Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
News
#1
அன்புக்குரிய தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளே !

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் நடைபெற்ற கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளே கழிந்த நிலையில் இருபெரும் சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்குமிடையே தொடர்ந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டியின் விளைவாக மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இலங்கையில் இப்போது நிலவிக் கொண்டிருக்கும் அரசியற் சுூழ்நிலையினதும் சர்வதேச அரங்கில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமாக உருவாகி வரும் மாற்றங்களினதும் பின்னணியில் எம்மினத்தின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானத்தை உலகறிய மீண்டும் வலியுறுத்தக் கிடைத்த ஓர் வரலாற்றுச் சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதி புூண்டுள்ளது.

வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத் தீவில் தனக்கெனத் தனியானதோர் மரபு வழித் தாயகத்தையும் அதில் இறைமையையும், ஆட்சி உரிமையையும் தன் வசம் கொண்டிருந்த தமிழ்த் தேசிய இனம், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முதலில் தன் இறைமையை இழந்து பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1833 ல் முழு இலங்கைத் தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டபோது தமிழ்த்தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள மேலாதிக்கத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது.

பின்னர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆங்கிலேய ஆட்சியாளர் இலங்கைத் தீவை விட்டு வெளியேறிய வேளையில், தமிழ்த் தேசிய இனத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த்தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு வழியமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப்பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு,மொழியுரிமைப் பறிப்பு மற்றும் கல்வி,தொழில் பண்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட இனரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவற்றினால் தமிழ் இனத்தின் தனித்துவத்திற்கும் வாழ்விற்கும் விடுக்கப்பட்ட இன அழிப்பு அச்சுறுத்தலின் விளைவாக எமது மரபு வழித்தாயகத்தில் எமது விவகாரங்களை நாமே நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் பெயரிலும், தமிழ் இனத்தின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழிப்போராட்டங்கள் சிங்கள அரசுகளினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டிலிருந்து காலத்திற்குக் காலம் தமிழினத் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளரோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன.

தொடர்ந்து பாதுகாப்பற்ற தமிழ் மக்கள் மீது 1956,1958 ஆம் ஆண்டுகளில் திட்டமிட்ட அரச வன்முறை ஏவிவிடப்பட்டது. 1972 இல் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட ஒற்றை ஆட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனத்தினால் தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் இனத்தரப்பில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டது.

இந்த அரசியற் சுூழ்நிலையில் தமிழரின் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமை கொண்ட சுதந்திரத் தமிழீழ அரசை நிறுவுவதெனத் தீர்மானித்தன.

தமீழீழத்திற்கான ஆணை

1977 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழ இலட்சியத்தை முன்வைத்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அமோகமான ஆதரவை தமிழினத்தின் தாயகமான வடக்குக்கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அளித்ததன் மூலம் சுதந்திரத் தமிழீழத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

சுதந்திர தமிழீழத்திற்கான ஆணைக்குப் பதிலடியாக உடனடியாகவே சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, அடுத்த ஆண்டில் (1978) ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்தி இரண்டாவது குடியரசு அரசியல் சாசனம் தமிழ் மக்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 1979 இலும் 1981 இலும் பின்னர் பாரியளவில் 1983 இலும் தமிழினப் படுகொலைத் தாக்குதல்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் திட்டமிட்டுத் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தச் சுூழ்நிலையில் தமிழ் இனத்தின் வாழ்வையும் தனித்துவத்தையும் பாதுகாக்கவும் அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைமைக்குத் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு, ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினை முறியடிப்பதற்கும் அதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை நசுக்குவதற்கும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளினால் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்த நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாகவே அதனைத் தீர்க்க முடியும்'' என்னும் மெய்நிலை சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலியுறுத்தப்பட்ட சுூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் கூடிய அரசியற் பேச்சுவார்த்தைகளுக்கு அடிகோலப்பட்டது.

மாவீரரது தியாகமே காரணம்

இவ்விதம் தமிழ்த் தேசியத்தின் வலிமை நிலை நாட்டப்பட்டிருப்பதற்கு, பல்வேறு துன்ப துயரங்களும், ஒரு இலட்சம் வரையிலான உயிரிழப்புக்களுக்கும் இடையே எமது மக்கள் தொடர்ந்து காட்டி வந்திருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய இலட்சியப் பற்றுறுதியும் , வீரவரலாறு படைத்திருக்கும் எமது மாவீரரதும், போராளிகளினதும் தியாகங்களும் சாதனைகளுமே காரணமென்பதை இச் சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளோம்.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் நள்ளிரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தாமாகவே முன்வந்து ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்திய போர் நிறுத்தமும் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நோர்வே அரசின் அனுசரணை முயற்சிகளின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையும் ஸ்ரீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்களுக்கு வழிசமைத்தன.

