Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகிரங்கக் கடிதம்
#1
பிபிசியின் கொழும்பு செய்தியாளர் திருவாட்டி அன்னா கோஸ்பேக் போட்டர்க்கு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள அன்னா அம்மையாருக்கு,

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இனவாதத்திற்கு எதிராக உண்மைச் செய்திகளை துணிவுடன் வெளியிட்டு நியாய பரப்புரைப் போரை நடத்திய செய்தி நிறுவனத்தின் நிருபர் என்ற வகையில் தங்களுக்குத் தலைவணங்குகின்றோம்.

16.04.2004 அன்று தங்களின் செய்தியொன்று பிபிசியின் இணையதளத்தின் பக்கத்தில் தவழ்ந்து வந்திருந்தது. அதில் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் சுயாட்சிக்காக 30 ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை மேலைத்தேய ஊடகவியலாளர் வழமையாக மேற்கொள்வது போன்று காலக்குறைப்புச் செய்யாமல் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு ஈழத் தமிழினம் என்றும் உங்களுக்கு நன்றியறிதலாக இருக்க வேண்டும்.

ஆனால் தங்களுக்கு அந்த நன்றியறிதலாக தமிழர் இருக்கமுடியாத அளவிற்கு மேற்படி திகதிய ஆக்கத்தில் அளவிறந்த விடயத்தினை எம்மினத்தின் மீது வாரியிறைத்துள்ளீர்கள். தமிழ்ப் புலிகள் நச்சுப்பூவை அரவணைத்துள்ளார்கள் என்ற தலைப்பில், தமிழர் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ள கார்த்திகைப் பூவிற்கும் அதனைப் பிரகடனப்படுத்தியவர்களுக்கும் மாசு கற்பிக்க முற்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்த போது வேதனையாக உள்ளது. செய்தியாளர் என்ற நியாயத்தோடும் தார்மீகத்தோடும் செயற்பட்ட பிரான்சிஸ் ஹரிசன் அம்மையார் இருந்த எம் இதயபீடத்தில் உங்களை வைப்பதற்கு மனமில்லாது இருக்கின்றது. நீங்கள் அவருக்கு முன்னம் இருந்தவரான புளோரா பொட்ஸ்வேட் அம்மையாரின் வழியில் நடக்க முற்பட்டுள்ளீர்கள்.

இந்நிலைமையானது தாங்கள் சார்ந்துள்ளதும் உலகின் ஏகோபித்த மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுமான பிபிசியின் நியாயத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றது. தமிழ்த் தேசியத்திற்கு மாசு கற்பிக்க முற்பட்டு செய்தியாளர் வர்க்கத்திற்கும் பிபிசி நிறுவனத்திற்கு மாசு கற்பித்துவிட்டீர்கள். லோட் கூட்டன் பிரபு வாக்கியமான 'பிபிசியின் செய்திகள் நியாயத் தன்மையோடு இருக்க வேண்டும். அத்தோடு பிபிசிச் செய்தியாளர் நடுநிலையானவர்களாக இருக்க வேண்டும்" என்பதை தாங்கள் மீறிவிட்டீர்கள் என்பதை மிக்க மனவருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.

குளோறியஸ்சா லில்லி எனப்படுகின்ற கார்த்திகைப் பூ தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டவற்றில் சிலவற்றில் மலிந்து காணப்படும் தரவுப் பிழைகளை சற்றே பார்ப்போம்.

கார்த்திகைப் பூ தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியில் மாத்திரமே வளர்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களில் பிழையில்லை ஏனெனில் நீங்கள் இப்பிரதேசத்திற்கு புதியவர் கொட்டும்பனி தேசத்திலிருந்து வந்தவர். ஆனால் தீர விசாரித்து விட்டு இவ்விடயத்தை பிபிசிக்கு கொடுத்திருக்க வேண்டாமோ. 'கார்த்திகைப் பூ ஒரு உலர்வலயத் தாவரம் அது ஆபிரிக்கா, ஆசியா முதலான கண்டங்களில் பல பாகங்களிலும் காணப்படுகின்றது" எனக் கலாநிதி சோமாஸ்கந்தன் என்பவர் தமிழர் மிரர் (Tamil Mirror) எனப்படும் தென்னாபிரிக்காவிலிருந்து வெளிவருகின்ற மாசிகையின் ஏப்பிரல் பதிப்பிற்கு யாத்துள்ள வியாசம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரமின்றி Encarta Encyclopedia - 2003 குறுந்தட்டுப் பதிப்பிலும் இவ்விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அம்மணி அவர்களே.

