Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குநர் + நடிகர் சினிமா
#1
"வெட்டு. மாப்ளே... எங்கப்பன வெட்டு மாப்ளே" விருமாண்டி கொத்தாளத் தேவரை அறிவாளோடு துரத்தும் போது அந்த பையனின் உணர்வுக்கு திரையரங்கத்தில் ஏகப்பட்ட வரவேற்பு, கைத்தட்டல் தியேட்டர் பார்வையாளர்களிடம் வெளிப்பட்டது. இது அநேகமாய் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் நிகழ்ந்திருக்கும்
.
"ஏய் திரும்பிப் பாரு" இது கமலா, செந்திலை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று பார்வையாளர் கத்தியது. சொன்ன மாதிரி கமலாவும் திரும்பிப்பார்த்தாள். இதுவும் அநேகத் திரையரங்குகளில் நிகழ்ந்த ஒன்று தான்.

விருமாண்டி, ஆட்டோகிராப் படங்களைப் பற்றி மட்டும் பேசுவதை விட, இந்த இரண்டு படத்தின் இயக்குநர் + நடிகர்களான கமல், சேரன் இருவரையும் மையப்படுத்தி பார்ப்பது இந்த படங்களையும், அவரவர்களுக்கான இடங்களையும் வரவேற்பையும், அவை படங்களில் சாத்தியப்பட்டிருப்பதையும், சாத்தியப்பட்டதின் விளைவுகளையும் இன்னும் ஆழமாய் பார்க்க முடியும்.

முற்றிலும் முழுக்க ஸ்டாராக அறியப்பட்ட கமல், கொஞ்சம் கொஞ்சமாக கடைசி பத்து வருடங்ளில், வெகுஜன பார்வையாளர் மத்தியில் கமல் படத்திற்கு கமல் தான் டைரக்டர் என்கிற கருத்து நிலவிக் கொண்டிருந்த சூழலில், கடைசியாக, கமல் இயக்குநராகவே வெளிப்பட்டார். கமல் இயக்கத்தில் விருமாண்டி அவரது இராண்டாவது தமிழ் படம்.

முதல் படத்திலேயே கவனத்திற்குரிய இயக்குநாராக அறியப்பட்டு, தொடர்ந்து கவனம் பெறுகிற படங்காளாவே இயக்கி வந்த சேரன், சில வியாபர தோல்விகளைத் தொடர்ந்து இடை வெளியில் தங்கர்பச்சனால் நடிகராக அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளம் இயக்குநர் சேரனுக்கு அடுத்த முயற்சிக்கு சுலபமாக வழி திறந்து விடுகிறது. சேரன் நடித்த இரண்டாவது படம் ஆட்டோகிரா·ப்.

இரண்டு படங்களுமே இயக்குநர் + நடிகர்களுக்கு சொந்த தயாரிப்பு என்பது கூடுதல் கவனம் பெறுகிற விஷயம். இப்படி ஒரு மாறுபட்ட தளத்தில் ஒரு தமிழ் படம் வெளிவருவதர்கான முனைப்பு தனிநபர் சார்ந்ததே. இந்த முனைப்பு சாத்தியப்பட்ட இருவரின் கதை சொல்லும் உத்தியிலும் கடந்த கால நிகழ்வுகளே முதன்மை பெறுகின்றன. அத்தகைய கடந்த கால நிகழ்வுகள் படத்தின் நிகழ்கால நிகழ்வுக்கு எப்படி அழுத்தம் கொடுக்கின்றன. அந்த நிகழ்கால நிகழ்வுகள் படக் கருவில் எவ்வளவு தூரம் மையம் கொள்கின்றன, அது பார்வையாளர் தரப்பில், சினிமா மற்றும் சமூகம் சார்ந்து எத்தகைய அனுபவத்தைக் கொடுக்கின்றன என்பது முக்கியம். அதோடு இப் படங்களின் வியாபார வெற்றியும் கூடுதல் கவனம் பெறுகிறது.

கமல் இயக்கத்தில் முதல் வியாபார வெற்றிப் படம் விருமாண்டி. ஒரு தேர்ந்த இயக்குநரின் வெளிப்பாட்டிற்கான அத்தனை அம்சங்களும் படத்தில் வெளிப்படுகிறது. அதற்கான உழைப்பு...

