Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபா- எம்.ஜி.ஆர் உறவு
#4
மிக்க நன்றி.

ஒரு இலங்கை நண்பர் வாயிலாக நான் ஏற்கெனவே முனைவர் பாலாசிங்கம் அவர்களின் நூலைப் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் ஒருமுறை அதைப் படிக்கும் போது இன்னும் திருப்தியாகத்தான் இருந்தது. மீண்டும் நன்றி.

திரு. எம். ஜி. ஆர் அவர்கள் ஈழத் தமிழர்பால் கொண்டிருந்த ஈர்ப்பும் அக்கறையும் எங்களுக்குத் தெரியாததல்ல. அத்தோடு, ராஜீவ் அரசாங்கத்தால் பிரபா எத்தனை வஞ்சகமாக வற்புறுத்தப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் பணிக்கப்பட்டார் என்பதும் இந்தியத் தமிழன் ஒவ்வொருவனும் அறிந்ததுதான். ஆனால், திரு. எம். ஜி. ஆர் அவர்கள் அந்த ஈனச் செயலை நியாயப்படுத்தி ஒரு சர்வதேசத்தனமான தமிழ்த்துரோகத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, இந்தியத் தமிழராகிய எங்கள் மனதில் நிலையாகப் பதிந்துவிட்ட ஒன்று.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எத்துணை தர்மசங்கடமான சூழ்நிலையில் இதற்குச் சம்மதித்தார் என்பதை அறிந்துகொண்ட இந்தியத் தமிழன் ஒவ்வொருவனுக்கும் அந்தத் தருணத்தில் இரத்தம் கொதித்தது. தெரியுமா? சண்டை, தமிழனுக்கும் சிங்களனுக்கும். இதில் சமரசம் செய்துவைக்கப் போன இந்தியா ஏன் கையெழுத்திடுகிறது? அதுவும் ஒரு புகழ்மிக்க போர்ப்படை நாயகனை மிரட்டிப் பணியவைக்க, இந்தியா ஒரு வஞ்சக நாடகமல்லவா நடத்தியிருக்கிறது? சமரசப் பேச்சு என்று எதுவுமே இல்லை: சிங்களனையும் அழைக்கவில்லை. இப்படியொரு துரிதகதியில், "கையெழுத்துப் போடு!" என்று பிரபாவை மிரட்ட தீக்சித்திற்கு என்ன அருகதை இருக்கிறது, என்ன யோக்கியதை இருக்கிறது? சிங்களனை ஏன் கையெழுத்திடச் சொல்லவில்லை? இப்படியொரு கேவலமான கேலிக்கூத்து நடந்துகொண்டிருக்கிற நேரத்தில், இதைத் தடுக்க மாண்புமிகு எம். ஜி. ஆர்;. அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய மனக்குறை.

எனினும், இந்திய அரசின் ஒரு மாநில முதலமைச்சர் என்ற நிலையில் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் மிகமிக சாதுர்யமான முறையில் நடந்துகொண்டார். ஈழத்தமிழர் பிரச்னையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் அவருடைய செயல்பாடுகளில் நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பகிரங்கமாக அதை வெளிப்படுத்தவோ நடைமுறைப் படுத்தவோ எம். ஜி. ஆர் இயலாதவராக இருந்தார் என்பதுதான் உண்மை.

திரு. எம். ஜி. ஆர் அவர்கள் ஓர் இணையற்ற ஏழைப் பங்காளர்: ஆனால் எழுச்சிமிக்க ராஜதந்திரி அல்ல! அடக்கமான பண்பாளர்: ஆனால் அரசியல் சாணக்கியன் அல்ல! மக்கள் பின்பலம் கொண்ட மகா சக்திமான்: ஆனால் மதிநுட்பம் கொண்ட பெருந்தலைவன் அல்ல! தமிழுக்கும் தமிழருக்கும் அவர் தொண்டாற்றியது உண்மை. ஆனால் தமிழ்ப்பகைவர் தலைநாணும் வண்ணம் அவர் எந்தச் சாதனை முத்திரையுமே பதிக்கவில்லை என்பது உண்மையிலும் உண்மை. அப்படிக் கிடைத்த அரிய வாய்ப்புக்களில்கூட அவர் மௌனம் சாதித்து வந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. திரு. எம். ஜி. ஆர் அவர்களில் நிஜமான முகம் இதுதான்.

