Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் செவ்வ
#1
<b>குமுதம் சஞ்சிகைக்கு அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் செவ்வி</b>
ஒரு ராணுவ அமைப்பின் அரசியல் தலைமையகம் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் நடுவப் பணியகம். வாயிலில் இரு காவலர்கள், அலுவலகத்தின் உள்ளே புலிகளின் அரசியல்துறைத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர். உள்ளே வராந்தாவில் அமர்ந்திருந்தார் சு.ப.தமிழ்ச்செல்வம். கருணா விவகாரம், அமைதிப் பேச்சு வார்த்தை முடக்கம், மீண்டும் போர் வரக்கூடிய சூழல் போன்ற பலவற்றைப் பற்றி தன்னுடைய டிரேட் மார்க் ‘பளீர்’ புன்னகையுடன் பேசத்துவங்கினார்.

போர் நிறுத்த உடன்படிக்கை அறிவித்த பிறகு இரண்டு வருடங்களுக்குமேல் ஆகியிருக்கும் நிலையில், இப்போது அதில் தேக்க நிலை ஏற்பட்டு, மீண்டும் போர் ஏற்படக்கூடிய சூழல் வந்து விட்டதா?


தமிழ்ச்செல்வம்: போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இருப்பது மாதிரியான ஒரு தோற்றம் உருவானது. ஆனால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, இப்போது பார்த்தால் அரசியல் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பால் மிகுந்த துயரத்தை அடைந்தார்கள். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் அந்த ராணுவ ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் தொடர்கின்றன. நீங்கள் ஈழப் பகுதியில் பார்த்திருப்பீர்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சுதந்திரமாகவும், பயமில்லாமலும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகளும், தடைகளும் பழையபடியே இருக்கின்றன. மக்கள் விவசாயமோ, கடல் தொழிலோ பயமின்றிச் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். போர் நிறுத்த உடன்படிக்கையின் ஷரத்துகளின்படி இதிலெல்லாம் மாற்றம் வந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ராணுவம் தங்கள் நிலைகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய நிலைதான் தொடர்கிறது. கிளிநொச்சி, கண்டிரோடு மாதிரியான ஒரு சில இடங்களில் மட்டும்தான் இயல்பு நிலை வந்திருக்கிறதே தவிர, பெரும்பாலான இடங்களில், முக்கியமாக கிராமங்களில் எந்த அபிவிருத்தியும் இல்லை. வீடு, வாசல், நிலங்களை இழந்த மக்கள் அதைத் திரும்பப் பெற்றால்தானே அது முன்னேற்றம்? அப்படி ஏதும் நடக்கவில்லை.

தற்போதைய தேக்க நிலைக்கோ அல்லது பின்னடைவுக்கோ கருணா விவகாரம் ஒரு காரணமாக இருக்கிறதா? இலங்கை அரசுத் தரப்பிலும் இப்படி விமர்சனம் நிலவுகிறதே?


தமிழ்ச்செல்வம் : அது உண்மையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் இதையெல்லாம் மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்தான் கருணா. அதற்கும் இந்த தேக்க நிலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டக்களப்பு மற்றும் கிழக்குப் பகுதிகள் அனைத்தும் தேசியத் தலைவருடைய ஆளுமையின், கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வந்துவிட்டது. இலங்கை ராணுவமே கருணாவைத் தங்கள் பாதுகாப்பில் வைத்து சில குழப்பங்களை ஏற்படுத்த முயன்றதே தவிர, எங்கள் அரசியல் முன்னெடுப்புகளில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. நாற்பது நாட்கள் கருணா கிழக்கில் இருந்து சில சிறு குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார். அவ்வளவுதான். அதை முற்றிலும் சரிப்படுத்தியாகிவிட்டது. இலங்கை ராணுவம்தான் கருணாவைப் பயன்படுத்திக் கொண்டது. கருணா விவகாரம், முடிந்துபோன ஒன்று.

விடுதலைப் புலிகள் அமைப்பிலும், அபிவிருத்தித் திட்டங்களிலும் கிழக்குப் பகுதியினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற விமர்சனமும் கருணாவினால் எழுந்ததே?

தமிழ்ச்செல்வம்: அதுவும் பொய்யானதுதான். ஊடகங்கள் உருவாக்கிய ஒன்றுதான். எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் பாரபட்சமின்றி திறமையின் அடிப்படையில் எல்லா பிரிவு அமைப்புகளிலும் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் கிழக்குப் பகுதி மக்கள் தம் பக்கம் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு, பரப்பப்பட்ட பொய் அது. அதை மக்கள் முழுக்க நிராகரித்தார்கள் என்பதுதான் உண்மை. வடக்கு, கிழக்கு இரண்டுமே பொதுவான தமிழீழத் தாயகப் பிரதேசம்தான். இரண்டிலுமே அரசாங்கத்தினால் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் கிழக்குப் பகுதி புறக்கணிக்கப்பட்டதாகச் சொன்ன கருணா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு மாநாட்டிலேயே ‘தமிழீழத்தின் எந்தப் பகுதியிலும் அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசால் செயல்படுத்தப் படவில்லை’ என்று பேசியிருக்கிறார். பிறகு அதையே மாற்றிப் பேசியது சுயநலத்துக்காகத்தான்.

கருணா விவகாரம் இல்லையென்றால், பேச்சுவார்த்தை முடக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?

