Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
""நான் சினிமாவில் நடித்தேன்; நிஜ வாழ்வில் நடிக்கவில்லை!''
#1
""நான் சினிமாவில் நடித்தேன்; நிஜ வாழ்வில் நடிக்கவில்லை!'' * பி.பி.சி.,க்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஜெ., புதுடில்லி: ""நான் சினிமாவில் கேமரா முன் நடித்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடித்ததில்லை,'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


"பிபிசி டிவி' க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு முற்போக்கு சிந்தனையும் பொறுப்பும் இருக்கிறது. எதையும் வெளிப்படையாகப் பேசுவேன். வழக்கமான அரசியல் வாதிகளைப்போல நான் இல்லாமல் நேர்மையாக இருப்பதால் என்னை தவறாக புரிந்து கொள்கின்றனர். சினிமாவில் கேமரா முன் நடித்திருக்கிறேன். நிஜவாழ்க்கையில் நடித்தது இல்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் "மீடியா' க்கள் எனக்கு எதிராகவே செயல்படுகின்றன.




நான் நிஜவாழ்க்கையில் நடித்ததில்லை. எப்போதும் உண்மை பேசவே விரும்புகிறேன். அது முனை மழுங்கியதாக தோன்றினால் அப்படியே இருக்கட்டும். என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர். அதில் "மீடியா'க்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

நான் பொறுப்பற்ற நபர் அல்ல. அப்படி சொன்னால் அது உண்மைக்கு புறம்பானது. என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதற்கு "மீடியா'க்களே முழுக்காரணம். நான் அரசியலுக்கு வந்த போதிருந்தே அவர்கள் எனக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆணாதிக்க அரசியலில் நானாக வளர்ந்த பெண் நான். ஆசியாவின் பிற பெண் அரசியல்வாதிகளைப் போல எனக்கு பெரிய பின்னணி எதுவும் கிடையாது. மீடியாக்கள் எனக்கு எதிராக செயல்பட இதுவும் காரணமாக இருக்கலாம்.

ஆண்களை மீறி பெண்கள் அரசியலில் சாதிக்கலாம் என இந்திரா நிருபித்தார். அவருக்கு ஜவஹர்லால் நேருவின் மகள் என்ற பின்பலம் இருந்தது. இலங்கையில் பண்டாரநாயகே பிரதமராக இருந்ததால் அவரது மனைவி ஸ்ரீமாவோ பிரதமராக முடிந்தது. பாகிஸ்தானில் பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ பிரதமராக இருந்தார்.

வங்கதேசத்தில் கலிதாவின் கணவர் ஜியா <உர் ரகுமான் பிரதமராக இருந்தார். ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரகுமான் அந்நாட்டுக்கே விடுதலை பெற்று தந்தவர். எனக்கு அப்படி எந்த பின்னணியும் கிடையாது. அரசியலில் நானாக வளர்ந்தேன். யாரும் தங்க தாம்பாளத்தில் தாங்கி என்னை வளர்க்கவில்லை.

இந்த உலகமே ஒரு நாடக மேடை. எல்லோரும் எப்போதும் அதில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். நான் வெளிப்படையாக இருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் எனக்கில்லை. அந்த வகையில் நான் வழக்கத்திலிருந்து மாறுபட்ட அரசியல்வாதி. ஆனால், அரசியலில் சிறிது நடிப்பு தேவைப்படுகிறது.

பத்திரிகைகளும் "மீடியா' க்களும் பாரபட்சமாக, நீதிக்கு புறம்பாக, அடிப்படை ஆதாரமின்றி என்னைப்பற்றி விமர்சிக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை மக்கள் நம்பியிருந்தால் நான் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. நான் இப்போது அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்திருக்க முடியாது. இந்த பேட்டிக்கு ஒப்புக்கொண்டதற்காக வருந்துகிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

கடந்த லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் போனது. இந்த தேர்தல் முடிவுக்கு வெட்கப்பட வேண்டியதில்லை. எங்களது ஓட்டு வங்கி அப்படியே இருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. தனியாக எங்கள் கட்சி ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இது சிறப்பான வெற்றி என்றே கருதுகிறேன்.

அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது நிர்வாகத்தில் எனக்கு இருக்கும் உரிமை. மாநில நலனுக்கு எதைச்செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும். சிலரை பதவியில் நியமிக்கும்போது மாநில நலனுக்கு அவர்கள் உகந்தவர்களாக இல்லையென்றால், நிர்வாகம் சரியில்லை என்றால் அமைச்சர்களை மாற்றித்தானே ஆகவேண்டும். பத்திரிகைகளும், சிலரும் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அமைச்சர்களை மாற்றாமல் இருக்க முடியாது.

பொது இடங்களில் எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களும் என் காலில் விழுவதை மட்டும் பெரிது படுத்துகின்றனர். கருணாநிதி காலடியில் எப்போதும் அவரது கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் விழுந்து கிடக்கின்றனர். அதை நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். என் காலில் யாரும் விழுந்தால் ஊதிப்பெரிதாக்குகின்றனர்.

பெரியவர்களில் காலைத்தொட்டு ஆசி பெறுவது இந்திய மரபு. நான் அதை வேண்டாமென்றுதான் சொல்லி இருக்கிறேன். இப்போதெல்லாம் பொது இடங்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அது நிறுத்தப்பட்டு விட்டது. அதை நான் பகிரங்கமாக கண்டித்து இருக்கிறேன். இனி அப்படி செய்யமாட்டார்கள்.

என்னைப்பற்றி நானே சொன்னால் நான் முற்போக்குவாதி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன். மென்மையான சுபாவம் கொண்ட பொறுப்பான தலைவி. தமிழக வரலாற்றில் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நான் இப்போது உழைப்பதுபோல வேறு யாரும் உழைத்தது கிடையாது என திட்டவட்டமாக கூறுகிறேன்.

நான் ஜோதிடத்தையும், எண் கணிதத்தையும் நம்புகிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது. அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பொதுமக்களும் பத்திரிகைகளும்தான் அப்படி சொல்கின்றனர். ஆங்கிலத்தில் கையெழுத்திடும்போது கடந்த சில ஆண்டுகளாக எனது பெயரில் கூடுதலாக ஒரு எழுத்தை சேர்த்து கையெழுத்திடுகிறேன். அது எனது உரிமை. அதற்கு உங்களிடம் எந்த விளக்கமும் தரவேண்டிய அவசியமில்லை. நான் தற்போது முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கையெழுத்தை மாற்றி விட்டேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவரது இந்த பேட்டி இன்று இரவு 10 மணிக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கும் "பிபிசி' யில் ஒளிபரப்பாகிறது.

சோனியா வெளிநாட்டவர்; கருத்தில் மாற்றமே இல்லை: ""சோனியா வெளிநாட்டவர் என்ற கருத்தில் எனக்கு எந்த மாற்றமும்இல்லை,'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சோனியா பற்றி ஜெயலலிதா கூறியதாவது:

சோனியாவைப்பற்றி இந்த பேட்டியில் விவாதிக்க விரும்பவில்லை. அவர் வெளிநாட்டவர் என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சோனியா மட்டுமல்ல, வெளிநாட்டில் பிறந்த யாரும் இந்தியாவில் உயர் பதவிக்கு வரக்கூடாது என்ற கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சோனியாவை புகழ்ந்து டில்லியில் நான் எதுவும் கூறவில்லை. அவர் பிரதமர் பதவி ஏற்காதது நல்ல முடிவு என்றுதான் கூறினேன்.

தேர்தல் பிரசாரத்தில் சோனியாவை விமர்சனம் செய்தேன். அது தேர்தலுக்காக நடந்தது. அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதமில்லை. வெளிநாட்டவர் விவகாரத்தில் எனது கருத்து என்ன என்பதை நாடே நன்கறியும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
dinamalar
Reply


Messages In This Thread
&quot;&quot;நான் சினிமாவில் ந - by yarl - 10-01-2004, 11:36 AM
[No subject] - by சாமி - 10-06-2004, 10:57 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)