கடைந்தெடுத்த ஒரு மாநில அரசியல்வாதியாக விளங்கிக்கொண்டு, இந்தியப் பெருநாட்டு அரசியலையே கலக்கிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள்கூட, விளம்பர லாபம் கருதியேனும் சில தருணங்களில் ஈழத் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்ததுண்டு. ஆனால் எம். ஜி. ஆர் அவர்கள் எந்தவொரு தருணத்திலும் தமிழீழத் தாயகத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டதில்லை. கச்சத் தீவில் எத்தனையோ தமிழ் மீனவர்கள் காடையர்களால் வேட்டையாடப்பட்ட போது, ஒருநாள்கூட எம். ஜி. ஆர். அவர்களின் கண்டனம் வெளிவரவில்லை. இது உலகம் அறிந்த வரலாறு.

சந்திரிகாவின் சர்வகால ஸ்நேகிதி செல்வி ஜெயலலிதா அவர்கள், இந்தியாவில் இருந்துகொண்டே ஈழத்தமிருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும் கெடுபிடிகள், எல்லார்க்கும் தெரிந்ததுதான். அந்தக் காட்டுத் தர்பார் கதாநாயகிகூட "கச்சத் தீவை மீட்போம்!" என்று ஒருநாள் சத்தம் போட்டதாகப் பேப்பரில் படித்தோம். இது இப்படியிருக்க, மருந்துக்குக்கூட ஈழத்தமிழர்க்கு ஆதரவானதோர் அறிக்கையை எம். ஜி. ஆர் காலத்தில் நாங்கள் பார்த்ததில்லை. கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்த இந்திராவை "சேலை கட்டிய ஹிட்லர்!" என்று கருணாநிதி வசைபாடிய போதுகூட, திரு. எம். ஜி. ஆர் அவர்களிடமிருந்து சின்னதொரு கண்டனமேனும் கிளம்பவில்லை என்பது எங்களுக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

மொத்தத்தில், ஈழத்தமிழருக்கு எம். ஜி. ஆர் செய்த சில உதவிகளை மட்டும் நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். நன்றி மிகுந்த அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம். அதே நேரத்தில், ஈழத் தமிழர் பிரச்னையில் தைரியத்தோடு செய்திருக்க வேண்டிய பல்வேறு சாதனைகளினின்று அவர் சறுக்கியதை நாம் சுட்டிக்காட்டாமல் இருட்டடிப்புச் செய்துவிடுகிறோம்.

குணக்குன்று திரு. எம். ஜி. ஆர் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்க்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மாறாக, அவர் செய்யத் தவறியவற்றையும் ஈழத் தமிழன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

எம். ஜி. ஆர் பற்றி ஒட்டியும் வெட்டியும் பேசுதற்கு நூற்றுக்கணக்கான விடயங்கள் உண்டு. அவற்றுள் மோலோங்கி நிற்பதாகச் சொல்ல வேண்டுமானால் அவருடைய பரிவு உள்ளம் ஒன்றுதான். அதற்கான சான்றுகள் ஆயிரக் கணக்கில் உண்டு. ஆனால் நிச்சயமாக அவர் ஒரு சாதனை வீரர் அல்லர். அதாவது, புரட்சித் தலைவர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவர் அல்லர். இது என்போன்ற இலட்சக் கணக்கான தமிழர்களின் கருத்து என்பதைப் பணிவுடன் இங்கு பதிவுசெய்து கொள்ள விரும்புகிறேன்.

நமக்கு இப்போது வேண்டியது பாரதி போன்ற பொறிபறக்கும் போர்க்கவசங்கள். அறிஞர் அண்ணா போன்ற அச்சமற்ற நல்லறிவுப் பெட்டகங்கள். வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற வைரம் பாய்ந்த எஃகு உள்ளங்கள். அவ்வளவுதான்.

மீண்டும் பேசுவோம்.

என்றும் அன்புடன்:
தொ. சூசைமிக்கேல்.
Reply


Messages In This Thread
[No subject] - by Thaya Jibbrahn - 04-15-2005, 02:25 AM
[No subject] - by Vasampu - 04-15-2005, 08:00 AM
[No subject] - by hari - 04-17-2005, 05:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)