மானிட்டர் கலர் பாரில் தொடங்குகிறது படத்தின் டைட்டில் கார்டு. ஒரு செய்தி - நேர்காணலில் மீது ரோலிங் டைட்டில் ஓடி படம் முடிகிறது. இரண்டுக்கும் இடைவெளியில் கருத்து விரிகிறது. மரண தண்டனை குறித்த விவாதத்திற்கான சூழலில் ஒரு கதையாக படம் நகர்கிறது. கதைக்குள் நடக்கும் நிகழ்வுகள் ஒரு நிலத்திற்கான போட்டியாய் இருக்கிறதா? ஒரு வன்முறை மிகுந்த கொத்தாலத் தேவரை வெளிப்படுத்துகிறதா? கோயில் காளை மாதிரி அதே சமயம் அப்பாவியாய் திரியும் விருமாண் டியை பற்றிப் பேசுகிறதா? சட்டம் நிகழ்த்தும் வன்முறையாய் பேய்காமன் உலா வருகிறாரா? எல்லாம் இருக்கிறது. இதன் மூலமாக ஒரு தனி நபர் வன்முறைக்கும் அரசின் வன்முறைக்குமான இடைவெளியில் தொங்கும் தூக்கு கயிறுதான் முக்கியம் என்றால் காட்சி ரீதியாக விருமாண்டியில் அது இல்லை. கருத்து ரீதியாக பேசுகிற வசனங்கள் சலுகை கோருகிற இடத்திலேயே நிற்கிறது. ஒரு கருணை மனுவை ஜனாதிபதிக்கு எழுதி அனுப்புகிற மாதிரியான விஷயமில்லை ஒரு படம். அல்லது வன்முறை மனநிலையை ஏன் எதற்கு என்று கேள்விக்குட்படுத்தி மனித மனங்களின் விசித்திரங்களைத் தொட்டு இருக்கிறதா? அது பார்வையாளரின் சினிமா மற்றும் சமூகம் பற்றிய புரிதல் சார்ந்த இடைவெளியில் தொங்குகிறது. எல்லாரும் சொல்லும் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேணும் என்கிற கதை அமைப்பில் கதாபாத்திரச் சித்தரிப்பில் நிஜமாக கதையாய் உருக்கொள்கிறது - தேவர் மகனைத் துணைக்கழைத்துக் கொண்டு.

இதன் திரைக்கதை உத்தி நிச்சயமாக வேறு ஒரு அனுபவத்தை நமது திரைப்படப் பார்வையாளனுக்கு வழங்கி இருக்கிறது. ஆனால் பார்வையளர் இன்னும் கதையாகவே இந்த படத்தில் எதிர் பார்ப்பதற்கான காரணமும், அதை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலும் பார்வையாளரின் புரிதல் சார்ந்த ஒன்றல்ல. அது இந்த திரைக்கதையின் அடிபடையில் நிகழ்ந்திருக்கும் பலஹீனமே. அல்லது திரைக்கதையில் இருந்து எடுத்தாளப் பட்ட இயக்குநரின் தெரிவு சார்ந்து இது நடக்கிறது. இந்த படத்தின் ·ப்ளாஷ் பேக்குகள்- கதாபாத்திரம் சொல்லும் முறையிலானதா? இல்லை வழக்கமான இயக்குநரின் ·ப்ளாஷ் பேக் தானா? அல்லது ஒரே சம்பவத்தின் இரண்டு விதமான அபிப்ராயங்களா? இத்தனை கேள்விகளும் பார்வையாளனுக்கு வரும் முன்பே இதில் ஏதோ ஒன்றை அவன் உணர்ந்திருக்க வேண்டும். அதை இந்த படம் செய்யவில்லை.

கொத்தாளத் தேவன் நடந்த விஷயங்களை சொல்லத் தொடங்கும் போதே "அவன் வில்லன். விருமாண்டி விருமாண்டி அவன் பேரைச் சொல்லவே நாக்கு கூசுது" என்று தனது வன்மத்தை காட்டி விடுகிறார். விருமாண்டி ஒரு சோக நாயகனுக்கான ஆவேச அலட்சிய தொனியில் ஆரம்பித்து, எதிர் உள்ள பெண்ணின் கதையைக் கேட்டு அமைதியாகி நடந்த விஷயங்களை சொல்கிறார். கொத்தாளத்தேவன், விருமாண்டி இருவரது அடிப்படை காதாபாத்திர குணம்சத்தை தெள்ளத் தெளிவாக வைத்து விட்டு, கொத்தாளத்தேவன் சொல்வதையெல்லாம் நம்பும்படி பார்வையாளன் ஒன்றுவான் என்பது ( கொத்தாளத் தேவன் சொல்லி முடித்த பிறகு தான் ஜெயிலில் விருமாண்டியின் அறிமுகம் என்றாலும் - அதுவும் வில்லன் யார் கதாநாயகன் யார் என்று தெள்ளத் தெளிவாக வந்து உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்கள்) அதிகப்படியான எதிர்பார்ப்பு.

