Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்
#1
ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்

By டிசே தமிழன்

எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் வருகின்ற மனவழுத்தமும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று இந்தச் செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறிய நேர்ந்தது.

இதற்கு முன்பாகவும் இப்படிக் குழந்தைகள் பெறுகின்ற தாயாருக்கு ஏற்படும் அழுத்தத்தினால் தற்கொலைகள், குழந்தைகளைக் கொல்லுதல் நடந்திருப்பதை அறிந்திருக்கின்றேன். மேலும், எமது சமூகம் போன்ற ஒரு மூடிய சமுகத்திற்கு இவ்வாறான விசயங்களுக்காய் ஆலோசனைகள் பெறுவதோ, கலந்துரையாடல்கள் செய்வதோ என்பதோ அவ்வளவு இலகுவில் வாய்த்து விடுவதுமில்லை. அப்படி ஆலோசனைகள் கேட்டால், தங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிகம் மேலோங்கி இருக்கலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்து விலகியே இருக்கின்றேன். அவ்வாறு இருந்தால் தங்களை 'னடீயர்களாக'மற்ற சமூகத்தினர் அடையாளங்கண்டு கொள்வார்கள் என்று சிலர் நினைக்கும் ‘பெருமிதத்தால்’ அல்ல. எங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிர அட்டூழியங்களைக் கேள்விப்படும்போது அதற்கு எதிராய் ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தமுடியாத என் கையாலகாத நிலையில் வரும் சலிப்பே முக்கிய காரணம் (அதன் காரணமாகவே இதுவரை எந்த தமிழ் வானொலியோ அல்லது தொலைக்காட்சியோ வைத்திருக்கவில்லை).

எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான் வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களும் அளவில்லாது நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாய் இந்தப்பிரச்சினைகளின்போது குற்றஞ்செய்கின்றவர்கள் தப்பிப்பதற்கு உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘என்ன சாட்சி இருக்கிறது?. அதைக் கொண்டுவா முதலில்’ என்பார்கள். நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருமுறை அதை நினைவுக்கு திருப்பிவர விருப்பமாட்டார்கள் என்பதோடு, அப்படி வெளிப்படையாகப் பேசும்போது இந்தச் ‘சமூகம்’ தங்களைப் பற்றிய பார்வைகளை எப்படி மாற்றிக்கொள்ளும் என்ற பயமும் அதிக சந்தர்ப்பங்களில் முதன்மைபெறுகிறது. இன்னுமே கைம்பெண்களை, விவாகரத்துச் செய்தபெண்களை இயல்பாய் ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் சிறு வயதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்டதை, பதின்மங்களில் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை எப்படி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்கள்?

அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தனது தோழியொருவர் நித்திரைக்குளிசைகளை எடுத்து தற்கொலைக்கு முயன்றார் என்றார். என்ன நடந்தது என்று தான் தோண்டிக் கேட்டபோது, அந்தப் பெண், தனது ஒன்றுவிட்ட தங்கையின் நிமிர்த்தம் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார் என்று அறிய நேர்ந்ததாம். இந்தப் பெண்ணை ஒரு வருடத்தின் முன் (சித்தப்பாவோ அல்லது பெரியப்பா முறையான) ஒருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியிருக்கின்றார். அந்தப் பெண்ணைச் சிதைத்தது காணாது என்று அந்த ‘ஆண்’ தனது சொந்த மகள் மீதும் அதே சுரண்டலைச் செய்துகொண்டிருக்கும்போது, தனது தங்கைக்கும் தனக்கு நடந்ததுபோன்று நிகழ்கின்றதே தன்னால் எதுவும் செய்யமுடியாது இருக்கிறதே என்ற மனவழுத்தத்தில் இந்தப்பெண் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார். தனக்கு என்னவெல்லாம் அந்த ‘ஆண்’ செய்தார் என்று அந்தப்பெண் விபரித்தபோது, இப்படி எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று மட்டுந்தான் தன்னால் யோசிக்கமுடிந்தது என்று எனது நண்பர் எனக்குக் கூறியிருந்தார்.

