Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு சொல்லும் பாடங்கள்...!
#1
வரலாற்றுச் சம்பவங்கள் எவையுமே ஒருமுறை வந்து ஓய்ந்து விடுவதில்லை. அவை மீண்டும் மீண்டும் தன்னை கால மேடையில் அரங்கேற்றிய வண்ணமேதான் இருக்கின்றன. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் நடந்தேறிய சம்பவம் அண்ணளவாக அதே வடிவத்தில் இன்னொரு இடத்தில் இன்னொரு காலகட்டத்தில் நடந்தேறுகிறது என்பது கண் முன்னாலேயே காணக்கூடியதாக உள்ளது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றல்ல.

<img src='http://sooriyan.com/images/stories/karuna/french.jpg' border='0' alt='user posted image'>

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது நாசிப்படைகளுக்கு தனது தேசமான பிரான்சை அடைவு வைத்த மிகப்பெரிய தனது இராணுவ வீரனுக்கு யுத்தமுடிவில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.

மறேஷால் பெத்தன் எனும் பெயர் இன்றும் பிரஞ்சு மக்களினதும் பிரஞ்சுத் தேசத்தினதும் இழுக்குச் சின்னமாகவே கருதப்படுகிறது.

உலகப் புகழ் பிரஞ்சு இராணுவக் கல்லூரியான 'சன் சீர்" ன் சாதாரண இராணுவ வீரர் பிலிப் பெத்தன் 1914ம் ஆண்டில் வெறும் கேர்ணல் பதவிக்கு மட்டுமே உயர்ந்திருந்தார்.

ஆனால் முதலாவது மகாயுத்தத்தின்போது ஜேர்மனியப் படைகள் பிரான்சின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேர்தன் மலைப்பிரதேசத்தின் பாதுகாப்பு முன்னரண்களை தொடர்ந்து ஐந்து மாதங்களாக தீவிர தாக்குதல்களுக்கு உட்படுத்தியும் அவர்களால் அதைக் கைப்பற்ற முடியாதபோதிலும் பிரெஞ்சுப்படைகளின் மன உறுதி உடைந்த நிலையில் இப்பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு பிரிகேடியர் ஜெனரலாக
நியமிக்கப்பட்டதன் பின்னரே பிலிப் பெத்தனின் இராணுவ திறமைகள் வெளிப்படுகின்றன.

இக்காலத்தில் இராணுவ மட்டத்தில் நிலவிய ஒழுங்குச் சீர்குலைவுகளை நிவர்த்தி செய்து, புதிய நம்பிக்கையை தனது வீரர்களுக்கு ஊட்டிப் பல போர்முனைகளில் வெற்றியீட்டி, பிரஞ்சு இராணுவத்தை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தார் பிலிப் பெத்தன்.

1917ல் ஜெனரல் பெத்தன் தனது இராணுவச் சாதனைகளைத் தொடர்ந்து பிரஞ்சு இராணுவத்தின் அனைத்துப் பிரிவிற்கான கொமாண்டராக நியமனம் பெறுகிறார். இராணுவத்திற்குள் ஏற்பட்ட உள்ளெதிர்ப்பைச் சமாளிக்க 554 படையினருக்கு மரண தண்டனையை வழங்கும் கொமாண்டர் பெத்தன் இராணுவத்தைப் புனரமைத்து, புதிய வியூகங்களை உருவாக்கி 1918 நவம்பரில் பிரஞ்சு இராணுவத்தின் ஜேர்மனியின் மீதான இறுதிவெற்றிக்கு வழிவகுக்கிறார்.

வெற்றியைத் தொடர்ந்து பிலிப் பெத்தனுக்கு அதியுயர் இராணுவத் தேசிய விருதான 'மறேஷால்" பட்டம் வழங்கி பிரான்ஸ் அவரைக் கௌரவித்தது.

