர்கள்.

மொத்தத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில் வாழ்பவர்கள். இவர்கள் படித்தவர்கள். அரசுப் பணிகளில், தனியார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். வணிகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளர்களாக இருப்பார்கள்.

நடுத்தர மக்களிடம் வாழ்க்கை விழிப்புணர்வு இருக்கும். இவர்களில் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர்கள், மேலும் முனைப்போடு மேலே வர முயல்வார்கள். நடுத்தர மக்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் மேல் மட்டத்திற்கு வர பல்வேறு வழிகளை மேற்கொள்வார்கள்.

பல இடங்களில், அலுவலகங்களில், சங்கங்களில், அமைப்புகளில் நடுத்தர மக்கள் தான் இலைமறைகாயாக பெருஞ்சக்தியாக விளங்குவார்கள். இவர்கள் `மூளையர்கள்' என்பதால் மறைமுகமாக காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.

பேராசிரியர் க.ப. அறவாணன் தமிழர்களை அப்பாவித் தமிழர்கள், பாவித் தமிழர்கள் என்று பிரிப்பார். இந்தப் பாவித் தமிழர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சமுதாயத்தில் இலஞ்சம், வரதட்சணை, மதுப்பழக்கம், ஆடம்பரம், நுகர்வுக் கலாசாரம், கடன் கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர்கள் இவர்களே. சாதிச் சங்கங்கள், மதக் கட்சிகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் உந்து சக்திகளாக இருப்பவர்கள் இவர்களே.

இந்த நடுத்தர மக்கள் தங்களிடமிருக்கும் தன்னலத்தை ஓரளவு விட்டுக் கொடுத்து, சமுதாய உணர்வோடு செயல்பட்டால் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களிடமிருக்கும் பெருங்குறைதான் தனது குடும்பம், சுற்றம், சாதி, மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான். இவர்களிடம் இறை நம்பிக்கை இருக்கும். கொள்கை பேசுவார்கள். ஆனால், தேவை என்றால் மேலே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள். எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். நன்றாக, வசதியாக வாழ மகிழ்ச்சியோடு அடிமைகளாக இருப்பார்கள்.

இன்றையச் சூழலில் நமது சமுதாயம் மாற வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் இந்த நடுத்தர மக்கள் எழுச்சி பெற்றவர்களாக, சீர்திருத்தச் சிந்தனையாளர்களாகச் செயல்பட வேண்டும்.

நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்; துலங்கும்.

நாம் விடுதலைப் போரில் ஈடுபட்டபொழுது காந்தியடிகளின் பின்னால் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் சத்தியாக்கிரகிகளாக, நிர்மாணத் திட்ட ஊழியர்களாக, தொண்டர்களாகச் செயல்பட்டபொழுது மக்கள் சக்தி உருவானது. அன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர மக்கள் அல்லவா?

விடுதலைக்குப் பின் நடந்திருக்கின்ற அரசியல் ஆட்சி மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். நடுத்தர மக்களால் மேல்மட்ட மக்களையும் கீழ்மட்ட மக்களையும் இணைக்க முடியும். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.

இன்றுள்ள நமது நாட்டு குழப்பமான அரசியல், பொருளாதார சூழலில் எந்தப் புரட்சிகரமான மாற்றமும் ஏற்படாது. நமது நடுத்தர இனம், மக்களின் உணர்வுகளை மனமாற்றம் செய்துவிடும். சிக்கல்களைப் பட்டியலிடுவார்கள். தீர்வு காண மாட்டார்கள். இந்நிலை தொடர்ந்தால் வன்முறைகள் பெருகிக் கொண்டு போகும். நடுத்தர இனமும் அமைதியாக வாழ முடியாது.

நடுத்தர மக்களிடம் உண்மையான சமுதாய விழிப்புணர்வு தேவை. சாதி, சமயம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும். லஞ்சம், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்கவும் சுதேசி மனப்பான்மையோடு நமது நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் தங்கள் அளவில் தீமைக்குத் துணை போகாமல் இருக்கவும், தேர்தல் காலங்களில் நல்லவர்களுக்கு வாக்களிக்கவும் உள்ள உறுதியோடு செயல்பட்டால் ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.

நம்மைச் சுற்றி சமுதாயச் சீர்கேடுகள் மலிந்திருக்க நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியாது. சாக்கடை, தெருவின் நடுவில் ஓடுமானால் கொசுக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது.

மதில்மேல் பூனையாய், இரண்டுங்கெட்டானாக நடுத்தர இனம் இருக்கக் கூடாது. இருக்கின்ற நிலையில் தெளிந்த அறிவோடு, உறுதியாக நாட்டு நலநோக்கில் நடுத்தர இனம் செயல்பட்டால், விரைவிலேயே நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம்.

-தினமணி-

--------------------------------------------------------------------------------
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm
Reply
#2
நல்ல ஒரு ஆக்கம் பிரசுரித்தமைக்கு நன்றி.
"To think freely is great
To think correctly is greater"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)