Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ மீட்பு நிதிக்கடன்
#1
13 வருட தொடர்ச்சியான இடப்பெயர்விற்குள்ளும் மண்மீட்புக் கடன் தொடர்பான எமது ஆவணங்களைப் பாதுகாத்து கடனை மீளளிக்கும் நிதித்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு வியக்க வைக்கிறது


13 ஆண்டு காலமாக நிகழ்ந்த பல இடப்பெயர்வுகளுக்குள்ளும் யுத்த பாதிப்பிற்குள்ளும் எமது தமிழீழ மீட்பு நிதிக்கடன் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து இன்று கணனி மயப்படுத்தப்பட்ட முறையிலான நிர்வாக கட்டமைப்பின் ஊடாக அவற்றை மீளளிப்பது தமிழீழ நிதித்துறையின் சிறந்த நிர்வாக கட்டமைப்பை எடுத்துக் காட்டுகின்றது என கிளிநொச்சி திருநகர் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட திட்டமிடலாளராக பணிபுரியும் திரு.கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ மீட்பு நிதிக் கடன் மீளளிப்பு தொடர்பாக தனது கருத்தை எமது செய்தியாளருக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த கடன் மீளளிப்பானது குலுக்கலடிப்படையிலும் அகவை மூப்பின் அடிப்படையிலும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நான் குலுக்கல் முறையிலும் எனது தாயார் வயது மூப்பின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். 1993ம் ஆண்டு காலப்பகுதியில் எங்களுடைய பிரதேசத்தில் இருந்து தமிழீழ மண்மீட்பு நிதி இத்தேசத்தினுடைய நிதிப்பற்றாக்குறை காரணமாக மக்களிடமும் கோரப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு விதமான எல்லாத்தரப்பு மக்களும் பங்களிப்பு செய்து தங்களாலான பங்களிப்பினை காட்டினார்கள். அதில் இரண்டு விதமான பங்களிப்பினை குறிப்பிட முடியும் இரண்டு பவுன் 21 கரட் தங்கம் பெறப்பட்டது. அவ்வாறு பெற்றவர்களிடம் இருந்து 2பவுன் 23 கரட் தங்கம் மீளளிப்பு செய்யப்படுகின்றது. அதே போல் அப்பொழுது 10,000 ரூபா செலுத்தியவர்களுக்கு இப்பொழுது 22,800 ரூபாவாக மீளளிப்பு செய்யப்படுகின்றது. இந்த அடிப்படையில் மண்மீட்பு நிதியை மீளப்பெறுவதென்னும் நோக்கத்துடன் உண்மையில் யாருமே அந்தக் காலப்பகுதியில் இதைக் கொடுக்கவில்லை. நாங்களும் கூட தேசிய பங்களிப்பாக அப்போது முடக்கப்பட்டிருந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகத் தான் இந்த மண்மீட்பு நிதி பங்களிப்பை செய்தோம். இன்று அந்த நிதியை மீளளிக்கின்ற தன்மையை அல்லது அந்த நாணயத்தன்மையை நினைக்கின்ற பொழுது உண்மையிலேயே நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

அன்று எம்மால் இவ் மண்மீட்பு நிதி கையளிக்கும் போது எம்மில் இருந்து பெறப்பட்ட பதிவுகள் 1993 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்று வரை பல்வேறு யுத்த நெருக்குவாரங்களுக்கு மத்தியில் 13 வருட காலப்பகுதிகளாக அந்த ஆவணங்களை பாதுகாத்து அதே ஆவணங்களைக் கொண்டு சிறந்த ஒழுங்கு படுத்தலுடன் உரியவர்களுக்கு மீளளிக்கின்றார்கள். அதேநேரம் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்த காலப்பகுதிகளில் சிலர் மண்மீட்பு நிதிக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களை தவறவிட்டிருந்தார்கள். சிலர் இவ்மண்மீட்பு நிதி கையளித்தவர்கள் யுத்த காலப்பகுதியில் இறந்து போயிருந்தார்கள். அவர்களிற்குமான கடன் மீளளிப்பினை தம்மிடம் உள்ள பதிவுகளைக் கொண்டு மேற்கொண்டு வருகின்றார்கள்.

உண்மையிலேயே இவையனைத்தையும் பார்க்கின்ற போது நிதித்துறையின் நிர்வாக அமைப்பை உண்மையாகவே மெச்சுகிறோம். எமது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் புூரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் மூன்று ஆண்டுகளாக அகதிகளாக தங்கியிருந்து விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கைகளின் பின் மீளவும் எமது பிரதேசங்களுக்கு திரும்பியிருக்கிறோம். இவ்வளவு காலத்திற்குள்ளும் இந்த ஆவணங்கள் ஒழுங்குமுறைப்படுத்தி கணனி மயப்படுத்தப்பட்ட நிலையில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்ற நிலை உண்மையில் நிதித்துறை நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மிகமுக்கியமான முன்னேற்றம் என்று தான் நாங்கள் இதனைக் கருதுகின்றோம்.

இவ் மண்மீட்பு நிதி மீளளிப்பு தொடர்பாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்; அனைத்தும் முற்கூட்டியே உள்ளுர் பத்திரிகைகள் அனைத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன் எமது முகவரிகளுக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்த நிர்வாக ஏற்பாடுகள் மிகத்தரமான செயற்பாடு என்று கருதுகிறேன்.

அத்துடன் இந்த மூப்பின் அடிப்படையில் 60வயதிற்குமேல் உடனடியாக தெரிவு செய்யப்பட்டு மீட்பு நிதிக்கடன் மீளளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல முதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)