இயக்குநர் கதை சொல்கிறார் என்றால் கொத்தாளன் எப்படி பொய் சொல்லுகிறான் என்பதை சொல்ல இத்தனை அடி நீள ·பிலிம் தேவை இல்லை. கொத்தாளன் பொய் சொல்லலாம், இயக்குநர் பொய் சொல்லக்கூடாது. விருமாண்டி சொல்லுவதைப் பார்க்கும் போது இங்கு மட்டும் இயக்குநர் உண்மையை சொல்லுவதாக எப்படி நம்புவது. ஆக இது இயக்குநர் சொல்லும் ·ப்ளாஷ் பேக்காகவும் பார்வையாளர்களால் பார்க்க முடியவில்லை. கொத்தாளன் எதையெல்லாம் மறைத்தான் என்பதை இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாட்டுகளால் மறைத்தாரே தவிர, கொத்தாளனின் கூற்றுப்படி கொத்தாலனை நியாயப் படுத்தவில்லை. விருமாண்டி கதை சொல்லும் போது அப்படி மறைத்த ஷாட்டுகளை விருமாண்டிக்கு ஆதரவாக களமிறகி விடுகிறார். இங்கு 'ரீலை திருப்பிப்போட்டுடானா' என்று திரும்பி பார்க்க நினைத்த பார்வையாளன் முட்டாளா? இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை மனிதர்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சரி, ஒரு நடந்த சம்பவத்தை பற்றிய இரண்டு அபிப்ராயங்களை பார்வையாளர்களுக்கு இயக்குநர் முன் வைக்கிறார் என்றால் - அபிப்ராயங்கள் - சம்மந்தப்படாத நபர் கூறுவது. சம்மந்தப்பட்ட நபர் கூறுவது - தன் கூற்று. அப்படி சம்மந்தப் படாத நபர்கள் வயிலாகத்தான் இரண்டு அபிப்ராயங்களை உணர வைக்க முடியும். 'ரோஷமானி'ன் இந்த சூட்சுமத்தை இழந்துவிட்டு...

அதற்கான உழைப்பு, உழைப்பு என்று, நேர்த்திக்கான உழைப்பு எவ்வளவு. அவ்வளவு உழைப்பும் அதற்கான பலனை இந்தப் படத்தில் பெறுகிறது. காரணம் மேலே சொன்ன மாதிரி பார்வையாளன் மனிதனாக நடந்து கொண்டான் அவ்வளவே. அப்படி அவன் மனிதனாக நடந்து கொண்டதற்கு காரணம் இந்த படத்திற்குள்ளேயும், வெளியேயும் இருக்கிறது. இந்த படத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன் படத்திற்கு வெளியே என்ன இருக்கிறது என்பதைப் பார்த்தால் படத்திற்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதும் சுலபமாகப் புரியும்.

இந்த படத்தில் மட்டும் தான் கமலின் உழைப்பா? ஹே ராம், ஆளவந்தானிலும் அதே உழைப்பு தான். தேவர் மகனுக்குப் பின், விருமாண்டியில் தான் தன் மண் சார்ந்து வருகிறார். மண் சார்ந்தும், தன் படத்திற்கான அத்தனை உழைப்பையும் முன் வைத்து காட்டும் போது - பார்வையாளன், படத்தில் அவனுக்கு வேண்டாததை அவனே ஒதுக்கி வைத்து விட்டு, தனக்குள் ஒரு ஒன் லைன் ஆடர் போட்டுக் கொண்டு வரவேற்கிறான். அதற்கு முக்கியமாக அவனை படத்திற்குள் இட்டுச் சென்ற நடிக நடிகர்களின் தேர்வு, தோற்றம், நடிப்பு என்று பட்டியல் நீளும்.

இந்தப் படத்தில் வெளிப்பட்டிருக்கும் பாத்திரங்களின் நடிப்பு - இரைச்சல் வசனம் காதில் கேட்காதது போன்ற இடையூறுகளையும் மீறி - பார்வையாளரை படத்திற்குள் ஈர்க்கும் சக்தியாக இருக்கிறது. வசனம் பேசாதா காட்சிகளிலும் பாத்திரங்கள் தங்கள் தன்மையை அப்படியே உடல் மொழியில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. முழுக்க முழுக்க மாட்டை உருவகப்படுத்திக் கொண்டது விருமாண்டியின் மேனரிசங்களுக்கு கூடுதல் பலம்.

