Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேரனின் தவமாய் தவமிருந்து
#1
சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.
Reply
#2
விமர்சனம்


'கண்ட நாள் முதல்' கிடைக்குமா என்று நண்பனின் பேச்சினைக் கேட்டு ஆல்பர்டில் இறங்கினால், 'தவமாய் தவமிருந்து'. ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம்.

முதலில் சேரனுக்கு ஒரு ஷொட்டு. தமிழில் முதல் உருப்படியான ஹை டெபனிஷனினில் எடுக்கப்பட்ட படம். இதற்கு முன் 'வானம் வசப்படும்' (P.C.ஸ்ரீராம்) எடுத்து திருப்தியில்லாமல் போன படம். ஹை டெபனிஷனில் எடுத்த படம் மிக திருப்தியாக இருக்கிறது. வெகு சில தொழில்நுட்ப குறைகள் தெரிகின்றன. ஆனாலும், சாதாரண ரசிகனுக்கு தெரியாத விஷயங்கள் அவை. நீலம் கொஞ்சம் bleed ஆகிறது, கொஞ்சம் blur ஆன விஷயங்கள் லேசாக pixelate ஆகின்றன. மற்றபடி, அருமையாக பிலிமில் தெரிகிறது. அகன்ற திரையில் வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை.

மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் படம். தந்தை பாசத்தினையும், ஒரு நடுத்தர குடும்பத்தில் குடும்ப தலைவன் படும் பாடுகளையும், கஷ்டங்களையும், சின்ன சின்ன சந்தோஷங்களையும், உணர்வு புறமாக சொல்லியிருக்கும் படம். கதை ராமலிங்கம் (சேரன்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையினைப் பார்க்க புறப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. கார் முன்னே செல்ல, ராமலிங்கத்திற்கு நினைவுகள் பின்நோக்கி செல்கின்றன.

உணர்வுபூர்வமாக, சென்டிமெண்டினையும், பாசத்தினையும், உறவு சிக்கலையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஒரு சேர சொல்லியிருக்கும் படம். ஒரு சராசரி தமிழனால் தன்னை சர்வ சாதாரணமாக பொருத்திக் கொள்ளும்படியான கதைக்களம். ராமைய்யா (ராஜ்கிரண்), சாரதா (சரண்யா) தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களை எப்படி வளர்ந்து, பெரியவர்களாகி, சேர்ந்து வாழ்ந்து, பிரிந்து, சிக்கல்களை சந்தித்து, பின் தந்தையின் இறப்புக்கு ஒன்றாக இணைகிறார்கள் என்பது தான் கதை. சேரனின் மிகப்பெரிய பலம் காட்சியமைப்புகள். இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார். ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார். காதலை சொன்னால் அழுகிறார். நண்பர் உதவினால் அழுகிறார். காதலியோடு அழுகிறார். தந்தையினைப் பார்த்து அழுகிறார். அழுத மாதிரியே படம் முழுக்க பேசுகிறார் சேரன். உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டியதிற்கு படமுழுக்க அழவேண்டியதில்லை.

படத்தில் அத்தனை பேரையும் அசரடிப்பவர் ராஜ்கிரண். ஒரு நடுத்தர அச்சக முதலாளியாய் அச்சு அசலாய் கண்முன்னே நடமாடுகிறார். hats off ராஜ்கிரண். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரின் மேக்கப் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பிள்ளைகளை கொஞ்சுவதிலாகட்டும், தண்டல்காரரிடம் கெஞ்சுவதிலாகட்டும், மூத்த மகன் வீட்டில் பங்கு கேட்கும் போது பதறுவதாகட்டும், சேரன் குழந்தையினை தன் மனைவி தூக்குவாளா என்கிற எதிர்ப்பார்ப்பும், பதைபதைப்பும் கொண்ட பார்வையாகட்டும், மனிதர் வாழ்ந்திருக்கிறார். தமிழில் குணச்சித்திர நடிகர்கள் வெகு குறைவு. எஸ்.வி.ரங்கராவ், நாகையா அளவிற்கு இன்று யாருமில்லை. எஸ்.வி.ஆர் அளவிற்கு இல்லாமல் போனாலும், ராஜ்கிரணின் அடையாளம் மண்ணின் அடையாளம். நாக்கும், வாக்கும் செத்துப் போகாத, வெள்ளை மனசு கிராமத்து மண்ணின் முகம். இந்த படத்தின் மூலம் நிறைய படங்கள் தேடிவரும் வாய்ப்புகளதிகம்.

சாரதாவாக சரண்யா. பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு பதினைந்து ரூபாய்க்கு நடித்திருக்கிறார். தமிழில் அம்மா கதாபாத்திரங்களைப் பொருத்தமாக பண்ணுவதற்கு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். பணக்கார அம்மா அம்பிகா, வாஞ்சையுடன் கொஞ்ச கலைராணி, கொஞ்சம் இளைமையான நடிகர்களுக்கு ரேவதி,ராதிகா என்ற வரிசையில் அச்சு அசலான கிராமத்து அம்மாவினை கண் முன் நிறுத்துகிறார் சரண்யா. பற்களில் கொஞ்சம் காவியடித்திருக்கலாம். மண்ணிற மேக்கப்பில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் அன்னியமாய் இருக்கின்றன, அதுவும் வயதான காலத்தில். எண்ணெய் தேய்த்து விடும் பாசமான அம்மா. தன் மகன்கள் ராஜ்கிரணை எதிர்த்து பேசும் போது அவர்களை அடிக்கும் ஆவேசம், தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வரும் சேரனை பார்க்காத வைராக்கியம், தன் பேத்திகளோடு கொஞ்சம் போது இருக்கும் பாசம் என பஞ்சம் வைக்காமல், சும்மா வந்து போகாமல் நிலைத்திருக்கிறார். அதுவும், வயதாக, வயதாக தளர்வான ரவிக்கைகள், ரவிக்கைக்கும் புடவைக்கும் சம்பந்தமில்லாத நிறங்கள் என இயக்குநர் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து நடந்து வருவார், அதில் காலை அகட்டி மெதுவாக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து நடப்பார். ஒரு அசாதாரணமான நடிகையின் அடையாளமது. obeservation to the core.

ஆச்சர்யமுட்டும் இன்னொருவர் ஒரு புதுமுகம். சேரனின் அண்ணியாக வந்து கலக்கியிருக்கிறார். அசலான மதுரை பெண்ணின் முகம். மாமியாரின் பேச்சுக்கு எதிரே பேசாமல்,அதை சமயம் குமைந்துக் கொண்டே கணவரிடம் புகார் சொல்லி தனிக் குடித்தனத்திற்கு அடித்தளம் போடும் போதும், வருடங்கள் கழித்து ராஜ்கிரண் குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரும்போது தண்ணீரைக் கொண்டு வந்து சட்டென்று வைத்து விட்டு சமையலறையில் புகுந்துக் கொள்ளும் போதும், எனக்கு தெரிந்த நிறைய பெண்கள் நினைவில் வந்து விட்டுப் போனார்கள்.

சேரனின் காதலி / மனைவியாக புதுமுகம் பத்மப்பிரியா. அடுத்த படத்தில் பேசலாம். கொஞ்சம் புஷ்டியாய் அந்த கால ப்ரியா ராமன் alias ப்ரியா ரஞ்சித் போல தெரிகிறார். கொஞ்சம் பெரிதான கண்களில் பேச முயன்றிருக்கிறார். better luck next time. கொஞ்சமாய் வந்தாலும், அச்சகத்தில் வேலை செய்யும் இளவரசு நெஞ்சில் நிற்கிறார்.

