Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீட்டில் தொடங்கட்டும் தோழமை
#1
வீட்டில் தொடங்கட்டும் தோழமை

இன்று பல குடும்பங்களில் ஒரு விநோதமான சூழ்நிலை. பெற்றோருக்கு குறிப்பாக, தகப்பன்மார்களுக்கு தாம் பெற்ற குழந்தைகளிடமே மனக்குறை. அதுவும் கல்லூரி அல்லது தொழிற்கல்வி பயில்பவர்கள் என்றால் அவர்களிடம் ஒரு மிகையான மனமுதிர்வை, எதிர்பார்த்து அதில் திருப்தி கிடைக்காத போது விளைகிற மனக்குறை. இளைய தலைமுறையினருக்கும் தம் பெற்றோரிடம் வேறு விதமான கோபம்.

அவர்கள் குறை அநேகமாக பொதுவானது - `எது ஒன்றுக்கும் தமக்குச் சுதந்திரம் இல்லை. அடக்கி ஆளப்படுகிறோம்' என்று வெறுப்பு, வயது வந்த பெண்கள் வெளி அலைச்சல்களில் நேரம் கழித்து வீடு திரும்பி, பேசாமலேயே இருக்கும் போது தேவையற்ற சந்தேகம். கோபம் எல்லாம்! `ஆம்பிளைப் பசங்க கிட்டே இப்படிக் கண்டிப்பு இல்லை. எல்லாம் எங்க கிட்ட மட்டும்தான்' என்றும் புகார்கள்.

`தலைமுறை இடைவெளி' என்ற ஒரு பொதுப் பெயரிட்டு - இதெல்லாம் அப்படித்தான் இருக்கும். இருந்தாக வேண்டும் என்பதுபோல - வசதியாக ஒரு மனப்பிரமையையும் பலர் வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள். சில பத்து வருடம் முன்புவரை - அப்போதும் இந்தத் தலைமுறை வேறுபாடு இருக்கத்தானே செய்தது - இப்போது போல `மனவிலகல்' அப்போது இருந்ததில்லை.

எங்கே கோளாறு? யாரைக் குறை சொல்வது? இரு மட்டத் தலைமுறைகளிலும் இன்றளவு பொது அறிவு அன்று குறைவுதான். இப்போது போல தகவல் தொடர்புச் சாதனங்களும் இல்லை. விஞ்ஞான நுட்ப விந்தைகள் வெளிப்பட்டதில்லை. ஆனால் இன்று காணக் கிடைக்காத மன அமைதி அன்று நிறையவே இருந்தது.

இன்று பல்துறை முன்னேற்றம் நம்மைப் பரவசப்படுத்துவது ஒரு பக்கம். தன் முனைப்பு, சுய முன்னேற்றம், பொது அறிவு வளர்ச்சி, உலகின் எந்த மூலையோடும் உடனடித் தொடர்பு எல்லாமே இன்று மிக அதிகம். ஒவ்வொன்றிலும் ஆரோக்கியமான போட்டி, அது ஏற்படுத்துகிற அபரிமித வேகம். அதன் விளைவாக அற்புதச் சாதனைகளும் நிறைய பக்கத்து வீடுகளில் பள்ளி - கல்லூரிகளில், அலுவலகங்களில், பஸ்- ரயிலில் சந்திப்பவர்களிடையில், எல்லாத் தரப்பார்க்கும் உள்ள நட்பு வட்டாரங்களில் - இங்கெல்லாம் புரிதல், மனித நேயம், பரிவு, அனுசரணையான உரையாடல் எல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ, அதில் ஒரு சிறு பகுதி கூட அவரவர் சொந்த வீடுகளில் காணக்கிடைப்பதில்லை. அதிசயம், ஆனால் இது உண்மை.

`தலைமுறை இடைவெளி' என்ற சுலபமான ஒரு தப்புக் கணக்கு எல்லோருக்கும் போடத் தெரிந்திருக்கிறது! "தகவல் பரிமாற்றம்" என்பதை இதில் தொலைத்து விடுகிறோம். வீட்டில் இருப்பவர்கள் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவது பெரும்பாலான இடங்களில் இல்லை. இதுவே வெளி வட்டாரங்களில் சண்டப் பிரசண்டம் தான்!

அப்பாக்கள் தன் குழந்தைகளிடமும் வயது வந்த `டீன் ஏஜ்'காரர்கள் தம் பெற்றோரிடமும் இதே அளவு கலகலப்பாக உரையாடுவது எங்கோ சில குடும்பங்களில் இருக்கலாம். பரவலாக இல்லை.

ஒரு மூன்று, நான்கு குடும்பங்கள் எனக்கு நெருக்கமாகப் பழக்கம். அங்கிருந்து என்னிடம் அடிக்கடி புகார்கள் வரும். இரு தரப்பினரும் மாறி மாறி பரஸ்பரக் குறைகள், கடைசியில் கவலைப்படும் படி ஒன்றுமே இராது. `இரு தரப்பினரிடமும் பேசுங்கள். அவர்களோடு பேசுங்கள்' என்பேன். மறுபடி புகார்கள் வரும்போது "பேசினீர்களா!"என்று கேட்டால், மழுப்பல்தான் பதில். ஏன் பேசவே தயக்கம்? `நான்' என்ற `ஈகோ' யாரையும் விடுவதில்லை.

`தலைமுறை இடைவெளி' என்பது இருக்கத்தானே செய்யும்? ஓர் அடையாளத்திற்குதானே அந்த `இடைவெளி' என்ற அடைமொழி? அதை ஏதோ பயங்கர ஆயுதம் மாதிரி பாவித்து, ஏன் பகைமை பாராட்ட வேண்டும்? ஒருவருக்கொருவர் ஒத்துப்போவது, பெரிய சாகசச் சாதனையா என்ன?! வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் `வெளியில்' எல்லோரிடமும் நெருக்கமான தோழமை, நீங்காத நட்பு, பாசமுள்ள பரிவு, அலுக்காத அரட்டை, தேடித் தேடி பேச்சு எல்லாமே உண்டு. வீட்டுக்குள் மட்டும் ஒவ்வொருவரும் நவக்கிரகம்! என்ன சாபம் இது!

பெரிய விடயமே அல்ல. இரவு சாப்பாட்டு வேளை, எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நேரம்தான். ஒன்றாகக் கூடியமர்ந்து, ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சிரித்துப் பேசி அன்று யாரையெல்லாம் சந்தித்தார்கள், எங்கெல்லாம் அலைந்ததில் என்னென்ன அனுபவங்கள், அசடு வழிந்தது, ஜெயித்தது, தோற்றது- தப்பு செய்தது கூட- தாராளமாகக் கொட்டி விடலாம். யார்- எல்லாம் நாம்தானே! மன இறுக்கம், அநாவசிய சந்தேகம் ஓடியே போய்விடும். வெளியிலுள்ள அளவு உள்ளேயும் அதே தோழமை தொடரும்போது, அதுதான் சொர்க்கம்.

Thinakural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
வீட்டில் தொடங்கட்டும் தோழமை - by Mathan - 06-27-2005, 10:07 AM
[No subject] - by வெண்ணிலா - 06-27-2005, 12:33 PM
[No subject] - by வெண்ணிலா - 06-27-2005, 12:44 PM
[No subject] - by Nitharsan - 06-27-2005, 07:54 PM
[No subject] - by Mathan - 06-28-2005, 12:06 PM
[No subject] - by kavithan - 06-28-2005, 02:14 PM
[No subject] - by Malalai - 06-28-2005, 03:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)