Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனைகளும் சாகஸங்களும்
#2
<b>தமிழ் சினிமாவில் தொழில் நுட்பம்ஒரு பார்வை</b>

<img src='http://www.yarl.com/forum/files/pic2_186.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/pic.jpg' border='0' alt='user posted image'>

அண்மையில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் "ஆட்டோகிராப்' படத்தில் சேரன் பள்ளிக்குச் செல்லும் வழியில் வாய்க்கால் ஒன்று இருக்கும். அதன் அருகிலுள்ள பாலத்தில் பள்ளிப் பருவத்து சேரன் அமர்ந்து வாய்க்காலை நோக்குவது போல் ஒரு ஷாட். அப்போது வாய்க்காலில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போயிருக்கும். அதே இடத்தில் வளர்ந்து விட்ட வாலிபர் சேரன் அதே போல் அமர்ந்திருப்பதன் ஒப்புவமை ஷாட் அப்போது வாய்க்காலில் தண்ணீர் நிறைந்து ஓடும்.


கோணம் மாறாமல், எடுக்கப்பட்ட ஷாட் என்பதால் கிராபிக்ஸ் மூலமாக தண்ணீரை ஓட விட்டிருப்பர் என்று தான் முதலில் நமக்கு தோன்றியது. தவிர எங்கும் வறட்சி நிலவுவதால் வாய்க்காலில் தண்ணீராவது... நிறைந்திருப்பதாவது, என்ற எண்ணம் இயற்கையாகவே எழும்.

படம் பார்த்த சில நாட்களில் அந்தக் காட்சியைப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை சந்திக்க நேரிட்டது. அவரிடம் வாய்க்காலில் தண்ணீர் பற்றிப் பேசிய போது, "அது கிராபிக்ஸில் படமாக்கியதல்ல. நான்கு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வந்த போது படமாக்கினோம்' என்றார். இதில் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், நான்கு மாதங்களுக்குப் பின் கேமரா கோணம் மாற்றாமல் படமாக்கியது தான்.

கேமரா கோணத்தில் ஒரு மில்லி மீட்டர் மாற்றம் இருந்தாலும், அந்த ஷாட்டில் சிறிய அதிர்வு ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்படாத வகையில் படமாக்கியதால் தான் கிராபிக்ஸ் மூலம் தண்ணீர் வந்ததோ என்று நமக்கு சந்தேகம் எழுந்தது.

விஜய் "டிவி'யில் பிப்., 29, 2004 அன்று இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக என்று "டைட்டானிக்' தமிழ் பேசியதைப் பார்த்தேன். பெரிய திரையில் பார்க்காமல் போய் விட்டோமே என்று வருத்தப்பட வைத்தது அதன் காட்சி அமைப்புகள். ஆனால், முகம் சுளிக்க வைத்த இன்னொரு விஷயம் "டப்பிங்' என்ற பெயரில் மோசமாக தேர்வு செய்யப்பட்ட இரவல் குரல்கள்.

கதாநாயகி கேத்தி வின்ஸ்லெட்டுக்கு அனுராதா குரல் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. வழக்கத்தை விட கொஞ்சம் சிரமப்பட்டே பேசியிருக்கிறார். கதாநாயகி முதியவராக வரும் (பிளாஷ்பேக் காட்சிகளை நினைவுபடுத்துபவர்) போது குரலை மாற்றிப் பேசியிருக்கிறார் அனுராதா.

கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவுக்கு டப்பிங் குரல் பொருந்தவே இல்லை. "காதல் கொண்டேன்' படத்தில் சோனியா அகர்வாலை காதலிப்பவராக வரும் சுதீப் ரஞ்சனுக்கு குரல் கொடுத்தவரே "டைட்டானிக்' நாயகனுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு குறிப்பாக நாயகியின் தாயாருக்கு இரவல் குரல் சகிக்கவில்லை. படத்தை ரசிப்பதற்கு இந்த பொருந்தாத குரல்கள் பெரும் இடையூறு!

ஏன் இப்படி என்று விசாரித்தால் டப்பிங்கை விஜய் "டிவி' நிறுவனமே செய்திருக்கிறது என்பது தெரிய வந்தது. செலவைக் குறைத்து சிக்கனமாக மொழி மாற்றம் செய்தால் அதில் பூரணத்துவம் இருக்காது என்பதற்கு டைட்டானிக் ஒரு உதாரணம் ஆங்கிலப் படம் என்றால் அதற்கென்றுள்ள குணம் மொழிமாற்றத்தின் போது மாறக் கூடாது. மச்சி, மடையா, முண்டம், நாயே, பேயே போன்ற நமது வழக்கத்திலுள்ள வார்த்தைகளை பிற மொழிப்படங்களில் கொண்டு வரவே கூடாது.