பெண்களின் மீதான இப்படியான சுரண்டல்கள் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களோ, கதையாடல்களோ எங்கள் சமூகத்தில் ஆரம்பிக்கப்படாது இருக்கிறது என்பது எவ்வளவு அவலமானது. அண்மையில் யாழில் தர்சினி என்ற பெண்ணை இராணுவம் பாலியல் வல்லுறவாக்கியபோது, ‘கவிதை’ என்று ஒன்றை நான் எழுதியபோது, ஒரு தோழி கூறினார், ‘நீ இன்னொரு இராணுவத்தின் வல்லுறவைப் பெரியவிடயமாய் எழுதுகின்றாய், எங்களைப் போன்ற பெணகள் எங்கள் சமூகத்தின் அண்ணா, மச்சான், அப்பா என்ற ‘உறவுகளாலேயே’ தினமும் சுரணடலுக்குள்ளாகி வருகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?’ என்றார்.

பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளைப் பெண்களைத் தவிர வேறு எவராலும் சரியான விதத்தில் அடையாளப்படுத்த முடியாது. பாதிக்கப்படும் பெண்கள் அது குறித்துப் பேசுவதின் மனவழுத்தத்தைப் புரிந்துகொண்டாலும் பிற பெண்களாவது பேச முன்வரவேண்டும். ஆனால் அப்படிப் பேசவரும் பெண்களை நோக்கி நாம பிரச்ச்சினைகளில் விரிவையும் ஆழத்தைப் பற்றி அக்கறையில்லாது, நாம் முதலில் கேட்கின்ற/யோசிக்கின்ற கேள்விகளும், ‘இது உனக்கு நடந்ததா?’ என்பதுமாதிரி இருப்பதுதான் இன்னும் மிகவும் அபத்தமானது. சாதாரண விடயங்களை எழுதவருகின்ற பெண்களையே எத்தனையோ விதத்தில் நமது ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைத் துரத்துவதில், அவர்களில் குரல்களை மெளனமாக்குவதில்தானே நாம் அக்கறை கொள்கின்றோம். வலைப்பதிவுகளில் கூட இவை நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவில்லையா என்ன?

பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்துகின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அதிகம் அடக்கியிருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன்.

சென்ற வருடம், பெணகள் சந்திப்பு மலர் பற்றிய ஒரு கலந்துரையாடலில், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நிறைய எழுதப்பட்டு நமது தமிழ் வெகுசன் மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அப்படி வெளிவருகின்றபோது, பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் குழ்ந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் இன்னும் கவனத்துடன், பாதுகாப்புடன் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டது. எனக்கு ஜீனியர் விகடன் இன்ன்பிற ‘வெகுசன’ ஊடகங்களில் இந்தமாதிரிச் சம்பவங்கள் வரும்போது ஏற்படும் கோபத்தையும் குறிப்பிடவேண்டும். இவ்வாறான ஊடகங்களுக்கு அந்தச் சம்பவங்களின் கோரத்தை விட அதை எப்படி ஒருவித ‘கிளுகிளுப்புடன்’ வாசகர்களுக்கு வழங்குவது என்பதில்தான் கவனம் இருக்கும் (தமிழ்ப்படங்களில் rape காட்சிகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, அந்தப்பெண்ணை ‘அந்தக்காட்சியில்’ கிளுகிளுப்பாய்’ காட்டுவதற்கு கொஞ்சமும் சளைத்தவையல்ல, பத்திரிக்கைகளும்). பாலியல் என்பது மறுக்கப்படவேண்டிய விடயமல்ல. ஆனால் பாலியல் இச்சைக்கும் இவ்வாறான பலவந்தங்களுக்கும் இடையில் வேறுபாடு காணமுடியாத அளவில் நமது ஊடகங்களும் இருப்பதுதான் இன்னும் கோரமானது.

