Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெற்காசியாவும் 'அரசியல் சுனாமியும்'
#1
ஜனவரி 06, 2005

தெற்காசியாவும் 'அரசியல் சுனாமியும்'

ஏ.கே. கான்

சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி என்ற பெயரில் தெற்காசியாவில் தங்களது ஆளுமை மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சுனாமி தாக்குதல் நடந்த மறுதினம் அமெரிக்கா அறிவித்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?. வெறும் 15 மில்லியன் டாலர்.

ஆனால், தெற்காசியாவின் கடலோரப் பகுதிகள் கடலில் கரைந்து போய்விட்டதை, ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோய்விட்டதை சிஎன்என், பிபிசி உள்ளிட்ட தொலைக் காட்சிகள் தொடர்ந்து ஓளிபரப்ப ஆரம்பிக்க, நிலைமையின் விபரீதம் புரிந்து அமெரிக்கர்கள் அதிர, மக்களின் மன ஓட்டத்தை உணர்ந்த அமெரிக்க அரசு தனது உதவி நிதியை 35 மில்லியனாக உயர்த்தியது.

தெற்காசியாவில் ஏற்பட்ட இந்த பேரழிவைக் காரணமாக வைத்து இந்தப் பகுதியில் ஊடுருவிவிட ஆரவம் காட்டும் அமெரிக்கா தனது உதவி நிதியை ஐ.நாவிடம் தராமல் போட்டியாக ஜப்பான், ஆஸ்திரேலியா எனது தனது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு சுனாமி நிவாரணத்துக்கு தனி அமைப்பை ("ஞிணிணூஞு ஞ்ணூணிதணீ") ஏற்படுத்தியது.

அதில் தெற்காசியாவின் சூப்பர் பவர் என்று கொம்பு சீவிவிடப்பட்ட இந்தியாவையும் சேர்த்துக் கொண்டது. முதலில் யோசிக்காமல் இதில் சேர தலையாட்டிவிட்ட இந்தியா பின்னர் அமெரிக்காவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு மெதுவாக பின் வாங்க ஆரம்பித்தது.

இதற்கிடையே சுனாமியால் பல முறை பாதிக்கப்பட்ட ஜப்பான் 500 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக அறிவிக்க, சீனாவும் 40 மில்லியன் டாலர் உதவியை அறிவிக்க, இதையடுத்து அமெரிக்கா தனது உதவியை 350 மில்லியன் டாலராக அதிகரித்தது.

அல்கொய்தா மற்றும் தலிபான்களுடன் சண்டை போட பாகிஸ்தானுக்கு கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கியுள்ள நிதி 1.6 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 1.5 லட்சம் மக்கள் பலியான, சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட பேரழிவுக்கு அமெரிக்கா அளித்துள்ள உதவி வெறும் 350 மில்லியன் டாலர் தான். தெற்காசியாவுக்குள் நிரந்தர கூடாரம் போட தனக்கு உதவினால் மட்டுமே கூடுதல் நிதி வழங்கப்படும் என்பதை சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட ஜெர்மனி படாரென களத்தில் குதித்துள்ளது. நிதியுதவிக்காக எந்த நாடும் அமெரிக்காவுக்கு கதவைத் திறந்துவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள ஜெர்மனி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 674 மில்லியன் டாலரை உதவித் தொகையாக வழங்குவதாக ஐ.நாவிடம் தெரிவித்துள்ளது.

இது ஜப்பான் அறிவித்த 500 மில்லியன் டாலர்களை விட 174 மில்லியன் டாலர் அதிகம். மேலும் ஏராளமான நிவாரணப் பொருட்கள், ஏர் ஆம்புலன்ஸ்கள் என பல வகைப்பட்ட உதவிகளையும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தது ஜெர்மனி.

இதைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் தனது கடல் அதிகார எல்லைக்குள் வரும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.

இதனால் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 1 பில்லியன் டாலர் உதவியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.

ஜெர்மனியின் வேகம் கண்டு திணறிய அமெரிக்க அதிபர் புஷ் உடனே முன்னாள் அதிபர்களான தனது தந்தை புஷ் சீனியர் மற்றும் பில் கிளின்டனை அழைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு ஒரு ரவுண்டு போய் வந்தார். வேண்டிய உதவிகளைச் செய்வோம் என்றதோடு இந்தியாவையும் பாராட்டித் தள்ளினார்.

