Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் போர் மூண்டால் சகலரும் அழிவோம் ......
#1
மீண்டும் போர் மூண்டால் சகலரும் அழிவோம் யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் யுத்த நிறுத்தத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாடு மற்றொரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், போர் மூண்டால் சகலருமே அழிந்து போய் விடுவோமென்ற கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க் கட்சி முதல்வருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையிலேயே போர் நிறுத்தத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், யாவரும் ஒன்றிணைந்து போர் நிறுத்த உடன்படிக்கையை பாதுகாக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க இலத்திரனியல் ஊடகங்களூடாக விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

மூன்று வருடங்களுக்கு முன்பு 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம். இதன் மூலம் மோதல் முடிவுக்கு வந்தது. அடுத்த நடவடிக்கையாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

2004 ஜனவரியில் ஸ்தம்பித நிலையை அகற்றி, சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பேச்சுவார்த்தையை மீண்டும் அரசாங்கம் ஆரம்பிக்கவில்லையென்பது துரதிர்ஷ்டவசமானதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குப் பதிலாக மோதல் நிறுத்தமானது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. தன்னலத்தைக் கொண்டுள்ளோர் மீண்டும் யுத்தத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். ஆனால், நாடு மற்றொரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதென்பதே யதார்த்தம். போரினால் சகலருமே அழிந்து விடுவோம்.

ஆதலால் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாக்க நாம் ஒன்றுபடுவோம். சகல சமூகங்களுக்கும் ஏற்புடைய இறுதியான சமாதானத்தை ஐக்கிய இலங்கைக்குள் வென்றெடுக்க நாம் ஒன்றுசேர்வோம்.

யுத்த நிறுத்தத்தை பாதுகாக்கவும், சகலரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான சிந்தனையை முன்னெடுத்துச் செல்லவும் உதவிய சகலருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். விசேடமாக நோர்வே, இந்திய, ஜப்பானிய, அமெரிக்க அரசாங்கங்களுக்கும் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு, ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான், ஏனைய நாடுகள், சர்வதேச அமைப்புகளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

யுத்த நிறுத்தத்தை தக்கவைக்க இவை எமக்கு உதவியளித்ததுடன் , தற்போது இறுதித் தீர்வைக் காணுமாறு இந்த நாடுகள், அமைப்புகள் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை அடிப்படையாகக் கொண்ட நிலையான சமாதானத்திற்காக நாம் எம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)