நான் மேலே கூறிய தற்கொலை செய்ய முயன்ற பெண்ணின் தாயாருக்கு இன்னும் ஏன் தனது மகள் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியாது. இப்படித்தான் பல விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. அந்தப்பெண் எனது நண்பருடன் பலவருடங்களாய் தோழமையாய் இருந்தாலும், தன்னைத் தனது தோழியும் ‘தவறாகப் பார்த்துவிடுவார்’ என்று எண்ணத்தில் இந்த விடயத்தை இவ்வளவு காலமும் பகிராமல் இருந்திருக்கின்றார். எனது நண்பரும், ‘நீ எதுவும் பிழை செய்யவில்லை இதற்காய் வருந்திக்கொண்டிருப்பதில் எந்தப் பலனுமில்லை. வாழ்க்கையின் நல்ல விடயங்களை நோக்கி நகர்வதுதான் உத்தம்ம’ என்று கூறியிருக்கின்றார். எப்படி இராணுவத்தால், சாதாரண ஆணால் பாலியல் வல்லுறவாக்கப்பட்டாலும், அது பெண்களின் ‘மிகப்பெரும் தவறாக’ நமது சமூகம் பெண்களின் சிந்தனைகளை ‘அழகாக’ வடிவமைத்து வைத்திருக்கின்றது. வியப்பு என்னவென்றால், திருமணம் போன்றவற்றிற்கு முன், ‘விலைமாதரோடு’, ‘இன்னொரு பெண்ணோடு’ உறவு வைத்திருந்த ஆண்கள் பற்றி நாம் எதையும் கதைப்பதுமில்லை, கவலைபபடுவதுமில்லை. இப்படியான சம்பவங்களோடு போய் திருமணஞ் செய்கின்ற எந்த ஆணும் ‘தனது பழைய நிலையை’ நினைத்து வருந்தியதாய், மன்னிப்புக்கேட்டதாய் எங்கேயும் வாசித்தாயும் (எனக்கு) நினைவில்லை.

ரொரண்டோவில் பத்து வருடங்களுக்கு முன்பு பத்துப் பேரைக்கொலையும், பதின்நான்கு பேரை பாலியல் வல்லுறவாக்கியது என்று ஒரு வெள்ளையரைப் பற்றி வழக்குப் பற்றி அணமையில் பேசப்பட்டபோது, அவர் தான் இன்னும் பத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாய் நீதிமன்றத்தில் அறிவித்தபோதும், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்களும் சாட்சி கூறுவதற்கு வரவில்லை. அதுகுறித்து ஒரு உளவியல் நிபுணர், ‘இந்த நபரால பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த சம்பவத்தை மறந்து வாழ்வில் நகர்ந்துகொண்டிருக்கலாம். எனவே அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர விரும்பாததால் சாட்சி கூற வரவிருமபியிருக்கமாட்டார்கள்’ என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.

தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு. சில வருடங்களுக்கு முன், இங்குள்ள மூத்தகுடிமகன் (First Nation) ஒருவரை ஒரு ஊர்வலத்தில் அநியாயமாய் கொன்ற ஒரு பொலிஸ் உயரதிகாரி ஒரு வீதி விபத்தில் சென்றவாரம் கொல்லப்பட்டபோதும் இதையே நினைத்திருந்தேன் (அவருடைய வழக்கு இன்னும் சில வாரங்க்களில் நீதிமன்றத்துக்கு வர இருந்தது). அப்படித்தான் நமது சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு அநியாயங்களை அறியும்போது இதை -வினை விதைத்தவன் வினை அறுப்பான்- என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்.

இந்தத்தருணம், எழுத்து என்னை -எல்லாவற்றிலுமிருந்தும்- ஆற்றும் என்று நினைத்துக்கொண்டிருந்ததை இரண்டாவது முறையாகத் தவறு என்பதைப் பொய்ப்பிக்கின்றது. எல்லாவற்றையும் மீறி இந்தக்கணத்தில் (ஒரு மகளையே தகப்பன் பாலியல் சுரண்டல் செய்வதை அறிந்துகொண்டும் எதுவுமே செய்யவியலாத நிலையில்) ஒரு ஆணாய் இருப்பதில் மிகவும் வெட்கப்படுகின்றேன்.

[url]
]http://elanko.net/pathivu/?p=123[/url]
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
டிஜே

நீர் சொன்ன பல விடயங்கள் களங்களில் விவாதிக்கப்படாதத்கான ஒரு காரணம் நீர் சொன்ன மாதிரி உமக்கா இப்பிடி நடந்ததா என்ற கேட்பார்களே என்பதும் தான்.