"தமிழ் மணம்' பரப்புகிறேன் என்ற பெயரில் அநாகரிகத்தை அரங்கேற்றக் கூடாது. ஜாக்கிசான் படங்களில், ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஆக்ஷன் படங்களில் பொருந்தாத குரல்கள், பொருந்தாத வார்த்தைகளை கவனிக்கையில் ஆங்கிலம் புரியாவிட்டாலும் ஆங்கிலத்திலேயே பார்த்து விடலாமே என்று தான் தோன்றுகிறது. "மம்மி' படத்தில் டப்பிங் பரவாயில்லை என்ற அளவில் இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த "ஹோவர்கிராப்ட்' தமிழில் டப் செய்யப் பட்ட விதம் சிறப்பு.

மணிரத்னம் இயக்கிய "தில்சே' இந்தி, "உயிரே' என்று தமிழில் "டப்' செய்யப்பட்டது. ஷாருக்கான் தமிழில் எப்படி பேசப் போகிறாரோ என்று ஒரு அவநம்பிக்கையில் படம் பார்த்தால், ஷாருக்கானுக்கு மட்டுமின்றி, படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா உட்பட அத்தனை கலைஞர்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட குரல்கள், பேசிய வசனங்கள் ரொம்ப தரம், தத்ரூபம்! ஷாருக்கான் தமிழ் கற்றுக் கொண்டு தமிழ்ப்படத்தில் நடித்தது போலவே இருந்தது. "தைய தையா' என்ற பாடலில் கூட இந்தி சாயல் வரவில்லையே.

இந்த தரத்தை மணிரத்னம் தான் இயக்கிய "கீதாஞ்சலி' தெலுங்குப் படத்தை "இதயத்தை திருடாதே' என்று தமிழுக்கு கொண்டு வந்தபோதும் வெளிப்படுத்தியிருந்தார். தெலுங்கில் "நுவ்வு' என்பது தமிழில் "நீ' என்று வரும். அப்போது உதட்டசைவில் வித்தியாசம் தெரியும். அது போன்ற வித்தியாசங்கள் கூட வராத அளவில் கவனமாக மணிரத்னம் தமிழ்படுத்தியிருந்தார். "டப்' செய்யப்படுகிற படம் என்பதை மனதில் வைத்தே சில காட்சிகளை, வசனங்களை கவனமாக படமாக்குவார்.

"சாகர சங்கமம்' தெலுங்கு "சலங்கை ஒலி' என்று தமிழ் பேசிய போது, கமல் சொந்தக் குரலில் பேசியிருந்தார். இதை அடுத்து அதே ஏ.டி.த.நாகேஸ்வரராவ் தயாரிப்பில், கே.விஸ்வநாத் இயக்கத்தில் "ஸ்வாதி முத்யம்' தெலுங்கில் கமல் நடித்திருந்தார். அதன் டப்பிங் விஷயத்தில் கமலுக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்னை. கமல் தமிழ் டப்பிங்கில் பேச மறுத்து விட்டார். தயாரிப்பாளரோ விடவில்லை. "ஸ்வாதி முத்யம்' படத்தை "சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் டப் செய்த போது கமலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்தார். இந்த குறைபாடு காரணமாகவே "சிப்பிக்குள் முத்து' எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

நாகார்ஜுனன் தெலுங்கில் நடித்த "உதயம்' தமிழில் பிரமாதமாக ஓடியது. இப்படி டப்பிங் சிறப்பு காரணமாக வைஜயந்தி ஐ.பி.எஸ்., இதுதாண்டா போலீஸ் தமிழ்நாட்டில் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழராக இருந்தாலும் தெலுங்கில் முன்னணியில் இருக்கும் டாக்டர் ராஜசேகர், தன் படங்களை தமிழில் டப் செய்யும் போது அதற்கு மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்வார். இரண்டு, மூன்று நாட்களில் சாதாரணமாக ஒரு படத்தை "டப்' செய்து விடுவர். ஆனால், ராஜசேகர் 15 நாட்கள் அதற்காக செலவிடுவார். பல டப்பிங் கலைஞர்களை வரவழைத்து, எந்தக் குரல் பொருந்துகிறதோ அதைத் தான் தேர்வு செய்வார்.

டப்பிங் எனும் போது சிவாஜியிடம் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. சிவாஜி தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்திருந்தாலும், எதிலும் சொந்தக் குரலில் பேசியதில்லை. தெலுங்கில் சிவாஜி சரளமாகப் பேசக் கூடியவர். ஆனால், சிவாஜியின் படங்கள் தெலுங்கில் "டப்' செய்யப்படும்போது அங்கு பிரபலமாக உள்ள குணசித்திர நடிகர் ஜக்கையா, சிவாஜிக்கு ஆஸ்தான குரல் அளிப்பவராக இருந்தார். சிவாஜி நடித்த தெலுங்குப் படங்கள் தமிழில் "டப்' செய்யப்பட்டால், அதற்கும் சிவாஜி குரல் தர மாட்டார்.

"பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தில் சிவாஜி கவுரவ வேடமேற்று மராட்டிய சிவாஜியாக நடித்திருந்தார். அஞ்சலிதேவி தயாரித்த இதில் நடிப்பதற்கு சிவாஜி பணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் "பராசக்தி'க்கு முன்பே சிவாஜி, அஞ்சலிதேவியின் தயாரிப்பில் "பரதேசி'யில் (தெலுங்கில்) நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால், அது தாமதமாகி சிவாஜியின் மூன்றாவது படமாக வந்தது. அந்த நன்றிக் கடனுக்குத் தான் சிவாஜி இலவசமாக நடித்திருந்தார். தன் சொந்த செலவிலேயே ஆந்திரா சென்று நடித்து விட்டு திரும்பினார்.

"பக்த துக்காராம்' சிவாஜி நடித்த காரணத்தால் தமிழில் "டப்' செய்யப்பட்டு வந்தது. மராட்டிய சிவாஜியாக, சிவாஜிகணேசன் சொந்தக் குரலில் கர்ஜனை செய்திருப்பார் என்று பார்த்தால், வேறொருவர் குரல் கொடுத்திருந்ததால் படத்தை ரசிக்க முடியாமல் போனது.

அதுபோல் "தச்சோளி அம்பு' என்ற மலையாள படவுலகின் முதல் சினிமாஸ்கோப் படத்தில் சிவாஜி நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிவாஜிக்கு இரவல் குரல்தான். நல்ல வேளை இதை தமிழில் "டப்' செய்யவில்லை.

கிருஷ்ணா தயாரிப்பில் "பெஜவாடா பெப்புலி' என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு அருணாசலம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. கிருஷ்ணா, சிவாஜி, ராதிகா நடித்துக் கொண்டிருந்தனர். சிவாஜியின் சொந்தக் குரலில் தெலுங்கு மணத்தை காண ஆவலோடு காத்திருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கிருஷ்ணா, ராதிகா தெலுங்கில் வசனங்களைப் பேச, சிவாஜி மட்டும் தமிழில் பேசினார். அதாவது "நீகு ஏமி தெலுசு?' என்ற சிவாஜி "உனக்கு என்ன தெரியும்?' என்ற ரீதியிலேயே வசனம் பேசினார். தெலுங்கு வசனங்களையெல்லாம் அவருக்கு தமிழ் படுத்தியே எழுதிக் கொடுத்திருந்தனர்.

படத்தின் டப்பிங்கின் போது சிவாஜியின் உதட்டசைவிற்கேற்ப ஜக்கையா தெலுங்கில் பேசி விடுவார். மீண்டும் தமிழ் தெலுங்கு வடிவமெடுக்கும். சிவாஜி அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் "தமிழைத் தவிர வேறு கலாச்சாரம் நமக்குத் தெரியாது. பிற மொழி வசனங்களை பாடம் செய்வதால் ஏற்படும் கவனத்தால் நடிப்பும், முகபாவமும் சரியாக வராது' என்பது பின்னர் விசாரித்ததில் தெரிய வந்தது.

இந்த டப்பிங் விஷயத்தில் இந்தியாவிலேயே சாதனைக்குரிய நடிகராக கருதப்படுபவர் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எந்த மொழியில் நடித்தாலும் அத்தனையிலும் அவர் சொந்தக் குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். டப்பிங்கிலும் அப்படித்தான். அந்தந்த கலாசாரத்திற்கேற்ப வசனம் பேசி நடித்திருப்பது அவரது சிறப்பு.

டப்பிங்கில் சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பின் குறுகிய காலத்தில் வசனம் பேசி சாதனை புரிந்தவர்கள் கமல்ஹாசன், சரிதா. தெலுங்கில் நடிக்கும் மும்பை நடிகைகளுக்கும், டப் செய்யப்படும் மலையாள, தெலுங்கு, தமிழ் படங்களுக்கும் அதிக பட்சமாக குரல் கொடுத்து சாதனை படைத்து வருபவர் சரிதா. சில மணி நேரங்களிலேயே ஒரு முழு படத்தின் வசனங்களையும் சரிதா பேசி விட்டுப் போய்விடுவார். விஜயசாந்திக்கு கனத்த குரல் என்பதால் அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் அனைத்திற்கும் சரிதாவே குரல் நாயகி.

இப்போது விளம்பரப் படங்களை பல மொழிகளில் எடுக்கின்றனர். அந்த படங்களில் நடிக்கும் அமிதாப், ஷாருக்கான் (இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் "ஹே ராம்' படத்தில் சொந்தக் குரலில் தமிழில் பேசியிருக்கிறார்) கோவிந்தா போன்றவர்கள் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி விளம்பரங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசியிருக்கின்றனர். இதில் நடிகைகள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஏனென்றால் மும்பை வரவுகளிலிருந்து எல்லா மொழி நாயகியருக்கும் குரல் வளம் கரகர, மொறமொற சமாச்சாரம் தான்.

(தொடரும்)


நன்றி: தினமலர்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தமிழ் சினிமாவில் தொழி - by vasisutha - 04-27-2004, 09:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)