Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி
#20
புகழ்பெற்ற இந்தியப் பொருளியலாரான அமர்தியா சென் ஒருமுறை பின்வருமாறு சொல்லியிருந்தார்,

"சுயாதீனமான ஊடகங்கள்களைக் கொண்டிருந்த நாடுகள் எப்பொழுதும் பஞ்சத்தை அனுபவித்ததில்லை ஏனெனில், சுயாதீன ஊடகங்கள் எப்பொதும் குறைபாடுகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியில் கொண்டு வந்து விடுவதால் அரசாங்கங்கள் அவற்றிற்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றன." என்று.

அதாவது ஒரு சுயாதீன ஊடகம் எந்த மக்கள் திரளைப் பிரநிதித்துவம் செய்கிறதோ அந்த மக்கள் திரளையும் அதை ஆள்வோரையும் சதா உசார் நிலையில் விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தம்.

"ஒரு சுயாதீன ஊடகம் சிலவேளைகளில் உனக்கு எரிச்சலூட்டலாம். ஆனால் உனக்கு ஆபத்து வரும் போது அதுதான் உன்னைப் பாதுகாக்கும்" என்று ஒரு மேற்கோள் உண்டு. அண்மை ஆண்டுகளில் ஆசியாவில் ஆப்கானிலும் ஈராக்கிலும் இரத்தம் சிந்தி நிரூபிக்கப்பட்ட ஒரு கூற்றாக இது காணப்படுகிறது.

கட்டாரை தளமாகக் கொண்டியங்கும் அல்ஐசீரா தொலைக்காட்சி இன்று அரப்புக்களின் இதயத் துடிப்பாக மாறியிருக்கின்றது. ஒசாமா பின்லாடன் தொடக்கி வைத்த "நவீன சிலுவை யுத்தத்தின்" பேறாகவே அல்ஐசீரா இன்று இத்துணை கவனிப்பைப் பெற்றிருக்கிறது.

முன்பு தலிபான்களின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களை முரட்டுத்தனமாக கையாண்ட தலிபான்கள் வழமைக்கு மாறாக அல் ஐசீராவில் மட்டும் கைவைக்கவில்லை. இதன் நற்பலனை அமெரிக்கா ஆப்கானுக்குள் நுழைந்த பின்பே தலிபான்கள் அனுபவித்தார்கள். ஆப்கானில் நடப்பவைகள் பற்றி அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து செய்திகளைத் தரும் ஊடகங்களே சக்திமிக்கவைகளாகவும் சர்வவியாபகமானவைகளாகவும் காணப்பட்ட ஒரு ஊடகச் சூழலில் ஆப்கானியர்கள் நோக்கு நிலையிலிருந்து செய்திகளை வெளியில் கொண்டு வந்தது அல் ஐசீராதான்.

இப்போது ஈராக்கிலும் அதே தொண்டைத்தான் அல் ஐசீரா செய்துகொண்டிருக்கிறது. அல் ஐசீராவை மூடிவிடும்படி கட்டார் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. வர்த்தக நோக்கு நிலையில் ஆதாயமின்றி ஓடிக்கொண்டிருக்கும் அல்ஐசீராவின் பங்குகளை தனியாருக்கு விற்று விடுமாறும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. முடிவில், அண்மையில், அல்ஐசீராவுக்குப் போட்டியாக அல்குரான் என்றொரு புதிய தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான தமது உலகளாவிய போரில் அல் ஐசீராவை ஓரங்கட்டாமல் அரபுக்களை மனோவசியம் செய்வது கடினம் என்று நம்புகிறன.

பலம் வாய்ந்த மிக நீண்ட பாரம்பரியங்களையுடைய சர்வ வியாபகமான மேற்கின் ஊடகங்களோடு ஒப்பிடுகையில் அல் ஐசீரா ஒரு மாற்று குரல் போலத் தோன்றினாலும் அரபுலகத்தைப் பொறுத்தவரை அது ஒரு பிரதான நீரோட்ட ஊடகமாகத்தான் காணப்படுகின்றது.

