Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்
#2
தமிழ் சினிமா மீது உ.பி. ஆளுநர் கடும் தாக்கு !

மதுரை:

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் தமிழ் சினிமா மிகப் பெரிய அளவில் சீரழித்து வருவதாக உத்தரபிரதேச மாநில ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர் கூறியுள்ளார்.

சேலத்தைத் சேர்ந்த தமிழரான ராஜேஷ்வர், மத்திய உளவுத்துறையின் இயக்குனராக பணியாற்றியவர். இப்போது உ.பி. ஆளுநராக உள்ள அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், தமிழ் சினிமாவை மிகக் கடுமையாக சாடினார். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் வன்முறை மற்றும் ஆபாச களஞ்சியமாக திகழ்வதாக குற்றம் சாட்டினார்.

டி.வி.ராஜேஷ்வரின் பேச்சு:

தமிழகத்தை போல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வேறு எங்கும் கிடையாது. இந்த மன்றங்கள் அரசியல் இயக்கங்களாக மாறி சமூகத்தை சீரழிக்கின்றன. இந்த சினிமா கலாசாரம் தான் தமிழக இளைஞர்களை முடக்கி வைத்து வருகிறது.

முன்னணி தமிழ் வார இதழ்கள் கூட நடிகர்கள், நடிகைகள் படங்களை அட்டையில் வெளியிடுகின்றன. தமிழக மக்கள் மீது சினிமா ஆதிக்கம் செலுத்துகிறது.

சர்வதேச சினிமா விழாவுக்காக இந்திய சினிமாக்களை தேர்வு செய்த பெண் நடுவர் ஒருவர் தமிழர்களை பற்றி கூறும்போது, "கொடூரம், செக்ஸ் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு ஒலிம்பிக் போட்டி வைத்தால் தமிழர்கள் வெற்றி பெற்று விடுவர்' என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் சீரழித்து வருவது தமிழ் சினிமாதான். தமிழ் சினிமாவின் பிடியில் சிக்கி தமிழர்கள் அழிந்து வருகிறார்கள். இந்த மாநிலத்தில் சினிமாவிலிருந்து தான் நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் உருவாகிறார்கள்.

சினிமாதான் சமுதாயம் என்ற மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும். அப்போதுதான் உருப்பட முடியும். சினிமாவால் சிதைந்து போய்விட்டது தமிழ் மக்களின் கலாச்சாரம்.

அதேபோல மூடத்தனங்களுக்கும் தமிழர்கள் மத்தியில் பஞ்சத்தனம் இல்லாமல் போய் விட்டது.

சாமியார்களும், குருக்களும், அவதாரங்களும் தமிழகத்தில் பெருகி விட்டனர். ஒவ்வொரு நாளும் புதிய பூசாரியோ சாமியாரோ தோன்றி கொண்டே இருக்கிறார்.

சில பூசாரிகள் ஆட்டின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடிக்கின்றனர். சிலர் சாராயம் குடித்து விட்டு பக்தர்கள் மீது துப்புகின்றனர். குணப்படுத்துவதாக கூறி நோயாளிகளை அடிக்கின்றனர். ஒருவர் 10 வயதில் தன்னை குட்டிச் சாமியார் என்று கூறிக் கொள்கிறார்.

பெரியார் கூறிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பாடாக தமிழர்கள் நடந்து கொள்கிறார்கள். சுய மரியாதை இயக்கங்கள் தான் பிற்காலத்தில் அரசியல் இயக்கங்களாக மாறின. ஆனால், பெரியாரின் கொள்கைகள் மக்களால் மறக்கப்பட்டது வேதனை தருகிறது. மூடத்தனங்களை ஆதரித்தும், சுய மரியாதையை இழந்தும் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் சினிமா தியேட்டர்களை விட்டும் மூடத்தனங்களை விட்டும் வெளியே வாருங்கள். இந்த சமூகத்தையும் நல் வழி நடத்துங்கள்.

இவ்வாறு ராஜேஸ்வர் பேசினார்.

ராஜேஸ்வரின் பேச்சு அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பேசிய தமிழக ஆளுநர் ராம் மோகன்ராவ், உ.பி. ஆளுநர் சொன்னதைப் போல வாழ பட்டதாரிகள் முயல வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 10-26-2004, 08:43 AM
[No subject] - by சாமி - 10-26-2004, 02:22 PM
[No subject] - by aathipan - 10-28-2004, 10:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)