Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?
#1
மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?

கலாநிதி எஸ்.ஜ.கீதபொன்கலன்

1990களில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு மூன்றாந்தரப்பாக உதவி செய்யப் பலர் முன்வந்திருந்தனர். இவர்களில் உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டவர்களும் காணப்பட்டிருந்தனர். வெளியூர்வாசிகளில் முக்கியமானவர்களாக நெல்சன் மண்டேலா மற்றும் யாசீர் அரபாத் போன்றோர் கூறப்படலாம். உள்ளூரில் இருந்து இவ்விதம் செயற்பட முன்வந்தவர்களில் முக்கியமான இருவர் பேராயர் கெனத் பெர்னாண்டோ மற்றும் வர்த்தகப் பிரமுகர் லலித் கொத்தலாவல ஆகியோராவர்.

இவர்களில் கொத்தலாவல தான் மூன்றாந்தரப்பாக செயற்படப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தபோது நிபந்தனை ஒன்றை முன்வைத்திருந்தார். அதாவது, தான் இரு தரப்பிலுமிருந்து இரண்டாம் மட்டத் தலைமைகளுடன் மட்டும் தொடர்புகளை வைத்துக் கொள்ளவிரும்பவில்லை என்றும், அதன் காரணமாக உயர்மட்டத் தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இதன் கருத்தாய் அமைந்திருந்தது அரச தரப்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் புலிகள் தரப்பில் பிரபாகரன் ஆகியோருக்கிடையில் மட்டுமே செயற்பட விரும்பியிருந்தார் என்பதாகும்.

கொத்தலாவல சற்றுக் கடினமாக முயற்சி செய்திருந்திருப்பராயின் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து செயற்பட்டிருப்பது இயலாததாக இருந்திருக்க மாட்டாது. இருப்பினும், அன்றைய நிலையிலும் கூட புலிகளின் தலைவரை நேரடியாக சந்திப்பதும் அவரது செய்தியைக் கொழும்புக்குக் கொண்டு வருவதும் சாத்தியமானவை அல்ல என்பது பெரிதும் தெளிவானதாகவே காணப்பட்டிருந்தது. எனவே, அத்தகைய கடினமானதொரு விடயத்தை மூன்றாந்தரப்பு அல்லது மூன்றாந்தரப்பாக செயற்பட விரும்பிய ஒரு தரப்பு, நிபந்தனையாக முன்வைத்த போதே, அத்தரப்பின் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்பதை இவ்விடயத்தில் அறிவுடைய சிலர் தெரிந்து கொண்டிருந்தனர்.

கொத்தலாவலயின் இந்நிபந்தனையில் இரண்டு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தன. ஒன்று நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விடயத்தை அது அழுத்திக் கூறியமையினால் மேற்கொண்டு முன்னேறுவது சாத்தியமானதாக இருக்கவில்லை. இரண்டாவது மூன்றாந்தரப்பு ஒன்று மோதல் தீர்வு தொடர்பில் நிபந்தனைகளை முன்வைக்க முடியுமா என்பது. மோதல் தீர்வியலில் இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயம் என்னவெனில், ஒரு மூன்றாந்தரப்பின் உதவியுடனும் கூட மோதல் தீர்வு செயன்முறை ஒன்று முன்னெடுக்கப்படுகின்ற போது, அச்செயன்முறையின் உரிமையாளர்கள் மோதல் தரப்பினரே அன்றி, மூன்றாத்தரப்பு அல்ல என்பதாகும். இருந்தபோதும் மூன்றாந்தரப்பினர் விரும்பியவாறு நிபந்தனை முன்வைப்பது விரும்பப்படுவதில்லை. ஏனெனில், பொதுவாக சமாதான செயன்முறைகளில் நிபந்தனைகள் முன்னேற்றத்தின் தடைக்கற்களாகக் கருதப்படுகின்றன. எனினும் பேச்சுவார்த்தைகளின்போது மோதற் தரப்பினர் நிபந்தனைகளை முன்வைப்பது பொதுவாகக் காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் மூன்றாந்தரப்பும் நிபந்தனைகளை முன்வைப்பது பொதுவாகக் காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் மூன்றாந்தரப்பும் நிபந்தனைகளை முன்வைப்பது மேலதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதனால் இது பெருமளவு விரும்பப்படுவதில்லை. அவ்வகையில் எதிர்பார்க்கப்பட்டது போல் கொத்தலாவலயின் முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரேயே இல்லாமற் செய்யப்பட்டிருந்தன.