அல் ஐசீராவை நியப்படுத்துவது இன்று இப்பந்தியின் நோக்கமல்ல. மாறாக பலசாலி நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வவியாபகமான பேரூடகங்களால் போதியளவு பிரதிநிதித்துவம் செய்யப்படாத ஒரு பிராந்தியமோ அல்லது நாடோ அல்லது மக்கள் திரளோ தனக்கென்று ஒரு மாற்று ஊடகவலப்பின்னலை உருவாக்கி வரும் போக்கின் மேற்காசிய உதாரணம் இது என்பதாலேயே இன்று இப்பந்தியில் அல்ஐசீரா பற்றிக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

ஆம் இன்றைய உலகளாவிய ஊடகப்பரப்பில் இரண்டு பிரதான நீரோட்டத்திற்குரிய பேரூடகங்கள் மற்றது மாற்று ஊடகங்கள் இவை ஓல்றனேற்றில் மீடியாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக பேரூடகங்கள் எனப்படுபவை புரட்சிகரமானவைகளாக் காணப்படுவதில்லை ஏற்கனவே தரப்பட்ட நம்பிக்கைகள் ஏற்கனவே நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகள் போன்றவற்றின் குரலாகக் காணப்படுவதனால் இவை பிறப்பியல்பிலேயே அந்த நம்பிக்கைகளையும் ஒழுங்குகளையும் மீற முடியாத வைகளாகக் காணப்படுவதுண்டு சர்ச்சைகளைக் கிளப்புவது என்ற புரட்சிகரமான அம்சத்தைத் தவிர மற்றெல்லா விசயங்;களிலும் இவை போராடும் இனங்கள், நாடுகள் அல்லது மக்கள் திரளின் குரலாக எழ முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.

மற்றது, மாற்று ஊடகங்கள்.

பேரூடகங்களின் சர்வ வியாபகத்தன்மையோடு ஒப்பிடுகையில் இவற்றின் வீச்செல்லை மிகவும் வரையறைக்குற்பட்டதே. ஆனால் பேரூடங்களால் பாதுகாக்கப்படும் ஏற்கனவே தரப்பட்ட நம்பிக்கைகளையும் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகளையும் எதிர்த்து உருவாகுபவை என்பதால் இவை பிறப்பால் புரட்சிகரமானவை, எனவே போராடும் இனங்கள் மற்றும் நாடுகளின் நலிந்த குரலை இவை வெளிக்கொண்டு வருகின்றன.

இத்தகைய மாற்று ஊடகங்களின் பிரதான தளமாக இன்று இன்ரனெற் காணப்படுகின்றது. பலஸ்தீனத்தின் சமாதான முயற்சிகளைப் பற்றி எழுதப்பட்டதும் அதிகம் வாசிக்கப்பட்டதுமாகிய THE END OF THE PEACE PROCESS என்று நூலை எழுதிய எட்வேர்ட் டபிள்யூ செய்ட் அந்த நூலின் இரண்டாவது பதிப்புக்குரிய அறிமுகத்தில், பலஸ்தீனத்தில் நிகழும் அட்டூழியங்கள் எப்படி வெளித்தெரிய வருகின்றன என்பது பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"நூற்றுக்கணக்கான கண் கண்ட சாட்சிகளின் வாக்கு மூலங்களையும், ஒளிப்படச் சான்றுகளையும் இன்ரனெற் வழங்கியிருக்கிறது. இது அரபு மற்றும் ஐரோப்பியத் தொலைகாட்சிகளிலும் வந்திருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவின் பிரதான நீரோட்ட ஊடகங்களில் கிடைப்பதில்லை. அல்லது அவை வெளிவருவது தடுக்கப்படுகிறது. அல்லது அவை நொய்ந்து போகுமாறு செய்யப்படுகின்றன.." என்று.

இத்தகைய ஒரு பூகோள யதார்த்தத்தின் பின்னணியில் வைத்தே அண்மையில் அரங்கினுற் பிரவேசித்திருக்கும் NTT ஐ அதாவது தமிழீழ தேசியத் தொலைக்காட்சியை பார்க்கவேண்டும்.

கிறிஸ்தவர்களின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகிய பெரிய சனியன்று அதாவது கொல்லப்பட்ட மீட்பர் உயிர்த்தெழப்போகிறார் என்று காத்திருக்கும் ஒரு நாளிலே புகலிடத் தமிழர்களை நோக்கி ஒரு புதிய ஊடக வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது பர்Pட்சார்த்தமாக செய்திகள் மற்றும் பாடல்கள் என்று சுமாராக 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஒளிபரப்படும் NTT காலப் போக்கில் தனது நேரத்தை மேலும் அதிகரித்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.

இப்பொழுதுள்ள பிரதான கேள்வி

NTT ஒரு பிரதான நீரோட்ட ஊடகமா? அல்லது மாற்று ஊடகமா? என்பதே.

தமிழ் மீடியாப் பாரம்பரியம் என்று பார்க்கும் போது பொதுவாக புரட்சி கரமானதாக இருந்ததில்லை. அது பெருமளவுக்கு தமிழ்ச்சினிமாவின் நீட்சியும் அகற்சியுமாகி எல்லாவற்றிலும் ஒரு வித சினிமாத்தனமே விரவிக் கிடக்கக் காணலாம்.

