05-14-2004, 12:00 PM
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம்!-நக்கீரன் (கனடா)
"ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று! "
அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் என்பது பழமொழி. உலக நாடுகளின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையை ஓரங்கட்டிவிட்டு இராக் மீது படையெடுத்த அமெரிக்க சனாதிபதி புஷ்சும் பிரித்தானிய பிரதமர் ரோனி பிளேயரும் இன்று புலியின் வாலைப் பிடித்தவன் கதையாக இராக்கில் தங்கவும் முடியாமல் மானத்தோடு வெளியேறவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள்.
நாளும் பொழுதும் அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். சென்ற மாதம் மட்டும் 131 அமெரிக்க இராணுவத்தினர் இராக் தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்கள். இந்த மாதமும் இந்தக் கொலைகள் தொடர்கின்றன. இராணுவத்தின் கவச வாகனங்கள், தாங்கிகள், உலங்கு வானூர்திகள் இராக் தேசியவாதிகளால் அவ்வப்போது தாக்கி அழிக்கப்படுகின்றன.
பெரிய வல்லரசான அமெரிக்கா உலகின் மிக நவீன ஆயுதங்களை தாங்கியுள்ள 135,000 இராணுவத்தினரை இராக்கில் வைத்திருக்கிறது. இருந்தும் இராக் தேசியவாதிகளது ஓயாத ஒழியாத தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்க இராணுவம் திணறுகிறது.
சனாதிபதி புஷ் கடந்த ஆண்டு மே 1ம் திகதி 'இராக்குக்கு எதிரான போர் முடிந்துவிட்டது" என்று வளைகுடாவில் ஏப்ரகாம் லிங்கன் என்ற போர்க்கப்பலின் தளத்தில் நின்று கொண்டு மிக்க ஆணவத்தோடு அறிவித்தார். ஆனால் போர் இன்றும் தொடர்கிறது. இதுவரை 700க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இராக் தரப்பில் 15,000 மேலான பொது மக்கள் குண்டு வீச்சுக்கும் துப்பாக்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியாகி உள்ளார்கள். இராக் பொது மக்கள் கொல்லப்படுவதை அமெரிக்கா கணக்கில் எடுப்பதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. இருக்கிற தலைவலி தோதாதென்று இப்போது அபு கிராய்ப் (Abu Ghraib) சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட இராக் கைதிகள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு இழித்துப் பழித்து அவமானப்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஐந்து நட்சத்திர சனநாயக நாடுகளான அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் பெரிய தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இப்படிச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இராக்கிய தீவிரவாதிகள் அல்ல. வெறுமனே வீடுகளிலும் வீதிகளிலும் நின்ற சாதாரண பொது மக்களே!
இந்தச் சிறைச்சாலைச் சித்திரவதையை அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக் காட்சிதான் முதன் முதலில் ஒளிபரப்பி அம்பலமாக்கியது. ஆரம்பத்தில் சனாதிபதி புஷ் சிறைச்சாலை சித்திரவதைகளின் தாக்கத்தை பூசிமெழுக எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின.
சித்திரவதை செய்யப்பட்ட இராக் கைதிகளின் படங்கள் ஊடகங்களில் வெளிவந்து முழு உலகத்தையும் உறைய வைத்துள்ளது.
உலகம் முழுதும் காட்டப்பட்ட இந்தப் படங்களில் ஒன்று இராக்கிய கைதிகள் பிறந்தமேனியுடன் பிரமிட் வடிவில் அடுக்கப்பட்டு பாலியல் உறவு வைத்துக்கொள்வதாக பாவனை செய்வதைக் காட்டுகிறது.
இன்னொரு படம் ஒரு இராக் கைதி நாய்ச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு அமெரிக்க படை வீரனால் தரையில் கொற கொற என இழுத்து வருவதைக் காட்டுகிறது. பிறிதொரு படம் பிறந்த மேனியுடன் நிற்கும் இராக் கைதியைச் சுற்றி நாய்களுடன் அமெரிக்க இராணுவத்தினர் நிற்கும் காட்சியைக் காட்டுகிறது.
மேலும் ஒரு படம் ஒரு கைதி மீது பிரித்தானிய இராணுவத்தினன் சிறுநீர் கழிக்கும் காட்சியைக் காட்டுகிறது. இவற்றைவிட மோசமான படங்கள், வீடியோ நடாக்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கின்றன. இந்தப் படங்கள் அரபு நாடுகளது மக்களை மட்டும் அல்லாது உலக மக்களையும் கொதிப்படைய வைத்துள்ளன.
அமெரிக்க நாட்டு அரசியல்வாதிகளே அந்தப் படங்களைப் பார்த்து ஆடிப்போனார்கள். இராக் நாட்டை சர்வாதிகாரி சதாம் குசேனின் பிடியில் இருந்து விடுவித்து அங்கு சனநாயத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டி விட்டோம் என்று புஷ் சொல்லி வந்தார். அது மட்டுமல்ல சதாம் குசேனின் ஆட்சிக் காலத்தில் இராக்கில் இருந்த சித்திரவதைக் கூடங்களையும் மனிதப் படுகுழிகளையும் இல்லாது செய்து விட்டோம் என்றும் புஷ் தம்பட்டம் அடித்துக் கொண்டார். உண்மை என்னவென்றால் சதாம் குசேனின் ஆட்சியைவிட மோசமான சித்திரவதைக் கூடத்தை அமெரிக்கா இராக்கில் இன்று உருவாக்கியுள்ளது.