தமிழ்ச்செல்வம்: பேச்சுவார்த்தை முடக்கமடைந்திருப்பது உண்மை. சந்திரிகா அம்மையார் சில அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்து, தெற்கில் சில குளறுபடிகளை செய்ததுதான் இந்த முடக்கத்திற்குக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூகோள ரீதியாகவே சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு, அது மேலும் வளர்ச்சியடைந்ததாக சில இலங்கை அரசியல், சமூக விமர்சகர்கள் சொல்வது பற்றி?


தமிழ்ச்செல்வம் : உண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமூகத்தினர் கல்வியிலும் நிர்வாகத்திலும் வளர்ச்சியடைந்து இருந்தார்கள். பிரிட்டிஷ்காரர்களின் காலனி இருப்பு யாழ்ப்பாணத்தில் நிறையவே இருந்ததால் கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்றவை வேகமாக வளர்ந்தது உண்மை.

அதனால் மக்கள் அங்கேயே குவியத் தொடங்கினார்கள். பாடசாலைகள் மிகுந்ததால் வளர்ச்சி சாதகமாகவே இருந்தது. ஆனால் வன்னி, மட்டக்களப்பு பகுதிகளைப் பொறுத்தவரை காட்டுப் பிரதேசமாய் இருந்ததால் அங்கே கவனம், நகர்வுகள் குறைவாகவே இருந்தது. அதனாலே யாழ்ப்பாணத்தவர்களின் மேலாதிக்கம் எல்லா பகுதிகளிலும் இருப்பதான கருத்தும் பரவலாக ஏற்படலாயிற்று. எங்கள் விடுதலை அமைப்பு தோன்றிய பிறகு இந்தப் பாகுபாடுகளை நீக்கி சகோதரத்துவத்தை கொண்டுவர, பல பரந்துபட்ட திட்டங்ளைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி வந்தோம். அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். இன்றைக்கும் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. அதை முற்றிலும் சரி செய்யவே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பேச்சுவார்த்தை முடக்கத்திற்கு இன்னொரு காரணமாக, புதிதாக கொழும்பிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகளைச் சொல்லலாமா?

தமிழ்ச் செல்வம் : ஈ.பி.டி.பி. ராணுவப் புலனாய்வு, கருணா குழு போன்றவை சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே படுகொலைகளைச் செய்து குழப்பம் ஏற்படச் செய்கிறார்கள். படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய பலர், அக்குழுவையே சேர்ந்தவர்கள், எங்களிடம் மறுபடி வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு காலமாக இல்லாத படுகொலைகள் திடீரென்று நடப்பதற்குக் காரணம் இக்குழுக்கள்தான். அவர்களிடையே உள்ள முரண்பாடுகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் எங்கேயும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கிறது?


தமிழ்ச்செல்வம்: வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழர்களுக்கு சொந்தமான, அவர்கள் ஆட்சி செய்த தாயகத்தை அந்நியர்கள் ஆக்ரமித்துப் பிறகு ஒரே நாடாக மாற்றினார்கள். பிறகு எங்களுடைய உரிமை பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இது எங்கள் வாழ்க்கைப் பிரச்னை. அதிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த லட்சியத்திலிருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அமைதிக்கான சூழ்நிலை உருவான சமயத்தில் அதற்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டோம்.

உடன்படிக்கை ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்கவும் முன்வராமல் அவர்கள் இருந்தால் அதற்கான நெருக்கடியை சந்தித்துத்தான் தீர வேண்டும். கொழும்பிலும், தெற்கிலும் நடக்கக் கூடியவைகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, நிரந்தர அமைதியைத் தர அவர்கள் ஒத்துழைப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது. இன்று தெற்கிலேயே வாழ்க்கை நிலை மிக மோசமாகிவிட்டது. அவர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்கத்தான் வேண்டும். எங்களை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத்திரப்படுத்தி, தூண்டிவிடும் காரியங்களை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் பொறுமையாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

இந்தியாவின் நிலை, இந்தப் பிரச்னையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ்ச்செல்வம் : இந்தியாவை ஒரு நேச சக்தியாகத்தான் பார்க்கிறோம். கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததே ஒழிய, இந்தியாவை, இந்திய மக்களை, தமிழ்நாட்டு மக்களை ஒரு நேச சக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இடையில் நடந்த சம்பவத்தை வைத்து தவறான கணிப்புகள் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்கள் எண்ணம். இங்கே, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். ஏற்கெனவே எங்களுக்கு நேசக்கரம் நீட்டியவர்கள்தானே தமிழ்மக்கள்?

அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்திருக்கிறார்களா?

தமிழ்ச்செல்வம்: இந்தியாவில் நாங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் வெளிப்படையான முயற்சிகளை எடுப்பதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொடா சட்டத்தினால் பல குரல்கள் அடக்கப்பட்ட நிலையே, இன்றுதான் அங்கே பொடா சட்டம் நீக்கம் மூலமாக மாறியிருக்கிறது. கலைஞர் போன்றவர்களின் பெரு முயற்சியினால் ஆளும் கட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. தவறான சில கொள்கை வகுப்பாளர்களால் நடந்த ஒரு தவறான சம்பவத்தை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழகத்துடன் நல்லுறவை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றி ஆவி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)