Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படி இலக்குகள் எட்டப்பட்டனவோ அப்படி அடைவதே வழி
#1
தென்னிலங்கையில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல், இப்போது எல்லாப் பொருட்களையும் நிகழ்வுகளையும் மேற்கோள் களையும் தனக்கான பரப்புரைக்குரியதாக மாற்றி இருக்கின்றது. பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தத்தம் எதிராளிகளை சகல வளங்களையும் வார்த்தைகளையும் பிரயோகித்து எதிர்கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் முன் வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடங்கி அவரது உரைகள், நடத்தைகள், கடந்த காலம் எல்லாம் அரசியலுக்காக மேடைகளில் சல்லடை போடப்படுகின்றன. இதன் மூலம் அவர் இவ்வாறு நாட்டை நாசமாக்கப் போகின்றார், இத்தகைய செயலைச் செய்தவரா நாட்டை ஆளப் போகின்றார், அமைதியை நிலை நாட்டப் போகின்றார் என்றவாறாக விளாசித் தள்ளப்படுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் நியாய ப+ர்வமாக விமர்சனம் செய்யும் ஒருவருக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் எந்த விதத்திலும் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர் அல்ல என்பது தெளிவாகும். தமிழ் மக்களின் நோக்கு நிலையில் எந்த விமோசனத்தையும் தரச்சித்தம் இல்லாத தன்மையிலும் சிங்கள நோக்கு நிலையில் தமது பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் இருந்து விடுபடாத உறுதிப்பாட்டிலும் இருவரும் ஒரே எடையில்தான் இருக்கின்றார்கள்.

அவரவரின் அணுகுமுறைகளில் இருக்கும் வேறுபாட்டைத் தவிர எல்லாம் ஒன்றுதான். இது சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தல் என்ற வகையில் அவர்கள் தமக்குள் இழுபறிப்படுகின்றார்கள் என்று கருதினாலும், அடிப்படையில் அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பணயம் வைத்துத்தான் மோதுகின்றார்கள் என்பது அசட்டை செய்யக் கூடியதல்ல.

இரு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் ஆதாயத்துக்காகவும் அதிகார மோகத்துக்காகவும் தமிழ் மக்களாகிய எம்மைத்தான் வார்த்தைகளிலும் செயலிலும் போட்டு உதைக்கின்றனர் என்பது நிராகரிக்கப்படக்கூடியதல்ல.

தமிழர் சேனை இன்று அடைந்திருக்கின்ற ஒடுக்கிவிட இயலாத பலத்தின் காரணமாகவும் பெற்றிருக்கும் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும் நேரடியாக மிதித்து தேர்தல் அரசியல் நடத்த முடியாதிருக்கின்றதே தவிர வார்த்தைகளிலும் அதற்கு சமமான கலாசார யுத்தத்திலும் நிழல் யுத்தத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இது விடயத்தில் இரு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈடுபடுகின்றன என்றால் அதற்கு எந்த விதத்திலும் சளைக்காமல் சில ஒட்டுக்குழுக்களும் செயற்படுகின்றமைதான் விசனத்துக்குரியது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய சிங்கள இனவாதத்தை புதிய ஆவணமாக தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்திருக்கும் மகிந்தவுக்காக வார்த்தையாடும் தமிழ்க் கட்சியொன்று?, அறவே தமிழ் மக்களால் ஏற்க இயலாததை ஏற்கச் செய்யவேண்டும் என்பதற்காக தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான தகவல்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

சிறிலங்கா படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்படும் தேர்தலை இலக்கு வைத்த வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்கி அவர்களை ரணிலின் ஆதரவாளர்கள் போல சித்தரித்து எதிர் மனோபாவத்தை உருவாக்க துடிக்கின்றது.

இதில் உள்ள மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படுகின்ற சீரழிவுகள், படுகொலைகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான குற்றவாளிகளாக விடுதலைப் புலிகளையே சித்திரிக்க முயல்கின்றமைதான்.

சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள், தோற்றுவித்த புதைகுழிகள், மக்கள் வாழ்வுக்கு மறுக்கப்பட்ட பிரதேசங்கள் எல்லாவற்றுக்கும் சில சமயம் இனக்கலவரத்துக்கும் கூட விடுதலைப்புலிகள் தான் காரணமாக இருந்தார்கள் என்ற விதமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றின் மூலமாக தமிழ் மக்களை இத்தனை அவலங்களும் கடந்த பதினொரு ஆண்டுகளாக நிகழக் காரணமான ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரும் துரோகத்தனம் பற்றி தமிழ் மக்கள் எள்ளி நகையாடுவதைத் தவிர, அதனை எதிர்கொள்ளத் தலைப்படுவதைத் தவிர வேறு வழியிருக்காது.

குறிப்பாக தமிழ் மக்களின் கலாசார தளமென எண்ணப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளும் அந்நிய புலனாய்வு சக்திகளும் ஊடுருவவிட்டிருக்கும் கலாசார சீரழிவுகளுக்கு ஆதரவளிக்கும் போக்கும் அதற்கெதிராக குரல் கொடுப்போர், செயற்படுவோர் யாவரையும் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதும் இப்போது தேர்தல் அரசியலாகவே தீவிரம் பெற்றிருக்கின்றன.