"நீ பொறக்கும்போது காசுக்கு நான் அலைஞ்சது ஞாபகமிருக்கிறது. நீயும் அப்படிதானே அலைஞ்சிருப்பே. அதனால தான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்" என சொல்லாமல் ஒடி வந்த மகனுக்கு குழந்தை பிறந்ததையொட்டி பார்க்கும் போது சொல்லும் வசனத்திலும், "என்னடா இது, அடுப்பு மேல உட்கார்ந்துட்டு போற மாதிரி இருக்கு" என்று சரண்யா, நகர வெஸ்டர்ன் டாய்லெட்டினை சொல்லும்போதும் வசனகர்த்தா சேரன் பாராட்டுக்குரியவராகிறார். கொடுக்கப்பட்ட வேலையினை கனக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் பிற கதாபாத்திரங்கள். தண்டல்காராராக வருபவர், சேரனின் அச்சகத்தின் முதலாளி, சேரனின் சென்னை நண்பர், சேரனின் அண்ணனாக வருவபர், பத்மபரியாவின் பாட்டி, தந்தை என எல்லாரும் அருமையான தேர்வுகள். சாதாரணமாக இவ்விதமான micro details எல்லாம், கமல், மணிரத்னம், சங்கர் படங்களில் பார்க்க முடியும். சமீபத்தில் இதனை அமீரின் படத்திலும் (ராம்), இந்த படத்திலும் பார்க்கும்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மாறி வருகிறார்கள் என்பதன் அடையாளம். இயக்குநர் சேரன் நிறையவே மாறியிருக்கிறார். பிரச்சாரங்களும், கருத்து சொல்லுதலும் மாறி, உணர்வுப்பூர்வமான ஒரு இயக்குநனனாக தன்னை மாற்றிக் கொண்டு இருக்கிறார். கதை 1970களில் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற்ப்போல் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அதற்கு ஏற்றாற்ப் போல சினிமா போஸ்டர்கள், ரேடியோக்களில் ஒலிக்கும் பாடல்கள், உடை தேர்வுகள் என்று ஒவ்வொரு சின்ன details எல்லாம் மிக கவனத்துடன் சிரத்தையுடன் செய்திருக்கிறார்.

உணர்வுகள் பலம். கதை ஒரு தகப்பனின் வாழ்க்கைப் பயணம். ஆனாலும், நிறைய படங்களில்,கதைகளில் கேட்ட கிளிஷேகள் படத்திலுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சில குறைபாடுகளுடன், நிறைவாக பார்க்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த படத்திற்கு ஆரம்பிக்கும் போது "டூரிங் டாக்கீஸ்" என்று பெயரிருந்தது. அப்போது நான் கேட்ட செய்தி Cinema Paradiso வின் தமிழாக்கம் போல இருக்குமென்று இருந்தது. நல்லவேளை சேரன் தப்பிவிட்டார் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

படம்: தவமாய் தவமிருந்து
நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்ம பரியா, இளவரசு
இசை: சபேஷ்-முரளி
கதை, திரைக்கதை, இயக்கம்,வசனங்கள்: சேரன்


<b>நன்றி: நாராயணன்.
http://urpudathathu.blogspot.com/2005/12/b...ost_04.html[/b]
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
<img src='http://img235.imageshack.us/img235/7681/p5b1yv.jpg' border='0' alt='user posted image'>

வாழ்க்கை ஒரு விசித்திரமான வாத்தியார்!

அது பாடம் நடத்திவிட்டு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை முடிந்த பிறகே, பாடம் கற்றுக்கொடுக்கிறது! என்பார்கள். அப்படி இழந்த பிறகே உணர்கிற உறவுகளின் அருமையை, இருக்கிறபோதே மதிக்க, பாதுகாக்க, கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுகிற திரைப்படம் இது!

மன்னர்களின் கதைகளையும் மாவீரர்களின் கதைகளையும் சொல்லி வந்த தமிழ் சினிமாவில், முதன்முறையாக ஒரு பலவீனமான ஏழைத் தகப்பனின் கதை. தாயின் பெருமையை மட்டுமே பெரிதாகப் பேசும் உலகத்தில், ஒரு தகப்பனின் பேரன்பைப் பதிவு செய்யும் முயற்சி, தவமாய் தவமிருந்து!

<img src='http://img235.imageshack.us/img235/8855/p82vk.jpg' border='0' alt='user posted image'>

ஒரு சாதாரண மனிதனின் முப்பத்தைந்து வருட வாழ்க்கை... அதுவும் மூன்றரை மணி நேர சினிமா. காமெடி டிராக், அதிரடி ஆக்ஷன், திடீர் திருப்பங்கள், குத்துப் பாட்டு, குழு நடனங்கள் ஏதும் இல்லாத படம்.

கிராமத்து நடுத்தர வர்க்கத் தகப்பனாக ராஜ்கிரண். ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவே நகர்கிற குடும்பம். வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்காக வட்டிக்குக் கடன் வாங்கிச் செலவழித்து, கடனுக்கு வட்டி கட்டவே வாழ்க்கையோடு போராடும் தகப்பன். தீபாவளிச் செலவு, பாலிடெக்னிக் ஃபீஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாடுகிற, அவமானம் சுமக்கிற, கெஞ்சிக் கூத்தாடி கொண்டுவந்து கொட்டுகிற ஒரு மனிதன்.

<img src='http://img235.imageshack.us/img235/8044/p5a9mn.jpg' border='0' alt='user posted image'>

மூத்த மகனுக்குத் திருமணமாகிறது. வருகிற மருமகளால் குடும்பத்தில் சிக்கல். மூத்த மகன் தனிக்குடித்தனம் போகிறார். இன்னொரு பக்கம் இன்ஜினீயரிங் படிக்கும் சேரன், தன் சக மாணவி பத்மப்ரியாவுடன் காதலாகி, எசகுபிசகான ஒரு சந்தர்ப்பத்தால் கர்ப்பமாகிற காதலியுடன் ஊரை விட்டே ஓடிவிடுகிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகே ராஜ்கிரணுக்கு விஷயம் தெரியவர, அப்போதும் மகனை மன்னிக்கிறார். தங்களுக்காகவே வாழும் தாய் தகப்பனுக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் தர ஆசைப்படுகிறார் சேரன் என வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத் தையும் பரிணாமத்தையும் விலாவாரியாக விவரிக்கிற கதை, ஒரு சுடுசொல் தாளாமல் உயிரை விடுகிற தனி மனிதனின் வரலாறாக முடிகிறது.

ஒரே ஒரு ஊருக்குள்ள பாடலில் ஒரு கிராமத்து அப்பாவும் அம்மாவும் தங்களின் இரண்டு மகன்களுடன் பாசமாக சைக்கிளில் பயணிக்கும்போதே, நாமும் அவர்களின் வாழ்க்கைச் சைக்கிளில் தொற்றிக்கொண்டுவிடுகிறோம்.



உங்க பையன் நேத்து விபசார கேஸ்ல மாட்டிக்கிட்டான் என்பதைக் கேட்கும் போது கனவுகள் நொறுங்கிக் கண்ணீர் விடும்போதும், அர்த்தராத்திரியில் காதலியுடன் ஓடிப்போகக் கிளம்புகிறான் இளைய மகன் என்பது புரியாமல், கோயம்புத்தூர்ல ஒரு இன்டர்வியூப்பா என அவன் சொல்லும் பொய்யை நம்பி, திருநீறு பூசி ஆசிர்வதித்து அனுப்பும் போதும், பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவிப் பெற்றோரின் உலகம் நம் நெஞ்சில் அறைகிறது!