நோர்வே

இருப்பினும், நோர்வேயைப் பொறுத்தவரை அது மோதற் தீர்வு மற்றும் மோதற் தீர்வியல் ஆகியவற்றில் அனுபவமுடைய ஒரு தரப்பாக இருந்தமையினால், இன்று வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுக்கமைய தனது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள பெரிதும் முயன்றிருந்தது. உண்மையில் இந்நடத்தையே அதற்கு குறிப்பாக தெற்கில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது துரதிர்ஷ்டவசமானதே. எவ்வாறாயினும், ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் ஒரு மூன்றாந் தரப்பு என்ற வகையில் பாரிய நிபந்தனைகளையோ அல்லது தனது சுய விருப்பு வெறுப்புகளையோ செயன்முறையினுள் கொண்டுவர முயற்சித்ததில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு முதன் முறையாக நோர்வேயின் உதவி நாடப்பட்ட போது இரு தரப்பினரும் அழைக்கும் பட்சத்திலேயே தனது பணிகளைத் தொடங்க முடியும் என்று கூறியமை ஒரு நிபந்தனையாகக் கருதப்பட முடியாது. ஏனெனில், அது இரு தரப்பினருக்கும் இடையிலான பக்கச் சார்பின்மையை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான ஒன்றாக அமைந்திருந்தது. ஏனெனில், ஒரு தரப்பினால் மட்டும் விரும்பப்படுகின்ற அல்லது அழைக்கப்படுகின்ற மூன்றாந்தரப்புகளும் கூட வெற்றியடைவதில்லை.

ஆயினும், செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நோர்வே இரு பிரதானமான கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்பட ஆரம்பித்திருந்த முதலாவது இயலுமான ஒரு கட்டமைப்பினுள் பக்கச் சார்பற்ற ஒரு அனுசரணையாளராக நடந்து கொள்ளாதிருந்தது. இது ஒரு மத்தியஸ்த முயற்சியின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். அதேசமயம், முற்றுமுழுதாகப் பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொள்வதென்பதும் நடைமுறையில் சாத்தியமற்றதாகும். இப்பொழுது இருக்கின்ற நிலையில் நோர்வேயை வெளியேற்றினாலும் கூட பூரணமாக பக்கச்சார்பற்ற வேறொரு மூன்றாந்தரப்பை அடையாளம் காண்பது சாத்தியமற்றதாகவே இருக்கும். எனவே, ஒப்பீட்டளவில் பக்கச்சார்பின்மையைப் பேணிக்கொள்ளக் கூடியதாக நோர்வே காணப்பட்டிருந்தது. இது தமிழ்த் தரப்பினருக்கு திருப்தியளிப்பதாக இருந்தபோதும் சிங்கள மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

சிங்கள மக்களின் அபிப்பிராயத்தின்படி அவர்களது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற ஒரு மூன்றாந்தரப்பே மத்தியஸ்தராக இருக்க முடியும். ஏனெனில், அவர்களது நிலைப்பாடுகளே உண்மையான நிலைப்பாடுகளாகும். (இது மோதலில் ஈடுபடுகின்ற எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்) உதாரணமாக புலிகள் பயங்கரவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற ஒரு மூன்றாந்தரப்பையே சிங்கள மக்கள் உண்மையில் பக்கச் சார்பற்ற அனுசரணையாளராகக் கருதுவர். அதன் காரணமாகவே அவர்களது விருப்பம் பெருமளவிற்கு இந்தியாவைச் சார்ந்து செல்வதாக அமைந்துள்ளது.

அதே சமயம், நோர்வேயை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்னுமொரு கோட்பாடு சமாதான செயன்முறையின் உரிமையாளர்கள் மோதல் தரப்பினரே அன்றி மூன்றாந்தரப்பு அல்ல என்பதாகும். அதன் காரணமாக செயன்முறையினுள் தரப்பினரின் விருப்பங்களுக்கேற்ப அது நடந்து கொண்டிருந்த போதும், அவர்களது செயற்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. ஆயினும் சிங்கள மக்கள், புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல் செயற்பாடுகளுக்கான பொறுப்பை மூன்றாந்தரப்பே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது மூன்றாந்தரப்பு அனுசரணை என்பதால் அடிப்படை பற்றிய போதிய அறிவின்மையால் ஏற்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஆயினும், அது சிங்கள மக்கள் மத்தியில் நோர்வே பற்றிய பாரிய ஒரு அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. இவ் அதிருப்தியும் அவநம்பிக்கையும் நோர்வேயின் அணுகுமுறையினால் மட்டும் ஏற்பட்டவை என்று கூற முடியாது.

