Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிஜப் போரை வலிந்திழுக்கும் நிழல் யுத்தம்
#1
ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை.

கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இதில் குறிப்பாகக் கருணாகுழு, முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்குழு தொடர்பாகவும் சுட்டிக் காட்டியிருந்தனர்.

ஆனால் இதுவரை ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக படை ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், கப்பம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. அவை மாத்திரமின்றி விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கு இழுக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனெனில் ஜெனீவாப் போச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ளாத வகையில் வன்முறைகளை மேற்கொள்வதே சிங்களப்படைத் தரப்பினரது பிரதான நோக்கமாகும்.

இரண்டாம் சுற்று பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெறுமாகவிருந்தால் இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்கள் எதனையும் அமுல்படுத்தாதுள்ள சிங்கள அரசு இக்கட்டில் மாட்டநேரிடும். அதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை நடத்துவதன் மூலம் இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கலாம் என அரச தரப்பு கருதுகிறது.

அண்மையில் திருமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் இதன் வெளிப்பாடுதான். திருமலை மூதூர் கிழக்குக் கரையோரக் கிராமங்கள் மீது இரு நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். இச் சம்பவத்தில் பொதுமக்கள் காயப்பட்டு வீடுகள் சேதமடைந்த போதிலும் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. போர் நிறுத்தத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் பதில்த் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தப்பித்தவறி விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிரான பதில் நடவடிக்கையிலீடுபட்டிருந்தால் இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை மார்ச் 23ம் திகதி இரவு திருமலை பூநகர் காவலரண் மீது சிறிலங்கா ஒட்டுக்குழுக்கள் மற்றும் படைப்புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் தேசிய துணைப்படை வீரரான 2ம் லெப். குயிலன் வீரச்சாவடைந்தார். மற்றும் இரு போராளிகள் காயம் அடைந்துள்ளனர். தாக்குதலை நடத்தியோர் மகிந்தபுரம் படைமுகாம் பகுதியிலிருந்து வந்தே தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டு விடயத்தை விடுதலைப்புலிகள் சுட்டிக்காட்டிய போதும் ஒட்டுக்குழுக்கள் எவையும் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கவில்லை என்று திரும்பத் திரும்ப சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்றது.

சிறிலங்கா படைத்தளபதியான சரத்பொன்சேகா எந்த ஒரு ஒட்டுக்குழுவும் படையினருடன் சேர்ந்தியங்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்களுக்கு பின்னரே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழுவினரின் கெடுபிடிகள், வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. அது மாத்திரமன்றி மட்டக்களப்பு நகரில் படையினரின் பாதுகாப்பு வலயப் பிரதேசமான கோவிந்தன் வீதியில் கருணாகுழு முகாமுள்ளது. இது உண்மையில் சரத்பொன்சேகாவுக்குத் தெரியாத விடயமா?

அண்மை நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தல், பொது மக்கள் கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. மட்டக்களப்பு நகரில் கருணாகுழு நடமாட்டங்கள் அதிகரித்து இருக்கின்றது. அண்மையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்ட கறுவாக்கேணியைச் சேர்ந்த குலதுங்க ரெஜிக்காந் (26) என்ற இளைஞர் வெள்ளை வானில் சென்ற கருணா குழு உறுப்பினர்களால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித மேம்பாட்டுக்கு எதிராக செயற்படும் ஒட்டுக்குழுக்களின் நிழல் யுத்தம் தீவிரமடைந்துள்ளது.

இச்சம்பவங்களின் உள் நோக்கம் விடுதலைப் புலிகளை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்குப் போகாமல் செய்வதற்கான சூழலை உருவாக்குவதுதான். ஒட்டுக்குழுக்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் உள்ளனர் என்பது குறித்து ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் ஆதாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். எங்கெங்கே முகாமுள்ளது. எந்தெந்த படைத்தளபதிகள் தொடர்பு வைத்திருக்கின்றனர் போன்ற பல்வேறு விடயங்களையும் அறிக்கையாக சமர்ப்பித்திருந்தனர்.

