Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்ற(து) சுமை - கதை (Story)
#4
பெற்ற(து) சுமை

செத்தவீடு லீவு நாளில் வந்தபடியால் தான் நான் இறுதி கிரியைக்கு வரக்கூடியதாக இருந்தது. வேலைநாட்களில் வந்திருந்தால் வேலையைவிட்டு வரவேண்டிய உறவு அல்ல இந்த செல்லப்பு வாத்தியார் எனக்கு. ஊரிலே எங்கள் வீதிக்கு அருகில் ஒன்பதாம் வகுப்பு கணிதபாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த அருமையான வாத்தியார்.

செத்தவீட்டுக்கு மிகவும் நேரத்தோடு நான் வந்து முதல் ஆசனத்தில் அமர்திருந்தேன். ஆட்கள் வந்தபிறகு போனால் செத்தவீட்டுக்கு வந்த சனம் என்னைப்பற்றியும் நான் போட்டிருக்கும் உடுப்பை, என் பரம்பரையைப் பற்றி அலசியாராயும். அதை முன்கூட்டியே அறிந்த நான் பிணம் வைக்கும் பெட்டிக்கருகில் அமர்ந்தேன். 20 நிமிடங்களின் பின்னால் செல்லப்பு வாத்தியின் பிணத்தை தூக்கிக்கொண்டு அவரின் பிள்ளைகள் முன்னே வருகிறார்கள். அவர்கள் முகத்தில் கவலை, அழுத களைப்பு நன்றாகத் தெரிகிறது.

மருத்துவனாக பணிபுரியும் மூத்தவன் முதல் ஒரு முன் பக்கத்தை தூக்க, பொறியிளாலனாக பணிபுரியும் இரண்டாவது மகன் அடுத்தபக்கத்தில் தூக்க, மூத்த மகளின் கணவன் ஒரு பின் பக்கத்தை தூக்க, அடுத்தப் பக்கத்தில் இரண்டாவது மகளின் கணவன் தூக்க பிணம் பெட்டிக்கருகே வந்தது தான் தாமதம் எங்கோ எதைப் பற்றியோ யோசித்துக்கொண்டிருந்த சனம் அழுது புலம்ப நானும் சும்மா இருந்தால், வேடிக்கை பார்க்க வந்தவன் என நினைத்துவிடுவார்கள் என்று கூட்டத்தில் ஒன்றாய் அழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

செல்லப்பு வாத்தியின் உடம்பைப் பார்த்தவுடன் எனக்குள்ளே பல எண்ணங்கள் ஓடிமறைந்தன. உலகத்தில் பிறப்பவர்கள் யாவரும் எப்போ, எப்படி சாவோம் என்பது தெரியாமல் அலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் பிறந்து இறப்பதற்குள்ளே எத்தனை விதமான மனிதர்களை சந்திக்க தள்ளப்படுகிறோம்.
கம்பீரமாக படுத்துக்கிடக்கும் செல்லப்பு வாத்தியின் உடம்புக்குள்ளே உயிர் இருந்த போது அவர் பட்ட வேதனைகளை நான் என் மனதுக்குள்ளே சற்று மீட்டிப்பார்த்தேன்.

