Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல் யுத்தம்
#1
<b>நிழல் யுத்தம் நேரடி யுத்தமாக மாற்றமடையும் சாத்தியம்?</b>

* படையினரின் சதித் திட்டங்களும் புலிகள் விதித்துள்ள காலக்கெடுவும்

தங்களது பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு விடுதலைப் புலிகள் விதித்துள்ள காலக்கெடு, நாட்டில் மீண்டுமொரு போரைத் தோற்றுவித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கில் அண்மைக் காலமாக புலிகளின் முக்கியஸ்தர்களும் போராளிகளும் இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே விடுதலைப் புலிகள் இந்தக் காலக்கெடுவை விதித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கந்தைக்கு சமீபமாக செவனப்பிட்டி பகுதியில், இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பஸ் ஒன்றில் சென்றுகொண்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகளை இலக்கு வைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், போராளிகள் சென்ற பஸ்ஸின் சாரதியின் மதிநுட்பத்தால் போராளிகள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இல்லையேல் சக்திமிக்க அந்தக் கண்ணிவெடி அனைவரையும் பலியெடுத்திருக்கும்.

கிளிநொச்சியிலிருந்து தரைவழியாக மட்டக்களப்புக்குச் சென்ற போராளிகளின் பஸ் மீதே பிற்பகல் 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இந்தப் பகுதியில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து இந்த வீதியில் படையினரின் 24 மணிநேர பாதுகாப்பு இருந்த நிலையிலேயே, வீதியோரத்தில் கண்ணிவெடி புதைக்கப்பட்டு புலிகளின் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெலிக்கந்தை பகுதியிலேயே முன்னர் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து அவர் மட்டக்களப்பு செல்கையிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று அவர் படையினரது பாதுகாப்பின்றி சென்றபோது தாக்கப்பட்டார். ஆனால், கடந்தவாரம் படையினரின் பாதுகாப்புடனும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரது வழித்துணையுடன் சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் குழியொன்று வெட்டப்பட்டு மூடப்பட்டிருப்பதை அவதானித்த பஸ் சாரதி அதனை விலத்திச் சென்ற பின்பே, அதிலிருந்த சக்திமிக்க கண்ணிவெடி வெடித்துள்ளது. பழுதடைந்திருந்த அந்த வீதியில் பஸ் செல்வதாயின் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மேலாகத்தான் செல்லவேண்டும். ஆனால், அந்த இடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாகனச் சாரதி அவ்விடத்தை விலத்திச் சென்றதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

அன்றைய தினம் அவ்வீதியூடாக புலிகளின் பயணம் நடைபெறுவது மிக மிக இரகசியமாகவேயிருந்தது. படையினருக்கு மட்டுமே இதுபற்றித் தெரிந்திருந்தது. கண்காணிப்புக் குழுவின் வற்புறுத்தலின் பேரில் அவ்வீதியில் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், அன்றைய தினமே வீதியோரத்தில் குழிதோண்டப்பட்டு பட்டப் பகலில், பாதுகாப்பு நிறைந்த வீதியில் கண்ணிவெடி புதைக்கப்பட்டு `ரிமோட் கொன்ரோலர்' மூலம், சற்று தூரத்திலிருந்து அது வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

கௌசல்யனின் பயணமும் மிக மிக இரகசியமாகவே இருந்தது. சோதனை நிலையத்தில் தனது விபரத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கௌசல்யனின் பயண விபரம் படையினருக்குத் தெரிய வந்தது. ஆனாலும், சம்பவம் நடைபெற்ற பின், உடல்களை பார்த்த பின்னர்தான் அது கௌசல்யனுடையது எனத்தெரிய வந்ததாகவும் தங்களுக்கு அறிவிக்காது சென்றதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதுபோனதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது.

ஆனால், படையினர் வழங்கிய தகவலின் பேரிலேயே தேசவிரோதக் கும்பல்கள் கௌசல்யனை இலக்கு வைத்ததாக புலிகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் தெரிவித்திருந்தனர். அதேபோன்றுதான், கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களின் பயணத்திற்கு முன்பாக, வெலிக்கந்தை பகுதியில் வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் நடைபெறுவதாக புலிகள் கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவித்ததையடுத்து அவர்களது பயணத் திகதி மாற்றப்பட்டது.