நான் ஒரு வானொலி நாடகத்தயாரிப்பாளருக்கு ஒரு கதை சொன்னேன்..கிட்டத்தட்ட நீர் சொன்ன பெண்ணின் கதைதான்.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதான்…சொந்தக்கதையா ???கடைசியில் அந்தக்கதை நாடகமாக்கப் படவில்லை. நான் அதே கதையை பாடசாலையில் ஆங்கில வகுப்பில் எழுதினேன்.ஆசிரியர் அதை ஒரு விவாதமாகவே மாற்றி விட்டார்.ஆரோக்கியமான ஒரு விவாதமாக.

ஒரு படத்தில் கூட ரகுவரன் தன் மகளையே தாயாக்கி விடுவார்.மனைவி ஆச்சிரமம் நடத்த தொடங்கினார்.(திரைப்படத்தின் பெயர் ஞாபகம் இல்லை-தயா படமோ தெரியவில்லை).

பாடசாலையில் “ஸோ கேஸ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு படம் பாரத்தோம்.அந்தப்படத்தின்ர பெயரும் ஞாபகம் இல்லை.அதில் ஒரு 9 வயதுப்பிள்ளை பாடசாலை ஆசிரியரிடம் தந்தையாரைப் பற்றி முறைப்பாடு செய்து ஆசிரியர் அந்தப்பிள்ளையை ஒரு ஆலோசகரிடம் அழைத்துச்சென்று அதன் பின்னர் வழக்குத் தொடர்வார்.வீட்டில் அந்த ஒன்பது வயதுப்பிள்ளையை அக்கா தங்கை அம்மா எல்லோரும் திட்டுவார்கள்.நீ சொன்னது பொய்யென்று நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுவார்கள்.ஆனால் சின்னத்தம்பி மட்டும் அக்கா நீ சொல்றதை நான் நம்புறன் என்பான்.அந்தப்பிள்ளை இறுதிவரை தன் கூற்றில் உறுதியாகவே இருந்தது.

வழக்கு நடைபெறும்போது தந்தையின் வக்கீல் அந்தப்பெண்ணிடம் கேட்பார் நீ ஒரு நாள் உன் தந்தையின் குறியைத் தொட்டுப்பார்க்க கேட்டாயா என்று அதற்கு அந்தச்சிறுமியும் ஆமாம் எனப்பதில் சொல்வாள்.அந்த வக்கீல் நீதானே கேட்டாய் தொட்டுப்பார்க்க வேண்டுமென்று பிறகேன் இப்பிடி ஒரு குற்றச்சாட்டு?அதற்கு அந்தப் பெண் சொல்வாள் அப்பா ஆடை மாற்றும்போது அது வித்தியாசமா இருந்தது அதனால் தான் அப்பிடிக்கேட்டேன். அப்பா நான் குழப்படி செய்யும்போதெல்லாம் என்னை கழிவறையில் பூட்டி வைத்து அடிக்கிறன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பாலியல் சித்திரவதை செய்வதுண்டு என்பாள்.அக்காவிடமும் விசாரணை நடைபெறும்.அக்கா அப்பா தன்னில நல்ல பாசம் தங்கை சொல்வதில் உண்மையில்லை என்று சொல்வாள்.

ஓருநாள் அக்காவினுடைய பச்சிளங்குழந்தையை அப்பாவிடம் குடுத்துவிட்டு எங்கோயே போய் வரும்போது குழந்தையின் வித்தியாசமான அழுகுரலைக் கேட்பாள்.பிறிதொரு முறை சின்னத்தம்பியை அப்பா பாலியல்; சித்திரவதை செய்வதைக் கண்டு விடுவாள்.பின்னர் நீதிமன்றத்தில் தன்னையும் தந்தையர் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியதை விபரிப்பாள்.தன் தாயார் தந்தையாரை மிகவும் நேசித்ததால் தன்னால் தந்தையாரின் வக்கிரத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை.இப்பொழுது தன் தங்கை தம்பி குழந்தை இப்படி எல்லாரும் பலிக்கடாவாக்கப்பட்டதால் இந்த உண்மையைச் சொல்கிறேன் என்றாள்.

