Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுதோல்வியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்திய விஜயம்
#1
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்திய விஜயம்

எம்.கே. ஈழவேந்தன் எம்.பி.

மகிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணம் படுதோல்வியில் முடிவுற்றுள்ளதென்று அனைத்துத் தமிழ் செய்தி இதழ்களும் வெளியிட்டுள்ள செய்தி எமக்குத் தெம்பு தருகின்றது. ஆனால், இது கொண்டு அனைத்தும் இனிது முடிவுற்றுள்ளதென்று நாம் ஏமாறக் கூடாது. தமிழகத் தலைவர்களும் டில்லியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இடிப்பார் இலாதார் கெடும்" என்ற வள்ளுவன் கூற்றில் முழு நம்பிக்கை வைத்து இடிக்கு மேல் இடி இடித்ததன் விளைவு டெல்லி அரசு ஓரளவு இறங்கி வந்து ஈழத்தமிழர் சிக்கலில் அக்கறை காட்டுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தலைமைப்பீடம் ஒன்றுபட்டுக் குரலெழுப்பியிராவிடின் டில்லியில் இந்தளவு மனமாற்றம் ஏற்பட்டிருக்குமா என்பது பெருங்கேள்வி.

இந்திய துணைக் கண்டத்தின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் சீக்கிய சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர், மெத்தப்படித்த மேதை. அத்தோடு இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமோ தமிழகத்தின் இராமேஸ்வர மண்ணில் உருண்டு விளையாடியவர், ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்தவர். தலை சிறந்த அறிவியல் அறிஞர். அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது குறளை அறிந்த குடியரசுத் தலைவர் என அவரை நாம் வாழ்த்தியபோது அவர் நன்றி நவின்று மறுமொழி அனுப்பியதை நாம் நன்றியுணர்வோடு இன்று நினைவு கொள்கிறோம். இலங்கை, இந்திய தமிழ் ஊடகங்கள் எம் வாழ்த்துச் செய்திக்கு முதன்மை கொடுத்ததையும் நாம் இங்கு மறப்பதற்கில்லை. இக்குடியரசுத் தலைவரும், இந்திய அரசியல் ஆய்வாளர்களும் இணைப்பாட்சித் தத்துவம் பற்றியும் இந்தியாவில் இணைப்பாட்சி எவ்விதம் இயங்குகிறது என்பது பற்றியும் சிறிலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு வகுப்புகள் நடாத்தியுள்ளனர். புரியும் மொழியில் வகுப்பு நடாத்தியபோதும் இவர் புரிய மறுக்கின்ற முறையில் ஒற்றையாட்சிக்குள் நான் அதிகாரப்பரவலை உருவாக்குவேன் என்று தொடர்ந்து உளறியுள்ளார். இணைப்பாட்சியின் சாயலிலுள்ள இந்திய அரசியல் அமைப்பை நாம் ஏற்கும் நிலையில் இல்லை. அத்தியாயம் 356 ஐ வைத்துக் கொண்டு மாநில அரசுகளைக் கலைக்கின்ற அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு என்பதையும் அதனால் வருகின்ற ஆபத்துகளையும் நாம் மறப்பதற்கில்லை. நாம் இதனை பல தடவை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், இத்தகைய வலுவற்ற இணைப்பாட்சியைக் கூட ஏற்கும் இதயம் எம் மகிந்த விற்கு இல்லை என்பதுதான் எமக்கு மனவருத்தத்தைத் தருகிறது.