1925ல் மொறோக்கோ காலணிக்குக் கலவரத்தையடக்கப் பிரத்தியேகமாக அனுப்பப்படும் மறேஷால் பெத்தன், 1934ல் பிரான்ஸின் யுத்தத்திற்கான அமைச்சராகவும்
நியமிக்கப்படுகிறார். 1936ல் இவர் ஸ்பெயினுக்கான தூதுவராலய உயர் ஸ்தானிகராகவும் நியமனம் பெறுகிறார்.

1940 ஆண்டின் வசந்த காலம் பிரான்சுக்கு வசந்தமாகப் பிறக்கவில்லை. நாசிப்படைகள் பிரஞ்சு நிலப்பரப்பின் எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்தது. லட்சக்கணக்கில்
மக்கள் அகதிகளாகி இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிரஞ்சுப் படைகள் நாசிகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். தேசியம் சிதைந்து, மக்கள் அகதிகளாகச் சிதறியோடிக்கொண்டிருந்த வேளையில், அரசின் முக்கிய பதவிக்கு அழைக்கப்டும் மறேஷால் பெத்தன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது வரலாற்று முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, பிரான்ஸை எதிரிகளிடமிருந்து மீட்டதால் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, மக்கள் தன்மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையைப் பயன்படுத்தி, நாசிகளுடான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக்
கைச்சாத்திடுகிறார்.

நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் வட பகுதியை நாசிகளிடம் விட்டுவிட்டு, அதுவரை காலமும் அமுலில் இருந்த அரசியற் சாசனத்தையும் குடியரசையும் குப்பையில் போட்டுவிட்டு தெற்கில் தன்னைத் தலைமைப்படுத்திய ஒரு சர்வாதிகார அரசை நிறுவும் பெத்தன் நாசிகளுடன் கூட்டொப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்.

இந்நிலைக்கு எதிராக நாசிகளுடன் போரைத் தொடர்ந்து மேற்கொண்டு நாட்டை முழுமையாக விடுவிக்கவேண்டும் எனும் அழைப்பை ஜெனரல் து கோல் லண்டனிலிருந்து விடுத்து நாட்டுப்பற்றாளர்களைத் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இவருக்கெதிராக மறேஷால் பெத்தன் மரணதண்டனை வழங்கப்பட்டதாக அறிவிக்கின்றார்.

பெத்தனின் துரோகத்த தனம் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் புலப்பட, சார்ல் து கோல்ன் தலைமை மக்களால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரின் தலைமையில்
நேசநாடுகளின் உதவியுடன் இறுதியில் நாசிப்படைகளிடமிருந்து தேசம் விடுவிக்கப்படடது.

ஜேர்மனிக்குத் தப்பியோடிய மறேஷால் பெத்தன், பின்னர் சுவிசுக்குச் சென்று தன் விருப்பின் பேரில் மீண்டும் பிரான்சுக்கு வருகை தந்தார்.

பிரான்சின் மிகப்பெரிய வெற்றிகளையீட்டிய மறேஷால் பெத்தன், பிரஞ்சுத் தேசியத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இப்பெரு வீரர் இறுதியில் வீரியத்தை விட்டு, சுயநலத்திற்காக, கோழைத்தனமாக தனது தாய்மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களான நாஸிகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி நாட்டை நாசப்பாதையில் இட்டுச்சென்றது மட்டுமல்லாது, தேசத்தை விடுவிக்கப் போராடியவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து தேச ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்து தேச விடுதலையைத் தாமதமாக்கினார்.

தேசத்தையும் மக்களையும் இரண்டாகக் கூறுபோட்ட இந்தத் தேசத் துரோகிக்கு, இறுதியில் பிரஞ்சு உயர்நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது.


TamilNaatham and sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வரலாறு சொல்லும் பாடங் - by kuruvikal - 04-13-2004, 10:44 AM
[No subject] - by Kanani - 10-30-2004, 11:14 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 02:57 PM
[No subject] - by ratha - 11-20-2004, 04:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)