Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'
#1
<b>சோளகர் தொட்டி என்னும் நாவல் தொடர்பாக டிசே எழுதிய பதிவு இது. வீரப்பனை பிடிக்கப் போன அதிரடிப்படையினரின் அட்டகாசங்களை புட்டு வைக்கிறது இந்த நாவல் என்கிறார். நெஞ்சை உருக்கும் இந்த நாவலை நீங்கள் யாரேனும் வாசித்திருக்கிறீர்களா.. வாசித்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்களேன்..</b>
(1)
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.

"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.

"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.

அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.

உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.

ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்

"எங்கேடா வீரப்பன்? சொல்லு"

அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.

அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.

"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.

அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.

கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.

"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.
"தெரியாதுங்க"
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.

"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.
(ப204-206)

அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.

"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.
'வா வெளியே" என்றான்.

மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.

வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.

மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.

சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.

நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.
(ப208)

(2)
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.

இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.

இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.

(3)

ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.

இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.

வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.
Reply
#2
நல்ல பதிவு.
நன்றி இவோன்.
அதுசரி இங்க போடுறதில பிரச்சினையொண்டும் இல்லையே?
Reply
#3
நன்றிகள் இவோன்
Reply
#4
பிரச்சனை எதவும் இல்லையென்று தான் நினைக்கின்றென். இந்த புத்தகம் குறித்து இன்னுமொருவரின்(பினாத்தல் சுரேஸ்) பார்வை இது..

சோளகர் தொட்டி - ச பாலமுருகன் (24Oct05)
ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் மனநிலை மாற்றமே என்னைப் பொறுத்தவரை அதன் தரத்தின் அளவுகோலாக இருந்தது - நேற்று வரை.

கடைசிப்பக்கத்துக்காக ஆவலுடன் காத்திருந்து, முடிந்தவுடன் "அப்பாடா" என்று விரல்களுக்கு விடுதலை கொடுக்க வைக்கும் சாதாரண நாவல்கள்..
பக்கங்கள் தீர்ந்தவுடன், முடிந்துவிட்டதே என வருந்தவைத்து, கடைசி சில பக்கங்களை திரும்பப் படிக்கத் தூண்டும் சில புத்தகங்கள்.

வெகு சில புத்தகங்கள் மனதிலிருந்து வெளியேறாமல் அழிச்சாட்டியம் செய்து முதலில் இருந்தே மீண்டும் படிக்க வைக்கும். இந்த லிஸ்ட் மிகவும் சிறியது..Gone with the wind, to kill a mocking bird, குருதிப்புனல், ஒரு புளியமரத்தின் கதை என ஒரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடக்கூடியனதான்.

சோளகர் தொட்டி இது எந்த வகையிலும் அடங்காத புது வகையாக இருந்தது. கடைசி வரியைப் படித்தவுடன் வேகமாக மூடினேன். புத்தகத்தை உடனே கைக்கெட்டாத தொலைவிலும் வைத்தேன்.

காரணம் நிச்சயமாக முதல் வகை சாதாரணப் புத்தகம் என்பதால் அல்ல. கடைசி சில பக்கங்களையோ, முதலில் இருந்தேவோ மீண்டும் படிக்க மனம் துணியாததுதான். -ஏன்? பிறகு கூறுகிறேன்.

கதையை எழுதியவர் மனித உரிமையாளர், வீரப்பனைப் பிடிக்க வந்த அதிரடிப்படையினால் ஒரு மலைக்கிராமத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியது என்பதெல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரிந்துவிட்டதால், கதை அதிரடிப்படையினருக்கு எதிராகவும், வீரப்பனுக்கு ஆதரவாகவும்தான் இருக்கும் என ஒரு முன்முடிவு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. படித்த பின்னரே தெரிகிறது, "Beware of Preconceived notions" என்று "Failure Analysis"-இல் கூறுவது எவ்வளவு சரியானது என்று.

சோளகர் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் (தொட்டி), சில தலைமுறைகளுக்கு முன்னரும் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லை - மதம் பிடித்த ஒற்றை யானைகளையும், பெருநரி (புலி)களையும் எதிர்த்து, மழை பெய்தால் விதைத்து, பெருந்தனக்காரர்களின் ஏமாற்றுக்குப் பலியாகி பழக்கப்பட்டவர்கள்தாம்.

ஆனால், பிறகு இவர்கள் சந்தித்த எதிரிகள் வேறு வகையானவர்கள். எப்போதோ ஒருமுறை கண்ணில் பட்ட சந்தனக் கடத்தல் கும்பலைப்பற்றி தாழ்ந்த குரலில் பயந்தபடி கிசுகிசுத்துக்கொள்ளும் சோளகர்களை, வீரப்பனுக்கு உணவு கடத்தும் கும்பல் எனச் சந்தேகிக்கும் அதிரடிப்படையினரை சந்திக்க நேரும்போது, அதிகாரபலம், ஆயுதபலம், ஆள்பலம் ஆகியவற்றின் பொருந்தாச் சமன்பாட்டால் சிதறிப்போகிறார்கள்.

"வீரப்பன் கொடியவன், கொலைகாரன், அதிரடிப்படை அவனை சூரசம்ஹாரம் செய்தது சரியான ஒரு முடிவே" என்னும் என் முந்தைய கருத்தை இந்த நூல் மாற்றிவிட வில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களில் ஆசிரியர் எந்தக் கருத்தையும் கூறவும் இல்லை.

நகர நாகரீகத்தையும், அது தரும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மட்டுமே அனுபவிக்கும் மக்களுக்கு அதிரடிப்படையைப் பற்றிய குறைகளும், குற்றச்சாட்டுகளும் Blasphemy ஆகத்தான் தோன்றும் - அப்படித்தான் எனக்கும் தோன்றியது.

ஆனால், இந்நூலில் இருக்கும் Authenticity நடந்தது இதுதான் என வெளிச்சம் போடும்போது, அதை மறுக்க முடிவதில்லை. என் மனத்தளவில் இந்த நடவடிக்கைக்கு நானும் அளித்த ஆதரவும், இந்தக்கொடுமைகளைத் தடுக்க இயலமையும் என் மனத்தில் ஏற்படுத்திய குற்ற உணர்வுதான் இன்னொரு முறை படிக்காமல் தடுத்திருக்கிறது.

நீங்களும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
http://penathal.blogspot.com/2005/10/24oct05.html
Reply
#5
இவோன் பூபாலசிங்கத்தில் வாங்கி வந்தது டிசே சொன்ன பின்னர்தான் உடனே படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்து வேறு வேலையால் நிறுத்திவிட்டேன்.நீங்கள் இதனைக் களத்திற்குக் கொண்டு வந்திருப்பதால் ஓரிரு நாட்களில் வாசித்து முடித்துவிட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)