Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலக மனச்சாட்சியை உலுக்கிய ஹமாஸின் வெற்றி
#1
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டு அதனுடைய, நிதிமூலங்களான தொண்டர் அமைப்புகள் சர்வதேசம் எங்கும் முடக்கப்பட்டமையும் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசை பொறுப்பேற்கிறது. உலகம் இவர்கள் மீதான தடையை என்ன செய்யப்போகின்றது?

கா.வே.பாலகுமாரன்

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை அரசியல் அரங்கம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸினது வெற்றிதான் இன்று மிக பரபரப்பாக பேசப்படுகிற செய்தியாக இருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஹமாஸ் இயக்கமானது மூன்றில் ஒரு பங்கு சபைகளைத் தன்வசம் கைப்பற்றிக் கொண்டது. அப்போதே ஹமாஸின் எதிர்கால வெற்றிபற்றி எதிர்வு கூறப்பட்டாலும் ஹமாசே எதிர்பார்க்காதது என்று அந்த இயக்கம் சொல்கிற வகையில் பாரிய வெற்றி பெற்றிருக்கிறது.
ஷேக் முகமது யாசின் தலைமையில் உருவான ஹமாஸ் இயக்கமானது முஸ்லிம் அடிப்படைச் சிந்தனைகளை மக்களிடத்தில் முன்வைத்து அரபாத்தின் பத்தாவுக்கு மாற்றாக இயங்கி வந்தது.
பேச்சுவார்த்தையை முற்றாக நிராகரித்தது இஸ்ரேலின் செயற்பாட்டை முற்றாக வெறுத்து 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பலஸ்தீனத் தாயகத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேலின் ஜோர்டான் நதி வரை பரந்திருக்கக்கூடிய பலஸ்தீனத் தாயகத்தை - காஸா மேற்குக் கரை, ஜெருசலேம் போன்றவற்றை உள்ளடக்கிய அந்தத் தாயகத்தை அவர்கள் கனவாகக் கொண்டிருந்தார்கள்.
அதேபோல், ஒஸ்லோ உடன்பாடு, பலஸ்தீன அதிகார சபை ஆகியவற்றையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் ஆக்கிரமிப்பாளர்கள் என்பது தான் ஹமாஸின் நிலைப்பாடு. ஏனெனில், அவர்கள் பலஸ்தீனத் தாயகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற அடிப்படையில் ஹமாஸ் செயற்பட்டது.
அது ஒரு தீவிரமான அமைப்பான தோற்றம் பெற்றது. அதனது நிதி மூலமும் உலகம் முழுமைக்கும் பரந்து விரிந்திருந்தது. தங்களது நிதியை நன்றாகக் கணக்கிட்டு மக்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.
இந்த நிலைப்பாடு மிக அதிசயமான நிலைப்பாடு.
1980 களில் அல்பத்தாவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காத இஸ்ரேலியர்கள் இது போன்ற தீவிரமான இயக்கத்திற்கு மறைமுகமான ஆதரவு கொடுத்ததை நாம் அறிவோம்.
அல்பத்தாவின் மிதவாதப் போக்கையே செரிமானிக்க முடியாத இஸ்ரேல் ஹமாஸின் இந்த தீவிரவாதத்தன்மையை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
ஹமாஸின் தோற்றம் என்பது மத்திய கிழக்கில் ஒரு உண்மையான அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத இயலாமையை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது என்று தான் கருதுகிறார்கள்.
பத்தா அமைப்பின் அழிவு - தலைமையின் சீரழிவாகவும் கருதப்படும் நிலையில் ஹமாஸின் தோற்றமானது இன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
எந்த ஜனநாயக அமைப்பை நம்பி - எந்த அல்பத்தாவின் செயற்பாட்டை நம்பி பலஸ்தீன அதிகார சபையைக் கொடுக்க உலகம் முன்வந்ததோ அதே சபையை அவர்கள் சொல்லுகிற ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவே ஹமாஸ் கைப்பற்றியிருப்பது இந்த உலகத்துக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
பலஸ்தீன அதிகார சபையினது மிகப் பெரும் வருமானங்கள் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவாலும் வழங்கப்படுகின்றன.
வருடாந்தம் 400 மில்லியன் டொலரை அமெரிக்காவும் 300 மில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலியத் தரப்பிலிருந்து வரிகள் என்கிற வகையிலுமாக பலஸ்தீன அதிகார சபை இயங்கியது.
இந்த நிதியை இன்று கொடுப்பார்களா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அளிக்காது விட்டால் முழு பலஸ்தீன மக்களையும் பழிவாங்கியதாகும். இப்படியான மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிற உலகம் என்ன முடிவை மேற்கொள்ளப் போகிறது என்பதை அனைவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹமாஸின் வெற்றி மூலம் முழு பலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடிய முற்றிலுமாக ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமாக கருதக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா?
அல்லது,
ஒரு புதிய பரிமாணத்தை உலகம் உணர்ந்து தன் போக்கினை மாற்றி ஹமாஸும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இறங்கி இரு தரப்பினரும் சந்திக்கிற வாய்ப்புக்கூடாக இனிவரும் நாட்களில் பலஸ்தீன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா? என்பது தான் வெற்றிக்கூடாக எழுந்து நிற்கிறது.
ஹமாஸின் வெற்றி என்பது அடிப்படையில் ஒரு தர்க்க ரீதியாக நிகழ்ந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
50 வருட அமைதி முயற்சிக்கூடாக
50 விழுக்காடு பலஸ்தீன மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற-28 அல்லது 29 விழுக்காடு மக்கள் வேலையற்று இருக்கிற நிலையில் பலஸ்தீன மக்களுடைய எதிர்காலம் குறித்த கவலையோடு இப்போது ஹமாஸ் வெளிவந்து நிற்கிறது.
இஸ்ரேலிய அரசை முற்றாக அழித்தல், அமைதி உடன்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தல் என்கிற தன்னுடைய கோட்பாடுகளில் ஹமாஸ் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்துச் செயற்படப்போகிறது என்பது காலப்போக்கில் தெரியவரும்.
அதேபோல், நிலைமையை உணர்ந்து உலகம் தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா? கொள்ளாதா? என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக மாறி இருக்கிறது.
ஹமாஸின் வெற்றியானது உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கிறது.
மத்திய கிழக்கின் இந்த நிலைமைகளைப் பார்க்கும் போது, தென்னாசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போக்கும் உலகத்துக்கு முன்னால் பெருத்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.
மத்திய கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் உலகத்தை நோக்கி எதிரொலிக்கிற இந்தக் கேள்விகள் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டது. அதனுடைய நிதி மூலங்களான தொண்டர் அமைப்புகளும் சர்வதேசமெங்கும் தடை செய்யப்பட்டமையும் அவர்களது வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம்.
அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசைப் பொறுப்பேற்கப் போகிறது.
அப்படிப் பொறுப்பேற்கின்ற போது ஹமாஸ் மீதான தடையை இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்? நிதிகள் வழங்கப்போகிறார்களா? இல்லையா?
எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது நிச்சயமாக உலக நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து கீழிறங்கி இந்த அரசை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்பதாகத்தான் கூறப்படுகிறது.
மக்களது கருத்துக்கு மாண்பு கொடுத்து, மதிப்பு கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதை தமிழீழ மக்கள் தங்களது செயற்பாடுகள் மூலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்கள் இதை பெருமதிப்பிற்குரிய விடயமாகக் கருதுகிறோம் என்றார்.

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-1.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)