படையினரின் உதவியுடன்தான் தாக்குதல் நடைபெறத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதைப் புலிகளின் புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்ததால், புலிகளின் பயண ஏற்பாட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, புலிகள் செல்லும் பஸ்ஸில் படையினரும் சேர்ந்து செல்லவேண்டுமெனப் புலிகளின் தலைமைப் பீடம் வலியுறுத்தியதால் கண்காணிப்புக் குழுவும் இதனை ஏற்றுக்கொண்டு இந்தப் பயணத்திற்கு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், இறுதிநேரத்தில் புலிகள் பயணம் செய்த அந்த பஸ்ஸில் படையினர் சேர்ந்துசெல்ல மறுத்துவிட்டனர். இதனால், புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட 40 போராளிகள் மட்டுமே சென்றனர். பஸ்ஸின் முன்புறமும், பின்புறமும் படையினரின் வாகனங்களும், கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களும் சென்றபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு நிறைந்த அந்த வீதியில் படையினர் 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டிருக்கையில் பட்டப்பகலில் அங்கு எப்படி கண்ணிவெடி புதைக்கப்பட்டது? வீதியோரத்தில் புதிதாக குழியொன்று வெட்டப்பட்டு மூடப்பட்டிருப்பதை புலிகளின் பஸ் சாரதியால் அவதானிக்க முடிந்துள்ளதால், அதற்கு முன் அப்பகுதியில் நடமாடிய படையினரால் ஏன் அதனை அவதானிக்க முடியாது போனது?

புலிகளின் பஸ்ஸில் படையினரும் சேர்ந்து செல்வதன் மூலம் புலிகளின் சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமென இணக்கம் காணப்பட்ட பின்னரும் கடைசிநேரத்தில் ஏன் படையினர் புலிகளின் பஸ்ஸில் செல்ல மறுத்தனர்?. படையினருக்கு மட்டுமே தெரிந்த புலிகளின் பயணத்தை எப்படி ஏனையவர்களால் அறிய முடிந்தது? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஆனாலும், தங்கள் பயணங்களைத் தடுப்பதற்காகப் படையினரே திட்டமிட்டு தேசவிரோதக் கும்பல்களைப் பயன்படுத்தி தங்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் கடும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். அத்துடன் ஏற்கனவே அவ்வீதியில் வைத்துத் தங்கள் மீது தாக்குதலை நடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளதாகவும், புலிகள் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்திருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் சம்பவத்தை கண்காணிப்புக் குழுவினர் நேரில் அவதானித்துள்ளனர்.இந்தச் சம்பவம் புலிகளை மட்டுமல்லாது கண்காணிப்புக் குழுவினரையும் சீற்றமடையவைத்துள்ளதுடன், தங்கள் மீதான தாக்குதல் குறித்து புலிகள் எவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்களோ அந்தக் குற்றச்சாட்டு சரிதானென்பதையும் கண்காணிப்புக் குழுவினருக்கு உணரவைத்துள்ளது.

தங்கள் மீதான நிழல் யுத்தம் நேரடி யுத்தமாக மாற்றம் பெற்று வருவதை உணர்ந்ததால் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். தங்களின் பயணப் போக்குவரத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த இருவார காலக்கெடுவை விதித்துள்ளனர்.

இது போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து (இருதரப்பில்) ஒரு தரப்பு விலகுவதற்காக முன்னறிவித்தல் கொடுக்கும் கால எல்லையாகக் கூட கருதலாமென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கருணாவின் கிளர்ச்சியை இந்த அரசும் படைத் தரப்பும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. கருணாவின் பலம் என்னவென்பது உலகமறிந்த உண்மை. கருணா குழுவின் பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே புலிகளுக்கெதிராக நிழல் யுத்தம் நடத்துவதை அனைவரும் அறிவர்.

சீருடை அணிந்தால் இராணுவம், சீருடை அணியாவிட்டால் அது கருணா குழுவெனக் கூறுமளவிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு எப்படிச் செயல்படுகிறதென்பதை புலிகள் தினமும் கூறி வருகின்றனர்.