செல்லப்பு வாத்திக்கு நான்கு அழகான பிள்ளைகள். சீராட்டி உயிரூட்டி அவர்களை வளர்த்து ஆளாக்கி மனிதனாக்கி ஒவ்வொன்றாய் படிப்பித்து வெளிநாட்டுக்கு ( 20 வருடங்களிற்கு முன்னால்) அனுப்பிவைத்து தானும் தன் பாடும் என்றிருந்த இவரை பிள்ளைகள் போட்டிப்போட்டு ஸ்பொன்சரில் கூப்பிட்டார்கள். மூத்தமகளுக்கு பிள்ளை பராமரிக்க அழகான திடமான ஒரு வயொதிபர் வந்தாயிற்று. இவருக்கு ஒதுக்கிய பேஸ்மன்றில் அழகான தொலைக்காட்சி, இலத்திரனியல் பொருட்கள் வந்த பெட்டிகளோடு இவரும் ஒருவராய் குடியமர்த்தப்பட்டார். மூத்த மகளை ஒற்றைக்காலில் நின்று அவளின் கணவன் இருவது வயதில் காதல் திருமணம் செய்துகொண்டவர். அந்தக் காலங்களில் மருமகனுக்கு மாமாவின் மேல் மிகுந்த பாசமும் மரியாதையும் இருந்தது. இன்று கனடாவில் நிலைமை மாறிவிட்டது. அருமை மகள் பாசத்தோடு அப்பாவை விழுந்து விழுந்து கவனிப்பதனால் உலகம் இதுதான் என்று செல்லப்பு வாத்தி தப்பாக ஒருபோதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. மேல் மாடியில் அழகான ஒரு தனியறை இருக்க அதை "விருந்தாளிகளுக்கு’ ஒதுக்கி வைத்துவிட்டு தன்னை பேஸ்மன்றில் கொண்டுபோய் குளிருக்குள் இருத்தியதை தான் தூக்கி வளர்த்த பிள்ளையின் பாசத்தை புரியாமல் செத்துப்போகவில்லை. "ஏன் அப்பா, இந்த ஆளுக்கு இந்த உடுப்பு விலைகூடி போயிட்டுது. வேலைவெட்டி இல்லாமல் இருக்கிற இவருக்கு இது எல்லாம் தேவையா?" என்று ஆத்திரத்தோடு தன் கணவனைப் பார்த்துக் கேட்ட மகளின் கோபம் வாத்தியாரின் காதுக்குள்ளே போனது கடைசி வரைக்கும் அவர்களுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

இரண்டாவது மகளுக்கு பிள்ளை பிறந்த போது "என்னடி, அப்பாவை உன்னோடு வச்சுக்கொண்டு , அரசாங்க காசையும் நீ எடுத்துக்கொண்டு பெரிய இவள் மாதிரி கதைக்கிறாய்" என்று சண்டை பிடித்து இவரை தன் வீட்டுக்கு ஒரு மாதிரியாக கொண்டுபோய் அவருக்கென்று ஒரு தனியறையும் கொடுத்தாள் இரண்டாவது மகள். "ஆகா இரண்டாவது மகள் தகப்பனோடு நல்ல பாசம் தான். மூத்தவள் மாதிரி அந்த மனுசனை கொடுமைப்படுத்தமாட்டாள்" என்று ஊர் சனம் கதைக்க அதை கேட்டு இன்புற்றிருந்தாள் இரண்டாவது மகள்.

"அப்பா எங்களோடும் சொஞ்ச நாள் இருந்தால் நல்லது தானே என்று" ஆதங்கத்தோடு கேட்ட மூத்தமகன் வீட்டுக்கு ஆறு மாதம் புலம்பெயர்ந்தார் செல்லப்பு வாத்தி. இவனுக்கு சீதனம் வாங்கி தான் செல்லப்பு வாத்தியார் இரண்டாவது மகளை கரையேற்றினவர். தன் தகப்பன் வீட்டு காசை இவர் எடுத்து தன் மகளுக்கு கொடுத்த நாளில் இருந்து மருமகளுக்கு "இவர் எப்போ எங்களோடு வருவார் அப்ப இவரை நல்லா கவனிக்கிறன்’ என்று சபதெமெடுத்திருப்பாள் போலும். வீட்டை வடிவாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனாமாக இருப்பாள் இவர் மருமகள். 74 வயதில் எந்த சாமானை எங்கே வைப்பது என்று அறியாமல் வைத்துவிடுவார். மருமகள் ஒரு ஓப்பன் ரைப் என்பதனால் நேராக கேட்டுவிடுவாள் "உங்களுக்கல்லவோ வயசாகிவிட்டது பிறகு ஏன் அதை, இதை எடுத்து கண்ட இடங்களில் வைக்கிறியள்"என்று. வாத்தியாருக்கு 30 வயதாய் இருக்கும் போது ஆசையாக பெற்றெடுத்த மூத்த பிள்ளை. அந்த காலத்தில் அங்கே ஒருவர் வேலைக்குப்போக, மற்றவர், வீட்டில் பிள்ளையை வடிவாக வளர்க்கலாம். மூத்தவன் என்பதனால் அவன் பிறந்தபோது யாரோ ஒரு தெய்வப்பிறவி வீட்டில் பிறந்ததாய் ஒரே மகிழ்ச்சிக் கொண்டாட்டம். பிள்ளைகளை படிப்பிக்க பட்ட வேதனை செல்லப்பு வாத்திக்கும் மனுசிக்கும் தான் தெரியும். ஊர்க்காணிகளை விற்று ஆசை மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பின்னால், தன் மனைவி இறந்ததுக்கு வந்துவிட்டுப்போன பிள்ளைகள் ஆசையினை ஊட்டிச்செல்ல உறவுகள் அற்ற செல்லப்புவாத்தியும் தூண்டிலில் அகப்பட்ட மீனாய் கனடாவுக்கு வெளிக்கிட்டவர். மகன் தகப்பனுக்கு மனம் குறையாமல் நடப்பதாக பாசாங்கு செய்வதிலும் அவர் இல்லாதபோது தகப்பனுக்கு மாதம் மாதம் கட்டும் இன்சுரன்ஸ்சு பணத்துக்கு மற்றப் பிள்ளைகளும் பங்குபோட என்று அடம் பிடித்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தப் காதுகளுக்கு போய்ச்சேர்ந்திருக்காது என்ற நிம்மதிதான் மூத்தமகனுக்கும் அவன் மனைவிக்கும். ஒரு நாள் பாத்துரூமில் சறுக்கி விழுந்து மகன் வேலைக்கு ஒரு கிழமை லீவு போட்டு தகப்பனை ஆஸ்பத்திரியும் வீடுமாக கூட்டிச்சென்றான். ஒரு கிழமை முடிந்த பின்னால் "நீங்களும் பிள்ளைகள் தானே அப்பாவை லீவு போட்டுட்டு கவனிச்சிருக்கலாம் தானே. நான் என்ற லீவில் அவரை கவனிக்கவேண்டும். என்ற பிள்ளைகளை டிஸ்னி வேல்ட்டுக்கு கொண்டுபோக வைத்திருந்த லீவு" கத்தியழுதது அவர் காதில் விழக்கூடாமல் இருப்பதே நல்லது என்று நினைத்திருந்தான். பாவம் அவன்.

