04-02-2004, 11:16 AM
யாழ்/yarl Wrote:மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.
அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.அவர்களது ஆதரவு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன....
உங்கள் கருத்துக்கு நன்றி. அதேவேளை இங்கு சில விடயங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன். பெரும்பாலும் பெரும்பாலான பொதுமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிவியல் புூர்வமாக தங்களது முடிவுகளை மேற்கொள்வதில்லை. அவர்கள் உணர்வுகளுக்கும் தங்களின் சூழலில் உடனடியாக காணும் கேட்கும் செய்திகளுக்குமே தங்களது பிரதிபலிப்பைக் காட்டுவார்கள். தர்க்க ரீதியாக சிந்தித்து செயல்படுபவர்கள் இந்த விடயத்தை மக்களுக்கு தெளிவாக தொட்டுக் காட்டும்வரை அவர்கள் சிந்தித்து செயல்படத் தொடங்குவதில்லை. ஆனால் இந்த சிந்திக்காது செயல்படும் அவர்களது செயல்பாட்டால் ஏற்படும் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.
உதாரணத்திற்கு அண்மையில் இசுப்பானியாவில் நடந்த தேர்தலில் வாக்களிப்புக்கு ஒருநாளின் முன்னர் நடந்த குண்டுவெடிப்பின் பின்னால் மக்களின் வாக்களிப்பின் சடுதியான மாற்றத்தை நீங்கள் அவதானித்திருக்கக் கூடும். அது இன்று ஐரோப்பாவின் யாப்பை சீர்திருத்தியமைப்பதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, மக்கள் எப்படி பொதுவில் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ஏன் அங்கு போவான் ‘நம்ம’ கருணா விடயத்திற்கு வருவோமே. கருணாவின் அடியாட்களாக இன்றுள்ள பலர் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தங்களது உயிர்களை துறப்பதற்குக்கூட தயாரான நிலையில் போராட்டத்தில் இணைந்து அவ்வாறே பலகாலம் செயற்பட்டு வந்தவர்கள். இன்று அவர்கள் எப்படிச் செயல்படுகின்றார்கள்? கருணாவால் என்ன கருத்துக்கள் விதைக்கப்படுகின்றதோ அதை தங்களில் வாங்கி அதற்கு செயல்வடிவம் கொடுக்கின்றார்கள். அவர்களில் பலர் தாங்கள் ஏன்போராட்டத்தில் இணைந்தோம், எப்படியாக இந்தப் போராட்டத்தால் இந்த உயர் நிலையை அடைந்தோம், தாங்களின் இப்படியான செயல்பாட்டால் எத்தகைய விளைவுகளை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்கொள்ளப்போகின்றது என்ற ரீதியில் அறிவுபுூர்வமாக சிந்திக்கும் நிலையில் இல்லை. உணர்வுகளுக்கு அடிமையாக அலைந்து திரிகின்றார்கள். இப்படியான உசுப்பல்களுக்கு அலைபாய்வது மானிட இயல்பு. அவர்களுக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து விளக்கமாக தர்க்க ரீதியாக உண்மையை எடுத்துச் சொல்லும் வரை அவர்களில் பலர் இப்படித்தான் இருக்கப்போகின்றார்கள்.
எனவே நாங்கள் கருத்துக்களை மக்கள் முன் விதைக்கமுன்னர் மிக்க கவனமாக இருக்கவேண்டும். அப்படி விதைப்பவர்கள்பற்றி விழிப்பாக இருந்து அவதானிப்பது அவசியமாகின்றது.
நாங்கள் மேற்கத்தைய சூழலை வைத்து எங்களை ஒப்பிட்டுப்பார்க்கின்றோம். நாங்கள் ஒன்றை இங்கு நிச்சயமாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். அதாவது நாங்கள் இன்னும் மேற்கத்தைய சூழலையொத்த அமைதியான நிலையை அடையவில்லை. நாங்கள் இன்னும் களத்தில்தான் நிற்கின்றோம். அவர்களையொத்த நிலையை அடையும் வரை சில கட்டுப்பாடுகளை வரையறைகளை வகுத்துக் கொள்ளல் தவிர்க்க முடியாதது.
ஏன் இவர்கள் இந்த நிலையை அடைந்த வரலாற்றை சற்றுப் புரட்டிப்பார்த்தோமானால் அவர்கள் எப்படி எப்படியான முறைகளை கையாண்டு இப்படியான நிலையை அடைந்தார்கள் என்பதனைப் புரியக் கூடியதாக இருக்கும். இன்றுள்ள சூழ்நிலையில் எம்மக்களில் ஏற்படும் சிறு குழப்பங்களும் பாரிய விளைவுகளை, பின்னடைவுகளை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் சந்திக்கும். ஏனெனில் நாம் இன்று மலையின் உச்சியில் நிற்கின்றோம் ஒரு சிறிய அசைவும் எங்கள் பயணத்திசையின் விளைவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அதனால் இது மட்டில் நாம் அசட்டைத்தனமாக இருந்து விடமுடியாது.

