Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம
#1
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம்!
[வெள்ளிக்கிழமை, 15 யூலை 2005, 12:23 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் அரசியல் போராளிகள் பாதுகாப்பு ஒழுங்கு விடயத்தில் சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.


போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடித விவரம்:

திரு ஹக்ரப் ஹோக்லண்ட்
தலைவர்,
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு,

அன்புடையீர்,

விடயம்: சிறிலங்கா இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிகளினூடான எமது உறுப்பினர்களின் பாதுகாப்பான போக்குவரத்து

11 யூலை 2005 எனத் திகதியிட்டு இதுவிடயம் தொடர்பாக நீங்கள் சிறிலங்கா சமாதானச் செயலகத்தினது கடிதத்தினையும் இணைத்து அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இக்கடிதம் எழுதப்படுகிறது.

சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தங்களுக்கு நாம் விளக்க விரும்புவதோடு எமது போராளிகளின் பாதுகாப்பான பயண ஒழுங்குகள் தொடர்பான எமது தெளிவான நிலைப்பாட்டை நாம் மீள வலியுறுத்த விரும்புகிறோம்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு என்ற வகையில் தாங்கள் கால வரையரைகளை ஏற்றுச் செயற்படுவதில்லை என சமாதானச் செயலகப் பணிப்பாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். உண்மையாதெனில், கால வரையறைகளின் அடிப்படையில்தான் போர் நிறுத்த ஒப்பந்தமே வரையப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வணக்கத்தலங்கள், பாடசாலைகள், மக்கள் வாழும் இடங்கள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் விலகி மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழிகோலவேண்டும் எனக்கூறும் போர் நிறுத்த ஒப்பந்தம் காலவரையறைகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

இத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு இரு அதிகார மையங்களும் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்துள்ளன என்ற உண்மையின் அடிப்படையிலேயே போர்நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது என்பதை சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளருக்கு இவ்விடத்தில் நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைப்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல் பணிகளில் ஈடுபடும் ஆயுதம் தரிக்காத போராளிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கே உண்டு. இந்த யதார்த்த நிலையை நிராகரித்துச் செயற்படுவதானது போர்நிறுத்த சூழல் குழம்பிப்போவதற்கே வழிவகுக்கும்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் நோர்வேத் தூதரகம் என்பவற்றின் அனுசரணையுடன் இருதரப்பினருக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில்தான் கடந்த மூன்றரை வருடங்களாக எமது போராளிகளினது பாதுகாப்பான பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இவ்வாறாக சுமூகமாக இடம்பெற்று வந்த போக்குவரத்துக்கான வழித்துணையில் சர்ச்சையைக் கிளப்பி சமாதான சூழ்நிலையைக் குழப்புவது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இருப்பையே ஆட்டங்காணச் செய்கிறது. சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளும் சமாதான சூழலைக் கேள்விக்குறியாக்கி தமிழர் தேசம் மீது மீண்டும் போரைத் திணிக்கும் ஓர் உத்தியாகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எமது மனங்களில் எழுகிறது.

எமது விடுதலை அமைப்பின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமையினால் கருணாவை அமைப்பிலிருந்து நீக்கி எமது அமைப்பின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருந்தது. இவ்வாறாக, அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவரை இன்று இராணுவம் பூரண பாதுகாப்பினை வழங்கி பாதுகாத்து வைத்திருப்பதோடு அவரது பெயரில் கருணா குழுவென இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே செயற்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை.

எமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலோ அல்லது தமிழர் தாயகப்பகுதியிலோ ஏதாவதொரு நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழுவாக கருணா குழு இயங்கவில்லை. அவரை இராணுவமே முழுமையாகப் பயன்படுத்தி வருவதோடு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில்தான் அவர் இருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை.

கடந்த மூன்றரை வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற சமாதான சூழலை சிதைப்பதற்கான ஒரு பொறிமுறையாகவே இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்ட ரீதியல் கருணா குழு என்ற பெயரில் இக்குழு உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நாம் பலமுறை ஆதாரங்களுடன் உங்களுக்குச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தேவையேற்படும் பட்சத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக தகவல்களை நாம் உங்களுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம்.

வடக்குக் கிழக்கில் இயங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, இக்குழுவினர் எமது தாயகப்பிரதேசப் பகுதிகளிலிருந்து முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதே போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்த ஆயுதக்குழுக்கள் அமைந்துவிடும் என்பதுடன் சமாதான சூழலைக் குழப்பும் நோக்கில் அவை செயற்பட்டுவிடும் என்பதையும் நோர்வே அனுசரணையாளர்களும் சிறிலங்கா அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட பின்னர்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சரத்து 1.8 சேர்க்கப்பட்டது. அவ்வாறிருந்தும், இன்று இப்படியானதோர் ஆயுதக்குழுவைப் படைத்தரப்பே உருவாக்கி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதோடு எமது போராளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடந்த மூன்றரை வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டுவந்த சமாதான சூழலைச் சீர்குலைக்கின்ற, அதேநேரம் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த சூழலைத் குழப்புகின்ற நடவடிக்கையாகத்தான் இராணுவப் புலனாய்வுப் பிரிவினதும் படைத்தரப்பினரதும் செயற்பாட்டை நாம் கருதுகிறோம்.