செல்லப்பு வாத்திக்கு இப்போ போற நேரம் போல. எல்லாப்பிள்ளைகளும் அவரை அடிக்கடி தங்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். தாங்களும் இன்சுரன்ஸ் காசு கட்டப்போவதாய் சொல்லி தங்கள் பெயர்களையும் வெனபசரியில் இணைத்து காசைக்கட்ட தொடங்கினார்கள். தன் தலைக்கு எவ்வளவு விலை என்பதை அறிந்திராத செல்லப்பு வாத்தி தன் இறுதிக்காலத்தில் பேரப்பிள்ளைகளோடு நேரத்தை செலவழித்தார். ஒவ்வொரு பிள்ளைகளும் தன் தகப்பனை கவனிப்பது எதனால் என்பதை புரியாத செல்லப்பு வாத்தியார் தான் சாகப்போவதை உணர்ந்தவராக ஊருக்குப்போக வெளிக்கிட்டவரை பிள்ளைகள் ஊர் கதைக்குப்பயந்து தடுத்துவிட்டார்கள். (அப்பாவை அடித்து விரட்டி விட்டார்கள் என்று பெயர் வந்துவிடும்.)

அதிகாலை தன் நெஞ்சு நோவதாய் சொல்லிக்கொண்டிருந்தவர் அம்புலன்சு வண்டியிலே அவர் உயிர் போய்விட்டது. பிள்ளைகள் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போக அங்கே பார்வைகள் யாவும் முடிய, "செத்த வீடு எங்கே கொண்டாடுவது" இரண்டாவது மகன் தனக்கு இப்போது தான் குழந்தை பிறந்ததாக கூறி மழுப்பியபோது நான் முந்தி நீ முந்தியாக மற்றவர்களும் "நாங்கள் அவரை வைத்துப் பாத்தனாங்கள் என்று சொல்ல சண்டையில் இவர்கள் உள்ளபோது சொந்தங்கள் செத்தவீட்டுக்கு யார் வீட்டுக்கு தங்கள் முகத்தை காட்டப்போவது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். கடைசியாக ஒரு நிபந்தனையோடு மூத்தவன் சொன்னான் "என்ட வீட்டில செய்யலாம் ஆனா செலவுக்கு எல்லாம் காசு தரவேண்டும். அந்தியேட்டியோட என்ட வேலை முடிஞ்சுது." அய்யருக்கு மற்றைய புத்தகம் அடிக்கிறது எல்லா வேலைக்கும் நீங்கள் செய்யவேண்டும்.
பிணம் எரிக்கப்படுவதற்கு முன்னாலே இன்சுரன்ஸ் பணத்தில் பெரியண்ணன் கை வைத்துவிட்டான் என்று மற்றைய மூவரும் கூட்டணி போட்டார்கள். கூட்டணியை உடைத்தால் தான் தான் எடுத்த பணத்துக்கு காரணம் காட்டத்தேவையில்லை என்பதை புரிந்தவனாக இரண்டாவது தங்கச்சியை பேசி தன் பக்கத்துக்கு எடுத்துவிட்டான்.