அமெரிக்க நிதியுதவியை ஏற்றாலும் படை உதவிகளை பாதிக்கப்பட்ட நாடுகள் ஏற்கவில்லை. இதில் விதி விலக்கு இலங்கை மட்டுமே. அமெரிக்கப் படையினர் 1,500 பேரை நிவாரணப் பணிகளுக்காக உள்ளே அனுமதித்துள்ளது இலங்கை.

இது நடக்கும் என்று தெரிந்தது தான், சுனாமி தாக்கியவுடன் இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவியையும் கூடவே இரண்டு போர்க் கப்பல்களில் மீட்பு உபகரணங்களையும், ராணுவ சரக்கு விமானங்களில் ஏராளமான நிவாரணப் பொருட்களையும் அனுப்பியது இந்தியா.

அமெரிக்கப் படைகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க இந்தியா எவ்வளவோ முயன்றது. எல்லா உதவிகளும் செய்வதாக அதிபர் சந்திரிகாவிடம் பலமுறை தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஆனாலும் அமெரிக்கப் படைகளை இலங்கைக்குள் அனுமதித்துவிட்டார் சந்திரிகா.

இதையடுத்து அமெரிக்கா தலைமையிலான நிவாரண உதவிக்கான 4 நாடுகள் அமைப்பில் இருந்து இந்தியா வேகமாகவே பின் வாங்க ஆரம்பிக்க, இன்று அந்த அமைப்பே கலைக்கப்படுவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீடோ அதிகாரத்துடன் நிரந்தர இடம் பிடிக்கும் தீவிரத்தில் இருக்கும் இந்தியா, இந்தப் பேரழிவையடுத்து தனக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை என்று அறிவித்துவிட்டது.

பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் ஒரு நாடு இயற்கைப் பேரழிவைத் தானே சமாளித்துக் கொள்ள முடியாவிட்டால் எப்படி என்ற கேள்வி எழுந்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும், இந்தப் பேரழிவைக் காரணமாக வைத்து நிதியுதவி செய்துவிட்டு பின்னர் தன்னை எந்த நாடும் கட்டுப்படுத்த முயலக் கூடாது என்ற காரணத்தாலும் வெளிநாட்டு நிதியுதவிகளுக்கு கும்பிடு போட்டுவிட்டது இந்தியா.

மேலும் தான் பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும் தன்னால் பிற நாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்ட ராணுவ பலமும் பண வசதியும் இருக்கிறது என்பதை மாலத்தீவு, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு ராணுவ கப்பல்களையும் ராணுவ சரக்கு விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவி நிரூபித்துவிட்டது இந்தியா.

இந்த பேரழிவு விஷயத்தில் வளைகுடா நாடுகள் நடந்து கொண்ட முறை தான் மிக மட்டமானது.

கறுப்புத் தங்கமான எண்ணெயில் மிதக்கும் இந்த நாடுகள் போதிய அளவில் சுனாமி பாதித்த நாடுகளுக்கு உதவ முன் வரவில்லை. சௌதி அரேபிய மன்னர் ஆட்சியாளர்கள் பிசாத்து காசு உதவியை அறிவித்துள்ளனர்.

இந்த மன்னர் குடும்ப வாரிசுகள் சார்ட்டட் விமானங்களில் உலகின் முன்னணி ரிசார்ட்டுகளுக்குச் சென்று ஒரு வாரத்தில் தண்ணியடித்துச் செலவழிக்கும் நிதி தான் இது.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் மறந்திட முடியாது. ஈரானில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டபோது பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவியை அறிவித்தன. உறுதியளித்தபடி அந்த நாடுகள் பணம் கொடுத்திருந்தால் 1 பில்லியன் டாலர் வந்திருக்க வேண்டும். ஆனால், ஈரானுக்கு கையில் வந்து சேர்ந்தது வெறும் 17 மில்லியன் மட்டுமே.

இதே போலத்தான் இப்போது 100க்கும் அதிகமான நாடுகள் 4.5 பில்லியன் வரை சுனாமி பாதித்த நாடுகளுக்கு நிதியுதவியை அறிவித்திருக்கின்றன. இதில் உண்மையிலேயே எவ்வளவு உதவி போய்ச் சேரப் போகிறது என்று தெரியவில்லை.

source: Thatstamil
Reply


Messages In This Thread
தெற்காசியாவும் 'அரசியல் சுனாமியும்' - by Vaanampaadi - 01-07-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)