Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மும்பை எக்ஸ்பிரஸ்-கமல்
#1
புதிய படத்திற்கு "மும்பை எக்ஸ்பிரஸ்' என பெயர்

ராமதாசுடன் மோத
தயாராகும் கமல்

ரஜினியின் "சந்திரமுகி'க்கு போட்டியாக ரிலீஸ்

சென்னை, நவ.7:

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்தான் வைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த பெயருக்கான காரணம் என்ன என்பது படம் வெளியானபிறகு தெரியும் என்று கூறியுள்ள கமல், இதற்கு அவர் கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர்கள் நெப்போலியன், கரண், வையாபுரி, மதன்பாப், இயக்குனர்கள் சரண், சந்தானபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது பிறந்தநாளையொட்டி நடை பெற்ற தமிழ் இனி என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவமாணவிகளுக்கு கமல் பரிசுகளை வழங்கினார். அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தாய்த் தமிழ் கல்விப்பணிக்கு நிதி உதவியை கவிஞர் தாமரை, அவரது கணவர் தியாகு ஆகியோரிடம் கமல் வழங்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த தனது ரசிகர்களின் குடும்பத்திற்கும் அவர் நிதி உதவி வழங்கினார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நற்பணி இயக்கத்தின் மூலமாக எனது ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு அரசியல் கருத்துக்களை சொல்ல நான் அருகதையற்றவன். இந்த நற்பணி இயக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம். ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மற்றும் இந்தியில் அடுத்த படம் நடிக்கி றேன். இந்த படம் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாராகிறது. "மும்பை எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

தமிழில் நாசர், பசுபதி, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியில் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர், ஓம்புரி, சவுரவ் சுக்லா ஆகியோர் நடிக்கின்றனர். தாய்த்தமிழ் பள்ளிக்கு நான் அளித்து உள்ளது ஆரம்ப உதவி. வடநாட்டைச் சேர்ந்த மாஜி அரசியல்வாதி ஒருவர் குடிசையில் இயங்கும் பள்ளிகளுக்கு டெண்ட்களை எங்கள் நற்பணி இயக்கத்தின் மூலமாக அளிக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நற்பணி மன்றம் நட்சத்திர இயக்கமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கே: படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று ராமதாசும், திருமாவளவனும் கூறி வரும் நிலையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே? அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?
ப: தமிழ்ப்படிக்கிற சில நடிகர்களில் நானும் ஒருவன். திருமாவளவன் எழுதிய கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். இந்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருப்பதற்கான காரணம் படம் வெளியான பிறகு தெரிய வரும். அவர்கள் வீண் சர்ச்சைகளை கிளப்பமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கே: "சந்திரமுகி' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?
ப: அது சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படம். சிவாஜி வீடு என் தந்தை வீடு. அவர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

கே: ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தீர்களே? அது இந்த படம்தானா?
ப:ரஜினியுடன் இணைந்து நடிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இந்த படத்துடன் அதை முடிச்சு போடாதீர்கள்.

கே: திரைப்பட உலகுக்கு முதல்வர் அறிவித்துள்ள சலுகைகள் பற்றி...
ப: திரையுலகம் சார்பில் அனைவரும் சேர்ந்து நாளை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா நடை பெறுகிறது. அதற்கு முன்பாக நான் அதுபற்றி சொல்லி விவாதத்தைக் கிளப்ப விரும்பவில்லை. அற்புதமான ஒரு செயலை சரியான நேரத்தில் முதல்வர் செய்துள்ளார். அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கே:நாளை நடைபெறும் விழாவில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா?
ப: நிச்சயம் கலந்துகொள்வேன்.
கே: மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
ப: அந்த படத்தில் அவினாசி என்ற பெயரில் வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன்.

கே: தமிழனாக பிறந்ததால்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாமல் போனதா?
ப: நான் ஹாலிவுட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். இதை வஞ்சகப் புகழ்ச்சியாக கருதுகிறேன். இங்கிருந்துகொண்டு பெயர் வாங்குவதைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். உலக அளவில் இந்தியா பல துறைகளில் முன்னோடியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இதேபோல் விளையாட்டு மற்றும் சினிமாத் துறையிலும் இந்தியா முன்னோடியாக திகழும். இதை நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கப்போகிறோம்.

கே: மருதநாயகம் படத்தை எப்போது தொடங்கப்போகிறீர்கள்?
ப:மருதநாயகத்தை மறுபடியும் நினைவு கூற வைத்ததில் எனக்கு பெருமை. அந்த படம் நிச்சயம் வரும்.
கே: வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டதாக ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தீர்களே?
ப: நான் தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்கியதில்லை. என் தோல்விகளை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன்.

கே: உங்கள் கவிதை தொகுப்பு எப்போது வெளிவருகிறது.
ப:விரைவில் வெளிவரும்.
கே: அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?
ப: எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா என்று நீங்கள் என்னைக் கேட்பது விக்ரம் தர்மா மாதிரி உங்களால் பல்டி அடிக்க முடியுமா என்று நான் கேட்பதுபோல் இருக்கும்.

கே: மும்பை எக்ஸ்பிரஸ் படம் எப்போது தொடங்குகிறது? எப்போது ரிலீசாகும்?
ப: இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி நடிக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் சந்திரமுகி படமும் ஏப்ரல் மாதம்தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
மும்பை எக்ஸ்பிரஸ்-கமல் - by yarl - 11-07-2004, 05:23 PM
[No subject] - by tamilini - 11-07-2004, 07:49 PM
[No subject] - by kuruvikal - 11-07-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 11-07-2004, 08:58 PM
[No subject] - by கறுணா - 11-09-2004, 04:32 PM
[No subject] - by Kanani - 11-09-2004, 04:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)