எங்கே(h) மூலையில் சத்தம் ஓயாததைப் பார்த்து திடுக்கிட்ட எழும்பிய நான் அய்யரின் புலம்பலில் என் எண்ணங்கள் தடைப்பட்டன. நாளை இந்தப்பிள்ளைகள் புத்தகத்தில் தான் மருத்துவன், பொறியியலாளன் என்றும் அப்பா ஒரு தெய்வப்பிறவி என்றும் போட்டி போட்டு கதைகள் வரும். அவரோடு ஆர அமர 10 நிமிடங்களாவது நேரத்தை செலவுசெய்யாத பிள்ளைகள் அவரைப் பற்றி திறமான தமிழில் கவிதைகள் வரைவார்கள். ஒவ்வொரு வருடமும் இவர் நினைவில் நினைவஞ்சலி செய்வார்கள். வாய் நிறைய எங்கட சனம் வந்து சாப்பிட்டு தங்கள் "வீட்டையும் காரையும்’ வசதிகளையும் பார்த்துவிட்டு போவார்கள். உயிரோடு இருக்கும்போது நாயைவிடவும் கேவலமாக மதித்து ஒருவர் இறந்த பின்னால் வெறும் சம்பிரதாயத்துக்காக இவ்வளவும் செய்வார்கள். பாவம் செத்த செல்லப்பு வாத்திக்கு கவலை மூலம் தான் இரத்த ஓட்டம் அதிகரித்தது என்பது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. அது தான் போல எங்கட சனம் ஆக கூடியது 80 மட்டும் தான் இருக்குதுகள்.

நேரம் முடிகிறது. செத்தவிட்டில் எழும்பிய எனக்குள்ளே ஒரு நிம்மதி "நல்ல காலம் என்ட அப்பா அம்மாவை இங்கே கூப்பிடாமல் விட்டது. அதுகள் இங்கே வந்தால் நாங்களும் இதை தானே செய்யவேண்டும். நல்லவனைக் கூட கெட்டவனாய் மாற்றும் இயற்கையும், வேலைச் சுமைகள் உள்ள இந்த தேசத்தில் பாசம் புரியப்போவதில்லை" எங்கள் பிள்ளைகளும் ஒரு காலத்தில் வளந்து ஆளாகி எங்களை துன்புறுத்தும் வரைக்கும் நாங்களும் இந்த பூமியில் ராஐhக்கள் தான். திருமணம் செய்து இன்புற்று பிள்ளைகளையும் பெற்று மகிழ்ந்திருந்து பின்னால் எமக்கும் இந்த கதி தானே. எம் மண்ணில் ஒடித்திரிந்த எம் பிள்ளைகளே இப்படிச் செய்யும் போது இங்கே பிறந்து வளர்வதுகள் என்னத்தைச் போகுதுகளோ..என்ற குழப்பத்தில் நான் வீட்டுக்கு நடையைக்கட்டினேன்.


கனடாவிலிருந்து தம்பிதாசன் (யாவும் கற்பனையல்ல)
Reply


Messages In This Thread
எனது கதை - by thambythasan - 04-01-2005, 11:22 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 11:52 PM
Re: எனது கதை - by shanmuhi - 04-02-2005, 11:59 PM
பெற்ற(து) சுமை - கதை (Story) - by thambythasan - 04-04-2005, 04:53 PM
[No subject] - by Double - 04-04-2005, 05:06 PM
[No subject] - by KULAKADDAN - 04-04-2005, 05:15 PM
[No subject] - by thambythasan - 04-04-2005, 05:17 PM
[No subject] - by tamilini - 04-04-2005, 05:27 PM
[No subject] - by THAVAM - 04-04-2005, 07:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)