வட்டிக்கடைக்காரரிடம் கூனிக் குறுகி நின்றுவிட்டு, பணத்துக்கு ரெடி பண்ணியதும் கண்ணீர் பொங்கக் கண்கள் சிரிக்க நடந்து வரும்போது, ஆயிரமாயிரம் ஏழைத் தகப்பன்களைக் கண் முன் கொண்டுவருகிற ராஜ்கிரணின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் இந்தப் படம்! ஓடிப்போன மகனுக்குக் குழந்தை பிறந்த செய்தி தெரிந்து தேடி வந்து அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந் திருப்பாரே... அந்த ஒரு காட்சி போதும். பரிதவிக்கும் பார்வையுடன் ஒரு சித்தரைப் போல நிமிர்ந்து, ஏம்ப்பா இப்படிப் பண்ணினே? எனக் கேட்கிற காட்சி, க்ளாஸ்!



எம் புள்ளைகளுக்கு நா ஏதோ குறை வெச்சுட்டேன் போலிருக்கு, அதான் ரெண்டு பிள்ளைகளுமே என்கிட்ட தங்கலை. நீயாவது உம் பிள்ளைக்கு அந்தக் குறை வராமப் பார்த்துக்கோப்பா என்பது போன்ற இயல்பான வசனங்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்து கின்றன தூணாக!

அப்பாவைப் பற்றிய படம்தான் என்றாலும், அவரின் முதுகெலும்பாக வரும் அப்பாவி மனைவியாக அசத்தி இருக்கிறார் சரண்யா. ஏம், உம் பொண்டாட்டி மட்டுந்தேன் அல்வா திம்பாளாக்கும் என மருமகளை லேசாக எரிச்சலாகப் பார்ப்பது போலிருந்தாலும், வகுத்துப் பிள்ளைக்காரிக்குக் கடைப் பலகாரம் குடுத்தா ஒத்துக்காதுப்பா என முடிக்கும்போது, தாய்மையின் கரிசனமே மேலெழுகிறது.

சென்னை வாழ்க்கையில் சிரமமான பொருளாதாரத்தில் கர்ப்பம் சுமந்து கஷ்டப்படும் பெண்ணாக வரும்போது, கலங்கடிக்கிறார் பத்மப்ரியா. படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது மூத்த மருமகளாக வரும் புதுமுகம் மீனா. முகச் சுழிப்பும், எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாக மல்லுக்கு நிற்கும் வேகமும், முணுக்கென்றால் ஹஸ்கி வாய்ஸில் முனங்குகிற குரலும்... செம முறுக்கு! ராஜ்கிரணின் அச்சகத் தொழிலாளி அப்பாவி அழகராக பாசமும் விசுவாசமுமாக வளையவரும் இளவரசுவின் காரெக்டர், சமூக அமைப்பில் பாடப்படாத நாயகர்களின் அடையாளம்!



படம் முழுக்க உணர்வுகளின் புயல் மழையாகக் காட்சிக்குக் காட்சி நம்மை நனைத்தெடுக்கிற விதத்தில் கம்பீரமாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சேரன். ஆனால் நடிகர் சேரன், ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாக போராட வேண்டும். அழுகிறபோதெல்லாம் கைகளால் முகத்தை மூடிக்கொள்வது, எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாங்கோவ்! இன்ஜினீயரிங் படித்த மாணவர் சென்னையில் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. முக்கால் காலுக்கு மடித்துவிட்ட பேன்ட்டும், கர்ச்சீஃப் கட்டிய தலையுமாகக் கை வண்டி இழுப்பதும்கூட அதே எம்.ஜி.ஆர். காலத்து சினிமா!

கால மாற்றங்களைப் பதிவு செய்ய இயக்குநருடன் மேக்கப் மேன், கேமரா மேன், ஆர்ட் டைரக்டர் என ஒரு கும்பலே கூடி மிகக் கடுமையாக உழைத் திருக்கிறது. நகரத்தில் சேரன் & பத்ம ப்ரியாவின் வாழ்க்கையைக் காட்டும் போது அரை இருளிலேயே பயணிக்கிற எம்.எஸ்.பிரபுவின் கேமராவே பாதி கதை சொல்கிறது. ஒரு அச்சகம் ஒவ்வொரு காலத்திலும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைக் காட்டுவதில் சபாஷ் பெறுவது ஆர்ட் டைரக்டர் ஜே.கே!

ஒரே ஒரு ஊருக்குள்ள பாடலில் ஸ்கோர் பண்ணுகிற சபேஷ் முரளி, இடைவேளைக்குப் பிறகு வருகிற எட்டு நிமிட திரன திரன தீம்திரன எபிசோடின் பின்னணி இசையும், அந்தக் குதூகலக் காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் சுக ராகம்.

வழக்கமான தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி இதில் இல்லை. துள்ளவைக்கிற முடிச்சுகளோ, தூக்கிவாரிப்போடும் திருப்பங்களோ கொண்ட காட்சி அமைப்புகள் எதுவும் இல்லவே இல்லை. ஒரு மென்மையான நீரோடை மாதிரி அதன் போக்கில் மிக மெள்ளப் பயணிக்கிறது படம். அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் யதார்த்த வகை. கூடவே, படம் நீளமோ என்கிற அலுப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.

இருந்தாலும்... சிதையும் கூடாக, சிதறடிக்கப்படும் கனவாக, நிறைவேறாத பிரார்த்தனையாக... இப்படித்தானே இருக்கிறது இங்கே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எனத் திரையரங்கில் இருந்து வெளியேறுகிற கசிந்த விழிகள் சொல்கின்றன, இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும்.

இதுதான் சேரனின் தவத்துக்குக் கிடைத்திருக்கும் நல்வரம்!


http://www.vikatan.com/
Reply
#4
மிகவும் நல்ல ஒரு பாடம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#5
தகவல்களுக்கு நன்றி வசிசுதா - KULAKADDAN
Reply
#6
இன்னும் எனக்குப் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் குளக்காட்டனின் இணைப்பும் வசி இணைத்த விகடனின் விமர்சனமும் ஓரளவு படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுத்தது. நன்றி. மதுரன் சொல்லியது போல் இது படமல்ல பாடம் என்றும் சொல்லலாம்.
Reply
#7
சாக்கடைக்குள் இருந்து ஒரு தாமரை 'தவமாய் தவமிருந்து"

வாழ்க சேரனின் படைப்புக்கள்
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#8
[size=18]சேரனும் விருதுக்கான தவமும் [தவமாய் தவமிருந்து] - சுரேஷ் கண்ணன்

வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல சினிமாவின் அடிப்படையாக இருக்க வேண்டும்; மறுக்கவில்லை. ஆனால் சேரன் இதை வேறு விதமாய் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. கலைப் படங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் திரைப்படங்கள் பற்றி சினிமாவின் தீவிர ரசிகர்கள் அல்லாதவர்களிடம் ஒரு பிம்பம் உள்ளது. "ஒருத்தன் பல்லு வெளக்கறான்னா... அதை அரைமணி நேரம் காட்டுவானுங்கடா". சேரன் அந்த அளவிற்குப் போகவில்லையென்றாலும் கூட கதையை ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே போவது திரைக்கதையின் அடிப்படை என்பதை மறந்து போய் உணர்ச்சிகரமான சம்பவங்களினாலேயே நிதானமாக இந்தப் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்து விட்டார்.

