[size=15]<b>மஜுலா சிங்கப்புரா</b>
- எம்.கே.குமார்
புரட்சிக்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமெனில் அதில் கம்யூனிஸ்ட்டுகளின் பெயர்கள் முக்கிய இடத்திலிருக்கும். கம்யூனிஸ்ட்டுகளை விட்டுவிட்டு நாம் புரட்சி பற்றியோ மறுமலர்ச்சி பற்றியோ பேசிக்கொண்டிருக்க முடியாது. நல்லதோ கெட்டதோ அவைகளில் அவர்களின் பங்கு மிக அதிகம்! கம்யூனிஸ்ட்டுகளுக்கு போராட்டத்தில் எவ்வளவு போர்க்குணம் இருந்ததோ அதே அளவிற்கு உலகம் முழுவதும் அதை அடக்குவதில் அமெரிக்கர்களுக்கு அளப்பரிய ஆர்வம் இருந்தது. ஆர்வம், கியூபாவிலிருந்து தொடர்ந்தது; தொடர்கிறது.
அமெரிக்காவின் அரசில், உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர், சம்பவம் நடந்து இருபத்தைந்து வருடங்கள் கழித்து மெதுவாக ஒரு கேள்விக்கு பதிலைச்சொன்னார். "அது உண்மைதான்! பனிரெண்டு வருடங்கள் வியட்நாமில் நடைபெற்ற போராட்டத்தில் இறந்தவர்களை விட ஐந்து மடங்கு அதிகமானோர் வெறும் நான்கு மாதத்தில் அங்கு இறந்தார்கள். அரசாங்கம் அப்போது கோரத்தாண்டவம் ஆடியது. இந்த நூற்றாண்டின் மிகக்கொடுமையான கொலைகளில் அதுவும் ஒன்று!" என்று.
எங்கே நடந்தது இந்த கோரம்? மனித உயிர்களை மலிவாக புழு பூச்சிகளைப்போல கொன்று குவிப்பதற்கு யார் அதிகாரம் தந்தது அவர்களுக்கு?
அவர் சொன்னது 1965 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி பற்றியது.
'பி.கே.ஐ' எனப்படும் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி (பார்ட்டாய் கொம்யூனோ இந்தோனேசியா) அசுரபலத்தோடு வீறுகொண்டு திளைத்திருந்த நேரம். இந்தோனேசியா தவிர மற்ற அருகாமை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே நாடுகளிலும் எழுச்சி பெற்று விளங்கிய மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அது ஆழமான உறவு கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அது அரசாங்கத்தின் தோளோடு இணைந்து மலேசியா கூட்டமைப்பை, ஆயுதங்கள், இனக்கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் தீவிரவாத பயிற்சிகளின் வழியாக இந்தோனேசியா அதிபர் திரு. சுகர்னோவின் ஆசியோடு எதிர்த்துகொண்டும் தாக்கிக்கொண்டும் வந்தது. சிங்கப்பூரும் அக்கூட்டமைப்பில் ஒன்றல்லவா? எப்படி விதிவிலக்காக முடியும்?
1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபிறகு அத்தகைய நடவடிக்கைகள் சிங்கப்பூரில் இன்னும் அதிகமாயின. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வைக்கப்பட்ட முதல் குண்டுக்கு முன்பே, இந்தோனேசியா அரசு மற்றும் இந்தோனேசிய, மலாயா கம்யூனிச சக்திகளின் துரோகங்களுக்கு சிங்கப்பூர் பலியாகி வந்தது. 'சீனர்கள் அதிகமாக வாழும் மலாயாவின் ஒரு பகுதியான சிங்கப்பூரில்' இனக்கலவரங்களை வளர்ப்பது பெட்ரோல் பங்கில் ஒரே ஒரு தீக்குச்சி கொளுத்திப்போடுவதைப்போல மிகவும் எளிதான வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே அவர்கள் இனக்கலவரங்களை மெதுவாக இங்கே வளர்த்துவிட முடிவு செய்து அவர்களுக்கு அங்கே பயிற்சிகொடுத்து வந்தார்கள்.
அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்று 'ஏதோ பாவம் என்னால் முடிந்தது' என்று இரண்டு குண்டுகளையோ அல்லது நான்கு கொலைகளையோ செய்துவிட்டுப் போவார்கள். அப்படி, எல்லை தாண்டி ஊடுருவுவதும் நாசவேலைகளில் ஈடுபடுவதும் தொழிற்சங்கங்களை மூளைச்சலவை செய்து நீண்ட வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் நடத்தி வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நஷ்டங்களை ஏற்படுத்துவதை ஒரு தொழிலாகவே அவர்கள் செய்து வந்தனர்.
1960 முதல் 1965 ஆம் ஆண்டு வரை இருபக்கமும் இடிகளை வாங்கி மிகுந்த துயரங்களையும் கஷ்டங்களையும் அடைந்திருந்தார் திரு. லீ குவான் யூ அவர்கள். எழுபத்தைந்து சதவீதம் சீனர்களைக் கொண்ட சிங்கப்பூரை மலாய் (முஸ்லீம்) மக்களை அதிகம் கொண்ட மலேசியா நாட்டிலிருந்து தனியே பிரித்து விரட்ட மலேசியா அரசாங்கம் இடைவிடாது தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருக்க, சிங்கப்பூரை கொஞ்சம் கூட வளர விடக்கூடாது; பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதை தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என மறுமுனையில் இந்தோனேசியா அரசும் கம்யூனிச சக்திகளும் போராடிக்கொண்டிருக்க அவற்றுக்கு நடுவே மக்களை நம்பி தனிமனிதனாய் திரு. லீ குவான் யூ அவர்கள் இருந்தார்.
