Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: ஜே.வி.பி. கட்டளை!
#1
<b>ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்டளை! அதிர்ச்சியில் சுதந்திரக் கட்சி!! </b>

[ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2006, 18:42 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் பேச்சு நடத்த மகிந்தவுக்கு ஜே.வி.பி.அனுமதி அளித்ததற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பது 'சுதந்திரக் கட்சியின் அழிவு' என்று அக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


அரச தலைவர் தேர்தலின்போது இனப்பிரச்சனையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச.

ஆசிய நாடு ஒன்றில் பேச்சு என்றும் நோர்வேயை மத்தியஸ்தராக அனுமதிக்கக் கூடாது என்றும் ஒற்றையாட்சிதான் தீர்வு என்றும் முழங்கிய மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச சமூகம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.

இதனால் ஜே.வி.பி.யுடன் சமரச முயற்சிகளை மகிந்த மேற்கொண்டார். இதையடுத்தே ஜெனீவா பேச்சுக்களுக்கு மகிந்த ஒப்புக்கொண்டுள்ளார்.

மகிந்தவின் ஜெனீவா பேச்சுக்கு ஜே.வி.பி. இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் விலைதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் 50 வீதமான இடங்களில் தமது கட்சியும் போட்டியிடும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

அதேபோல் ஜெனீவா பேச்சுக்களுக்குப் போய் எதுவித ஒப்புதலையும் அளிக்கக் கூடாது என்றும் இப்போது ஜே.வி.பி. கூறி வருகிறது.

ஜே.வி.பி.யை சமாதானப்படுத்த அமைச்சரவையில் இணைந்தே ஆக வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் ஜே.வி.பி.யோ சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் வசமிருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகளைக் குறிவைத்துப் பேச்சுகளை நடத்துகிறது.

இதனால் சுதந்திரக் கட்சிக்குள் நெருப்பு பற்றி எரியத் தொடங்கிஉள்ளது.

தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது நிராகரித்தால் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் மகிந்தவை ஜே.வி.பி.யினர் எச்சரித்துள்ளனர்.

உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது சுதந்திரக் கட்சியை தற்கொலைக்கு தள்ளிவிட்டது போலாகிவிடும் என்றும் சுதந்திரக் கட்சியை விட ஆகக்கூடிய ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிவிடும் என்றும் மகிந்த ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது.

ஜே.வி.பி.யும் ஐக்கிய தேசியக் கட்சியை சமாளிக்க சுதந்திரக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள முன்வந்தாலும் சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிற வகையில் 50 வீதமான ஆசனங்களைக் கோருவதால் சுதந்திரக் கட்சியின் பலரும் குமுறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

50 வீதமான ஆசனங்களை ஜே.வி.பி.க்கு கொடுத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதால் சுதந்திரக் கட்சியின் கீழ்நிலை கட்சிப் பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கீழ்நிலை கட்சிப் பணியாளர்கள் சோர்வடையும் போது சுதந்திரக் கட்சியின் செல்வாக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என்பதால் அதிருப்தியாளர்கள் இப்போது சந்திரிகாவிடம் சராணகதி அடைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சந்திரிகாவுடன் லண்டனில் இருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை நாடு திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியினரில் ஒரு பகுதியினர் மீளவும் தம்மை ஆதரிப்பதைக் கண்டு மகிழ்ந்த சந்திரிகாவும் ஜே.வி.பி.- மகிந்த கூட்டைச் சமாளிக்க நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் எவரும் எதிர்பாராத விதத்தில் சந்திரிகாவும் கலந்து கொண்டதோடு, சுதந்திரக் கட்சியின் கொள்கையையும் அடையாளத்தையும் இழக்க அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து ஆதரவாளர்களை அதிகப்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.

மேலும் ஜே.வி.பி.யின் பெயரைக் குறிப்பிடாமல், "அவர்கள் கூட்டு அமைக்க விரும்பினால் வரட்டும். மற்ற கட்சிகளுன் எப்படி பேச்சுக்கள் நடத்தி உடன்பாட்டுக்கு வருமோ அதுபோல்தான் அவர்களுடன் நாம் செயற்பட வேண்டும். அரசியல் கூட்டுக்கு விலையாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிடக் கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவுக்கு அவர் பாதையிலே சென்று பதில் தருவது போல் மகிந்தவும் இந்த விடயத்தில் கட்சித் தலைவர் சந்திரிகாவின் நிலைப்பாடே தமது நிலைப்பாடு என்று தெரிவித்துவிட்டு சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார்.