பசுபதியின் உணர்வு வெளிப்பாடுகள் ஒரு இறுக்கத்தனமையோடு புதுவித முகபாவங்களை கொத்தாளத்தேவனுக்கு வழங்குகிறது. ஆனால் கொத்தாளத்தேவன் பார்வையில் கதையின் போதும், விருமாண்டியின் பார்வையில் கதையின் போதும் தனது நடிப்பில் ஒரே நிகழ்ச்சிகளில் என்ன அடிப்படை வித்தியாசத்தைக் கையாண்டார் என்பதை பார்வையாளன் உணரவில்லை. இது படத்தின் இயக்கம் சார்ந்த விஷயமும் கூட. பல நேரங்களில் நல்ல நடிப்பு, கவனம் கொள்ள வைக்கும் நடிப்பு, தவறான நடிப்பாகவும் அமைந்து விடும். இது இயக்குநர் கமலுக்கு தெரியாததில்லை. கமல், பசுபதி பாத்திரங்களுக்கு மட்டும் தான் இந்த இரண்டு தன்மை வெளிப்பாடுகள் படத்தில் இருக்கிறது. மற்ற பாத்திரங்கள் காண்பிக்கப்பட்ட அல்லது காண்பிக்கப்படாத காட்சியின் ஒற்றைத்தன்மையில் இருப்பதை படம் அனுமதிக்கிறது. இந்த இரண்டு தன்மை வெளிப்பாடு சாத்தியப்பட்டது அல்லது சாத்தியப்படாமை பற்றி இரண்டு நடிகர்களுமே பேசினால் அது மேலும் சினிமாவிற்கு பயனுள்ளதாக இருக்கும். இதுவரையான கமலின் நடிப்பு, இந்தப் படத்தில் அவர் முயற்சி செய்திருப்பது, அதில் எட்டியிருப்பது, பார்வையாளர்கள் தரப்பில் கமலின் நடிப்பு என்பது பற்றி பேசுவது, இன்னும் விரிந்த தளத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு வேளை விருமாண்டியில் நிகழ்ந்த கவனச் சிதறலுக்கு அது விடையாகக் கூட இருக்கலாம்.

கமலின் ரசிகர்கள் தாண்டி, பொது புத்தியில் கமலின் நடிப்பு பற்றி சிலாகித்து அதற்காகவே பார்வையாளர்கள் ஒரு படத்தை விரும்பிப் போய் பார்த்தது நாயகனில் நிறைவடைவாதாகத் தோன்றுகிறது. அதன் பிறகு அப்படி ஒரு நடிப்பு பற்றிய சிலாகிப்பும் அதைத் தொடர்ந்த வெற்றியும் சாத்தியப்படவில்லை. அதே மாதிரியான சிலாகிப்பு பார்வையாளர் தரப்பில் இன்றும் டி.வியில் காமேஸ்வரனுக்கு கிடைக்கிறது. நாயகனுக்கு பிறகான கமல் நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு ·பிலிம் பெர்ஷனாலிட்டியாக பார்வையாளர் மத்தியில் வலம் வருகிறார். கமலின் படத்தில் அவரது நடிப்பிற்காக அல்லாமல் வேறு ஒரு சினிமா அனுபவத்தை எதிர்கொள்ள பார்வையாளர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். வெற்றி தோல்வி இதற்கு அப்பாற்பட்டது. இதில் கமல் என்கிற நடிகனை மூலதனமாகக் கொண்டு தான் இயக்கப் போகும் படங்களுக்கான பார்வையாளர்களை அவர் அடைந்திருப்பது இன்று திரும்பிப் பார்க்கும் போது தெரியும்.

இயக்குநர் கமல்ஹாசன் விருமாண்டியில் நடிகர் கமல்ஹாசனை வென்றெடுத்தாரா? நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் கமல்ஹாசன் மீது தாக்கம் செலுத்தினாரா? தயாரிப்பாளர் கமல்ஹாசனின் நம்பிக்கை யார் மீது - பார்வையாளர்களையும் சேர்த்து தான். ஆக இந்த மூன்று நிலைகளின் கேள்வியை அப்படியே தூக்கிக் கொண்டு சேரனுக்கு போகலாம்.