மூன்று வருடத்திற்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடன், தென்பகுதிச் சிங்களவர் புலிகளின் பலத்தை மறந்து விட்டனர். தனி நாடொன்றுக்காக தற்கொலைப் படையினருடன் புலிகள் 20 வருடங்களாக சிங்கள தேசத்தை அதிர வைத்ததை அவர்கள் மறந்து விட்டனர்.

இன்று கடல்கோள் அனர்த்த நிவாரணத்திற்காக, கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்திற்குள் மேற்கொள்ளப்படும் மீள் நிர்மாணப் பணிகளுக்காக அவர்கள் போராடுவதை சிங்கள தேசம் தவறாக எடை போட்டுள்ளது.

இந்தப் போர்நிறுத்த உடன்பாடென்பது, தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வைக்கப்பட்ட ஆப்பென அப்போது தமிழ் மக்கள் நினைக்கவில்லை. ஆனால், சிங்கள தேசம் இன்று எல்லாவற்றையும் மறந்து, சாதாரண பொதுக் கட்டமைப்புக்கே தமிழர்கள் கையேந்த வேண்டுமென இறுமாப்புடன் கூறுவதை சகித்துக் கொள்ள முடியாது, தமிழரின் பலத்தை மீண்டும் காட்ட யுத்தத்திற்கு செல்லுமாறு புலிகளுக்கு ஆணையிடுகின்றனர்.

மீண்டுமொரு யுத்தத்தின் மூலம் தமிழர் பலத்தை நிரூபித்துத் தான் பொதுக் கட்டமைப்பைப் பெற வேண்டுமா என்ற கேள்வியையும் தமிழ் மக்கள் எழுப்புகின்றனர். அதேநேரம், யுத்தமின்றி இனி எதனையும் பெற முடியாதென்பதை, யுத்தம் நடைபெற்ற காலத்தை விட போர்நிறுத்த (சமாதான) காலத்தில் தமிழ் மக்கள் நன்குணர்ந்து விட்டனர்.

போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலையானது தென் பகுதிக்கே முற்று முழுதாகச் சாதகமாயுள்ளது. வடக்கு, கிழக்கு இன்றும் யுத்தச் சூழ்நிலையிலேயே உள்ளது. கிழக்கில் இடம்பெறும் நிழல் யுத்தத்தால், அங்கு கொலைகள் நடைபெறாத நாளேயில்லை. வடக்குடன் புலிகளை முடக்கி கிழக்கைப் பிரித்து விடும் நோக்கில் போர் நிறுத்த காலத்தில் இந்த நிழல் யுத்தம் தொடர்கிறது.

போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால், இன்றோ கிழக்கில், புலிகளால் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியே வர முடிவதில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் புலிகள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள். புலிகளின் அலுவலகங்கள் மீது தினமும் தாக்குதல்கள் நடக்கிறது. புலிகளின் ஆதரவாளர்கள் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் பிரசாரங்களை முறியடிப்பதற்காக அவர்களது பத்திரிகையின் (ஈழநாதம்) விநியோகஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கிலிருந்து - கிழக்கிற்கோ அல்லது கிழக்கிலிருந்து - வடக்கிற்கோ புலிகளின் தலைவர்களோ அல்லது போராளிகளோ செல்ல முடியாத அபாயகரமான சூழ்நிலை இந்தச் சமாதான காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளின் தலைமைப்பீடத்துடன் கிழக்கு மாகாணத் தலைவர்களின் சந்திப்புகளை துண்டித்து, கிழக்கில் புலிகளை அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முடக்கி விடுவதுடன் கருணா குழுவென்ற பெயரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் ஊடுருவி புலிகள் மீது தாக்குதல்களை நடத்தும் முயற்சிகளும் தொடர்கின்றன.