இந்தச் சிறையில் இருந்த கைதிகள் பலர் சித்திரவதைக்குள்ளாகி இறந்துள்ளார்கள். பிரித்தானிய படை பிடித்து சிறையில் அடைத்த ஆயிரக்கணக்கான கைதிகளில் 37 பேர் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அகிலவுலக மன்னிப்புச் சபை பிரித்தானிய இராணுவம் எட்டு வயதுக் குழந்தை உட்பட பல இராக்கிய பொது மக்களை சட்ட விரோதமாகச் சுட்டுக் கொன்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. செஞ்சிலுவை சங்கமும் அமெரிக்க பிரித்தானிய இராணுவங்களின் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் பலமாகச் சாடியுள்ளன.
யுத்தத்தில் சிறைப் பிடிக்கும் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தும் ஜெனிவா மரபுகள் அமெரிக்க பிரித்தானிய படைகளால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
முன்னர் ஆப்பாகனிஸ்தான் மீதான தாக்குதலில் சிறை பிடித்த அல் குவைத்தா தீவிரவாதிகளை அமெரிக்கா கியூபாவில் உள்ள கவுத்தனமோ குடாச் சிறையில் (Guantanamo Bay) நீதி விசாரணை எதுவும் இன்றி ஆண்டுக் கணக்காக சிறையில் பூட்டி சித்திரவதை செய்து வருகிறது. இந்தக் கைதிகளைப் பார்க்க உறவினரோ வழக்கறிஞர்களோ அனுமதிக்கப்படவில்லை. இந்த கைதிகள் விடயத்தில் ஜெனிவா மரபுகளைத் தான் கைப் பிடிக்கப் போவதில்லை என்று சனாதிபதி புஷ் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இதற்குக் காரணம் அமெரிக்க வெள்ளை மாளிகை அனைத்துலக சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் தங்களது கைகளைக் கட்டிப் போடுவதாக நினைக்கிறது. அல்லது அவை அமெரிக்காவிற்குப் பொருத்தமற்றவை என நினைக்கிறது. யுத்தவெறி பிடித்து அலையும் அமெரிக்கா தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி எனத் துக்கமோ வெட்கமோ இன்றி நடந்து கொள்கிறது.
அராபிய மக்கள் இராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை இஸ்லாமிற்கு எதிரான கிறித்தவர்களின் யுத்தம் எனக் கருதுகிறார்கள். சனாதிபதி புஷ்சும் இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான யுத்தம் என வர்ணித்துள்ளார். இராக் கைதிகள் இழிவுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் அமெரிக்க இராணுவம் அவர்களை மனிதர்களாக எண்ணிப் பார்க்க முடியாமல் இருப்பதே.
அமெரிக்க நாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலைகளிலும் இப்படியான சித்திரவதைகள் இடம்பெறுவதாக மனிதவுரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் சிறைச் சாலைகள் தனியார் கம்பனிகளால் நடத்தப்படுபவை ஆகும்.
அமெரிக்க அரச திணைக்களம் உலக நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்து ஆண்டு தோறும் அறிக்கை ஒன்றை வெளியிடுவது தெரிந்ததே. இந்த அறிக்கையில் அரசுகள் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் கெரில்லா இயக்கங்களும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.
வி.புலிகள் சிறார்களை படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும், வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டதாக அறிவிக்க வேண்டும் என இந்த அறிக்கையில் வற்புறுத்தப்படுவது உண்டு.
ஆனால் அபு கிராய்ப்பு சிறைச்சாலை சித்திரவதையை அடுத்து இந்த ஆண்டு அறிக்கையை வெளியிடுவதை அரச திணைக்களம் ஒத்திப் போட்டுள்ளது. ஒத்திப் போட்டதற்கு தொழில் நுட்பக் கோளாறு எனக் காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் சிறைச்சாலை வதைச் சாலையாக மாறியதுதான்.
மனிதவுரிமைகளைப் பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, அதே மனிதவுரிமைகளை காலில் போட்டு மிதித்து விட்டு மற்றவர்களுக்கு மனிதவுரிமைகள் பற்றி உபதேசிப்பது ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கில்லையடி என் பெண்ணே எனச் சொன்ன பாதிரியார் கதையை நினைவூட்டுகிறது.
இந்த இலட்சணத்தில் அமெரிக்கா தன்னை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் உலகத்தின் பொலிஸ்காரனாக காட்டிக் கொள்வது பெரிய பகிடிதான்! அமெரிக்கா தான் உலகத்தின் ஒரே வல்லரசு என்ற நினைப்பில் மனிதவுரிமைகளை, அனைத்துலக சட்டங்களை, மரபுகளை சட்டை செய்வதில்லை.
ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று!
அமெரிக்காவிற்கு வரலாற்றில் சந்தித்திராத பழியையும் இழிவையும் தலைக்குனிவையும் சனாதிபதி புஷ் வலிந்து தேடிக் கொடுத்துள்ளார்!
புஷ்சின் புண்ணியத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம் ஆகியுள்ளது!
நக்கீரன் (கனடா)

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>