மென்மையான படங்களுக்கு நிதானமான காட்சியமைப்புகள் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் பயன்படுத்தி மற்ற காட்சிகளை ஒரு தவளைப் பாய்ச்சலில் சொல்ல வேண்டும். தனது மூத்த மகனிடம் ஏற்கெனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இளைய மகனிடம் 'நீ தனிக்குடித்தனம் போயிடுப்பா' என்று சொல்லும் போது "அவ்வாறில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தந்த துன்பத்திற்கு ஆறுதலாக உங்களிடமேதான் இருக்கப் போகிறேன்' என்று சேரன் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதை மறுக்கும் இடத்திற்கு நிச்சயம் அந்த நிதானம் தேவைதான்.

சேரன் தன்னுடைய 'ஆட்டோகிராப்' பட வெற்றியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதையே 'தவமாய் தவமிருந்து' உணர்த்துகிறது. ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையின் நினைவுகளை, வலி, வேதனைகளை, சந்தோஷங்களை அசை போட்டுப் பார்ப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் முந்தைய வெற்றி தந்த அனுபவத்தைக் கொண்டு மீண்டும் அதே பாணியைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. (இந்த இடத்தில் மற்றொரு இயக்குநர் லிங்குசாமியின் நினைவு வருகிறது. 'ஆனந்தம்' என்கிற குடும்பப் பாங்கான வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அடுத்ததாக அதிலிருந்து விலகி 'ரன்' என்கிற ஆக்ஷன் படத்தைத் தந்த தைரியத்தை வியந்தேன்)

()

இந்தப் படக்கதையின் அவுட்லைன் என்னவென்று உங்களில் பலருக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஒரு பாசமுள்ள தகப்பனின் 35 ஆண்டுகால வரலாற்றை அவனுடனே பயணம் செய்து நமக்குக் காட்சிகளாய் விரித்திருக்கும் படம். பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனைத் தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. அந்தக் குறையை இந்தப் படம் நீக்கியிருக்கிறது.

என்றாலும் இந்தப் படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்வதாய் நான் நினைக்கிறேன்.

()

ஒரு சராசரி கிராமத்துத் தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். இம்மாதிரியான நடிகர்கள் சரியாக உபயோகப்படுத்தப் படாமலிருப்பது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. வயதாவதற்கேற்ப அவருடைய ஒப்பனையும், body language-ம் மாறிக் கொண்டே வருவது சிறப்பு. தீபாவளிக்கு மகன்களுக்கு சட்டைத் துணி வாங்கிக் கொடுக்கப் பணமில்லாமல் தவிக்கும்போதும், மகனை இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க வட்டிக் கடைக்காரரிடம் கெஞ்சி பணம் வாங்கிக் கொண்டு கண்ணீரும், தன்னை அழுத்திக் கொண்டிருந்த துயரத்திலிருந்து விடுபட்ட உணர்வுப் புன்னகையுடனும் வெளியே வரும் போதும், எந்தப் பெண்ணுடனோ ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும்... என்று சில பல காட்சிகளில் ராஜ்கிரண் தன் பாத்திரத்தை சரியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார். ஆனால் இவர் கதாபாத்திரத்தை ஏதோ வரலாற்று நாயகர்கள் போல் அல்லாமல் அவருக்கு இருந்திருக்கக்கூடிய இயல்பான குறைகளுடனேயே சித்தரித்திருந்திருக்கலாம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரமாக சரண்யா. அறிமுகப்படமான 'நாயகன்'-க்குப் பிறகு யாரும் சரியான பாத்திரம் தராத வேளையில் இந்தப் படம் அவருக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அவரும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகன்கள் கேட்கும் பட்டாசுப் பட்டியலை கணவனிடம் கூறிவிட்டு வாங்கிக்கட்டிக் கொள்வதாகட்டும், 'சினிமாத் தாயாக' இல்லாமல் மருமகளை எரிச்சலும் கோபமுமாய் கடிந்து கொள்வதாகட்டும், கணவனை எதிர்த்துப் பேசும் மூத்த மகனைப் பாய்ந்து அடிப்பதாகட்டும், சொல்லாமல் ஓடிப் போய் காதல் திருமணம் செய்து குழந்தையுடன் வந்திருக்கும் இளையமகனைப் பார்த்து 'படாரென்று' கதவை அறைந்து மூடுவதகாட்டும்.... ஒரு சராசரித் தாயை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

சேரனின் மூத்த சகோதரனாய் வரும் நபர் இயல்பாய் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரின் மனைவியாக வரும் மீனாள், புது மனைவியாக கணவனிடம் கொஞ்சுவதும், மாமியார் கூப்பிடும் போது எரிச்சலடைவதும், பிற்பாடு வசதியாக வாழும் கொழுந்தனின் வீட்டைப் பொறாமையும் இயலாமையுமாக நோட்டமிடுவதும்.. என ஒரு சராசரி தமிழ்நாட்டு மருமகளை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.

சேரன் அதிக காட்சிகளில் அழுகிறார் என்ற மாதிரி விமர்சனம் இருந்தது. எனக்கு அப்படித் தோன்றவில்லை. தேவையான காட்சிகளில் மட்டுமே அவர் அழுதாலும், அவர் முகம் அதற்கு ஒத்துழைக்காமல் கோணலும் மாணலுமாய் போவதால் நமக்கு அனுதாபத்திற்கு பதில் சிலசமயம் எரிச்சலே வருகிறது.

ராஜ்கிரணனின் அச்சகத்திற்கு உதவியாளராக வரும் இளவரசு, வட்டிக்கு பணம் தருபவர், சேரன் வேலை செய்யும் அச்சக உரிமையாளர் (வி.கே.டி.பாலன்) என்று சிறுசிறு பாத்திரங்கள் கூட இயல்பாய் வலம் வந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான பங்கு கலை இயக்குநர் ஜே.கேவுடையது. 1970-ல் இருந்து சமகாலம் வரை நடைபெறும் இந்தப் படத்தின் காலச்சூழலுக்கேற்ப ஒவ்வொரு களத்தையும் அமைத்திருப்பது சிறப்பு. (அந்தந்தக் கால சினிமா போஸ்டர்கள், பட்டாசு, மார்க்கெட், என்று பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்). சேரனின் கல்லூரி நண்பர்கள் group study செய்யும் அந்த பிரம்மாண்டமான 'நகரத்தார் டைப்' வீட்டின் பிரம்மாண்டமும் கலைநயமும் அந்தக் காலத்தில்தான் மனிதர்கள் 'வாழ்ந்திருக்கிறார்கள்' என்று உணர்த்துகிறது.

இசை ஸ்ரீகாந்த் தேவா. 'உன்னைச் சரணைந்தேன்' என்கிற பாடலும் சேரன் தன் பெற்றோர்களை மகிழ்வாக வாழவைக்கும் காட்சிகளின் 5 நிமிட க்ளாசிகல் பின்னணி இசையும் என மெருகூட்டியிருந்தாலும் இளையராஜா போன்றவர்களின் கூட்டணி இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் உயரத்திற்குச் சென்றிருக்குமே என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.

