Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி!
#1
கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி!

நவ.15கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள்

ஜன., 30, 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகியோர் தோள்களின் மீது கைபோட்டவாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார் காந்திஜி. பிரார்த்தனைக்காக காத்திருந்த ஏராளமானோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த கொடுமை நடந்தேறியது. கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் காந்திஜியின் அருகில் வந்தான். கண்மூடி திறப்பதற்குள் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காந்திஜியை நோக்கி மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகளும் மார்பில் பாய்ந்தன. ரத்தம் பீறிட "ஹே ராம்' என்றபடி மயங்கிச் சரிந்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த அந்த தன்னலமற்ற புண்ணிய ஆத்மா, மண்ணில் இருந்து பிரிந்தது.

துப்பாக்கியால் காந்தியை சுட்ட அந்த இளைஞன் கையும், களவுமாக பிடிக்கப்பட்டான். முதலில் ஒரு முஸ்லிம் இளைஞன் தான் காந்திஜியை கொன்றதாக தகவல் பரவி, கலகம் வெடித்தது. ஆனால், காந்திஜியை சுட்டுக் கொன்றது ஒரு இந்து தீவிரவாதி என்பது பிறகு தெரிய வந்தது. அவன் தான் நாதுராம் விநாயக கோட்சே.

காந்திஜியின் போராட்டங்கள் இந்துக்களுக்கு பாதகமாக அமையும் என்று கருதியதால் அவரை சுட்டுக் கொன்றவன். இந்து சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவன். காந்திஜி இறக்கும் வரை தங்களது லட்சியம் நிறைவேறாது என்பதால் அவர்கள் காந்திஜியை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர். அதற்காக உருவாக்கப்பட்டவன்தான் கோட்சே. புனாவை சேர்ந்த கோட்சேயின் தந்தை ஒரு தபால்காரர்.

காந்திஜியை கொலை செய்தது குறித்த வழக்கில் வாக்கு மூலம் கொடுத்தான் கோட்சே. அதில், "முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார் காந்திஜி. இதனால், இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவேதான் அவரை சுட்டுக் கொன்றேன்...' என்று கூறினான்.

காந்திஜி கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் துõக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களின் தூக்கு தண்டனை நவ., 15, 1949ல் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இவர்கள் இருவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காந்திஜியின் இரு மகன்களும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால், கோர்ட் உத்தரவுப்படி நவ., 15, 1949 அன்று, கோட்சே, ஆப்தே ஆகியோரை தூக்கிலிட இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அன்று காலை 7.55 மணிக்கு அவர்கள் இருவரும் சிறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் "அகண்ட பாரதம் அமைத்தே தீர வேண்டும்' என்று கோஷமிட்டபடி நடந்து சென்றனர்.

தூக்கு மேடையில் நின்ற கோட்சேயிடம் அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அப்போது, "நான் இறந்த பிறகு என் உடலை எரித்து, கிடைக்கும் சாம்பலை பாதுகாத்து வைக்க வேண்டும். என்றைக்கு அகண்ட இந்துஸ்தானம் உருவாகிறதோ, அன்றைக்கு அந்த சாம்பல் சிந்து நதியில் கரைக்கப்பட வேண்டும்...' என்று கூறினான். அடுத்த சில நிமிடங்களில் கோட்சேயும், ஆப்தேயும் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டனர்.

இருவரின் உடலும் உடனடியாக சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் ரகசியமாக எரிக்கப்பட்டன. உடல்கள் முழுதும் எரிந்து முடிந்தவுடன் இருவரின் அஸ்தியும் சேகரிக்கப்பட்டது. கோட்சே எரித்த இடத்தை அறிந்தால், அவரது ஆதரவாளர்கள் அங்கு அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பக் கூடும் என்ற நிலை இருந்ததால், கோட்சே உடல் எரிக்கப்பட்ட இடத்தை உழவு செய்து மறைத்தனர். அந்த இடத்தில் செடிகள் நடப்பட்டன.

பின்னர், கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் அஸ்தி கலசங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகில் ஓடிக் கொண்டிருந்த காக்கர் என்ற ஒரு சிற்றாறில் கலக்கப்பட்டது. கோட்சேயின் அஸ்தி காக்கர் நதியில் கரைக்கப்படும் விஷயத்தை அறிந்த அவனது ஆதரவாளர்கள், அதிகாரிகள் கரைத்துச் சென்ற கோட்சேயின் அஸ்தியில் ஒரு பகுதியை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கோட்சேயின் அஸ்தி, அவனது சகோதரர் கோபால் கோட்சேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்சேயின் அஸ்தி வெள்ளிக் கலசத்தில் வைக்கப்பட்டு புனா நகரில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15ம் தேதியன்று கோட்சே ஆதரவாளர்கள் அங்கு கூடி, "அகண்ட இந்துஸ்தானத்தை அமைத்தே தீருவோம்...' என உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி! - by Vaanampaadi - 05-29-2005, 11:32 PM
[No subject] - by தூயா - 06-04-2005, 05:26 PM
[No subject] - by Mathan - 06-04-2005, 06:50 PM
[No subject] - by kavithan - 06-04-2005, 11:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)