தமிழர்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கின்றது?
* குஷ்பு விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து விட்ட சுஹாசினியின் கேள்வி
* தமிழகத்தை கலக்கும் `கற்பு ' விவகாரம்
-யாழினியன்
"ஒரு பெண் எப்போது சந்தோஷமாக இருப்பாள்? தன் கருத்துக்கள், கனவுகள் மதிக்கப்படுகின்றன,. அவற்றை பயப்படாமல், தயங்காமல், சுதந்திரமாக வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது, அவை பலரால் கேட்கப்படுகின்றன என்ற நிலை வரும்போது தான் அவள் மனநிறைவுடன் இருப்பாள்.
"நான் பார்த்தவரையில் முன்பு கட்டுப்பெட்டித்தனமாகக் கருதப்பட்ட தமிழ்ப் பெண்கள் இன்று நிறைய மாறியிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளில் எந்தக் குறையும் வைக்காமல் சிரத்தையாகச் செய்துவிட்டு நாட்டு நடப்பில் அக்கறையும், விஞ்ஞானத்தில் ஆர்வமும், இயற்கைச் சீற்றத்தால் மற்றவர்களுக்கு உதவும் கருணையும், எதிர்காலம் பற்றிய குறிக்கோளும் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள்".
அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் அடைப்பட்டுக் கிடக்கும் தங்கள் திறமையை, மிதமிருக்கும் தெம்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் தான். அதற்கு அவர்களுக்கு முன்மாதிரிகளையும், வழிகாட்டிகளையும் அவர்கள் மனம் தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்".
"இன்று சிறு ஊர்களில் இருக்கும் நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்ட, உந்துதலும் உத்வேகமும் தருவதற்கு நிறைய நிஜவாழ்க்கை ஹீரோயின்கள் தேவை.
மேற்குறித்த வாசகங்களுக்கு உரித்துடையவர் நடிகை சுஹாசினி. இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பவும், நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் ராஜ் தொலைக்காட்சிச் சேவையில் பெண்களுக்காக "லேடீஸ் ஜங்ஷன்" என்ற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்துத் தருகின்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பெண்களையும் அவர்களது மன ஓட்டங்களையும் வைத்துத் தான் மேற்குறித்த கருத்துகளை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்ட உந்துதலும் உத்வேகமும் கொண்ட பெண்ணாக நிஜ வாழ்க்கை ஹீரோயினாக தன்னை வெளிப்படுத்தும் விதத்தில் நடிகை குஷ்பு விவகாரத்தில் சுஹாசினி தலை நீட்டியுள்ளார். கருத்துச் சொல்லியுள்ளார்.
உலக சினிமா அக்கெடமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் சார்பில் "தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா" சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சுஹாசினியின் கருத்துகளுக்கு பலமான எதிர்ப்புகள், கண்டனங்கள் வெளிப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துக்கள் சரியே அதில் தவறேதுமில்லை. அதைப் பிரச்சினையாக்கி அவரை சங்கடத்துக்கு உள்ளாக்கிய தமிழர்கள் தலை குனிய வேண்டும். அதற்காக தமிழர்களின் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு திரைப்பட உலகைச் சார்ந்தவர்களும் அரசியல்வாதிகள் பலரும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் திரைப்பட உலகம் திரையில் மட்டும் போராட்டங்களை சந்திக்கவில்லை. நிஜத்திலும் பல்வேறு போராட்டங்களை சமீப காலங்களில் சம்பவங்களில் பல நிலைகளில் பல்வேறு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகளை இழிவு செய்து பேசிய பிரச்சினை திரைப்படத் துறையைத் தாண்டி அரசியல் களத்திற்கு வந்தது. தங்கர் பச்சான் மன்னிப்புக் கேட்டு அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டினாலும் தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தங்கருக்கு ஆதரவாகச் செயற்பட்டன. ஏலவே ரசிகர் மன்றங்களுக்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கு தங்கர் விவகாரம் மேலும் வலுவூட்டியுள்ளது.
இந்தியா டுடே 2005 செப்டெம்பர் 28 இதழில் இந்தியப் பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றிய ஒரு விரிவான கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை குஷ்புவிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது. அதில் அவர் கூறியதாவது;
"படித்த எந்த ஆண்மகனும் திருமணத்தின் போது தனது மனைவி கன்னித் தன்மையுடன் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.... திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொள்ளும் போது பால்வினை நோய் வராமலும் கருத்தரிக்காமலும் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது தவறில்லை..... செக்ஸ் புத்தகங்கள், படங்கள் மூலம் பாலியல் இன்பத்தைப் பெற்றுக் கொள்வது தவறில்லை....." என்பன போன்ற கருத்துகளைக் கூறியிருந்தார்.
தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார் என்ற தொனியில் ஊடகங்களில் கருத்துப் பரப்புகை செய்யப்பட்டது. பலரும் குஷ்புவை நேரடியாகவே கண்டித்தார்கள். பா.ம.க.மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் குஷ்புவுக்கு எதிராக தெரு முனைப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். குஷ்புவுக்கு எதிரான போராட்டம் மேலும் மேலும் வலுப்பெறத் தொடங்கியது. ஊடகங்களும் போராட்டத்தை வளர்த்தன.
குஷ்புவின் கருத்துக்கள் அவர் மீதான தனிப்பட்ட அவதூறாக மாற்றப் பட்டது. தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கம் குஷ்புவின் கருத்துத் தொடர்பாக என்ன சொல்கிறது? என்ற எதிர்வாதம் மேற்கிளம்பத் தொடங்கியது. எங்கிருந்தோ எம் மண்ணில் பிழைக்க வந்த குஷ்பு தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி பேச முடியுமா? என்னும் வாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
பின்னர் குஷ்பு தான் கூறியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டிருந்தார். ஆனாலும், குஷ்பு மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நடிகை சுஹாசினி குஷ்புவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கும் விவகாரம்.
"குஷ்பு தெரிவித்த கருத்துத் தொடர்பாக கருத்துக் கேட்டவர்கள் குஷ்புவுக்கு எதிரானவர்களிடம் மட்டுமே கேட்டு அதை வெளியிட்டுள்ளனர். என்னிடம் கருத்துக் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன். குஷ்புவை வட மாநிலத்துக்கு ஓடு என்று சொன்னவர்கள் என்னை பரமக்குடிக்கு ஓடு என்று சொல்வார்களா? தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" என்றும் சுஹாசினி பேசினார். இதற்கு திரையுலகினர், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்புக் கேட்க இவர் யார்? என்று சுஹாசினி மீது பாயத் தொடங்கியுள்ளார்கள். எதிர்ப்புகள், போராட்டங்கள் பல வடிவங்களில் வெளிப்பட்டன. ஆனால், இவற்றை துணிவுடன் எதிர்கொள்ளும் திராணி சுஹாசினிக்கு இருக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால், எதையும் சமாளித்து முன்னேறும் நிஜவாழ்க்கை ஹீரோயினாக அவரால் பரிணமிக்க முடியவில்லை. ஒரு கலைஞருக்குரிய உணர்ச்சி வேகம் தான் இருந்தது. ஆனால், குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் மூலம் வெளிப்பட்ட எதிர்வினைகளின் பின்னால் உள்ள சமூக உணர்வுகளை சமூகக் கிடக்கையை அரசியலைப் புரிந்து கொள்ளுமளவிற்கு முதிர்ச்சியும் அறிவும் நிதானமும் பொறுப்பும் இருக்கவில்லை.
இதைவிட ஊடகங்களும், இந்த குஷ்பு விவகாரத்தை திசை திருப்பி விட்டன. உதாரணமாக கடந்த (23.9.05) சன் தொலைக்காட்சியில் சுனாமி பற்றிய அறிவிப்பைப் போல ஒரே ஃப்ளாஷ் நியூஸ் தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? குஷ்புவுக்கு சரமாரியான கண்டனம்...... பாருங்கள் இன்றைய தமிழ் முரசு, மாலை முரசு போன்ற விளம்பரங்கள் ஆங்காங்கு பெட்டிக் கடைகளில் முன்புறம் தொங்கவிடப்பட்டன. மொத்தத்தில் குஷ்பு தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்கள்,. திருமணத்திற்கு முன்பே அவர்கள் உறவு கொள்ளக்கூடியவர்கள் என்ற தொனியில் பேசியுள்ளார். என்ற விளக்கம் ஒன்றைப் பரிமாணத்தில் எங்கும் பலரால் கருத்தாடல் பரப்புகை செய்யப்பட்டது.இந்தப் பரப்புகை கருத்தாடல் சார்ந்து தான் பா.ம.க.விடுதலைச் சிறுத்தைகள் பெண்கள் அணியினர் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம் இன்னொரு விதமாகவும் மாறியது. தமிழ்ப் பண்பாடு பற்றி தமிழ்ப் பெண்கள் பற்றி வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு எப்படித் தெரியும்? இவள் எப்படி (தமிழச்சிகளை) எங்களைச் சொல்ல முடியும்? எங்கிருந்தோ பிழைக்க வந்தவள் தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா? அதுவும் இவள் முஸ்லிம் பெண். தமிழர் அல்லாதவள்? எப்படி இவள் கருத்துக் கூற முடியும்?....... இப்படி விவகாரம் பல நிலைகளில் வளர்ந்தது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நடிகை சுஹாசினி தன்னுணர்வு பெற்று உணர்ச்சி பொங்கிப் பேசிய கருத்துகள் மேலும் நிலைமைகளை சிக்கலடையச் செய்துள்ளது. "தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்கிறேன்" போன்ற வார்த்தைகள் தமிழ் உணர்வாளர்களை மேலும் உசுப்பி விட்டுள்ளது.