()

சேரன் இந்தப் படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அந்தந்தக் காலகட்டத்தை வானொலி சினிமாப்பாடல்கள், மற்றும் சம்பவங்கள் மூலம் உணர்த்துவது, தன் காதல் மனைவியுடன் குடிபோகும் அந்த அடித்தட்டு மக்களின் குடியிருப்பின் யதார்த்தமான இயல்பு, என்று பல காட்சிகளில் சிறப்பாக அமைத்திருந்தாலும் வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இவ்வளவு மெனக்கெட்டிருக்கிற சேரன் அந்தக் காலத்து 'பீம்சிங்' மற்றும் 'கே.எஸ் கோபாலகிருஷ்ணன்' காலத்து பாணி குடும்பப் பாங்கான படங்களையே மறுபடி தூசிதட்டிக் கொடுத்திருக்கிறார் எனும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதாநாயக ஆதிக்க ஆக்ஷன் படங்களையே அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிற சமகால சூழ்நிலைக்கு இந்தப் படம் வித்தியாசமாய்க் காட்சியளித்தாலும் உள்ளடக்கத்தில் எந்தவித வித்தியாசமுமில்லை. அடுத்த படத்தை 'அண்ணன் தங்கை' பாசமலராக சேரன் எடுக்காமல் இதிலிருந்து இன்னொரு கோணத்தில் சிறப்பான படத்தைத் தருவார் என்று நம்புவோம். அவரால் அது நிச்சயம் இயலும்.

'ஆட்டோகிராப்' தந்த விருதுகளின் வெற்றி மயக்கத்தில் அதே மாதிரியானதொரு படத்தைத் தந்து இன்னும் அதிக விருதுகளுக்காக 'தவமாய் தவமிருக்கும்' சேரன் விழித்தெழுந்து தன்னுடைய இயல்பு பாணிக்கு மாற எல்லாம் வல்ல இயற்கையைப் பிராத்திக்கிறேன்.


http://www.maraththadi.com/article.asp?id=2818


[size=18]சேரனின் `தவமாய் தவமிருந்து` - ச. திருமலை

ஆட்டோகிராஃப்பின் வெற்றி சேரனுக்கு மீண்டும் அதே நினைவோடை உத்தியைப் பயன்படுத்தத் தூண்டியுள்ளது. இந்த முறை அப்பாவின் பெருமை, தியாகம் எல்லாம் பழம் நினைவுகளாக மலருகிறது. அப்பாக்களைத் தமிழ் படவுலகம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. அம்மா செண்டிமென்ட் அளவுக்கு அப்பா செண்டிமென்ட் வொர்க் அவுட் ஆவதில்லை போலும். வியட்நாம் வீடு, எங்க ஊரு ராஜா, கௌரவம் போன்று ஒரு சில அப்பாப் படங்கள் வந்திருந்தாலும், அவையாவும் மிகைப் படுத்துப் பட்ட தமிழ் சினிமாக்களே.

த. தவமிருந்து தமிழ் சினிமாத்தனங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு யதார்த்ததிற்கு வெகு அருகில் எடுக்கப்பட்ட மற்றுமொரு படம். வழக்கமான தமிழ் சினிமா இலக்கணங்கள் அதிகமின்றி, சண்டை, டூயட், மரத்தைச் சுற்றி ஓடும் கூத்து, வில்லன், அடிதடி, அருவாள் ஏதும் இல்லாமல் வந்திருக்கும் மற்றொரு படம் என்பதால் வரவேற்கக் கூடிய ஒரு சினிமா. அந்தக் காலத்து பீம்சிங் பாணிக் கதையென்றாலும் கூட ஓரளவுக்கு நிஜ வாழ்வில் நாம் காணும் வாழ்விற்கும் காட்சிகளுக்கும் அருகில் எடுக்கப் பட்டிருப்பதில் இரு வழக்கமான தமிழ் படங்களில் இருந்து வேறுபடுகிறது. ஆறு, சிவகாசி, கில்லி, மதுர போன்ற அபத்தக் களஞ்சியங்களுக்கு நடுவே இயல்பான வாழ்க்கையை சித்தரிக்கும் இது போன்ற முயற்சிகள் அரிதாகவே வருகின்றன. இது போன்ற படங்களுக்கு அளிக்கும் வரவேற்பு இது போன்ற யதார்த்த முயற்சிகளுக்கு மேலும் உற்சாகமளிக்கும்.

திருவிழாக் கூட்டத்தில் தான் காண்பதைவிட தன் மகன் அதிகம் காண வேண்டும் என்ற நோக்கில் தன் மகனை தோளின் மீது ஏற்றி அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்பவன்தான் தந்தை. தனக்குத் தெரிந்ததை விட, தான் வாழ்ந்ததை விட, தன்னை விடச் சிறப்பாக தன் மகன் வாழவேண்டும் என்று நினைப்பவன் தான் தந்தை. அந்த இலட்சியத்தை அடைய ஒரு தந்தை படும் அவமானங்கள், வேதனைகள், இழப்புகள், உழைப்பு, ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் காண்பிப்பதுதான் இந்தத் திரைப்படம். ஒரு தந்தையின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து முக்கிய சம்பவங்களையும் காண்பிக்க முனைந்ததில் படம் நிறையவே நீளமாகி விட்டது. பிள்ளைகளை முதல் 25 வருடங்களாவது தன் தோளில் வைத்து சுமக்கும் தந்தையின் முக்கியத்துவம் பல தருணங்களில், பலருக்கும் புரிந்து விடுவதில்லை. மிக எளிதாக அந்த உழைப்பும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உணர்ந்து கொள்ளாத பிள்ளைகளால் நசுக்கப் பட்டு விடுகின்றன. ஒரு தந்தையின் தியாகமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அப்படி எளிதாகத் தள்ளி விடக்கூடியதல்ல என்ற உண்மையை, அதன் முக்கியத்துவத்தை உணர முடியாத அல்லது உணரத் தெரியாத இளைய தலைமுறையிடம் இந்தப் படம் ஒரு செய்தியாகக் கொண்டு செல்கிறது. மாறி வரும் காலங்களில் தந்தையின் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொல்லுவதற்குக் கூட நமக்கு சினிமா தேவைப்படத்தான் செய்கிறது. தந்தையின் அருமை ஒரு மனிதனின் நாற்பது வயதுக்கு மேல்தான் தெரிய வரும் என்பார்கள். இந்தப் படம் சற்று முன்பாகவே அந்த அருமையை உணர வைக்கிறது.

இதில் வரும் தந்தை கடுமையாக உழைக்கிறார். கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார். மகன்களின் எதிர்காலத்திற்காக கடுமையாக தன்னால் இயன்ற அனைத்து முதலீடுகளையும் செய்கிறார். அவரது இரு மகன்களும் அவரது எதிர்பார்ப்புகளை ஏமாற்றினாலும் ஒருவன் உணர்ந்து வந்து அவரது நம்பிக்கைகளுக்கு உயிரூட்டுகிறான். எல்லா அப்பாக்களும் பிள்ளைகளை வளர்க்க இது போல் கஷ்டப்படுவதில்லை. சொத்துள்ள அப்பாக்களும், வசதியான வேலைகளில் உள்ள அப்பாக்களும், வருமானம் உள்ள அப்பாக்களும் இந்த அளவிற்கு பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுவதில்லைதான். அது போன்று வாழ்க்கையை எளிதாகக் கடந்தவர்களுக்கு இந்தப் படத்தில் வரும் அப்பா பாத்திரம் கண்களை நனைக்கலாமே அன்றி நெஞ்சை நனைக்காது.