27 ஆம் திகதி தனது பயணத்தை டில்லிக்கு மேற்கொண்ட இவர் 30 ஆம் திகதி இலங்கைக்கு கம்பராமாயண சொற்றொடரை நினைவுபடுத்துகின்ற முறையில் "வெறுங்கையுடன் இலங்கை புக்கார்" தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகாவைப்போன்று நம்பமுடியாத பேர்வழி. இவர் "கலைஞரால் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது என்னாற்றான் புலிகளைக் காப்பாற்ற முடியும். புலிகளைக் காப்பாற்றுவது ஈழத்தமிழினத்தைக் காப்பாற்றுவதாகும்" என்று ஒரு காலத்தில் முழங்கியவர். இது இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, மாலைமுரசு போன்ற இதழ்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்ததை நாம் மறக்கவில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் புலிகளை ஒழித்துக்கட்டுவேன், புலிகளின் தமிழக வரவு தமிழகத்திற்கு ஆபத்தென்று அரசியலில் குத்துக்கரணம் அடித்துவரும் இவர்தான். ஈழத்துத் தமிழ் மக்களை ஒழித்துக் கட்ட கங்கணம் பூண்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷவை தமிழின ஒழிப்பில் ஜே.ஆரையும் சந்திரிகாவையும் மிஞ்சியவர் இவர் என்றும் தமிழக மக்கள் ஒருங்கே குரல் எழுப்பி கிளர்ந்தெழுந்து எதிர்ப்புக்காட்டியதன் விளைவு தமிழகத்தின் பக்கம் தலைசாய்க்காது தப்பினேன் பிழைத்தேன் என்று கூறி கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயிலைக் கும்பிட்டு தோல்வியை இறுகணைத்த நிலையில் பாரத மாதாவிற்கு விடைகூறி கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கு தன் பரிவாரங்களுடன் காலடி பதித்துள்ளார். தான் அடைந்த தோல்வியை வெளியில் காட்டமுடியாது தமக்குள்ளே அழுது புலம்புகிறார் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு. 60 ஆவது அகவையை அடைந்துள்ள இவர், 35 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டுள்ள இவர் நாம் சொல்லிய அறிவுரையை செவிமடுக்க மறுத்த நிலையில் இந்தியா எடுத்துரைத்த கருத்துகளையாவது இவர் செவிமடுப்பாரா என்பதை காலம் தான் தீர்க்க வேண்டும். சொல்லியது உணர்தல் அறிஞர்க்கு அழகு, சொல்வதை உணர மறுத்து பட்டுணர்ந்து தான் பயன்பெற வேண்டும் என சிங்கள வெறிக்கு அடிமையாகி இலங்கையிலே இரத்தப் பெருக்கெடுப்பிற்கு அவர் துணைபோவாராயின் நாம் அவருக்காக இரங்குவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நாம் அடிக்கடி வலியுறுத்துவதற்கமைய இருபது மில்லியன் மக்கள் கொண்ட இலங்கையின் எதிர்காலத்தை சிங்களத் தலைவர்கள் தீர்க்கத் தயங்கின், ஒரே ஒரு மனிதனால் தான் இச்சிக்கலைத் தீர்க்க முடியும். அந்த மனிதன் வேறு யாருமல்ல அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

எம் விடுதலை வேட்கைக்கு வலுச்சேர்க்கின்ற முறையில் ஐ.நா. மன்றத்தில் தமிழீழக் கொடி பறக்கும் என்று வைரம் ஏற்றும் வை.கோ.வும், வீரத்தின் விளைநிலம் வீரமணியும், நிலைத்த கொள்கையுடன் விளங்க நின்றசீர் நெடுமாறனும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் திரண்டெழுந்து தமிழகத்தில் எழுப்பிய குரல் வீண் போக முடியாது. மாறாக நிலைத்த பயனைத் தருவது உறுதி.

நெருக்கடி மிகுந்த இச் சூழலில் தமிழீழம் என்ற குழந்தையை நாம் பெறுவதில் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தாயும் கொஞ்சிக் குலாவ ஒரு குழந்தை வேண்டும். அதனை நீ பெற்றுத்தா என்று வேறொரு பெண்ணைக் கேட்கமாட்டாள். அப்படிக் கேட்பவள் ஒருதாய் அல்ல அவள் ஒரு பேய். "அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்" என்பதற்கமைய தமிழீழம் என்ற குழந்தையை நாம் தான் பெறுவதாக உறுதி பூண்டுள்ளோம். ஆனால், தமிழகம் சிறப்பாகவும் இந்தியத் துணைக்கண்டம் பொதுவாகவும் நாம் இக்குழந்தையைப் பெறப்போகின்ற போது ஏற்படுகின்ற தொய்வை நொய்வைப் போக்க மருத்துவிச்சிகளாக மாறி எமக்குத் துணை நிற்க வேண்டும் என தமிழகத்தையும் இந்தியத் துணைக் கண்டத்தையும் நாம் வேண்டி நிற்கிறோம். மாறி வரும் இச் சூழல் எமக்கு நம்பிக்கையைத் தருகிறது. "என்றுமே விழிப்போடு இருப்பதுதான் நாம் விடுதலைக்கு கொடுக்கின்ற விலை." இதுவே எமது தாரக மந்திரம்.


நன்றி:தினக்குரல்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)