அந்த 9 வயதுச்சிறுமியின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்கள்.முக்கியமாக அவளை வெறுத்த பழித்த அவளது தோழியரும் அவளுக்குத் திரும்பக் கிடைத்தனர்.

திரைப்படத்தின் பெயர் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
உங்கள் நண்பி கேட்டது நல்ல ஒரு கேள்வி.பெண்களில் 97 சதவீதமானோர் வாழ்வில் ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள்.இதில வருத்தமான விடயம் அநேக பெண்கள் பாதிப்புக்குள்ளாவது தெரிந்த ஆண்களாலென்பது.

ஒரு சின்ன உதாரணம்.ஒரு 18 வயது தமிழ்ப்பெண் ஒரு சுப்பர்மார்க்கற்றில் வேலையில் இருக்கும்போது ஒரு 40 வயதுள்ள ஓரு தமிழர் அவா மிச்ச காசு குடுக்கும்போது கையைத் தடவியிருக்கிறார்.அவள் சும்மா கை பட்டாலே ரென்சன் ஆகுற ஆள் கோவத்தில அவருக்கு கன்னத்தில அறைஞ்சிட்டாள்.இந்தப் பெரியவர் மனேஜரிட்ட போய் சத்தம் போட்டு தெரியாம கை பட்டதுக்கு என்ன அடிச்சிட்டா என்று சொல்ல அந்த மனேஜரும் மன்னிப்பு கேட்கச்சொல்லி இவள் கெட்ட வார்த்தையால இரண்டு பேரையும் திட்டிப் போட்டு வேலையை விட்டு வந்திட்டாள்.அந்த ஆள் அதோட விடாமல் அவளைப் பின் தொடர்ந்து பஸ்ராண்டில வச்சு ஒரு நாள் காருக்குள் இழுக்க முயற்சி செய்யப் போய் இப்ப நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஓரு படிச்ச முட்டாள் அல்லது படிச்ச மாதிரி நடிச்ச கிழ முட்டாள் இளம்பெண் ஒருவரை முத்தமிட முயன்று இன்று மானம் மரியாதை இளந்து வேலை இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு விளக்கம் தேவையில்லை.

கனக்க எழுதிட்டன்.மிச்சம் நாளைக்கு.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நாம் சுத்தமானவர்கள்
நமக்குள் அழுக்குகள் இல்லை
நாம் ஒழுக்கமானவர்கள்
நமக்குள் குற்றங்கள் இல்லை

நாம் அவர்கள் போலில்லை
நமது கலாசாரம் சிறந்தது
நாம் அன்பு கொண்டவர்கள்
நமக்குள் பேதங்கள் இல்லை

அவர்கள் பற்றி பேசுவோம்
அவர்களைக் காறித் துப்புவோம்
அவர்கள் மீது நாமெல்லோரும்
அருவருப்புக் கொள்ளுவோம்

சத்தியம் செய்கிறேன்
எனது அழுக்கற்ற சமூகத்தின் மீது
நாம் சுத்தமானவர்கள் என
சத்தியம் செய்கிறேன்

அது செத்து நாளாயிற்று
என்கிற நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
சத்தியம் செய்கிறேன்


Reply
#5
உண்மை தான் இளைஞன் அண்ணா அழுக்கற்ற சமுதாயம் என்ற ஒண்டு என்றுமேயிருந்ததில்லையே அப்படி இருந்திருந்தாலும் அது இப்ப இல்லவேயில்லை

கவிதை நல்லாயிருக்கு அண்ணா

சினேகிதி எழுதின பிரச்சனை எல்லா சமுதாயத்தில இருந்தாலும் எங்கட சமுகத்தில இதைப் பற்றி ஏன்யாரும் வெளிப்படையா கதைப்பதில்லை
. .
.
Reply
#6
அது உயிர்த்தெழும்போதெல்லாம் களையெடுக்க வேண்டும் இளைஞன்.

அந்த எல்லாருமாக நாங்களில்லாமல் இருப்போம் நித்திலா.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)