போர் நிறுத்த உடன்படிக்கை மூலம், புலிகள் கடலுக்குள் இறங்குவது தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களால் கடல் வழிப் பயணத்தையும் மேற்கொள்ள முடியாதுள்ளது. வான் வழிப் பயணத்துக்குக் கூட மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. தரை வழிப் பயணமென்பது, இப்போது ஒரு தாக்குதலுமில்லாது நடைபெறுவதில்லை. இதனால் புலிகளின் எதிர்காலப் போக்குவரத்து எப்படியிருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமாதானப் பேச்சுகளோ அல்லது சமாதானத் தீர்வோ இன்றி சமாதானச் சூழ்நிலை வீணாகிவிட்டது. சிறுபான்மையாகி விட்டதொரு அரசைக் கொண்டு இந்த நாட்டில் ஆட்சி நடத்தக் கூடிய பலத்தை போர் நிறுத்த உடன்பாடு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.

தென் பகுதியில் வீதிகளில் இறங்கி தமிழர்களுக்கு எதிராகப் போராடும் பலத்தை இந்தச் சமாதானச் சூழ்நிலை புத்த பிக்குகளுக்கும் வழங்கியுள்ளது. தமிழர்களுக்கெதிராக போர் தொடுப்பதற்காக தங்களுடன் வந்திணையுமாறு முப்படையினருக்கும் ஜே.வி.பி.யும் அழைப்பு விடுகின்றது.

இவையெல்லாவற்றுக்கும் இந்தச் சமாதான சூழ்நிலை காரணமாகி விட்டதால் தங்கள் எதிர்காலப் பயணம் குறித்து புலிகள் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்து விட்டனர். மாதத்தில் இரு பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாட்டையாவது செய்யுமாறு புலிகள் விநயமாகக் கேட்டுள்ளனர். ஆனாலும், இதற்கு இரு வார கால அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாவிடின், போர் நடைபெற்ற காலத்தில் எப்படிப் போக்குவரத்துச் செய்தோமோ அவ்வாறு போக்குவரத்து செய்வோமென புலிகள் உறுதிபடக் கூறி விட்டனர்.

வடக்கு - கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே பெருமளவு கடற் பரப்புள்ளது. முன்னர் புலிகள் தங்கள் போக்குவரத்தை பெரும்பாலும் கடல் வழியாக மேற்கொண்டனர். புலிகளின் தரை வழிப் பயணத்திற்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாவிடின், இனி அவர்கள் முன்னரைப் போல் கடல் வழியைப் பயன்படுத்துவர். அதனைத் தடுக்க கடற்படையினர் முற்பட்டால் கடற் சமர் தொடங்கும்.

தரை வழியாக முன்னரைப் போல் பயணம் செய்ய முயலும் புலிகளை இராணுவத்தினர் தடுக்க முற்பட்டால் புலிகளும் தாக்குதல் தொடுப்பர். அதேநேரம், உடன்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தங்களது போக்குவரத்தைப் படையினர் முடக்கிவிட்டு அவர்களை சுதந்திரமாக நடமாட விடமாட்டோமெனவும் புலிகள் எச்சரித்துள்ளதால், இராணுவத்தினர் மீது இனி தாக்குதல் தொடுக்கப்படுமென்பதையும் புலிகள் மறைமுகமாக எச்சரித்துள்ளனர்.

தங்கள் பாதுகாப்பான போக்குவரத்திற்காக தங்களது விமானப் படை உட்பட முப்படைகளையும் பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே புலிகள் எச்சரித்ததன் மூலம், அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்கள் வான் படையும் தயாராகி விட்டதை அவர்கள் உலகிற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் புலிகளின் இரு வார காலக்கெடுவானது போரொன்றை நோக்கியதாகவே கருதப்படுகிறது. கிழக்கில் படையினர் மேற்கொள்ளும் நிழல் போர் முடிவுக்கு வருமா? என்பதை இந்தக் காலக்கெடு மூலம் புலிகள் அறிய முற்பட்டுள்ளனர். அது மறுக்கப்படுமானால் இரு வாரத்தின் பின்னர் ஒரு நிஜப் போர் உருவாகுவதைத் தடுக்கவே முடியாது.

தினக்குரல்
Reply


Messages In This Thread
நிழல் யுத்தம் - by hari - 07-04-2005, 02:48 AM
[No subject] - by Thala - 07-04-2005, 08:35 AM
[No subject] - by வினித் - 08-17-2005, 05:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)