04-27-2004, 06:36 PM
உங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளிடமிருந்து விலகுங்கள்!
-பாபாவுக்கு ஒரு பகிரங்க மடல்!
<b>பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்ற பன்முகம் கொண்டவர் ஞானி. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், அரசியல் மாற்றங்கள் நிகழும்போதும் ஞானியின் கருத்துகளை அறிய பத்திரிகைகள் தவறுவதே இல்லை. இந்த முறை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஞானி இந்தியா டுடே ஏப்ரல் 28-ந் தேதி எழுதிய இந்த பகிரங்க கடிதம் ரஜினி ரசிகர்களிடத்திலும், அவரை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளிடத்திலும் பல கேள்விகளை எழுப்பியிருப்பது நிஜம்.. </b>
அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்!
ஒருவழியாக பகிரங்கமாக அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். நல்லது. உங்கள் உண்மையான அரசியல் பலம் என்ன என்பது இன்னும் சில வாரங்களில் உங்களுக்கும் தெரிந்துபோய்விடும். நீங்கள் மனம் திறந்து அறிக்கை வாசித்தபோது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் போனதற்கு வருந்தி, பின்னொரு சமயம் (உங்களுக்கு) தேவைப்பட்டால் அவர்களை சந்தித்து பதில் சொல்வேன் என்று இன்னொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். சிரமப்பட வேண்டாம். இதோ சில கேள்விகள். பதில் அறிக்கையாக வெளியிட்டாலே போதும். எங்களுக்கும் வீண் அலைச்சல் மிச்சம். இனி கேள்விகள்.
1. அரசியலில் உங்களுக்குப் பிடிக்காதது ஊழலும் வன்முறையும் என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது மத்திய சென்னையில் ஓட்டுப்போடவிருக்கும் வேட்பாளர் பாலகங்காவின் தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க, அரசியலிலிருந்து ஊழலை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டு வரும் கட்சி என்று நீங்கள் நம்புகிறீர்களா?
2. பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு காந்திய அஹிம்சை நடவடிக்கை தான். வன்முறை அல்ல. அதனால் தான் வாஜ்பாயும் அத்வானியும் சிரித்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
3. உங்கள் திரைப்படங்களில் பாட்ஷா, படையப்பா, பாபா எல்லாவற்றையுமே வன்முறைக்கு எதிரான படங்களாகத்தான் நீங்கள் உருவாக்கித் தந்திருக்கிறீர்களா? அவற்றில் தனி மனிதனாக நீங்கள் வந்து வில்லன்களை அடித்து உதைப்பதெல்லாம் வன்முறை என்று நாங்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாமா?
4. டாக்டர் ராமதாசின் பா.ம.கவை நீங்கள் எதிர்ப்பதற்கு காரணம் பாபா படப் பிரச்னையால் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பினால் அல்ல. சினிமா துறையில் பலருக்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டது என்று சொன்னீர்கள். அப்படியானால் இதே போல டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பினால் படப்பிடிப்பையே கைவிட்டு உங்கள் நண்பரும் சக நடிகருமான கமல்ஹாசன் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தபோது, நீங்கள் இமயமலையில் இருந்தீர்களா? அறிக்கையாவது வெளியிட முடியாமல் போய்விட்டதா?
5. இப்போது நீங்கள் ஆதரிக்கும் வாஜ்பாயி-அத்வானி பங்காளிகளான விஸ்வ ஹிந்து பரிஷத்தும் பஜ்ரங்தளமும் படப்பிடிப்பையே நடத்தவிடாமல், செட்டுகளை உடைத்தெறிந்ததால் வாட்டர் படத்தையே உலகப் புகழ் பெற்ற இயக்குனர் தீபா மேத்தா ஓரேடியாக கைவிட வேண்டி வந்தது, நீங்கள் விரும்பும் அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாமா?
6. நதிகள் இணைப்பு என்ற ஒரே காரணம் காட்டி ஊழல், வன்முறை இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் உரிய ஒரு கூட்டணிக்கு ஓட்டுப் போடச் சொல்லும் நீங்கள், நதிகள் இணைப்பால் காடுகள்-கிராமங்கள் அழிப்பு, பருவநிலை பாதிப்பு, மக்கள் துயரம் பற்றியெல்லாம் சுற்று சூழல் அறிஞர்கள் சொல்லியிருப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்ததுண்டா? ஐம்பதாண்டுகள் முந்தைய பக்ரா நங்கல் அணை முதல் அண்மைக்கால நெய்வேலி சுரங்கம் வரை நிலம் பறிக்கப்பட்ட மக்களுக்கு இன்றளவும் நிவாரணம் தராத நாடு இது என்பது உங்களுக்கு தெரியுமா?
7. சரியோ தப்போ, அரசியலில் குதித்துவிட்டீர்கள். உங்கள் நிலைபற்றி உங்களுக்கே நம்பிக்கை இல்லாதது ஏன்? ஆறு தொகுதிகளில் பா.ம.க ஜெயித்துவிட்டால், ராமதாசின் பூர்வ ஜன்ம புண்ணியம் மிச்சம் இருப்பதாக அர்த்தம். தோற்றுவிட்டால், அந்தப் புண்ணியம் தீர்ந்துவிட்டதாக அர்த்தம் என்று சொன்னீர்கள். எல்லாவற்றுக்கும் பூர்வ ஜன்ம புண்ணியம்தான் காரணம் என்றால், பாபா படத்தை அவர் எதிர்த்தது, அந்த படம் ஓடாமல் போனது எல்லாவற்றுக்கும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம் தீர்ந்து போனது தானே காரணமாக இருக்க முடியும்? அப்புறம் எதற்கு இந்த அறிக்கை, அரசியல் எல்லாம்?
8. சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாகி விடும் என்பதை ராமதாஸ் உங்களுக்கு போனில் சொல்லியிருந்தாலே போதும், அவற்றை நீக்கியிருப்பேன் என்று இப்போது சொல்கிறீர்கள். இரண்டு டீன் ஏஜ் பெண்களின் அப்பாவான உங்களுக்கே இதெல்லாம் உறைக்காதா? போகட்டும். அடுத்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள், வசனங்கள், தனிநபர் வன்முறையை ஊக்குவிக்கும் சீன்கள், சிகரெட், மது எதுவும் இருக்காது என்று உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா? இத்தனை நாட்களாக இந்த சினிமா துறையை நீங்கள் வளர்த்து வந்திருக்கிற முறையில், இப்படி ஒரு உத்தரவாதத்தை உங்களால் காப்பாற்ற முடியுமா?
இப்போதைக்கு இந்தக் கேள்விகள் போதும், உங்கள் பதில்கள் என்னவாயினும் சரி. குழப்பமான மனிதரானாலும் ஒரு நல்ல நடிகர் என்று உங்களை நான் கருதுவதால், ஒரு இலவச ஆலோசனை. உங்களை பயன்படுத்தி தங்கள் அரசியலை நடத்திக் கொள்ள விரும்புவர்களிடமிருந்து விலகுங்கள். இந்த வழியில் சென்றுதான் சிவாஜி அரசியலில் தோற்றார். அடிபட்டுக் கற்றுக் கொண்டவர் அமிதாப்பச்சன். அருமையான முதியவர் வேடங்கள், குணசித்திர பாத்திரங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. அரசியலை உங்களால் மாற்றியமைக்க முடியாது. மேலும் குழப்பத்தான் முடியும். சினிமாவையாவது மாற்றியமைக்க முயற்சியுங்கள்.
அன்புடன்
ஞானி.
நன்றி இந்தியா டுடே.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>