Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விரைந்து வருகிறதா நாலாம் கட்ட ஈழப்போர்?
#1
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவிக்காது மறுத்துரைத்திருப்பதன் காரணத்தால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் கள நிலவரங்களையும் அவதானிக்கின்றவிடத்து நாலாம் கட்ட ஈழப்போர் நெருங்கி வருவதற்கான சாத்தியங்களே அதிகரித்துள்ளன. முதலில் ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் போரைத் திணிப்பதும் சிறிலங்கா அரசின் பிரதான நோக்கமாகும்.

ஏன் ஜெனீவாப் பேச்சுக்களுக்கான சூழலை அரச தரப்பு சீர் குலைக்கின்றது என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்று ஜெனீவாப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் முன்வைத்த பிரதான விடயம். ஒட்டுக்குழுக்களின் விவகாரம்.

பேச்சுக்களின் பிரதான நோக்கம் போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதாக அமைந்திருந்ததால் போர் நிறுத்த அமுலாக்கலுக்குத் தடையாகவிருந்த, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரண்பாடாகவிருந்த ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி விடுதலைப்புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் ஜெனீவாவில் அரச தரப்புப் பிரதிநிகள் அதனை ஏற்றுக்கொண்ட போதும் அவர்கள் கொழும்பு திரும்பிய பின்னர் விடுதலைப்புலிகள் ஜெனீவாவில் சுட்டிக்காட்டியிருந்த எந்த ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையவோ அல்லது அவர்களது செயற்பாடுகளை முடக்கவோ முயலவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத சக்திகள் ஒட்டுக்குழுக்களின் ஆயுதக் களைவு விடயத்தில் கடும் எதிர்ப்புக் காட்டிய அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்தன.

குறிப்பாகக் கருணா கும்பல் மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு மிக்க கோவிந்தன் வீதியில் முகாமிட்டுள்ளது. வெள்ளை வானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

தமிழ் இளைஞர்கள், மாணவர்களைக் கடத்தி கட்டாயப் பயிற்சி அளிக்கின்றனர். ஆட்கொலை, வர்த்தகர்கள், செல்வந்தர்கள் மிரட்டப்பட்டு பணம் கொள்ளையிடப்படுகின்றது. இதேவேளை கோவிந்தன் வீதிக்குச் செல்வதற்கு முன்பாக கருணா குழு வு.ஆ.ஏ.P என்ற மிகப் பெரியதொரு வரவேற்புப் பலகையை நாட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி அண்மையில் கோவிந்தன் வீதியிலுள்ள முகாமை அலுவலகம் என்ற போர்வையில் பகிரங்கமாகத் திறந்து தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். இதனைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் பகிரங்கப்படுத்தியிருந்தது.

ஆனால் அவை எல்லாவற்றையும் மூடிமறைத்த சிறிலங்கா அரசாங்கம் அவ்வாறு எந்த ஒரு ஒட்டுக்குழுவும் இல்லை என்பதை திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். இந்நிலையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெறுமிடத்து கருணாகுழு உட்பட சகல ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படாததற்குத் தகுந்த பதில் கூற முடியாத நிலையில் அரசு திண்டாடும் ஒருநிலை உருவாகலாம்.

அது மாத்திரமன்றி மட்டக்களப்பு நகரில் பகிரங்கமாக கருணா குழு பெயர்ப் பலகையை நட்டு தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவ்வாறு எந்த அலுவலகமும் இல்லை என்று ஜெனீவாவில் புலிகளின் முன்னால் கூற முடியாத நிலையில் அரசுக்குள்ள ஒரேவழி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு விடுதலைப் புலிகளை கலந்து கொள்ளாமல் செய்வதாகும். இதனடிப்படையில் அரசதரப்பு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது. இதனடிப்படையில் முதல் சுற்று ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் போராளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராளிகள் வீரச்சாவடைந்த போதும், பொது மக்கள் பலியான போதும் உச்ச பொறுமையில் நின்று சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு மாறாக விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. இத்தகைய சூழலில் திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் மாமனிதர் விக்கினேஸ்வரன் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அது மாத்திரமன்றி திருமலையில் திட்டமிட்டதொரு இன அழிப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டனர். எனினும் விடுதலைப்புலிகள் ஜெனீவாப் பேச்சுக்களிலிருந்து விலகிச் செல்லாத நிலையில் தான் தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தளபதிகள். வன்னிக்கு வந்து தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடுவதற்குரிய வகையில் பயண ஏற்பாடுகளை வழங்காது அரசு இழுத்தடித்து வருகிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் அவர்களுக்கும். விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் பயண ஏற்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அதற்கமைய சிறிலங்கா கடற்படையினரின் தலையீடு அற்ற படகு மூலம் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் வழித்துணையுடன் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு கிழக்கிற்கு வந்து கிழக்கிலிருந்து தளபதிகளை ஏற்றிச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழுப் பிரதிநிதிகளுடன் புறப்பட்டபோது இராணுவம் மற்றும், கடற்படையினரின் தலையீடு காரணமாக விடுதலைப் புலிகள் தமது கடற் பயணத்தை இடைநிறுத்தி கரை திரும்பினர்.