சந்திரிகா மீண்டும் தலையெடுப்பதைத் தடுப்பதற்காக சந்திரிகாவுக்கு எதிரான ஊழல்களை மகிந்தவின் அணி தோண்டியெடுக்கத் தொடங்கியுள்ளது. இதில் வேடிக்கையானது என்னவெனில் சந்திரிகா மீதான இதே குற்றச்சாட்டுக்களை கடந்த காலங்களில் மறுத்துவந்த பலரும் இப்போது அவர் மீது இதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வந்துள்ளனர் என்பதுதான்.

ஜெனீவா பேச்சுக்கள் மற்றும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜே.வி.பி. போன்ற கடும்போக்காளர்களையும் தம் அரசாங்கத்தில் இணைத்து அரசை வலுவானதாக்கிக் கொள்ள மகிந்த முயற்சிக்கிறார்.

ஆனால் ஜே.வி.பி.யை அரசாங்கத்திலும் தேர்தலிலும் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சியை பலி கொடுப்பது என்பதை ஏற்க முடியாது என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சுதந்திரக் கட்சியினருக்குள்ளேயே முறுகல் நிலை தோன்றிவிட்டது. இந்த முறுகலில் குளிர்காய சந்திரிகாவும் தயராகிவிட்டார். மகிந்த- ஜே.வி.பி.அணிக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேசக் கரம் நீட்டவும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெனீவா பேச்சுக்களுக்கான குழு விடயத்திலும் ஜே.வி.பி. யோசனைப்படியே செயற்பட்டிருக்கும் மகிந்த சொந்தக் கட்சியின் அமைச்சர்களுக்கு இன்னொரு கட்டளையும் பிறப்பித்துள்ளார்.

ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அது தொடர்பான விடயங்கள் எம்மிடம் தெரிவிக்கப்பட்டு நான் ஜே.வி.பி.யின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஜாதிக ஹெல உறுமயவின் ஒரே ஒரு பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட கொட்டகதெனியாவினால் ஏற்பட்ட விபரீதங்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கின்றனர் சுதந்திரக் கட்சியினர்.

கொழும்புத் தேடுதல் நடவடிக்கைகள், திருமலை மாணவர்களை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் படுகொலை செய்தமை ஆகியவைக்குப் பின்னால் கொட்டகதெனியாதான் இருந்தார் என்று குற்றம்சாட்டுக்கிற சுதந்திரக் கட்சியினர், இப்போது ஜே.வி.பி. இத்தனை நிபந்தனைகளை விதிப்பதால் என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஜெனீவா பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டதன் "பொறி" என்று அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கூறியிருந்தார்.

ஜெனீவாப் பேச்சுக்களில் உடன்பாடு ஏற்பட்டால் யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை கண்டிப்பாக சிறிலங்கா அரசாங்கம் அமுலாக்கம் செய்ய வேண்டும். ஆனால் ஜெனீவாவுக்குப் போங்கள். முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம் என்று ஏற்கனவே மகிந்தவின் குரல்வளையில் கை வைத்து நிற்கும் ஜே.வி.பி., தமிழர்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகளை அரங்கேற்ற படை அணிகலனாய் அணிந்திருக்கும் துணை இராணுவக் குழுக்களை களைந்துவிட அனுமதிக்குமா? அப்படி களைந்துவிட அனுமதித்தால் மகிந்தவை ஜே.வி.பி.விட்டு விடுமா?

ஜே.வி.பி.க்கும் மகிந்தவுக்கும் இடையேயான இத்தகைய திரைமறைவு உடன்பாடுகள், பேச்சுக்களில் சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே என்று சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறுகல்-கொந்தளிப்புகள் இலங்கைத் தீவின் சிங்கள தேசத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? விரைந்து வரும் நாள்களில் விரிவான பதில் கிடைக்கலாம்.

<b>நன்றி: புதினம்</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)