இதேவேளை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் கூட துணை இராணுவக்குழுக்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இயங்குகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் படைத் தரப்பு இன்னும் இவ்விடயத்தை ஒத்துக் கொள்ளவில்லை. கருணா குழு உட்பட ஆயுதக் குழுக்கள் படைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்ட போதும், அரச தரப்பும், படையினரும் எந்தவொரு ஒட்டுக்குழுவுமில்லை எனத் திரும்பத் திரும்ப கூறுவது சிங்கள அரசின் கபடத்தனத்தை வெளிப்படையாகக் கோடு காட்டுகின்றன.

எவ்வாறுதான் சிங்கள தேசம் உண்மைகளை மூடி மறைத்தாலும், ஒட்டுக் குழுவினரை வைத்து சிறிலங்கா அரசு சமாதான சூழலை சீர்குலைத்து வருகின்றது என்ற உண்மையை சர்வதேச சமூகம் புரிந்து விட்டது. நிலமைகளை மிக அவதானமாக அவதானித்து வருகின்றனர். அண்மையில் கற்பிட்டிக் கடலில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் டோராப் படகு விபத்தையடுத்து கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

அந்த அறிக்கையில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசு இனியும் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது என காட்டமான அறிக்கை ஒன்றை விட்டிருந்தது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் ஆயுதக்குழுவுள்ளனர் என்பதை கண்காணிப்புக் குழு மீளவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயத்தை சிறிலங்கா அரசு அவசர அவசரமாக மறுத்துரைத்துள்ளது. ஒரே பல்லவியை அதாவது எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் இல்லை என திரும்பத் திரும்பக் கூறுவதால் அவர்கள்தான் பொய்யர்களாக வேண்டிய நிலைமை ஏற்படுமே தவிர சிறிலங்கா அரசின் கருத்தை எவரும் ஏற்கும் நிலையிலில்லை. இதேவேளை வடக்கில் நடைபெற்ற நிகழ்வை நோக்குவோம்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 18வது ஆண்டு நினைவை முன்னிட்டு யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நடைபெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றுவதற்குப் படையினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருந்ததுடன் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அன்னை பூபதியின் திருவுருவப் படத்தையும் அடித்து நொறுக்கி துவசம் செய்திருந்தனர்.

இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால். மக்களையும் விடுதலைப் புலிகளையும், ஏதோ ஒரு வகையில் ஆத் திரத்தையூட்டி இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகளை செல்லவிடக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் நோக்குமிடத்து இரண்டாம் சுற்று ஜெனீவாப் பேச்சுக்கு முன்னதாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு இராணுவக் கெடுபிடிகள், ஆட்கடத்தல்கள் என்பன நிறுத்தப்பட்டு இயல்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் நிலமை அவ்வாறு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை. போர் பதட்டமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் மட்டக்களப்பு அம்பறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை மீண்டும் தமது நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்திருக்கிறது.

ஏனெனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்தாத சிறிலங்கா அரசு இராணுவ வன்முறைகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்ட சூழலில்தான் பொங்கி எழும் மக்கள் படை வடக்கிலும், கிழக்கிலும் படையினருக்கு எதிராகவும், ஒட்டுக்குழுக்களுக்கு எதிராகவும், தமது தாக்குதல் நடவ டிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், ஜெனீவாவில் இரு தரப்புப் பேச்சுக்கான உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பொங்கி எழும் மக்கள்படை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தனர்.

ஆனால், ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே பொங்கி எழும் மக்கள் படை தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் எந்த நேரத்திலும் பொங்கி எழும் மக்கள் படை தமது நடவடிக்கையை ஆரம்பிக்கலாம். எனவே சிறிலங்கா அரசு நிழல் யுத்தமொன்றை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இவை நிஜப் போரை வலிந்திழுக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

அஸ்வதன்
மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)