இந்தப் பேச்சுக்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளின் பிரகாரம் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் மீண்டும் இயல்புநிலையினை ஏற்படுத்துவதற்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் மனிதாபிமான அடிப்படையிலமைந்த புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அமைக்கப்பட்ட சிரான் உள்ளிட்ட உப அமைப்புக்கள் செயற்படாத காரணத்தினாலும் மேலும் எமது மக்களின் அவசியத் தேவைக்கெனச் சர்வதேச சமூகம் உவந்தளித்த பெருந்தொகை நிதியுதவியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினாலும் எமது மக்களின் அதிகரித்து வந்திருக்கும் அன்றாட துன்ப துயரங்களையும் அதன் விளைவாக அவர்களின் மனஉணர்வுகளையும் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் தாயகத்திற்கென இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக்கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

அந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பிற்கான தமது வரைவினை 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் நோர்வே அனுசரணையாளர்களூடாகச் சமர்ப்பித்தனர். இந்த வரைபு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பிப்பதற்கான நாளைக் குறிப்பிடுமாறு ஸ்ரீலங்கா அரசினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரினர்.

தீர்வு முயற்சிக்கு பாரிய பின்னடைவு

இந்த நிலையிற் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைத்து நிற்பதற்குக் கணிசமானளவு ஆதாரமாக விளங்கிய பாதுகாப்பு,உள்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களையும் தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பு வரைபு வழங்கப்பட்ட 3 நாட்களுக்குள் ஜனாதிபதி பொறுப்பேற்றதையடுத்து ஆரம்பமான அரசியற் சச்சரவு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் 20040402 ஆம் நாள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவைப் பிரகடனப்படுத்தியதோடு முடிவுக்கு வந்தது.

இந்த நிலைமை எமது மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக்கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைச் சீர்குலைத்ததோடு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும் பாரிய பின்னடைவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னரும் சமாதான முயற்சிகளில் தமது திடமான உறுதிப்பாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைச் சர்வதேச சமூகம் அங்கீகரித்ததுடன் பாராட்டியுமுள்ளது.

தமிழீழ தேசிய இனத்தின் மரபு வழித்தாயகத்தின் நிலப்பரப்பில் 70 வீதத்தைத் தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அங்கு ஓர் அரச நிர்வாகத்திற்குச் சமமான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பை நடத்தி, ஓர் நடைமுறை அரசினை தம்வசம் கொண்டிருந்தபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரகடனம் செய்து, தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுத் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்டிருந்தார்கள் என்பதைச் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். எனவே தான் சீர்குலைந்திருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை ஆக்கபுூர்வமாகவம் ஆரோக்கியமாகவும் மீண்டும் முன்னெடுக்கும் விதத்திற் சிங்கள தேசமும் தமது பங்களிப்பை வழங்குமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வரும் தீர்மானங்களை முன்வைக்கின்றது,

தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை (சுயநிர்ணயவுரிமை) ஆகிய மூலாதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் என்ற வகையிலும் எமது தாயகத்தில் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்திருப்பவர்கள் என்ற அடிப்படையிலும் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் தனித்துவம் , பாதுகாப்பு ,பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான விடயங்களும், அம்சங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபுூண்டுள்ளது. இந்த வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான பிரேரணையில் முஸ்லிம்கள் தொடர்பான அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையில் தங்களின் பங்கு எவ்வாறு அமையவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் பங்குபற்றும் உரிமை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுக்குண்டெனத் தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வடக்கு,கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையில் இடம்பெறுவார்கள் என அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் ஒரு பொதுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் தமிழர்களுடன் முஸ்லிம் சகோதரர்களும் இணைந்து கொள்வார்கள் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன தமிழ்தேசத்தையும் , சிதைந்துபோன தமிழர் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பி தமிழ் மக்கள் நாள் தோறும் எதிர்கொள்ளும் புூதாகாரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தமிழ் மக்களது வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக மக்கள் நலனை மையப்படுத்தி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்ட ஆட்சிக்கு அமைவாக நடைமுறை சாத்தியமான முறையில் தமிழ் மக்கள் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான ஆலோசனையைச் சிங்கள தேசம் முழுமையாக ஏற்றுத் தமிழீழ விடுதலைப் புலிகளோடு விரைவாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையாக நிறுவ வேண்டும்.