ஆனால் நம் நாட்டில் பெரும்பான்மையான அப்பாக்களின் நிலமை இதில் வருவது போல் அல்லது இதை விட மோசமான நிலைமையே. அது போன்ற அப்பாக்களின் தியாகத்தினால் வளர்ந்து நல்ல நிலமையில் இன்று இருக்கும் பிள்ளைகளால் இந்த அப்பாவை உணர முடியும். தத்தம் அப்பாக்களை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீராவது தலையணையை நனைத்து இருக்கும். பெரும்பாலான பிள்ளைகள் அப்பாவுடன் ஒரு தோழமை உணர்வை வளர்த்துக் கொள்வதில்லையாகையால் அப்பாக்களிடம் வாய்விட்டு எதையும் சொல்வதில்லை; அவர்களும் பிள்ளைகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாமலேயே வாழ்க்கையை முடித்தும் விடுகிறார்கள். ம.வே.சிவக்குமாரின் சிறுகதை ஒன்றில் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்ற பிள்ளையின் கதை ஒன்று இதை அழகாகச் சொல்லும். இந்தப் படத்தின் அப்பாவுக்கும் ஒரு சராசரி அப்பாவுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது என்பதால் இந்தச் சினிமாவின் அப்பாவின் வியர்வையும், கண்ணீரும், அவமானமும், நம்பிக்கையும் ஒவ்வொரு சராசரி மகனாலும் நெருக்கமாக உணர முடியும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே கடுமையாக உழைத்த ஒரு தொழிலாளியின் சராசரி மகன் என்ற வகையில் நானும் உணர்ந்தேன். அப்பாக்களின் தழும்புகள் பலருக்கும் காலம்கடந்துதான் புரிகின்றன. அதை காலகாலத்தில் புரிய வைக்க முயலும் இது போன்ற சினிமாக்கள் நம் சமுதாயத்திற்குத் தேவைதான். ஆனால் அதைக் கொஞ்சம் மெகா சீரியல் பாணியில் இழுத்துச் சொல்லியிருக்கிறார் சேரன்.

படத்தின் நிறை அதன் தெளிந்த கதையோட்டம்; திருப்பங்களும் திகில்களும் இல்லாத இயல்பான கதையோட்டம். ஆர்ட் டைரக்டர் மற்றும் மேக்கப்மேன்களின் சிரத்தை மிகுந்த உழைப்பு, காலத்தின் மாற்றங்களை மிகத் துல்லியமாகக் காட்ட அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள உழைப்பு தமிழ் திரையுலகம் கண்டறியாதது. படத்தின் காட்சிகளின் நம்பகத் தன்மையைக் காக்க பெரிதும் உழைத்திருக்கிறார்கள். பின்னணியில் ஒலிக்கும் திரையிசைப் பாடல்கள், உடைகள், ஃப்ரேம் செய்து தொங்கும் புகைப்படங்கள், உண்மையான வீடுகள், தெருக்கள், சுவர்கள், கிராமத்து முகங்கள், கடைத் தெருக்கள், சுவரில் ஒட்டப்பட்டுள்ள திரைப்படச் சுவரொட்டிகள், ஃபோட்டோ ஸ்டுடியோவில் தொங்கும் முத்துராமன், சுருளிராஜன் புகைப்படங்கள், இருட்டிலும் எரிச்சலூட்டும் ஒளிகள் இல்லாத படப்பிடிப்பு என்று ஏராளமான இடங்களைச் சொல்லலாம். தீபாவளிக்கு முந்திய இரவும், சென்னையில் மெர்குரி விளக்குகளில் இருந்து ஒழுகும் ஒளியும், இரவு நேரத்தில் சைக்கிள் பயணங்களும் பனை மரங்கள் சூழ்ந்த அந்தப் பாதையும் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. சென்னையில் அந்த இரவுக் காட்சியின் ஒளியமைப்பு அந்தத் தருணத்தின் உணர்ச்சியை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

அண்ணியாக வரும் பெண் நடிக்கவேயில்லை. ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஒரு மருமகளின் நடவடிக்கைகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உள்ளது. இது போன்ற இயல்பான நடிகர்களே தமிழ்ப் படங்களுக்கு ஒரு நேடிவிடியைக் கொடுக்கக் கூடியவர்கள். படத்தில் திறமையாக நடித்தவர்களில் அவர் முதலாவதாக வருகிறார். அடுத்து ராஜ் கிரண், வெகு இயல்பான நடிப்பு. மகன் தன்னிடம் இண்டர்வியூக்குப் போவதாகப் பொய் சொல்லும் நேரத்திலும், தான் கொடுக்கும் பணத்தை இடது கையில் வாங்கும் மருமகளிடம் படும் அவமானத்தையும், மகனின் நிலை கண்டு விரக்தியடைவதிலும், தீபாவளி முதல் இரவன்று பணத்திற்கு வழியில்லாமல் அசிரத்தையுடன் ஃபோனை எடுப்பதும் பின்னர் பதறிப் போய் ஓடிச்சென்று உதவியாளரை அழைத்து வருவதிலும் மனிதர் மிகப் பிரமாதமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சேரனுக்கு பல்வேறுபட்ட உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்த முடியாத ஒரு முக அமைப்பு. இருந்தாலும், ஊரை விட்டு ஓட பெற்றோரிடம் பொய் சொல்லிக் காசு வாங்கும் இடத்தில் அவர் குமுறும் இடம் குறிப்பிடத் தக்கது. சரண்யாவும் குறை வைக்கவில்லை. ஒரு சில இடங்கள் தவிர வெகு இயற்கை. தமிழ் சினிமாக்களின் ஹீரோயின்கள் என்பவர்கள் ஒரு ஃபேஷன் ஷோ மாடல்களே என்று இருக்கும் நிலைமையில் அருமையாக நடிக்கும் பத்மப்ரியா ஒரு நல்ல வரவு. கர்ப்பிணிப் பெண் போலவே நடந்து வருவது, வீட்டை நினைத்து நொறுங்குவது என்று தனக்குக் கொடுக்கப் பட்ட காட்சிகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்துள்ளார். மலையாளக் காழ்ச்சாவிலும் இந்தப் பெண் அற்புதமாக நடித்திருந்தார்.

படத்தின் நீளம் ஒரு குறையே. பல காட்சிகளை அறவே தவிர்த்து நீளத்தைக் குறைத்திருக்கலாம். சிறுவர்கள் அவசியம் காண வேண்டிய ஒரு திரைப்படத்தில், மழைப் பாடலையும், போர்வைக்குள் நடக்கும் மல்யுத்தக் காட்சியையும் அறவே தவிர்த்திருக்கலாம். குறிப்பாகக் காட்டியிருக்கலாம். காமம் வயப்படும் பொழுது கட்டாயம் மழை பெய்வது, அதில் கதாநாயகி தன் உடல் வளைவுகள் தெரிய நனைவது, ஒரு முறை சேர்ந்தவுடன் கருத்தரிப்பது, கருத்தரித்ததும் சென்னைக்குச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவது, ஓடிய ஜோடிகளுக்கு உதவ நண்பர்கள் தயாராக இருப்பது போன்ற தமிழ்ப் படவுலகின் எழுதப்படாத இலக்கணங்கள் பல தவறாமல் இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளன. பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை மிக நீளமாகக் காண்பிக்கிறார். ஜெனரல் செக்கப் செய்யப்படுகிறது என்பதை விளக்க கையில் இருந்து ப்ளட் டெஸ்டுக்கு ரத்தம் எடுத்து முடியும் வரை காண்பிக்கிறார்கள். சென்னைக் காட்சிகளும் தேவையில்லாத நீளம்.

