http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm பொதுவுடைமைத் தத்துவங்களை சினிமாவில் வெளிக் கொணர்ந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கனிவுமதி
கவிஞர் ஒருவர் தன் நண்பரோடு பேருந்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வேகமாக சென்ற வண்டி சிறிது மெதுவாகப் போக ஆரம்பித்தது. ரோட்டை எட்டிப் பார்த்த கவிஞர் "என்ன செங்கொடி தெரிகிறது?" என்று தன் நண்பரிடம் கேட்டார். அதற்கு நண்பரும் ரோட்டை பார்த்துவிட்டு "தண்ணீர் குழாய் பழுது பார்ப்பதற்காகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அதற்காக எச்சரிக்கை செய்யும் முறையில் அபாயக் கொடி போட்டிருக்கிறார்கள்" என்று கவிஞரைப் பார்த்து சொன்னார். அதைக் கேட்ட கவிஞர் "ஓஹோ... ஏற்றத்தாழ்வு எங்குண்டோ அங்கெல்லம் இந்தக் கொடி உயர்ந்து விடும் போலிருக்கிறது" என்று கூறி சிரித்தாராம். ஆனால், கவிஞர் சொன்னது நண்பரை வெகுநேரம் சிந்திக்க வைத்துவிட்டது. ஆம், எவ்வளவு கருத்தாழமான வசனம். இந்தக் கருத்தினை சொன்னவர் வேறுயாருமில்லை நம் நெஞ்சவயலெங்கும் நிறைந்த; நிலைத்த `மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தான்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ்க் கவிதைகள் இன்றும் நம் முன்னோரின் வாழ்வியல் முறைகளை எண்ணிப் பார்த்து இன்புறத்தக்க கருத்துக் கருவூலங்களாக உள்ளன. நம் நாகரிக வளர்ச்சியின்- சமுதாய அமைப்பின் பல்வேறு பரிணாமங்களை, அகம்- புறம் எனப் பிரித்து அற்புதமான பாடல்களைச் சங்கப் புலவர்கள் யாத்துள்ளனர். அவர்களுள்ளும் நால்வர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் மற்றும் கண்ணதாசன். இந்நால்வருள் பாரதியைத் தவிர்த்து மற்ற மூவரும் ஓரளவில் சமகாலச் சந்திப்புக்கு உரியவர்களே.
ஆனாலும், முற்போக்குக் கவிஞன் பாரதியின் தாக்கம் மற்ற மூவரிடமும் உண்டு. `சுப்புரத்தினம்' என்கிற தன் பெயரை `பாரதிதாசன்' என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்குப் புரட்சிக் கவிஞரிடம் பாரதியின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. பாரதியைப் பட்டுக்கோட்டையார் நேரில் சந்திக்கும் வாய்ப்பை வரலாறு தரவில்லை. பாரதி 1921 இல் மறைந்தார். பட்டுக்கோட்டையாரோ 1930 ஆம் ஆண்டு தோன்றினார். இருப்பினும், பீடுமிக்க கவிஞர்களை எந்தக் கால இடைவெளிகளும் பிரிப்பதில்லை.
... பாரதிக்கு நிகர் பாரதியே- மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்...( பாரதிக்கு நிகர்)
இதேபோல் தன் குருவான புரட்சிக் கவி பாரதிதாசனுக்குப் பாமாலை சூட்டவந்த பட்டுக்கோட்டையார்;
...நல்ல குடும்பம் ஒரு
பல்கலைக்கழகம் என்றும்
தெள்ளு தமிழ்க் கவிஞன்
தெளிவுரை சொன்னதுண்டு...
பட்டுக்கோட்டையாரின் திரை உலகப் பிரவேசத்திற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் செய்த உதவியைப் பார்ப்போம். அதாவது, மாடர்ன் தியேட்டரில் கதை, வசனம், பாடல்கள் ஆகிய பணிகளை ஏற்றுக் கொண்டிருந்த பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்று பாடல் எழுதப்பழக்கினாராம். அச்சமயம், மாடர்ன் தியேட்டர் நிறுவனத்துடன் பாரதிதாசனுக்கு ஏற்பட்ட பிண க்கின் காரணமாக அதை விட்டு விலகி வெளியேறியபோது, அவருடனே, கல்யாண சுந்தரமும் புறப்படத் தயாரானார். அப்போது பாரதிதாசன் தன் சீடரான பட்டுக்கோட்டையாரைத் தட்டிக் கொடுத்து, "நீ முன்னேற வேண்டியவன், பொறுத்துக் கொண்டு இங்கேயே இரு" என்று அறிவுரை வழங்கினாராம்.
முறையான பள்ளிப் படிப்பு ஏதுமில்லா நிலையில், தஞ்சை தரணியில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள செங்கப்படுத்தான் காடு என்ற ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில், மிகவும் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் அருணாசலம் பிள்ளை - விசாலாட்சி தம்பதியினருக்கு 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதியன்று கல்யாண சுந்தரம் பிறந்ததார். அவரது தந்தை அருணாசலம் பிள்ளை, சிறந்த நாட்டுப் புறக் கவிஞராகப் புகழ் பெற்றவர். கவிதை எழுதத் தொடங்கிய நிகழ்வுகளைப் பட்டுக்கோட்டையாரே இவ்வாறு நினைவு கூருகிறார்.
"நான் கவிதை எழுத ஆரம்பிக்கு முன் பறவை, மிருக, தாவர இனங்களைக் கண்டு ரசிப்பேன். விளைவதற்ற தரிசு நிலங்களை எனக்குப் பிடிக்காது. அதுபோல் அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை என்றே எண்ணுகிறேன்" என்று பாட்டு பிறந்த விதம்' என்ற தான் கட்டுரையில் பட்டுக்கோட்டையார் நினைவு கூருகிறார். இத்தோடு தன் படைப்பிற்காக உந்துதல்களைப் பட்டுக்கோட்டையாரே உரையிட்டு விளக்குகிறார்.
"நான் நன்றாகப் பழகிய என்னுடைய அனுபவவாயிலாகக் கண்ட நண்பர்களின் நடைமுறைகளை ஆதாரமாக வைத்துக் கவிதை எழுதுவேன். அரை வயிற்றுக் கஞ்சி குடித்தாலும், முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு இவற்றை கை விடாமல் வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள் நாம் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி, மனங் கொண்டது மாளிகையாக, மரத்தடியே வீடாக வாழும் மக்களைப் பற்றி என் உள்ளம் அதிகமாக ஆராயும் தகுதியை பெற்றிருக்கிறது. அழகிய பூங்காவிலும், பெருங்காடுகளிலும் வயல்வெளிகளிலும் வாழும் பறவையினங்களும் என் மனதைக் கவருவதுண்டு. அவை இரை தேடி வந்து தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு மெய்மறந்து ரசிப்பேன். அவை கொஞ்சிக் குலவிக் கத்தும் ஒலிகள் தான், எந்த வாத்தியத்தி