Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலிந்து யுத்தம் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய கடமை எமக
#1
வலிந்து யுத்தம் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய கடமை எமக்கு உண்டு: சு.ப.தமிழ்ச்செல்வன்
இலங்கைத் தீவகத்தில் மீண்டும் யுத்தம் வருமா என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

எங்களைப் பொறுத்தவரை ஆழிப்பேரலைக்கு முன்னால் பேச்சுவார்த்தைகள், சமாதான முயற்சிகள் எல்லாம் இறுக்கம் அடைந்த ஒரு நெருக்கடியான நிலை காணப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்காது தங்களுடைய அரசியல் அதிகாரத்தை பேணுகின்ற அதிகார போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. ஆகவே, சமாதான முயற்சிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது.


ஆழிப்பேரலை பொதுவாக எல்லா இன மக்கள் மத்தியிலும் ஏற்படுத்திய பாதிப்பைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் தமிழ்மக்களையும் புலிகளையும் பார்த்து அவர்களுடன் இணைந்து இந்த மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு சகல மட்டத்திலும் இருந்தது.

ஆரம்பத்தில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், எவ்வித நடைமுறைச்; சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத இடத்து குறிப்பாக சர்வதேச சமூகத்தின் உதவிகளை தெற்கிற்கு வழங்குகின்ற அளவை பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் வடக்கு கிழக்கு பகுதிக்கு அதை பகிர்ந்தளிக்கும் எவ்வித முயற்சிகளும் இல்லாத காரணத்தினால், தமிழ்மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

அந்த ஏமாற்றம் அடைந்த சூழலில் ஐ.நா செயலாளர் நாயகம் வருகின்ற போது அவர் இந்தப் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவார், உதவிபுரிவார் என்று நம்பி இருந்த தமிழ் மக்களுக்கு ஐ.நா செயலாளரின் வருகையினை தடுத்த நடவடிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நம்பிக்கையற்றிருந்த சமாதான முயற்சிகள் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதறடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அண்மைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

பேரழிவைச்; சந்தித்து நிற்கும் மக்களைக் குழப்பும் வகையில் மிகவும் கீழ்த்தரமான முறையில் பொய்ப் பிரசாரங்களைச்; செய்வது கவலைக்குரிய விடயம். எமது தலைவருக்கோ தலைமைப்பீடத்துக்கோ ஏனைய உறுப்பினர்களுக்கோ ஏதாவது நடந்திருந்தால் நிச்;சயமாகத் தெரிந்த விடயமாக இருக்கும். இப்படியான பொய்ப் பிரசாரங்களைச்; செய்து மக்களைக் குழப்புவது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது நோக்கமாக இருக்கும்.

அந்த வகையில் கடற்புலிகள் பெருமளவு உயிரிழந்து விட்டார்கள் என்ற வதந்தியை முதலில் பரப்பினார்கள். அதில் உண்மை இல்லை. உண்மைநிலை தெரிந்த பின்பு தலைவரைப் பற்றிய வதந்தியை பரப்பியுள்ளார்கள். இது தெற்கில் உள்ள ஊடகங்களின் வழமையான காரியமாக இருப்பதால் நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. தெற்கில் உள்ள பேரினவாத ஊடகங்கள் தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களையும் வதந்திகளையும் தொடர்ந்து பரப்பி வருகின்றன. இதனை நாம் பெரிதுபடுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் வதந்தி பரப்பப்பட்டது தொடர்பாக தமிழ்மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான வதந்திகள் பரப்புவதை இன்று நேற்று அல்ல கடந்த 25 வருடகாலமாக செய்து வருகின்றது. இதற்காக தலைவர் தான் உயிருடன் இருப்பதாக வெளியில் வந்து காட்டிக் கொள்ளும் நிகழ்வு இடம்பெறவில்லை. அவர் தவறான பிரசாரங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதாக இருந்தால் எங்கள் விடுதலைப் போராட்ட அரசியல் பணிகளை முன்னெடுக்காமல் நேரத்தை வீண்விரயம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த வகையில் தலைவர் இதையொரு பெரிய விடயமாக எடுத்து தான் உயிருடன் இருப்பதாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் போராட்ட அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருந்தால் எங்கள் விடுதலை அமைப்பு பல நற்பணிகளில் இருந்து நேரத்தை வீணடித்து செல்லும்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தலைமைப்பீடம் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் வலிந்து யுத்தத்தை திணிக்கமாட்டார்கள். சிறிலங்காப் படைகள் தமிழ் மக்கள் மீது வலிந்து போரைத் திணிக்க முயன்றால் மக்களைக் காக்க போரை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு புலிகளுக்குண்டு. அந்த வகையில் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஒரு தரப்பின் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கூறமுடியாது. இரண்டு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது. ஆகவே இலங்கை அரசும் படைகளும் நடந்து கொள்கின்ற நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தீர்மானிக்கலாம்.

கிளிநொச்சியிலிருந்து தனோஜன் / Puthinam
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
வலிந்து யுத்தம் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிய கடமை எமக - by tamilini - 01-12-2005, 01:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)