இத்தனை ஜாக்கிரதையாக எடுத்த படத்தில் ஒரு சில நம்பகத்தன்மை குறைவான காட்சிகளும் உள்ளன. சென்னைக்கு ஓடிச் சென்றபின் ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பாசமுள்ள பெற்றோர்கள் தேடுவதேயில்லை அல்லது பாசமுள்ள மகன் தொடர்பு கொள்வதுமில்லை. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் மெக்கானிக்கல் படித்த ஒரு மாணவனுக்கு பத்து மாதங்களாக அச்சாபீஸ் வேலை தவிர வேறு எந்த வேலையும் அத்தாம் பெரிய சென்னைப் பட்டணத்தில் கிடைப்பதில்லை. மற்றெல்லா விபரங்களையும் மிகத் தெளிவாகக் காட்டுபவர்கள் மதுரையில் இருவரும் எங்கு வேலை செய்கிறார்கள் என்ற விபரத்தைச் சொல்வதில்லை. அதையும் காட்டியிருந்தால் நம்பகத்தன்மை இன்னும் கூடியிருக்கும். மதுரையில் பென்னர், டிவிஎஸ் என்று சொற்ப நிறுவனங்களே இன்னும் மிச்சமிருக்கின்றன. அது போலவே ஓடிப்போன பெண்ணின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதும் காண்பிக்கப் படுவதில்லை. தந்தை என்பவர் எவ்விதக் குறையும் இல்லாத ஒரு அப்பழுக்கற்ற குடும்பத் தலைவராக இருக்கிறார். க்ரூப் ஸ்டடியில் இருவரும் படிக்கும் இடத்தையும் கொஞ்சம் கவனமாகச் சொல்லியிருக்கலாம்.

சேரன் என்னதான் இளமையாக இருந்தாலும் +2 பாஸ் செய்த மாணவராக வருவதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். அந்தக் காலத்தில்தான் சிவாஜி, முத்துராமன், ஜெமினி எல்லாம் ரிட்டயர்டு வயதில் கல்லூரியில் பி ஏ படித்துக் கொண்டிருப்பார்கள். காதல் படம் வெற்றி பெற்றதில் இருந்து தமிழ் படக் கதைகள் எல்லாமே மதுரை மாநகரில்தான் துவங்குகிறது போலும். அதுதான் லேட்டஸ்ட் தமிழ் சினிமா செண்டி போலும், இவர்களும் அதற்குத் தப்பவில்லை. மதுரையில் கதை துவங்குவது, பஸ் பிடித்து சென்னைக்கு ஓடிப் போவது, அங்கு லோல்படுவது, பெற்றோரை நினைத்து நாயகி அழுவது, சென்னை மாந்தர்களின் மனிதாபிமானத்தைக் காட்டுவது என்று சமீபத்தில் காதல் படத்தில் வந்த பல காட்சிகள் இதிலும் ரீபீட் ஆகியுள்ளன. மகனால் தந்தைக்கு ஏற்படும் அவமானத்தை வேறு ஏதாவது சுருக்கமான சம்பவத்தின் மூலம் கதையமைத்து நீளத்தைச் சுருக்கியிருக்கலாம். அதைப் போல டிவி மெகா சீரியலின் இலக்கணங்களான சாவு வீட்டை விலாவாரியாகக் காண்பித்து உணர்ச்சியைத் தொடுவதும் இதில் மிக விரிவாக வருகிறது. பிணம், பாடை கட்டுவது, மொட்டை போடுவது, தூக்கிச் செல்வது, புதைப்பது என்று ஒன்று விடாமல் படத்தின் கடைசி பல நிமிடங்களில் காண்பித்துப் பொறுமையைச் சோதிக்கிறார்கள். இது போன்ற காட்சிகளைத் தவிர்த்து நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் நீளத்தை ஒரு அரை மணி நேரமாவது குறைத்திருக்கலாம். படம் முழுதாக சரியாக மூன்றரை மணி நேரம் ஓடுகிறது. உச்சரிப்புப் பிழைகள் மற்றொரு எரிச்சல். தீபாவளிக்குக் கஷ்டப்படுவதாலோ என்னவோ தீபாவலி தீபாவலி என்று வலிக்கிறார் சேரன். அது போல பாடகர்களுக்கும், நடிகர்களுக்கும் தமிழில் ளகரம், ழகரம் இருக்கும் விபரமே அறிந்திருக்கவில்லை எல்லாவற்றிற்கும் ஒரே 'ல'கரம்தான்.

இது போன்ற சிறு குறைகள் தவிர ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் கவனத்துடன் எடுக்கப்பட்ட, தமிழ்ப் படங்களின் வழக்கமான எரிச்சல்கள் அற்ற ஒரு திரைப்படம் தவமாய் தவமிருந்து.


http://www.maraththadi.com/article.asp?id=2822

[size=18]தவமாய் தவமிருந்து

சிவகாசியின் பட்டாசு சத்தங்களும், ஆங்கிலப்படங்களிலிருந்து தமிழ் சினிமாப்படுத்தப்பட்ட சினிமாக்களும் திரையரங்குகளில் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தந்தை மகன் உறவை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க தில் வேண்டும். அது சேரனுக்கு இருக்கிறது! தவமாய் தவமிருந்து வரவேற்க வேண்டிய படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், சேரனின் இந்த முயற்சியில் ஒரு முழுமை இல்லை என்பது தான் எனது விமர்சனம்.


ஆட்டோகிராப்பின் சாயலிலேயே ஒருவன் தனது வாழ்வைத் திரும்பிப்பார்க்கும் படமாகத் தான் இதுவும் தொடங்குகிறது. ராஜ்கிரண் இளமையான தோற்றத்தோடு, இரண்டு சிறுவர்களை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்வதும், கருப்பண்ணசாமிக்காக வண்டியை நிறுத்தி கன்னத்தில் போட்டுக்கொள்வதுமாய்…ஒரு இயற்கையான யதார்த்தத்தோடு படம் அம்சமாய் துவங்குகிறது. ராஜ்கிரணின் நடிப்பில் பிளந்து கட்டியிருக்கிறார். அவரது ஒரு அசைவிலாவது, படம் பார்ப்பவர்களின் தந்தையை எங்காவது நினைவுபடுத்தக் கூடும். இரண்டு பிள்ளைகளையும் அவர் வளர்க்கும் விதமே அலாதியானது. வறுமை தாண்டவமாடும் ஒரு வீட்டில், பிள்ளைகளுக்குக் கொடுக்கும் செல்லமானது வறுமையை மறக்கச் செய்யும் சக்தி கொண்டது…ராமநாதனுக்கும், ராமலிங்கத்துக்கும் வறுமை பாசத்தினாலும், செல்லத்தினாலும் மறக்கடிக்கப்படுகிறது.


