Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலரட்டும், ஈழ நாடு!-தொ. சூசைமிக்கேல்
#1
<b>மலரட்டும், ஈழ நாடு! </b>

தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
<img src='http://www.webulagam.com/images/0520_prabhakaran.gif' border='0' alt='user posted image'>

தென்னிலங்கைச் செந்தமிழன்: தெளிந்த வீரன்:
சிற்றினத்தைச் சேராத சிறந்த தோழன்:
மண்ணிலெங்கும் காணாத விழுப்புண் ணெல்லாம்
மார்மீது தாங்கிநிற்கும் மறவ நெஞ்சன்:
என்னையீன்ற அன்னையீன்ற இனிய மைந்தன்:
ஈழமென்னும் தூயமண்ணின் உரிமை வேந்தன்:
தன்னையீந்து நிற்கின்றான், சரித்தி ரத்தில்
தனிமகுடம் புனைகின்றான்! தமிழா, கேள், நீ!


கடல்கொண்ட தென்னாட்டின் காலம் தொட்டுக்
கண்ணெதிரே தென்படும்இந் நாள்வ ரைக்கும்
அடலேறாய், ஆசானாய் இலங்கை மண்ணை
ஆண்டிருந்த அருந்தமிழன் அல்லல் சூழப்
படலாமோ? பச்சைரத்தம் சொட்டச் சொட்டப்
பாதகர்தம் சதிவலைக்கண் வீழ்ந்தி டத்தான்
விடலாமோ? விழித்தெழுமின்! ஒருகு டைக்கீழ்
விரைந்திடுமின், உலகத்துத் தமிழ்நெஞ் சங்காள்!


பொன்னீழத் திருநாட்டில் புகுந்து கொண்ட
போர்மேகம் கலைவதற்கோர் வழி சொல்லுங்கள்!
கண்ணீரும் கதறலுமே கதையாய்ப் போன
காட்சிகட்கோர் இறுதிதினம் குறித்தி டுங்கள்!
நன்னீரைப் பிரித்தறியும் அன்னம் போன்றே
நானிலத்தில் தமிழினத்தின் நலம் பேணுங்கள்!
என்னீசன் இணையடிமுன் இதுசொல் கின்றேன்:
இந்தியன்தான் யான் எனினும் தமிழன் அன்றோ?


இந்துமகா சமுத்திரத்தின் முத்துத் தீவில்
ஈழம்இனி எங்களுக்கோர் திருநாட் கோவில்!
அந்தமிலாச் செந்தமிழால் அறம் வளர்த்த
அச்சமிலாச் செங்கோல்தான் இனிய(ம்) மண்ணில்!
சொந்தமெலாம் சுதந்திரத்தின் ஈரக் காற்றைச்
சுவாசிக்கும் திருநாள்தான் மலரும் போழ்தில்
என்றுமிலா இன்பமெலாம் பெருகும், நெஞ்சில்!
எழுதிக்கொள்- ஈழத்துக் காளையே, நீ!


ஒருநாள், அத் திருநாளும் வந்தே தீரும்:
உயிர்த்தியாகம் தனதுபயன் தந்தே தீரும்!
ஒருமித்த பெருமிதத்தில் ஈழச் சின்னம்
ஓங்கியதோர் கம்பமதில் பறந்தே தீரும்!
தருமத்தைக் கவ்வியதோர் சூதி னுக்குத்
தமிழ்வேதம் தண்டனைகள் விதித்தே தீரும்!
குருதிப்போர் புதுச்சரிதம் படைத்தே தீரும்:
குவலயம், எம் ஈழத்தை மதித்தே தீரும்!


ஈழத்துக் காடுகளில் பயிரா கின்ற
ஈட்டியொடு போட்டியிடும் வேகம் இந்த
ஞாலத்தில் எவனுக்கும் வாரா தென்று
நாமறிவோம்: நாற்புறமும் இதையே சொல்வோம்!
ஆழத்தில் ஊன்றியதோர் உரிமை வேட்கை
அணுவேனும் அசையாது! தாய்மண் மீது
வாழத்தான் யாம்பிறந்தோம்: எமது மைந்தர்
வாழட்டும்! மலரட்டும், ஈழ நாடு!!
Reply


Messages In This Thread
மலரட்டும், ஈழ நாடு!-தொ. சூசைமிக்கேல் - by hari - 02-20-2005, 07:32 AM
[No subject] - by kavithan - 02-20-2005, 07:35 AM
[No subject] - by KULAKADDAN - 02-20-2005, 03:41 PM
[No subject] - by tamilini - 02-20-2005, 04:39 PM
[No subject] - by shanmuhi - 02-20-2005, 09:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)