நான் செந்தில், என்று அறிமுகம் செய்து கொண்டு என் கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்காக என்ற காரணத்தை பார்வையாளர்களிடம் நேரடியாக பகிர்ந்து கொண்டு படம் புறப்படுகிறது. முடிவில் அதே தொனியில் உங்க பழைய ஞாபகங்களையும் புரட்டிப்பார்க்கச் சொல்லி படம் முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்த கதையின் ஊடாக பார்வையாளர்கள் ஏற்கனவே தங்களது பழைய ஞாபகங்களை புரட்டிப்பார்த்த நிலையில் தான் இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை நேரடியான தன்மை கொண்டது. ஒருவனுக்குள் முதலில் அழுத்தம் கொள்கிற பெண், காதல் வயப்பட்ட பெண், தோழமை கொள்கிற பெண், கலயாணம் செய்து கொள்கிற பெண் என்று அடுத்தடுத்து போகிற வாழ்க்கை, வாழ்கையில் நிலைகொள்ளுதல் என்று ஒரு சராசரி வாழ்க்கை கொடுக்கும் மிச்சங்களின் மீதான பயணம்.

இந்த படம் பார்வையாளர்களோடு எங்கெங்கு என்னென்ன உறவு கொண்டது என்பது தான் படத்தின் உச்சம். இதன் திரைக்கதையில், முதலில் அவனின் மீது அழுத்தம் கொள்கிற பெண்ணை மையமாக வைத்து அந்த வயதின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் முன்னுக்கு கொண்டு வரப்படுகிறது.

அடுத்து செந்திலின் பயணம் தொடர்கிறது. அந்த இடைவெவளியில் பார்வையாளர்கள் ஒன்றை பார்த்து முடித்த அனுபவத்தில் இருந்து மீளும் முன்னே கேரளாவில் பெல்ஸ் கால காதல். முட்டி மோதி அடிபட்டுத் திரும்புகிறான். செந்திலின் பயணம். அப்புறம்? அந்த காதல் சோகம், அந்த காதல் முடிந்தற்கான ஒப்புதல் வாக்குமூலத்தை அவன் நண்பன் கொண்டு வந்து கொடுக்க அந்த பெண்ணின் பேச்சோடு முடிகிறது.

இப்போது செந்திலின் பயணம் நின்று அவன் காதலியின் ஊரில் இறங்குகிறான். வரவேற்க அதே பழைய நண்பன். அடுத்து என்ன? என்ன நடக்க வாய்பிருக்கிறது. இன்னொரு பெண்ணின் பெயர் அவன் வாயினால் உச்சரிக்கப்படுகிறது. யார் அந்த பெண், பார்வையாளர் ஆர்வம் கொள்ளுகிற நொடியிலேயே சென்னையில் செந்திலில் கதைக்குப் போகிறது.

அதில் ஒரு பெண்ணின் உதவியால் வேலை கிடைத்து அவன் உயர்வது, கூடவே உபகதையாய் அந்த பெண்ணின் கதை, இரண்டு பேருக்குமான நட்பு தொடர்வதோடு மறுபடியும் தற்போதைய செந்திலுக்கு வருகிறது. ஆரம்பத்தில் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ் இன்னும் பிரிக்கபடவே இல்லை. செந்தில் பழைய காதலியை பார்த்து கல்யாண அழைப்பிதழ் கொடுக்கப்போகிறான். அவள் விதவையாய் இருக்கிறாள். பார்வையாளன் எதன் மீது தீவிரம் கொள்வானோ அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதே சமயம் அவனிடம் செந்திலின் கல்யாண பத்திரிகையும் இருக்கிறது. ஆனால் பிரிக்கப்படாமல்.
ஆனால் அதற்குள் அவனது விதவைக் காதலி அவனை தேற்றி கல்யாணத்திற்கு வருவதாகச் சொல்ல அவன் கேரளாவில் இருந்து கிளம்புகிறான். அப்புறம் சென்னையில் அவனது சிறு தயக்கம். எல்லாதையும் தாண்டி போ என்கிறாள் அவனது தோழி. அடுத்த நொடி மேளச் சத்தத்துடன் கல்யாணப் பெண்ணின் முகம்.

