Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊடகங்களுக்கான அறிக்கை.
#1
கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியிலுள்ள சுடரொளி பத்திரிகை தலைமை அலுவலகத்தின் மீது 29-08-2005 மாலை 6.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ள கைக்குண்டுத் தாக்குதல்களை இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை பகிரங்கமாக் கோருகின்றது. இத்தாக்குதல் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசாங்கத்தை அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலேயே தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் எவ்வகையிலும் பயன்படுத்தப்படாமல், அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதற்கே இது பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சுடரொளி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்டுள்ள ஒரு கடுமையான எச்சரிக்கையாகவே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகத்துறை மீதும் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் உச்ச கட்டமாக இத்தாக்குதலைக் கருதலாம். இந்த நிலையிலாவது இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனில் நிலைமைகள் மோசமடைந்து செல்லலாம் எனக் கருதுகின்றோம். கடந்த காலங்களில் தமிழ் ஊடகத்துறை நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படாததால்தான் நிலைமைகள் இந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதையும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

இலங்கையின் இனநெருக்கடியைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தமிழ்த் தேசியக் குரலாக சுடரொளி வெளிவருவதையிட்டு சிங்களக் கடுங்கோட்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார்கள். மூன்று தினங்களுக்கு முன்னர் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, சுடரொளி விடுதலைப் புலிகளுடைய பத்திரிகை என்று கடுமையான தொனியில் குற்றஞ்சாட்டியிருந்தார். சில ஊடக நிறுவனங்கள் ~பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவையாகவும்|, வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியிலே சுடரொளி மீது இரண்டு சக்திவாய்ந்த கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

அனைத்து அரசியல் சக்திகளும் ஆயுதக் குழுக்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களையிட்டு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஜனநாயகத்தையும், ஆரோக்கியமான ஊடக சுதந்திரத்தையும் இதன் மூலமாகவே பாதுகாக்க முடியும். தமக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் நிறுவனங்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம். இதன் மூலம் மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பூட்டுப்போட குறிப்பிட்ட சில சக்திகள் முற்பட்டிருப்பதைத்தான் இத்தாக்குதலின் மூலமாக நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

வெள்ளவத்தையிலுள்ள சுடரொளி கிளை அலுவலகத்தின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வார காலப்பகுதியிலேயே இத்தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனைவிட சுடரொளி ஊடகவியலாளர் ஒருவர் ஜே.வி.பி. உறுப்பினர்களால் கடைமை நேரத்தின்போது கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இத்தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் துரித விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகச் சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். இதனைச் செய்வதில் காணப்படக் கூடிய அரசாங்கத்தின் இயலாமை இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடர்வதற்கு வழிவகுப்பதாக அமையும் என்றே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது. அதேவேளையில் தமிழ் ஊடகத்துறை மீது நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்கள் நாளை சிங்கள ஊடகத்துறை மீதும் கட்டவிழ்த்து விடப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
Reply
#2
இதில் குறிப்பிடக்கூடியது என்னவெண்றால் தமிழரே சிங்களப் பிரதேசத்தில் உங்களுக்கு என்ன வேலை பேசாமல் உங்கள் தமிழீழ பகுதிக்குச் செல்லுங்கள் என்று சிங்களவன் சொல்லாமல் சொல்கிறான். இதன் மூலம் இலங்கையில் சிங்களப் பிரதேசம் என்ற ஒன்றும் தமிழ்ப் பிரதேசம் தமிழீழம் என்ற ஒன்றும் இருக்கிறது என்பதை சிங்களவன் ஒத்துக்கொள்கிறான்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)