எதிர்ப்பு

சிங்கள மக்கள் மத்தியில் நோர்வே தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கான அடிப்படைக் காரணம் அதற்கு எதிராக கடும் போக்கு சிங்கள தேசிய வாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த எதிர்ப்பு பிரசாரங்களே என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தலைமைத்துவத்தை வழங்கிய இரு முக்கியமான நிறுவனங்கள் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவுமே என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு இயக்கங்களும் கூட உண்மையிலேயே நோர்வே எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருந்தன என்பதிலும் பார்க்க இதனை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருந்தன என்பதே சரியானதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரக் கூடிய இயலுமை நோர்வே எதிர்ப்பு வாதத்திற்கு உள்ளதென்பது இவ்விரு கட்சிகளினாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இவர்களது உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருக்குமேயானால் "அவர்களது" ஜனாதிபதியிடம் நோர்வேயை வெளியேற்றுமாறு வற்புறுத்திக் கேட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நோர்வேக்கு எதிராக மிக மோசமான எதிர்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் தேசிய கொடிகள் நாற்சந்திகளில் எரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அமெரிக்கர்களின் கைக் கூலிகள் எனவும் நவ காலனித்துவவாதிகள் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர். இலங்கையில் காணப்படுகின்ற `கற்பனைவாத' எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காகவும், வேறு பொருளாதார வளங்களுக்காகவும் ஒரு மூன்றாந்தரப்பாக செயற்பட வந்துள்ளாரென என விமர்சிக்கப்பட்டனர். ஆயினும், நோர்வே இதற்கு சர்வதேச ரீதியாக தர்ம சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியமை அவர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுகின்றமையினால் அவர்களும் பயங்கரவாதிகளே என்ற தோரணையில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களாகும். அதே சமயம், சவப்பெட்டிகளை நோர்வே தூதுவர் அலுவலகங்களின் முன் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் அதனைச் சர்வதேச ரீதியாக தர்மசங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளியிருந்தன.

அதன் காரணமாகவே, இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றுள்ள நிலையில் அதிலும் தனக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த இரு கட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கத்திடம் நோர்வே நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. அவற்றில் முக்கியமானது புதிய அரசாங்கத்தினால் மீண்டுமொருமுறை நோர்வே அழைக்கப்பட வேண்டுமென்பதாகும். இங்கு புலிகள் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. ஏனெனில், புலிகள் நோர்வேயை நிராகரித்ததுமில்லை. தமிழ் மக்கள் மத்தியில் நோர்வே தொடர்பில் பாரிய அதிருப்திகள் காணப்படவுமில்லை. எனவே, நோர்வேயின் நிபந்தனை குறிப்பாக அரசு பற்றியது. அவ்வகையில் நோர்வேயின் தலையீடு உண்மையிலேயே இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமானதாக இருந்திருப்பின் அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. எனினும், அது பயன்படுத்தப்படவில்லை.

மாறாக, ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக நோர்வேயை மீண்டும் அழைக்கின்ற அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். அவ்வகையில் சர்வதேச ரீதியாக இலங்கையில் தலையிட்டமை காரணமாக ஏற்பட்ட அவப்பெயரை துடைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அது நோர்வேக்கு அமைந்தது. உண்மையில் தனது நன்மதிப்பையும் கௌரவத்தையும் பணயம் வைத்து இலங்கையர்களுக்கு உதவ வேண்டியதொரு அவசியம் நோர்வேயிற்குக் காணப்பட்டிருக்கவில்லை. அதே சமயம், நோர்வேயின் இச் செயற்பாடு அது தொடர்பிலான இன்றைய அரசியல் தலைமையினதும் சிங்கள மக்களதும் அதிருப்தியைத் தூண்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது மூன்றாந்தரப்பு அனுசரணையின் வெற்றியைப் பாதிப்பதாக அமையலாம்.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-3.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)