மலேசியா என்ற ஒருங்கிணைக்கப்பட்ட நாடு உருவானதில் விருப்பமில்லாத இந்தோனேசியா அரசு, சாபா மற்றும் சரவா பகுதிகளில் தொடர்ந்து தமது ராணுவத்தை ஊடுருவச்செய்தது. மலாயாவின் தென் பகுதியான ஜோகூரிலும் அப்படைகள் தரையிறங்கின. 'இத்துனூண்டு' சிங்கப்பூருக்கு 'இம்மாம் பெரிய' படைகளை அனுப்பியா சாதிக்கவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ, தீவிரவாத செயல்களில் பயிற்சி பெற்றவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார் திரு. சுகர்னோ. கரையோரக் காவலையும் தாண்டி அவ்வாறு சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தங்கள் காரியத்தில் கண்ணாய் இருந்தனர்.
1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 29 குண்டுவெடிப்புச்சம்பவங்கள் சிங்கப்பூரில் நடந்து முடிந்தன. ஆங்காங்கு இனக்கலவரங்களும் மூளும் சூழ்நிலையில் நாடு இருக்க, அடுத்த குண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் இருந்த மெக்டொனால்ட் ஹவுஸில் வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் இறந்தனர்; முப்பத்துமூன்று பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே ஜோகூரில் வந்து இறங்கிய இந்தோனேசிய தரைப்படையை எதிர்க்க சிங்கப்பூர் அனுப்பிய காலாட்படையில் எட்டு சிங்கப்பூர் வீரர்கள் இறந்துபோனார்கள்.
என்ன செய்வது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் தீவிரவாதத்தின் உண்மைமுகம் அதற்கு கைகொடுத்தது. தலை வெடிக்கச்செய்யும் வரம் வாங்கியவன் தன் தலையிலேயே தொட்டு வெடித்துச்சாவதைப்போல ஒரு சிக்கலில் மாட்டினார் இந்தோனேசியா அதிபர் திரு. சுகர்னோ. இந்தோனேசியா அரசால் வளர்த்துவிடப்பட்ட, அவர்களாலே எல்லாவித பயிற்சியும் கொடுக்கப்பட்ட தீவிரவாத கம்யூனிஸ்ட்டுகளும் பி.கே.ஐ எனப்படும் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிபருக்கெதிராக புரட்சியில் இறங்கினர். அதிபரின் ஆதரவு, அரசாங்கதேவைகள் எல்லாம் அவர்கள் 'வயதுக்கு' வரும் வரைக்கும் தான் என்பது அப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கும்.
அதுதான் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி நடந்த கலவரம். 'ஆறு உயர் ராணுவ அதிகாரி'கள் கொல்லப்பட்ட அன்றிலிருந்த புரட்சி ஆரம்பமானது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவான அரசாங்க அதிகாரிகளும் இராணுவத்தினரும் அவர்களுக்கு உதவி செய்ய, பி.கே.ஐ கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் முன்னேறினர். அப்போதுதான் வந்தார் அரசாங்கத்தின் மீது மிகுந்த விசுவாசம் உடையவரான 'பிரிகேடியர் ஜெனரல் சுஹார்த்தோ.' ஏற்கெனவே அமெரிக்கப்படைகள் வியட்நாமில் இறங்கி 'ஜனநாயக சேவை' செய்துகொண்டிருந்த நேரம் அது! அமெரிக்காவின் ஆசியோடு காரியத்தில் இறங்கினார் அவர். அதிபரான சுகர்னோவும் தற்காப்பு அமைச்சர் நாசுத்தியனும் காப்பாற்றப்பட்டார்கள். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்குத்தான் இந்த அத்தியாயத்தின் முதலில் 'அமெரிக்க அரசு அலுவலர்' சொல்லிய பதில் போடப்பட்டது.
கிட்டத்தட்ட 2,50,000 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8 ஆம் தேதி கம்யூனிச தலைமையிடம் மக்களால் தகர்ப்பட்டது. புதிய அதிபராக திரு. சுஹார்த்தோ பதவியேற்றார். பி.கே.ஐ எனப்படும் 'பார்ட்டாய் கொம்யூனிஸ் இந்தோனேசியா கட்சி' தடைசெய்யப்பட்டது.
சுகர்னோவைப் பதவியிறக்கம் செய்தது, சுஹார்த்தோ ஆட்சிக்கு வந்தது, சுஹார்த்தோவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலேயான அந்தரங்க உறவு, ராணுவ உயர் அதிகாரியான சுஹார்த்தோவை ஏற்கெனவே ஊழல் வழக்கில் சுகர்னோ பதவியிறக்கம் செய்தது என அந்நாட்டு அரசியலில் பல முகங்கள் மூழ்கிக் கிடந்தாலும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இப்புரட்சி தோற்கடிக்கப்பட்டதன் மூலம், அசைக்கமுடியாத பலம்கொண்ட 'பி.கே.ஐ' என்ற யானையை முடங்கச்செய்ததன் மூலம் இந்தோனேசியாவில் மட்டுமல்ல; சிங்கப்பூரில் மட்டுமல்ல; தெற்கு ஆசியாவின் எல்லாப்பகுதிகளிலும் கம்யூனிசம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் சிங்கப்பூர் வளர்வதற்கு ஆணிவேராகவும் ஆகிவிட்டது. திரு. லீ குவான் யூ அவர்களும் அன்றுதான் ஆழ்ந்த நிம்மதிப்பெருமூச்சு விட்டிருப்பார்.
(தொடரும்)
Thanks:
http://www.tamiloviam.com/unicode/02240505.asp