Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதம் பிடிக்கும் முறை
#1
மதம் பிடிக்கும் முறை

சத்தியமாக இது யானை பற்றிய பதிவு கிடையாது.

என்னுடைய அயலில் ஒரு வீட்டிற்குப் போகவேண்டியிருந்தது. அங்கே, என் மகனின் பள்ளியில் படிக்கும் ஒரு பத்து வயதுப் பையன் இருக்கிறான். காரியம் அவனுடன் இல்லை; அவன் தோப்பனாருடன். பெரியவர் வீட்டின் கீழடுக்கில் துணிகளைத் துவைக்க (மெசினுக்குள் போட்டுத்தான்) சென்றிருப்பதாகச் சொல்லி பையன் என்னைக் காத்திருக்கச் சொன்னான். என்னை யாரென்று அவனுக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் உள்ளே வந்து உட்காருங்கள் என்று சொல்லவில்லை.

பெற்றவர் படியேறி வரும்வரை நேரத்தைக் கழிக்க வேண்டுமே, நல்ல வார்த்தையாகப் பையனிடம் ஏதாவது பேசலாம் என்று தோன்றியது.

"உனக்குப் புதுப் பள்ளிக்கூடம் பிடித்திருக்கிறதா?" (இந்தப் பையனும், என் பையன்களும் படிக்கும் அந்தப் பள்ளிக்கூடம் இந்த வருடம்தான் திறக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இன்னொரு நாள் எழுதியாக வேண்டும்).

"ஆமாம், நல்ல பள்ளிக்கூடம்"

"உன்னுடைய ஆசிரியர் யார்?"

"--- இன்னார்"

"அவர் நன்றாகப் பாடம் நடத்துகிறாரா?"

"பரவாயில்லை"

"கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தில் மிக நன்றாக நடந்தன இல்லையா?"

"ம்ம்.. ஓக்கே"

(இந்த நேரத்தில் தோப்பனார் படியேறி வந்துவிட்டிருந்தார். இருந்தும் பையனுடன் உடனே பேச்சை நிறுத்தமுடியவில்லை)

"நான் உன்னைப் பார்த்தேனே, கரோல் பாடும்பொழுது முன்வரிசையில், ரெயின்டீயரைப் போல கொம்பு வைத்த குல்லாய் போட்டுக் கொண்டிருந்தாய் இல்லையா?"

"இல்லை, நான் இல்லை"

"நாலாம் வகுப்புப் பாடலைச் சொல்கிறேன், நீ நாலாம் வகுப்புதானே"

"ஆமாம், நான் நாலாம் வகுப்புதான், ஆனால் நானில்லை"

"என்ன இப்படிச் சொல்கிறாய், பச்சைக் கலரில் மஃப்ளரைக் கழுத்தில் மாலைபோலப் போட்டுக்கொண்டிருந்தாயே?"

"இல்லை, நான் இல்லை, நான் ஒருபொழுதும் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டத்தில் கலந்துகொள்ளமாட்டேன்"

"ஏன்?"

"நான் ஒரு யூதன்"

"நாங்களும் கூடத்தான் கிறிஸ்துவர்கள் இல்லை, ஆனால் என் மகன் வகுப்பில் பாடினான்"

"யூதர்கள் ஒருபொழுதும் கிறிஸ்துமஸ் போன்ற அபத்ததைக் கொண்டாடுவதில்லை"

(இதைச் சொல்லும் பொழுது அவன் கண்களில் ஒரு பெருமிதம், ஒரு கணம் அவன் அப்பாவைப் பார்த்தேன், அவர் ஈன்ற பொழுதினில் பெரிதுவந்து கொண்டிருந்தார். எனக்குப் பெரும் அதிர்ச்சி).

"இல்லையப்பா, இதில் என்ன இருக்கிறது, எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்பொழுது நாமும் அவர்கள் சந்தோஷத்தில் கலந்துகொள்ள வேண்டுமில்லையா?"

"ம்ம்.. அவர்கள் சந்தோஷம், என் சந்தோஷமில்லை. கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் சந்தோஷம் என் துயரம்"

"அப்படியா!?"

"ஆமாம், மேலும் யூதர்கள் எல்லோரையும்விட உயர்வானவர்கள். அதனால்தான் அவர்களை எல்லோரும் அழிக்க முற்படுகிறார்கள்"

"அது தெரியாது எனக்கு. நான் யூதனில்லை. நான் பிறந்த இடத்தில் யூதர்கள் கிடையாது"

"உலகத்தில் யூதர்கள் இல்லாத இடமே இல்லை"

"இருக்கலாம், எங்கள் ஊரில்கூட. ஆனால் அதிகம் கிடையாது, எனவே நான் சந்தித்ததில்லை"

"அவர்கள் நல்லவர்கள்"

"ஆமாம், எல்லோரும் நல்லவர்கள்தான்"

...

"பையனுக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லிக் கொடுக்கிறோம். அது தெரிந்தால்தானே ஏமாறாமல் இந்த உலகில் பிழைக்கமுடியும்"

"ஆமாம், உங்கள் பையன் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். தெளிவாகப் பேசுகிறான். சரி, இந்தாருங்கள் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய செக்"

"சரி..."

"நன்றி, நான் போய்வருகிறேன்"

பையனைப் போலவே அப்பாவும் அங்கே காலியாகக் கிடந்த நாற்காலியில் உட்காரச் சொல்லவில்லை. எனக்கு அதற்கான தேவையும் இல்லை என்றுதான் தோன்றியது.

* * *

வீட்டிற்கு வந்தால் பாதி விளையாட்டில் வந்து கதவைத் திறந்துவிட்ட சிறிய மகன், "one flame, two flames, three flames,... seven flames, it is Hanukkah" என்று ஒவ்வொரு படியாகக் கத்திக் கொண்டே விளையாட்டைத் தொடர மாடியேறிச் சென்றான்.

venkat
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
மதம் பிடிக்கும் முறை - by Mathan - 02-14-2005, 02:38 AM
[No subject] - by Mathan - 02-14-2005, 02:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)