அதே சமயம், புரட்சிகரமானவை என்று கூறப்படும் மாற்று ஊடகங்கள் பெருமளவுக்கு சிறு சஞ்சிகைகள் அல்லது சிறுபத்திரிகைகள் (ரப்லொயிற்ஸ்) என்ற அளவிலே சுருங்கிக் கிடக்கக் காணலாம்.

இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஒரு விடுதலை இயக்கத்தின் தொலைக்காட்சியாக வந்து பிறந்திருக்கும் NTT எத்தகைய ஒரு பாத்திரத்தை வகிக்கப்போகிறது?
ஒரு விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு விடுதலை பிரசேத்திலிருந்து முதலில் புலம் பெயர்ந்த தனது மக்களை நோக்கிவரும் ஒரு தொலைக்காட்சிச் சேவை என்று பார்க்கும் போது அது சிறுசஞ்சிகைகள், சிறு பத்திகைகள் அல்லது புலமைசார் இணையத்தளங்கள் போன்ற சிறிய வட்டத்துள் சுருங்கி நின்று விட முடியாத அளவுக்கு பொறுப்பு அதிகமுடையதாகக் காணப்படுகிறது. அதேசமயம், ஒரு விடுதலை இயக்கத்தின் ஊடகம் என்பதால் அது ஆகக் கூடிய பட்சம் புரட்சிகரமாதாகவும் இருக்க வேண்டியுள்ளது.

எனவே, NTT தனது சனங்களை அணிதிரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து வரும் போது ஒரு விதத்தில் பிரதான நீரோட்ட ஊடகமாக வரவேண்டியிருக்கிறது. அதேசமயம் அது ஒரு விடுதலை மீடியா என்பதால் அதிகம் புரட்சி கரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது.

முன்னாள் சிறிலங்கா சனாதிபதி பிரேமதாஸவின் ஆலோசகரும் மூத்த சிவில் அதிகாரியுமான நெவில் ஐயவீர ஒரு முறை "பொருளியல் நோக்கில்" எழுதியிருந்தார். "சீரியஸானதுக்கும் ஜனரஞ்சமாகனதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை" என்று. தமிழில் இது தான் பொதுப் போக்காய் இருந்து வருகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்த வாய்ப்பாட்டை உடைந்து சீரியஸானதை ஜனரஞ்சகமாக்கவேண்டிய ஒரு கள யதார்த்ததை திறந்து விட்டிருக்கிறது.

ஜனரஞ்சகமானதை சீரியஸான தாக்க முடியாது. ஆனால் சீரியஸானதை ஜனவசியமுடையதாக மாற்ற முயற்சிக்கலாம். எல்லா விடுதலைப் போராட்டங்களும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மீடியாக்காரர்களிடம் கோரிநிற்பது இதைத்தான்.

இந்த யதார்த்தத்தை உள்வாங்கி NTT யும், தமிழில் ஒரு புதுக்கலவையாக ஒரு நூதனமாக சேர்க்கையாக புதிய முன்னுதாரணமாக வெளிவரவேண்டிய ஒரு தேவையிருக்கிறது.

அது போலவே, உலக மெலாம் சிதறிவாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு தொலைக்காட்சி என்ற மிகவும் சர்ச்சைக்குரிய ஆனால் மகத்தான ஒரு பொறுப்பையும் அது சுமக்க வேண்டியிருக்கிறது.

Nilanthan/Eelanaatham
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 03-26-2005, 05:02 PM
[No subject] - by kuruvikal - 03-26-2005, 06:23 PM
[No subject] - by AJeevan - 03-26-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 03-26-2005, 07:11 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2005, 07:17 PM
[No subject] - by vasisutha - 03-26-2005, 08:29 PM
[No subject] - by eelapirean - 03-26-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 09:57 PM
[No subject] - by வியாசன் - 03-26-2005, 10:02 PM
[No subject] - by glad - 03-27-2005, 10:07 AM
[No subject] - by hari - 03-27-2005, 04:25 PM
[No subject] - by adithadi - 03-27-2005, 05:03 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 03-27-2005, 05:06 PM
[No subject] - by Mathan - 04-07-2005, 09:01 PM
[No subject] - by hari - 04-08-2005, 05:02 AM
[No subject] - by iruvizhi - 04-08-2005, 02:12 PM
[No subject] - by Sriramanan - 04-08-2005, 08:46 PM
NTT ஒரு பிரதான நீரோட்ட ஊடகமா? அல்லது மாற்று ஊடகமா? - by spyder12uk - 04-10-2005, 11:58 PM
[No subject] - by selvanNL - 11-17-2005, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)