போர் நிறுத்த கண்காணிப்புக்குழு விடுதலைப்புலிகளுக்குத் தெரிவித்தமைக்கு மாறாக படையினர் தலையீடு செய்ததன் காரணமாகவே பயணத்தை விடுதலைப்புலிகள் இடைநிறுத்திக் கொண்டனர். இதனை அடுத்து தோன்றியுள்ள நெருக்கடி நிலையும் தென்தமிழீழ தளபதிகளுடன் தலைமைப்பீடம் கலந்துரையாட முடியாத சூழலில் இரண்டாம் சுற்று ஜெனீவாப்பேச்சு நடைபெறமாட்டாது. இதில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருப்பதுடன், இது தொடர்பாக தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கருக்குத் தெளிவாக எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் விளக்கியுள்ளார்.

ஆனால் விடுதலைப்புலிகள் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நிராகரிப்பதற்கான ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி சர்வதே சசமூகத் திடமிருந்து ஆதரவுதேடும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

உண்மையில் கிழக்குத் தளபதிகளுடன் தலைமைப்பீடம் கலந்துரையாட வேண்டியது அவசியமானது. ஜெனீவா முதல் சுற்றுக்குப் பின்னர் அங்குள்ள நிலைமை குறித்து கலந்துரையாடி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு தயார்படுத்த வேண்டியது முக்கிய விடயம்.

சிறிலங்கா அரச தரப்பு சர்வகட்சி மாநாடு மற்றும், அமைச்சரவை உயர் மாநாடு என பல்வேறு ஆலோசனைகளை நடத்தி பல தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு முக்கியத்துவம் மிக்கதாக மகிந்தர் கருதுகிறாரோ அதேபோன்று விடுதலைப் புலிகளின் தலைமையும் கிழக்குத் தளபதிகளுடன் கலந்துரையாடுவது முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படுகிறது.

எனவே இவ்விவகாரத்தை சர்வதேச சமூகம் சரியானதொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு ஜெனீவாப் பேச்சுக்கள் இரண்டாவது தடவையாகவும் நடைபெற வேண்டுமென்பதில் அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளின் போக்குவரத்து வசதிகளை முடக்கவேண்டிய அவசியமில்லை.

தற்போது ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு மகிந்த அரசுக்குரியது. விடுதலைப் புலிகள் கோரியபடி கிழக்குத் தளபதிகளை கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுவது என்பது கடினமான விடயமல்ல. கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் உலங்கு வானூர்தி பயண ஏற்பாடுகளை வழங்கியிருக்கலாம். அல்லது விடுதலைப் புலிகளின் கடல்வழி பயணத்தில் தலையீடை தவிர்த்து ஒத்துளைப்பு வழங்கியிருக்கலாம்.

ஆனால் இரு வழிப் போக்குவரத்தையும் முடக்கியுள்ள அரசு மீளவும் போரை திணித்து விடுவதற்கான சூழலையே உருவாக்கிவருகின்றது. இவை ஒரு புறமிருக்க தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினருக்கு எதிரான தாக்குதல்களை பொங்கி எழும் மக்கள் படை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்கு முன்னதான கால கட்டத்தில் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பொங்கி எழும் மக்கள் படை தீவிரப்படுத்தியிருந்தது. எனினும் நோர்வேயின் விசேடசமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்மிற்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து முதலாம் சுற்று ஜெனீவாப் பேச்சுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து பொங்கி எழும் மக்கள் படையினர் தமது தாக்குதல்களை இடைநிறுத்தியிருந்தனர்.

ஆனால் ஜெனீவாப் பேச்சுக்கான இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான ஏது நிலையை உருவாக்காது. தமிழ் மக்கள் மீதும் போராளிகள் மீதும் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை சிங்களப் பேரினவாத அரசு செய்துவரும் நிலையில் பொங்கி எழும் மக்கள் படை மீண்டும் ஆர்பரித்து சீறி எழுந்துள்ளது. இப்போது படையினருக்கு எதிரான கிளேமோர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மறுபுறம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினர் தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். மறுபுறம் பொதுமக்களும் பழி வாங்கப்படுகின்றனர், பொது மக்கள் பழி வாங்கப்படும் நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பொங்கியெழும் மக்கள் படையின் தாக்குதல்கள் தீவிரமடையும் என்பதை கள நிலவரங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவே இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசுக்குரியது. அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவரும் கருத்துக்களும், செயற்பாடுகளும் சர்வதேச சமூகம் தெரிவிக்கின்ற பக்க சார்பான கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவனவாகத் தெரியவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் நோக்கம் சமாதான வழிமுறைகளில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்கான பேச்சுக்களே சர்வதேச அரங்கில் நடை பெறுவதற்கான முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. சமாதானப் பேச்சுக்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை இரு தரப்பும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு ஜெனீவாவில் முதல் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன.

ஆனால் அப்பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு அமுல்படுத்தாது இழுத்தடித்ததால் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பானதும் அமுல்படுத்தாததற்குக் காரணம் என்ன என்பது தொடர்பிலான பேச்சுக்களாகவே அமையவிருந்தது.

இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாக உணரப்படுகின்றது. போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி வடக்குக் கிழக்கில் இயல்பு சூழலை உருவாக்கி சமாதான பேச்சுக்களை நடத்தி தீர்வு காண்பது என்ற விடயம் சிறிலங்கா அரசும், பேரினவாத சக்திகளும் கொண்டிருக்கின்ற கடும் போக்குத்தனத்தால் அரிதாகவே காணப்படுகின்றது. அதேவேளை அரசு விடுதலைப் புலிகளுக்கான பயணத்திற்கு ஒரு இசைவான அணுகுமுறையை கையாளாதவிடத்து போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதுடன், மீளவும் நாலாம் கட்ட ஈழப்போர் மூளும் ஆபத்தையே கள நிலவரம் உருவாக்கும்.

பிரவீனா
மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)