அப்புறம் முழுக்க முழுக்க ஒரு கல்யாண மண்டபத்தின் நேரடித் தன்மையின் நெருக்கத்திற்கான படபிடிப்பு. கடைசி பத்து நிமிடமும் கல்யாணத்தை தவிர வேறு எதுவும் நிகழவில்லை. எல்லோரும் வந்து போகிறார்கள். ஆனால் பார்வையாளனுக்குள் எல்லாமே நிகழ்கிறது. அப்படி நெகிழ்ச்சியில் இருக்கும் பார்வையாளனைப்பார்த்து தான் உங்க பழைய பக்கங்களையும் புரட்டுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் சேரன்.

இந்த படத்தில் நாயகனை தவிர்த்த கதாபாத்திர நடிகர் நடிகைகளின் தேர்வு பற்றி பேச வேண்டும். ரொம்ப சரியான விதத்தில் இந்த தேர்வு பொருந்திப்போகிறது. முழுக்க முழுக்க சேரனின் வாயிலாக அறிமுகப்படுத்தப்படும் புதிய நபர்களாகவே பாத்திரங்களைப் பார்வையாளர்கள் எதிர் கொள்கிறார்கள். ஸ்நேகாவின் தேர்வு - நட்சத்திர பிம்பம் உள்ள தேர்வு - இதை இரண்டு நிலைகளில் இருந்து பார்க்க வேண்டியதுள்ளது.

சேரனின் வாயிலாக சொல்லப்படும் அந்த பாத்திரத்திற்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து அற்ற ஒருவரை தேர்ந்தெடுத்திருந்தால் பார்வையாளர்களிடம் இந்தப் படத்திற்கான வரவேற்பில் ஏதாவது குறைநேர்ந்த்திருக்குமா? மொத்த படத்தையும் வைத்து பார்க்கும் போது அது இன்னும் சிறப்பாகவே அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. முற்றிலும் முழுக்க அதை செந்திலின் உலகமாகவே பார்வையாளன் அனுபவித்திருப்பான். அந்த பெண் பாத்திரத்திற்கான உபகதையின் உள்ளே போய் சிக்காமல் வெளி வந்திருக்க முடியும். அதே சமயம் ஸ்நேகாவின் தேர்வு சேரனுக்கு படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில விஷயங்களைச் சுலபமாக்குகிறது. படத்திற்கு வெளியேயான காரணம் ஸ்நேகாவின் நட்சத்திர அந்தஸ்து. படத்திற்கு உள்ளே அதே அந்தஸ்தின் மீதான பார்வையாளனின் பிம்பம் இந்த பெண்ணால் முடியும் என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. எடுத்த எடுப்பிலேயே சேரனை வழி நடத்திச் செல்வதற்கான தகுதி அவருக்கு இருப்பதாக சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிவது. இதன் தன்மையை பயன்படுத்திக் கொண்டதில் சேரன் இழந்தது இந்த படத்தின் கூடுதலான நுட்பமான தன்மையை.

ஆட்டோகிரா·பில் கடைசி பத்து நிமிடம் எதுவும் நிகழவில்லை. பார்வையாளனுக்குள் எல்லாம் நிகழந்தது - விருமாண்டியில் கடைசி பத்து நிமிடத்திற்கும் மேலாக எல்லாமும் நிகழ்கிறது. ஆனால் பார்வையாளனுக்குள் என்ன நிகழ்ந்திருக்கும் என்கிற கேள்வியை முன் வைத்து விட்டு, கமலிடம் இருந்து தூக்கிக் கொண்டு வந்த கேள்விகளோடு இருவரையும் அனுகலாம்.

கமல், சேரன் இரண்டு பேர்களுமே இயக்குநர் என்ற இடத்தில் இருந்து தங்கள் பட கதாநாயகர்களை எப்படி அனுகினார்கள். அவர்களது கதாநாயக அந்தஸ்தை படத்தில் எப்படி கையாண்டார்கள் என்பது முக்கியம். இதில் சேரனுக்கு எந்த வித சிரமமும் இல்லை, அவரது கதாநாயகன் இயக்குநர் சேரனுக்கு கட்டுப்பட்டே இருந்தார். அவரது கதாநாயகனைவிட இன்றும் இயக்குநர் சேரனே முதன்மையானவர். தயாரிப்பாளர் சேரனுக்கும் அவரே கையடக்கமான கதாநாயகன். நடிப்பு விஷயத்தில் நடிகர் சேரன் போதுமானதாக இருந்தார். கதாபாத்திர பொருத்தமும் முழுமை அடைந்திருந்தது. இதில் கதாபாத்திர பொறுத்தம் முரண் கொள்ளாமல் இருந்ததே முக்கியமானது.

