Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குமுதம்-கச்சதீவு
#1
குமுதம்-கச்சதீவு

சேதுக்கடல். மன்னார் வளைகுடா.

இந்திய_இலங்கைக்கிடையேயான தண்ணீர் தேசம். இப்பகுதி _ மீனவர்களின் கண்ணீர் தேசம். நமக்கு கைக்கெட்டும் தூரத்தில் இலங்கை. அவர்களுக்கு கூப்பிடும் தூரத்தில் தமிழ்நாடு. எனவே, கொஞ்சம் சென்ஸிடிவ் கடல் பிரதேசம் சேதுவும், மன்னாரும்.

இந்த இடைப்பட்ட குளிர்ந்த கடல் பிராந்தியத்தில் சதா நேரமும் சூடு பறக்கும் டென்ஷன்..... டென்ஷன்... டென்ஷன்தான். எனவே, இங்கு பாடு பார்க்கப் போகும் இந்நாட்டு மீனவர்களின் பாடும் திண்டாட்டம்தான்.

பிரச்னையே எல்லைதாண்டி மீன்பிடிப்பதில்தான் ஆரம்பிக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி அங்கு போனால், இலங்கைக் கடலோரக் காவல்படையினரும், இலங்கை மீனவர்கள் இங்கு வந்தால் இந்தியக் கடலோரக் காவல் படையினரும் கைது செய்து அவர்களைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அங்குமிங்குமாக மீனவர்கள் சிறையில் வாட, இருதேசத்துக் கரைகளிலும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் பாடாய்ப்படும். இந்த எல்லைதாண்டிய மீன் பிடிப்புப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள்தான். அதிலும் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்தான் அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள்.

தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களைக் கொள்ளையடிப்பது, அவர்களின் வலைகளை அறுப்பது, போட்களைக் கடத்திச் செல்வது, அவர்களோடு மோதலில் ஈடுபட்டு ரத்தக் களறியாக்குவது என்று தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையும் படுத்துகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல!

நடுக்கடலில் எல்லாவற்றையும் இழந்து, எப்படியோ உயிர் பிழைத்து ஊருக்குத் திரும்புகிற மீனவர்களைக் குறிவைத்துக் கரையிலேயே காத்திருப்பான் கந்துவட்டிக்காரன். கழுத்தை நெறித்துக் காசைக் கேட்கும் அந்தப் பண விழுங்கி மிருகத்திடமிருந்து ஒருவழியாய் தப்பிப் பிழைத்து குடிசைக்கு வந்தால், பெண்டாட்டி _ பிள்ளைகள் பசி வேதனையில் அரைமயக்கத்தில் சுருண்டு கிடப்பார்கள்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் அன்றாட சோதனை இது.

இந்தச் சோகம், சோதனை, வேதனை, துயரம், கண்ணீர் இவற்றையெல்லாம் தாண்டி, நெஞ்சை நெகிழச் செய்யும் சம்பவமொன்றும் அவ்வப்போது இந்த அலையடிக்கிற சேதுக்கடலில் நடக்கும். அது, மீனவர்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி!

நடுக்கடலில் இருதேசத்துக் கடல் எல்லைகளில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் மொழிகளைக் கடந்த, இருதேசங்களைக் களைந்த மனித உணர்வுகள் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

மொழிபுரியாத மிரட்சி, விடுதலையான மகிழ்ச்சி, பெண்டாட்டி _ பிள்ளைகளைப் பார்க்கும் தவிப்பு என்று கலவையான உணர்வுகளில் அந்த மீனவர்கள் படும் அவஸ்தை... மனிதாபிமானமுள்ள எந்த நாட்டைச் சேர்ந்தவனின் நெஞ்சையும் அசைத்துப் பார்க்கும்.

சமீபத்தில் இப்பகுதிக் கடலில் மீனவர்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சியன்று நடந்தது. நமது தரப்பில் இரண்டு இலங்கை மீனவர்களும், அவர்களின் இரண்டு படகுகளையும் ஒப்படைக்க வேண்டும். இலங்கை தரப்பிலோ, இருபத்தாறு மீனவர்கள், அவர்களது ஆறு மீன்பிடிப் படகுகள். அத்தனை பேரும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.

இரண்டு தரப்புமே தங்கள் பிடியிலிருக்கும் இருநாட்டு மீனவர்களையும் அவரவர் நாட்டுக் கடற்படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, இந்திய_இலங்கை கடல் எல்லையில் சந்தித்துக் கொண்டார்கள்.