கடந்த யூன் 26 ஆம் நாள் இடம்பெற்ற கண்ணிவெடித்தாக்குதல், எமது மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மீதான தாக்குதல், மட்டக்களப்பு நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதி மீதான தாக்குதல் மற்றும் கடந்த 10 ஆம் திகதி அன்று திருமலையில் இடம்பெற்ற தாக்குதல் என எமது போராளிகள் மீதான அனைத்துத் தாக்குதல்களும் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்தான் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட விதம், நடாத்தப்பட்ட இடம் மற்றும் ஏனைய காரணங்களை வைத்து நோக்கும்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் சிறிலங்கா படையினருமே இவ்வனைத்துத் தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளரின் கடிதத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நிலவிய போர்ச் சூழலில் இடம்பெற்ற சம்பவங்களையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு தரப்பினருக்கிடையேயும் போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை இரண்டு தரப்பினரும் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ள இந்த சமாதான சூழலில் சுட்டிக்காட்டுவதும் விவாதிப்பதும் சிறந்ததல்ல என்பதோடு அது ஒப்பந்தத்திற்கு விரோதமானதோர் நடவடிக்கையாகவே நோக்கப்படுகிறது.

அவ்வாறானால், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காப் படைத்தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் மக்கள் மீதான வன்முறைகள், சிறிலங்கா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் என அனைத்தையுமே நாம் சுட்டிக்காட்ட வேண்டிவரும். போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை நாம் சரியாகக் கடைப்பிடித்து நடப்பதால்தான் சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள எமது போராளிகள் மீது சிறிலங்கா படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி, சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்களின்றி அரசியல் பணிபுரியும் போராளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு. அதேநேரம் இவ்வாறாக எமது போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கடமையாகும். இதுபோன்றே எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் சிறிலங்கா பிரதிநிதிகளினதும் சிறிலங்கா அதிகாரிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, எமது போராளிகள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கு பிற மாவட்டங்களுக்குச் சென்றுவர வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள எமது போராளிகள் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக அடிக்கடி கிளிநொச்சிக்கு வந்துசெல்ல வேண்டிய தேவையுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் கூட போராளிகளின் இவ்வாறான பயணங்கள் எமக்கேயுரிய பிரத்தியேக வழிமுறைகளினூடாக சுமூகமாக இடம்பெற்று வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்வாறான எமது போராளிகளின் பயணங்களை போருக்குத் தயார்படுத்துவதற்கான பயணங்கள் என்றும் வன்முறையைத்தூண்டுவதற்கான நடவடிக்கைகள் என்றும் கூறி, சிறிலங்கா தரப்பினர் தேவையற்ற மாயையைத் தோற்றுவிக்க முயல்வது வருந்தத்தக்கது.

மேற்குறிப்பிட்டது போல, மிகவும் அவசியமானதும் தேவையானதுமான எமது போராளிகளினது பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த 30 யூன் 2005 அன்று அனுப்பிய கடிதத்தில் சில யோசனைகளை நாம் முன்வைத்திருந்தோம். எமது போராளிகளின் பூரண பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் எமது யோசனைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீண்ட நாட்களாக பயணங்கள் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில், எமது பயணங்களை மிக அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டியநிலை எமக்கு இருந்தமையினாலேயே நாம் ஓர் கால அவகாசத்தினை சிறிலங்கா தரப்பினருக்கு வழங்கியிருந்தோம். மாதத்தில் ஒருதடவைதான் பயணம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், பயணத்தின் போது குறிப்பிட்ட தொகைப் போராளிகள் மாத்திரமே பயணம் செய்யவேண்டும் என்றும் சிறிலங்கா தரப்பினர் கட்டுப்பாடுகளைப் போடுவதை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். இது விடயத்தில் சிறிலங்கா தரப்பினரின் யோசனையானது ஏதோ ஒருவகையில் எமது போராளிகளின் பாதுகாப்பான பயணம் முடக்கப்படுவதற்கே வழிவகுக்கும் ஒன்றாகவே எமக்குத் தெரிகிறது.

ஆகையால், நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் தீர ஆராய்ந்து எமது போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாம் கடந்த யூலை 30, 2005 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்ட யோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக நடவடிக்கைகளை எடுப்பதில் மேலும் கால தாமதங்கள் ஏற்படுமானால் நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று எமக்கேயுரிய பாதுகாப்பான பயண வழிமுறைகளைக் கைக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் சிறிலங்கா தரப்பினர் எமது பாதுகாப்புடன் கூடிய போராளிகளினது பயணங்களைத் தடுக்காது இருக்க வேண்டும். மாறாக தடுக்கும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாம் அதற்கான தகுந்த பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

இந்நிலைமை யுத்த நிறுத்த உடன்படிக்கையை மிகவும் சிக்கலான நிலைமைக்குள் தள்ளிவிடும் என்று நாம் அஞ்சுகின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம - by Vaanampaadi - 07-15-2005, 07:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)