இயக்குநர் கமல்ஹாசனுக்கு கிடைத்த கதாநாயகன், முன்னணி கதாநாயகன் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமல்ல சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்புக்கென்று அறியப்பட்டவர். அவர் முன்னல் தனது இரண்டாவது படத்தை இயக்குகிற கமல்ஹாசன் இரண்டாம் பட்சமே. கதாபாத்திர பொறுத்தம் - பொறுத்ததை விட, நடிகர் கமல் தனது நடிப்பில் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி விடுவார் என்று நம்பும் இடத்திற்கு இயக்குநர் கமல்ஹாசன் தள்ளப்படுகிறார். அதற்கான சாத்தியக்கூறுகளை தானே முன் வந்து வழங்குகிறார். காரணம் தயாரிப்பாளர் கமலுக்கும், நடிகர் கமலுக்குமான முதன்மை இடம் எந்த இடத்திலும் ஆட்டம் கண்டுவிட கூடாது. இயக்குநர் கமல்ஹாசன் தன் கதாபாத்திரத்துக்கு பொறுந்தாத நடிகரைத் தேர்ந்தெடுக்கிறார். இதில் விட்டதைப் பிடிக்க, மற்ற ஒவ்வொரு கதாபாத்திர தேர்வையும் இயக்குநர் பொறுப்பில் இருந்து சற்றும் பிசகாமல் தேர்ந்தெடுக்கிறார். இதன் பலனை திரையரங்கு காட்டியது.

ஆனால் ஒரு பொறுந்தா கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்ட நடிகர் கமல், வழக்கம் போலவே தன் அத்தனை உழைப்பையும் கொட்டுகிறார். நடிக்கிறார். நடிகர் கமலுக்கு விருமாண்டி பாத்திரம் அவரது நடிப்புப் பயிற்சியில் வேறு ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கும். பார்வையாளர்களும் அதை உணர்ந்தார்கள். அனுபவ அளவில் அல்ல, கமல் சிறந்த நடிகர் என்ற அறிவு ரீதியில். கொத்தாளத்தேவரும், போய்காமனும் உணர்வைத் தொட்ட அளவில் விருமாண்டி உணர்வைத் தொட முடியாது போனது ஏன் என்று இயகுநர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்குத் தெரியும். அப்படி தெரிந்த ஒன்றை ஓரங்கட்டி வைத்து விட்டு களத்தில் இறங்கியதில் தான் விருமாண்டி நடிகர் சினிமாவாக அறியப்படுகிறது. இதில் ஒரு நடிகர் சினிமாவிற்கான பொருந்தா கதை சொல்லல் முறையை இயக்குநர் கமல்ஹாசன் கையாளுகிறார். எப்படிப்பார்த்தாலும் இது கமல் படம் என்பது தான் முக்கியம். அந்த கமல், நடிகரா - இயக்குநரா என்பது தயாரிப்பாளர் கமலுக்கு முக்கியமில்லை. தற்போது கமலின் பிம்பம் முக்கியம் அவ்வளவே.

சேரனுக்கு இது வேறு மாதிரி நிகழ்கிறது. தனது இடைவெளி விட்ட இயக்குநர் பிம்பத்தைக் கட்டி எழுப்பவே தானே நடிகனாகவும் தயாரிப்பாளராகவும் மாற வேண்டிய நிலையில் இது நிகழ்கிறது. ஒரு சிறிய கதை, தெளிவான கதை சொல்லல், உணர்வு ரீதியில் அழுத்தம் ஏற்படுத்திய சர்வசாதாரணமான நடைமுறை க்ளைமாக்ஸில், தமிழக சினிமா ஞாபகப்பரப்பில் மறுபடியும் தன்னை மீட்டெடுத்து விட்டார். அடுத்து என்ன வேண்டுமானாலும் நிகழலாம். யாரோ நடிக்கக் கூப்பிட அவர் போய் நடிக்கலாம். அல்லது தனக்கான கதையாகத் தேடி தேடி சேரன் படத்தை இயக்கலாம். அப்பொழுது கமலின் சிக்கல் அவருக்கும் ஏற்படலாம். இரண்டுமற்று அவர் ஒரு இயக்குநராகவே தன் பழைய பயணத்தைத் தொடங்கலாம்.