அண்மைய நாள்களாக வீதிகளில் நின்று சாமானிய மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் - இளம்பெண்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவரும் சிறிலங்கா படைகளின் ஆதரவுடன் செயற்படும் குழுக்கள் நையப்புடைக்கப்படுகின்றன. ஒரு விழிப்புணர்வு அமைப்பாகவே திரண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் மேற்கொள்ளும் இந்த எதிர் நடவடிக்கையை திசைதிருப்பி அவர்களை மோசமான அடிதடிக்காரர்களாக சித்திரிக்கும் சின்னத்தனத்தை மேற்கொள்வதன் மூலம் எதனை வெளிக்காட்டுகின்றன?

அரச பயங்கரவாதத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக திரண்டெழுந்து போராடத் தலைப்பட்ட தமிழர் சேனையை பயங்கரவாதம் என்று சர்வதேச சமூகத்தில் சிறிலங்கா அரசு சித்தரித்ததற்கு சமமாக இந்த தமிழ் மக்களின் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளை விபரிப்பது மிக அப்பட்டமாக அவர்களை இனங்காட்டவே செய்கின்றன.

திடமாகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் மிக மலினமாக அவர்களிடம் மகிந்தவுக்காக வாக்கு வேட்டையாடப் புறப்பட்டிருப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நலனையும் அன்றாட வாழ்வியல் நலனையும் வியாபாரம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த ஆட்சியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், அது பற்றி எந்த வார்த்தைகளும் உறுதிமொழிகளும் தரத் திராணியற்று, தமிழர்கள் மீதே அவர்களின் தலைவிதி இதுதான் என்பது போல பழிசுமத்தும் வக்கிரத்தை தமிழ் மக்கள் சரியாகவே இனங்கண்டு கொள்வார்கள்.

அதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்கள் எதிலும் குறைந்தவர்கள் என்று அர்த்தப்படாது. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தமிழ் மக்களிடம் வாக்குகளைச் சேகரித்த மகேஸ்வரன் கூட இன்று அக்கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி எதிராகச் செயற்பட்டு வருவது ஒன்றே இதற்குப் போதுமான எடுத்துக் காட்டாகும். மிகப் பி;ந்திய உதாரணமாக அவசர காலச் சட்டம் அப்பாவித் தமிழ் மக்களை இலக்க வைத்து கொண்டுவரப்பட்டது என்பதை கூறிக் கூறியே சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அதற்கு இரண்டாவது தடவையாகவும் ஆதரவளித்துள்ளது.

மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எந்த விதத்திலும் வேறுபாடில்லாத கொள்கைகளையே வேறுவழிகளில், வேறு வார்த்தைகளில் முன் வைத்திருக்கும் ரணில், தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தான் விற்பனைப் பொருளாக்குகின்றார். மிக எளிதாக கடந்த மூன்றாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமின்றி அமுலில் இருக்கும் போர் நிறுத்தத்தை பிரதான வாக்குப் பொறுக்கும் பெட்டியாக கையாளுகின்றார்.

குறைந்த பட்சம் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிக்க உருவான பொதுக் கட்டமைப்புக்காகவோ, அல்லது ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புனர்வாழ்வளிக்க முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்காகவோ, திடமாக குரல்கொடுக்க திராணியற்றுத் தான் இது வரையும் இருக்கின்றார். அவரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய இந்த அற்ப விடயத்துக்காக குரல் கொடுப்பது அதிக சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மற்றவருக்கு வழங்கிவிடுவதாக அமைந்துவிடும் என்ற அச்சம் கொண்ட மனப்பாங்குதான் உள்ளது.

இந்த விசித்திரத்தில் அவர் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனத்தின் வரிகளை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது விவேகமற்ற ஒன்றேயாகும். ஆனால், அவர்கள் இரு பகுதியினரும் தமிழ் மக்களை நோக்கி குறிப்பாக தமிழர் சேனையின் நிர்வாகப் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரப் போவதாக பிரயத்தனப்படுகின்றார்கள்.

இது விடயத்தில் நாம் முன்னுணரக் கூடிய ஒரு விடயம் உள்ளது. தமிழர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாக்குச் சாவடிகளை நிறுவுமளவுக்கு அவர்களை நியாயமாக வாக்களிக்கும் உரிமையையே மறுப்பவர்கள் தமிழர்களை வருத்திப் பெறும் வாக்கில் எதனை அள்ளித் தந்துவிடப் போகின்றார்கள்?

ஆக, இந்த தேர்தலினால் ஆவதொன்றுமில்லை@ வல்லமை வகுத்த வழியில் செயற்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை வரை எப்படி எப்படி தமிழர்களின் இலக்குகள் எட்டப்பட்டனவோ அப்படி அப்படி அடைவது தான் புத்திசாலித்தனமானது.

-ஞாபகன்


நன்றி
http://www.battieezhanatham.com
Reply
#2
தகவலுக்கு நன்றிகள் வதனா

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)