மக்களின் நலன்களைப் புறந்தள்ளிப் போரியல் நலன்களுக்கு முதன்மை கொடுத்து அநீதியான முறையில் தமிழர் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களும், இராணுவ முகாம்களும், அகற்றப்பட்டு, இராணுவ நெருக்குதல்கள் அற்ற நிலையில் தமிழ்மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்று குடியமர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடி, தரையிலும் கடலிலும் தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இராணுவ அழுத்தங்களும் தடைகளும் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை காத்திராது தமிழ் மக்களை அழுத்திக்கொண்டிருக்கும் அவசர மனிதாபிமானத்தேவைகளுக்கும், மற்றும் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் நேரடியாக உதவிகளை வழங்கி தமிழ்த் தேசத்தின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தச் சர்வதேச சமூகம் உதவவேண்டும்.

நியாயமற்ற முறையில் ஆண்டுக்கணக்காகச் ஸ்ரீலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினராலும்,பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டு காணாமற்போன அப்பாவி மக்களின் நிலையை என்னவென அறியாது பல்லாண்டுகளாகப் பெரும் துன்ப துயரங்களைச் சுமந்து வாழும் அவர்களது உறவுகளுக்கும் எமது மக்களுக்கும் நீதி கிடைப்பதற்காக ஒரு நீதியான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உறுதியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் கடப்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுத் தமிழர் தாயகத்தில் புூரணமான அமைதி நிலையும் இயல்பு நிலையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப்படைகளின் அடாவடித்தனங்களைச் சகித்துக்கொண்டும் சமாதானச் சுூழலுக்கு எதுவித பங்கமும் ஏற்படாதவாறு போர் நிறுத்தத்தை இறுக்கமாகவும் உறுதியாகவும் கடைப்பிடித்துக் கொண்டும் சமாதான வழிமுறையில் ஆழமான பற்றுறுதியுடனும் உறுதிப்பாட்டுடனும் விடுதலைப் புலிகள் செயற்பட்டு வருகின்றனர். எனவே தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சில நாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவரும் தடையை நீக்கி அவர்கள் கௌரவமாகவும் சமநிலையிலும் அதிகாரபுூர்வமாகவும் ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சு நடத்துவதற்கான சுூழலை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும்.

மேற்சொல்லப்பட்ட தீர்மானங்களை புூரணமாக செயல் வடிவில் சாதிக்கும் நோக்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாம்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் உண்மையான ஏகப்பிரதிநிதிகளாகவும் ஏற்று தமிழ் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பையும் நல்குவோம்.

தமிழீழ மக்களது சுதந்திரமான, கௌரவமான, நீதியான வாழ்விற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்களை சாதி மத பேதங்களுக்கு அப்பால் ஒரே அணியில் ஒரே தேசமாக அணிதிரட்டி உறுதியாக உழைப்போம்.

தமிழ் பேசும் மக்களது பாதுகாப்பிற்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைத்துவத்தின் அரசியல் போராட்ட முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருந்து செயற்படுவோம்.

தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு, நியாய புூர்வமான அரசியல் தீர்வு மறுக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பும், அரச அடக்குமுறையும் தொடருமானால், தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் , தமிழரின் இறைமையும் சுதந்திரமும் நிலைநிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிவிடும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

கௌரவத்துடன் கூடிய அமைதியான வாழ்வினை நாடி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரிகளாகவும் சிங்களப் பேரினவாத சக்திகளின் எடுபிடிகளாகவும் எம் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சுயநல சந்தர்ப்பவாத குழுக்களை தமிழ் மக்கள் அடையாளங் கண்டு எதிர்வரும் தேர்தலில் அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென எமது மக்களை நாம் வேண்டி நிற்கின்றோம். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி எம்மினத்தின் அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் பிரகடனப்படுத்தி தமிழ்த் தேசியத்தை மேலும் பலப்படுத்தித் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது அமோக ஆதரவை வழங்க வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களை நாம் அறைகூவி அழைக்கின்றோம்.
Reply
#2
Thnks virakesari
Reply
#3
அப்ப இது தணிக்கை... சோழியான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
** oslo இணைத்ததை பொங்கு தமிழ் செயலிமூலம் தமிழுக்கு கொண்டு வந்துட்டனே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#4
சுடுறதையாவது முழுமையாக தரலாம் தானே அதிலும் கஞ்சத்தனமா?

நேரடி இணைப்பில் முழுவதையும் வாசிக்க
[highlight=gray:a71b626176]http://www.virakesari.lk/20040302/headnews.HTML[/highlight:a71b626176]
Reply
#5
இப்பகுதிக்குரிய கள ஒழுங்கமைப்பாளர்கள்...ஒஸ்லோவின் செய்தியைத் தமிழில் போட்டுவிடலாமே....முகப்பில் இருந்து இங்கு வரை களத்தை அலங்கோலப்படுத்துகிறது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)