இவர்களின் வாழ்க்கைப் பயணம் ஒவ்வொரு படியாக நமக்குக் காண்பிக்கப்படுகிறது. குறிப்பாக, ராமநாதன் ஹாஸ்டலில் சேர்க்கப்படும் போது, என்னையுமறியாமல் கண்களில் நீர் தளும்பியது. ஏனெனில், நெய்வேலி ஹாஸ்டலில் என்னை சேர்க்கும் போது, எனது குடும்பத்தினரை சேரன் எட்டி நின்று பார்த்து படம் பிடித்தது போல, ஒரு மூலையில் கிடந்த நினைவுகளை கிளறி விட்டது அந்தக் காட்சி. இந்தத் தருணம் வரை, சரியாகப் போய்க்கொண்டிருந்த படம்…சேரன் எனும் இயக்குனர் போய், நடிகர் வர ஆரம்பித்ததும் தடம் புரள ஆரம்பிக்கிறது. தன்னைப் பிரதானப்படுத்த வேண்டும் என்ற ஆசையா அல்லது காதல் காட்சிகள் தான் வியாபார நிர்ப்பந்தங்களை அமைதிப்படுத்தும் ஒரே ஆயுதமா என்று தெரியவில்லை…ஆட்டோகிராப்தனமான கோபிகா-சேரன் காட்சிகளே, இங்கு பத்மப்ரியா-சேரன் காட்சிகளாக சின்ன சின்ன மாற்றங்களோடு கண்களின் முன்னால் விரிவடைகிறது. சிற்சில காட்சிகள் ரசிக்க முடியாமல் இல்லை….ஆனால், அலுப்பேற்படுத்தும் விதமாக அவர்களின் காதல் காட்சிகள் நீ….ண்டு கொண்டு, தந்தை-மகன் மையத்தைத் தாண்டி பயணிக்க ஆரம்பிப்பது தான் சறுக்கல்!


முதல் மருமகளாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகை, கச்சிதமாய் பாத்திரத்தில் பொருந்துகிறார். அவரின் ஒவ்வொரு அசைவுகளும், பொறாமைத் தனமான பார்வைகளும் நமது வாழ்வில் எங்காவது பார்த்திருக்கும் ஒரு சிலரின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார். சரண்யாவுக்கு நல்ல வேடம்…சொல்லப்போனால், நாயகன், மனசுக்குள் மத்தாப்புக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியானதொரு வேடத்தில் நடித்திருக்கிறார். பத்மப்ரியா, ஒரு நல்ல வரவு. நிறைய அழுகிறார், சேரனோடு காதல் புரிகிறார்…பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பில்லையென்றாலும், ஒரு பாந்தமான பாத்திரம். சேரனின் அண்ணனாய் நடித்திருப்பவர், ஒரு அருமையான கண்டுபிடிப்பு. மனுஷர், மனசு மனைவிக்கும், தந்தை தாய்க்கும் இடையில் அல்லாடுவதையும், படிப்பு கம்மியானதில் சம்பளமும் கம்மியாகி, சகோதரனின் வாழ்விற்கும் தனக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்குத் தந்தை தான் காரணமென்று கடிந்து கொள்ளும் ஒரு மகனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.


சேரனின் நடிப்பு குறித்து…வயிறு குலுங்க, முகம் புதைத்து அழும் பாணி மிக அலுத்து விட்டது சேரன் சார். ஆட்டோகிராப்பில் யாரும் நடிக்க முன் வரவில்லையென்பதால், நீங்கள் நடித்ததில் ஒரு அர்த்தமிருந்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகு எல்லா நடிகர்களும் உங்களின் படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள் என்று தெரிந்தும், நீங்களே நடிக்க முற்படுவது ஏனென்று தெரியவில்லை?! இயக்குனராக நீங்கள் செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள், இந்த ஆசையினால்….கொஞ்சம் பின் தங்கிப்போகிறதென்பது உங்களின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு ரசிகனாக எனது ஆதங்கம். குறிப்பாக, அந்தப் பெண் அழுவதற்கு முன்னாலேயே, நீங்கள் முணுக்கென்று பல சமயங்களில் அழ ஆரம்பிப்பது, கதாபாத்திரத்தின் மேல் (எனக்கு) பச்சாதாபத்தை ஏற்படுத்தவில்லை!


படத்தில் 1970 காலகட்டம் என்று காட்டப்படும் ஒரு காட்சியில், சாலையோரத்தில் துணி விற்பவர் ஒரு சிறுவனின் சட்டைக்கு முந்நூற்றும்பைது ரூபாய் என்று சொல்வது இடிக்கிறது. அப்போதைய விலைவாசிக்கு, அது கொஞ்சம் இல்லை… நிறையவே அதிகம். (இதனால் எல்லாம் படம் எதிலும் பாதிக்கப்படவில்லை…ஆனால், ஆட்டோகிராப்பில் பார்த்து பார்த்து செய்யப்பட்ட ‘பீரியட்’ விஷயங்கள், இதில் கொஞ்சம் அகஸ்மாத்துத்தனத்தோடு கையாளப்பட்டிருக்கிறது). படத்தில் எல்லாரையும் புறம் தள்ளி விட்டு, நடிப்பில் கொடி கட்டிப் பறப்பவர் ராஜ்கிரண் தான். மகனைப் பார்ப்பதற்காக, வெள்ளை வேட்டி சட்டையோடும், நிறைய தாடியோடும் தூளியில் இருக்கும் குழந்தையின் அருகே உட்கார்ந்தபடி, சேரன் வந்ததும் அமைதியாக ‘ஏம்பா…இப்படிப் பண்ணே?’ என்று சதாரணமாய் கேட்குமிடத்து, அந்தப் பெரியவரின் மென்மையான அணுகுமுறையும், பாசமான முதிர்ச்சியும் நெஞ்சைத் தொடுகிறது.


படத்தின் கடைசி காட்சியில் குழந்தைகள் தாத்தா பாட்டியைப் பற்றி படிப்பது, பார்க்க நன்றாயிருந்தாலும்…செயற்கையாய் இருக்கிறது. 2005ல் குழந்தைகள் உட்கார்ந்து தாத்தா பாட்டியைப் பற்றிய பாடத்தையெல்லாம் வரிசையாக உட்கார்ந்து கொண்டு படிப்பார்களா…இல்லை அப்படிப் படித்தால் தான் அவர்களைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடியுமா? அதை விட, பேரனும் பேத்தியும் தாத்தா பாட்டி போல் வேடமணிந்து கிண்டலடிப்பதில், ஒரு அன்யோன்யமும், யதார்த்தமும்,பாசமும் இருந்தது.


ஆக மொத்தம், படத்தில் சில விஷயங்கள் சரியில்லை…பல விஷயங்கள் நன்றாக இருந்தது. சேரனிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்க வேண்டிய விஷயங்களிருக்கிறது. ஒரு வேளை இது முதலில் வந்து, ஆட்டோகிராப் இப்போது வந்திருந்தால்…எனது எதிர்பார்ப்புகளுக்கான சரியான விஷயமாய் இருந்திருக்குமோ என்னமோ?


படத்தின் இசை, வெகு சுமார். இளையராஜா இந்தப் படத்துக்கு இன்னும் உயிர் கொடுத்திருப்பார் என்ற எண்ணம் எனக்குத் திரையரங்கில் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை! ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு..புகுந்து விளையாடியிருக்கிறார். ஆனால், படத்தில் சில காட்சிகள் மட்டுமே எச்.டியில் படமாக்கப்பட்டிருக்கிறது, அவை எவை என்பதும் வெளிப்படையாய் தெரிகிறது. ஆனால், எச்.டி என்பதால் பல காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, படத்தொகுப்பின் மூலம் விளையாடியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.


தவமாய் தவமிருந்து…திரையில் ஒரு நாவல், சிற்சில எழுத்துப் பிழைகளோடு!

- அருண் வைத்யநாதன்

http://arunhere.com/pathivu/?p=141
enrum anpudan
Reply
#9
நல்ல படம் என்று சொல்வதால் ஒரிஜினல் கொப்பி கிடைத்ததும் பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)