இன்னொரு விடயம் தமிழீழ தேசியக்கொடியில் நான்கு நிறங்கள் உள்ளன என்பதை நினைவிற்கொள்க. அவையாவன: சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை என்பனவே அவையாகும். அதை விடுத்து சிவப்பு மஞ்சள் என்று இரண்டாக நிறங்களைச் சுருக்கினாலும் சரியாகச் சொன்னதிற்கு நன்றிகள்.

கார்த்திகைப் பூவின் இதழ், கொடி, கிழங்கு என்பன என்பன நஞ்சு என்று கூறுகின்றீர்கள். ஆனால் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இதன் கிழங்கில் கொல்சிசைன் என்ற நச்சுப் பொருள் காணப்படுவதாகவும், இது யுனானி, ஆயுர்வேத, ஆங்கில வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இதழ், கொடி நஞ்சு என்ற உங்கள் எழுத்து நஞ்சூட்டல் குறித்து நான் பல நு}ல்களில் தேடியும் காணவில்லை அம்மையாரே.

தமிழ்த் தேசியத்தின் வரலாற்றிற்கும் கார்த்திகைப் பூவிற்கும் உள்ள தொடர்பினை பிபிசி நிறுவனத்தால் துணிவுடன் இக்கட்டான காலத்தில் வெளிவருகின்ற பத்திரிகை என பாராட்டப்பட்ட கடந்த மாதம் வந்த உதயனில் நாளிதழின் ஞாயிற்றுப் பதிப்பான சூரியகாந்தியில் வீரநாதன் என்பார் யாத்துள்ள கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

இது எதனையும் கருத்தில் கொள்ளாது அல்லது கருத்தில் கொள்ள விருப்பின்றி மேம்போக்காக ஒரு தேசியத்தின் அடையாளத்தை விமர்சித்துள்ளீர்கள். காத்திகைக் கிழங்கின் குணத்தை தற்கொலையோடு ஒப்பீட்டுள்ளீர்கள். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்கிற உயிரிய இலட்சியத்தோடு சயனைட் வில்லகைகளைத் தாங்கி நிற்கின்ற விடுதலைப் புலிப் போராளிகளையும் கொச்சைப்படுத்த முற்பட்டுள்ளீர்கள்.

தேசங்கள் திரிந்து கொள்ளையடித்த கொள்ளைக்காரரான புகானியர் கென்றி மோர்கனுக்கு உங்கள் தேசத்தின் நலனைப் பேணியதால் சேர் பட்டம் கொடுத்து கௌரவித்தீர்கள். இன்று மட்டும் வேறோர் தேசத்திற்கும் மனதாலும் தீங்கு நினைக்காத எமது இனத்தின் காவலர்களுக்கு மாசு கற்பிக்க முற்படுகின்றீர்கள்.

இலங்கைத்தீவை உங்கள் நாட்டார் ஆண்ட போது நீங்கள் எம்மினத்திற்கு செய்த வரலாற்றுத் துரோகங்களை எத்தனை எத்தனை. அதை மறந்து நாம் உங்களுக்கு செய்த சேவைகள் எத்தனை. எதைச் சொல்வது ஒன்றை மட்டும் குறிப்பிட்டு முடிக்கின்றோம். அன்று முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் உங்களின் நலனுக்கு மலேசியாவில் சேவைபுரிய வந்த ஈழத் தமிழர்கள் இணைந்து நீங்கள் வெல்லவேண்டும் என்பதற்காக நிதி திரட்டி விமானம் வாங்கித் தந்தார்கள். இன்றும் கூட அந்த விமானத்தை கண்காட்சியில் வைத்து மகிழும் நீங்கள் ஆனால் அதைத் வாங்கித் தந்தவர்களை மறந்து போனது வினோதம்தான்.

இனியாவது பத்திரிகையாளர் என்ற தார்மீகத்தோடு நடப்பீhகள் என்ற நம்பிக்கையோடு இத்திறந்த மடலை முடித்துக்கொள்ளும்.

பிபிசியின் நீண்ட கால நேயரான,
தனேந்திரன்.
TamilNaatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
பகிரங்கக் கடிதம் - by Mathan - 04-29-2004, 08:25 AM
[No subject] - by Eelavan - 04-29-2004, 03:34 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 09:52 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 09:55 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 08:22 AM
[No subject] - by Mathan - 05-04-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)