குஷ்பு தெரிவித்த இந்தக் கருத்துகள் ஏற்படுத்தி உள்ள நெருக்கடிகள் ஒரு புறமிருக்க, கருத்துச் சுதந்திரம் பறி போகிறது என்று குஷ்புவைப் பாதுகாக்கும் நோக்கில் சில சிந்தனையாளர்கள் அள்ளி விடும் கருத்துகள் ஒரே நாளில் குஷ்புவை பெரியாரி பெண்ணியவாதியாகப் புரட்சியாளராக்கி விட்டன. இந்தக் கோணத்தில் குஷ்புவை பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
இந்து பார்ப்பன கலாசாரத்திற்கு எதிராக மானுட விடுதலைக்காகக் களம் கண்டவர் பெரியார். அந்தக் களத்தில் இந்து கலாசார மதிப்பீடுகளையும் புனித ஒழுக்கக் கட்டுமானங்களையும் உடைத்தெறிந்தவர் அவர். <span style='color:red'>அதாவது, கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் என்று புனிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அனைத்தையும் பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ? என்று கவலைப்படாமல் போட்டு உடைத்தவர் பெரியார். அவரது சிந்தனையில் செயலில் உதித்த `தமிழகம்' `தமிழுணர்வு' `விடுதலை' பற்றிய கருத்தாக்கங்கள் புரட்சிகரமானவை - கலகத்தன்மை மிக்கவை. இயங்கியல் தன்மை கொண்டவை. நடைமுறை சார்ந்தவை. இதற்கு நீண்ட வரலாறு உண்டு
எவ்வாறு குஷ்புவை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமோ அதே அளவு குஷ்புவை பெண்ணியவாதியாக பெரியாரிஸ்டாக பார்ப்பது அவலமானது என்று கருத்துத் தெரிவிப்பவர்களும் உள்ளார்கள்.
குஷ்பு கூறிய கருத்தும் அதற்கு எதிராக எழுந்த உணர்வலைகளும் அடங்குவதற்குள் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசிய சுஹாசினி `தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?' என்ற கேள்வி மூலம் குஷ்பு விவகாரத்தை மேலும் ஊதிப் பெருக்கி விட்டார். தமிழுணர்வாளர்கள் இதற்கெதிராக குரல் கொடுப்பது, போராடுவது அவரவர் அரசியல் - நலன்கள் சார்ந்து வெளிப்படும்.
தமிழ்த் திரையுலகில் பெண்கள் (நடிகைகள்) படும் அவலங்களும் சுரண்டல்களும் அதிகம். இந்தக் கதைகள் வெளியில் வருவதும் உண்டு. அதை விட அதுவே இயல்பென்று கருதி வாழ்ந்துவிட்டுப் போகும், சலித்துக் கொண்டு போகும் கொடுமை தான் மோசமானது.
இந்த வாழ்க்கை பற்றியெல்லாம் ஆத்திரப்படாமல் குரல் கொடுக்க முடியாத நடிகைகள் தான் `பெரும்' நடிகைகளாக உலா வருகிறார்கள். இதை விட துணை நடிகைகள் மிக மிக மோசமாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் கொடுமை சொல்லி மாளாது. இவையெல்லாத்துக்கும் குரல் கொடுக்கவும் துணிச்சலும் இல்லை. அதற்கெதிராக தொடர்ந்து போராடவும் தைரியமும் இல்லை.
[size=18]நடிகைகள் தினமும் பல நிலைகளில் சுயமரியாதை இழந்து வாழத் தள்ளப்படுகிறார்கள். இதற்கெதிராக சுஹாசினி போன்றவர்கள் எப்போதாவது குரல் கொடுத்தார்களா? சமூகத் தளங்களில் பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் அதிகம். இவையெல்லாம் இவர்களுக்கு பிரச்சினைகளாகப்படவில்லை.</span>அப்ப இவர்களுக்கு எதுதான் பிரச்சினை? இதுதான் புரியாமல் தமிழ்நாட்டின் சுயமரியாதைக்காரர்கள், கலகக்காரர்கள் உள்ளார்கள் போலும். ஆனால், ஊடகங்கள் தமது கோணல் பார்வைகளால் வக்கிர உணர்வுகளால் `இந்த விவகாரங்களை' ஊதிப் பெருக்கி கிசுகிசு விவகாரங்களாக சுருக்கி விடும் அபாயம் நோக்கி நகர்த்திச் செல்லும் கொடுமை தமிழ் நாட்டில் ஒரு மாயச் சுழலாக மாறியுள்ளது.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-12.htm