இருபத்தாறு தமிழக மீனவர்களையும், அவர்களின் ஆறு படகுகளையும் பத்திரமாக இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது தலைமன்னார் கோர்ட்டின் உத்தரவு என்பதால், இலங்கைக் கடற்படை மிகுந்த கவனமுடன் செயல்பட்டது.

இரண்டு வாரங்களாக இலங்கைச் சிறையில் வாடிய இருபத்தாறு மீனவர்களும் இலங்கைக் கப்பலிலிருந்து இந்தியக் கப்பலுக்கு வந்தபோது, அவர்கள் கண்களில் பொல பொலவென்று ஆனந்தக் கண்ணீர்.

முன்னதாக, இலங்கைக் கடற்படை கேப்டன் நிஸாந்தனும், இந்தியக் கடலோரக் காவல்படை கேப்டன் வெங்கடேசனும் பாரம்பரிய முறையில் மரியாதை செய்துகொண்டு, கைகுலுக்கிக் கொண்டனர். நமது கோஸ்ட் கார்ட் கப்பலில் வந்த கமாண்டர்கள் தமிழக மீனவர்களின் பெயர், வயது, அட்ரஸ் குறித்து சரி பார்த்துக் கொண்டார்கள். வழக்கமான ஃபார்மாலிட்டிஸ்!

‘நமது கப்பலில் தெரிந்த முகங்கள் யாராவது இருக்கிறார்களா..? அவர்களிடம் நமது பெண்டாட்டி _ பிள்ளைகளைப் பற்றி விசாரிப்போம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலாய்ப் பறந்தார்கள். யாரும் இல்லையென்று தெரிந்ததும், அவர்களின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் படர்ந்தன.

ஒருபக்கம், இரண்டுதேச கடற்படையினரின் ஃபார்மாலிட்டிஸ் நடந்துகொண்டிருக்க, உடலும், மனமும் சோர்ந்து கிடந்த நமது மீனவர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தோம்.

இப்படி எல்லைதாண்டி மீன் பிடிப்பானேன்? இலங்கைக் கடற்படையிடம் சிக்கிச் சீரழிவானேன்?’என்ற நமது கேள்விக்கு நீண்ட விளக்கமே கொடுத்தார்கள்.

வேற வழியில்லை சார்...எல்லை தாண்டிப் போய்த்தான் மீன் பிடிச்சாகணும். கரையிலேருந்து மூணு கடல் மைல் தூரம் நாட்டுப் படகுக்காரங்க மட்டும்தான் மீன் பிடிக்கணும். அங்கே விசைப்படகுக்காரங்க மீன் பிடிக்கக்கூடாது. மூணு கடல் மைல் தூரத்திலிருந்து சரியா ஒன்பது நாட்டிக்கல் தூரம் வரை பவளப் பாறைதான் இருக்கு. அங்கே மீன் குஞ்சுகள்தான் இருக்கு. அதைத் தாண்டி வந்துட்டாலே கச்சத்தீவு வந்துடும். கச்சத்தீவு வந்துட்டாலே, இலங்கை எல்லைக்குள் வந்தாச்சுன்னுதான் அர்த்தம். மீனும் அங்கேதான் இருக்கு. இந்தப் பகுதிக்குள்ள வராம எங்களால மீன் பிடிக்க முடியாது. அதுக்கு வழியும் இல்லை.’’ என்றார்கள்.

‘‘கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு’’ என்று நம்மிடம் சொன்னார் தாஸ் என்கிற மீனவர்.

தங்கள் நாட்டு மீனவர்கள் இருவரோடு இலங்கைக் கப்பல் புறப்பட்டுப் போக, இருபத்தாறு மீனவர்களையும், அவர்களது ஆறு படகுகளையும் மீட்டுக் கொண்டு கரையை நோக்கிச் சீறிப் பாய்ந்தது இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைக் கப்பல்.

அச்சமூட்டும் கடலின் நடுவே, தலைக்குமேல் எச்சமிடாத பறவைகள் பறந்து போகின்றன. இந்திய கோஸ்ட் கார்ட் கப்பலில், வாழ்வின் மீது மிச்சமிருக்கிற நம்பிக்கையோடு கரை திரும்புகிறார்கள் நமது மீனவர்கள்.

_ வல்லம் மகேசு
படங்கள்: ஜோ
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)