ஆனால் கமலுக்கு முன்னால் உள்ள சினிமா சவால் எது? எதில் மையம் கொண்டிருக்கிறது கமலின் படைப்பு உத்வேகம்? இது வரை இன்னும் தெள்ளத் தெளிவாக இதற்கான வெளிப்பாடாய் கமல் வெளியில் வரவில்லை. அவரது படைப்புகளும் அந்த ஒன்றை நோக்கியதாக இதுவரை அமையவில்லை. வரலாம். வராமலும் போகலாம். அதற்காக காலமும் தமிழ் சினிமாவும் யாருக்காகவும் கை கட்டி காத்துக் கொண்டிருக்காது. வருகிற லட்சணங்களை அப்படியே பதிவு செய்து கொண்டு, அந்த முகத்தோடே வலம் வந்து கொண்டிருக்கும்.

அந்த முகம் தான், வெட்டு. மாப்ளே எங்கப்பன வெட்டு மாப்ளேக்கு விழுந்த கை தட்டல். மரண தண்டனை அவசியமா என்று தொடங்கியதையும், அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையும் தேமே என்று பார்த்துக் கொண்டிருப்பதும் அந்த முகம் தான். அந்த முகம் தான் ஆட்டோகிரா·பில் கடைசியாக கமலாவை திரும்பிப் பார்க்கச் சொல்லி கத்தியது. தவிர்க்க முடியாமல் ஞாபகங்களுக்குள் சிக்குண்டு எழுந்து வந்ததும் அந்த முகம் தான். விருமாண்டியில் அந்த முகம் எந்த உணர்வுக்கு ஆட்பட்டது. கமல் சினிமா, கமல் நடிப்பு, கமல் இயக்கம், ஆகையால் பிடிக்கும், ஆகையால் பிடிக்காது, இது மாதிரி படமெடுக்க யாருக்கும் வராது, அடுத்த காமெடி படத்தை பார்த்துக்கலாம், இதே வேளையா போச்சு, அப்படியே மாடு மாதிரியே தலையை ஆட்டி, முழித்து... என்று அந்த முகம் வெளியேறி விடுகிறது.

கமலின் மீதான இத்தனை பிம்பங்களையும் சுமந்து கொண்டு விருமாண்டி பார்வையாளர்கள் மத்தியில் உலா வருகிறது. வழக்கம் போலவே பெண் பார்வையாளர்களை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இழந்த நிலையில். சேரனின் படத்திற்கான பெண் பார்வையாளர்கள் அதிகம். இதனூடாக பெண்ணிய பார்வையில் ஆட்டோகிரா·ப் படத்தை ஊடுறுவினால், தமிழ் சூழலில் பெண் பார்வையாளர்கள் பற்றியும், ஆட்டோகிரா·ப் படத்தை வேறு பார்வையிலும் பார்க்க முடியும்.

அதே சமயம் பார்வையாளர்கள் மீது சினிமா சுழல் கொண்டிருக்கும் பிம்பத்தையும் சேர்த்து பார்த்தால் ஒரு கேள்வி முன் வருகிறது. பார்வையாளன் ஒரு ஒற்றைத்தன்மைக்கு மட்டும் தான் பழக்கப்பட்டுள்ளானா? உணர்வு ரீதியான வெளிப்பாட்டிற்குத்தான் முகம் கொடுப்பானா? கருத்து ரீதியான விஷயங்கள் அவனுக்கு இரண்டாம் பட்சமா? சேரனின் படத்தை வைத்துப் பார்க்கும் போது அது அப்படித்தான் என்கிற தோற்றம் கொடுக்கிறது. ஆனால் கருத்து ரீதியாக சொல்ல வந்ததை இது வரை எந்த தமிழ் சினிமா பார்வையாளனுக்கு நெறுக்கமாக சொல்லி இருக்கிறது. அப்படி ஒரு சாத்தியத்தை தன்னுள் கொண்டிருந்த விருமாண்டி - "உங்களைத்தான நம்பனும் வேறு யாரிருக்கா" என்று அவரைப் பார்த்து தமிழ் சினிமா சூழல் சொல்லும் பிம்பம் கொண்ட கமல் - தவறவிட்டது. தெரிந்து செய்தது எல்லாம் ... ?

இயக்குநர் கமல், நடிகர் சேரன், இயக்குநர் + நடிகர் சினிமா எதுவும் முழுமை அடைவதற்கு முன்பே இக்கட்டுரை முடிவடைகிறது.

http://www.aaraamthinai.com
<b>
?

?</b>-
Reply


Messages In This Thread
இயக்குநர் + நடிகர் சின - by Aalavanthan - 04-05-2004, 09:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)